மெக்ஸிகோவின் முதல் பெண் அதிபர்
வட அமெய்க்காவின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு லத்தீன் அமெரிக்க நாடுதான் மெக்ஸிகோ. இந்த நாட்டின் 200 ஆண்டுகளாக வரலாற்றில் பெண் ஒருவர் அதிபராக அரியணை ஏறியுள்ளார்.யூத இனத்தைச் சேர்ந்த 60 வயது நிரம்பிய கிளாடியா ஷெயின்ஸ்பாம் பார்டோ என்பவர்தான் அந்தப் பெண். அரசியல்வாதி விஞ்ஞானி கல்வியாளர் எனப் பல முகங்கள் இவருக்கு உண்டு. நேஷனல் ரீஜெனரேஷன் மூவ்மென்ட் என்ற இடதுசாரிக் கட்சியின் உறுப்பினராகவும் உள்ளார்.
2000 முதல் 2006 ம் ஆண்டு வரை அப்போதைய அதிபரான ஆண்ட்ரெஸ் மானுவல் லோபெஸ் ஒப்ரேடார் தலைமையிலான அரசில் சுற்றுச்சூழல் செயலாளராகப் பதவிவகித்துள்ளார். 2015 முதல் 2017 ம் ஆண்டு வரை லால்பான் நகரத்தின் மேயராகப் பணியாற்றியிருக்கிறார். பின்னர் மெக்ஸிகோவின் ஹெட் ஆப் தி சிடி என்ற பதவியையும் வகித்திருக்கிறார். மெக்ஸிகோ நாட்டின் நேஷனல் அட்டானமஸ் பல்கலைக்கழத்தினால் எனர்ஜி இஞ்சினீயரிங் பிரிவில் இவருக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. ஆற்றல்கள் சுற்றுச்சூழல் மற்றும் நீடித்த வளர்ச்சித் தொடர்பாக 100 க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் இரண்டு புத்தகங்களையும் கிளாடியா எழுதியிருக்கிறார்.
மிகச் சிறந்த பெண்ணியவாதி என்றும் இவரைக் கொண்டாடுகிறார்கள். பால் வேறுபாடுகள் காரணமாகப் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக இவரின் குரல் ஓங்கி ஒலிக்கும். கருக்கலைப்பைச் சட்டபூரவமாக்க வேண்டும் என்பது இவருடைய ஆணித்தரமான கருத்து.திரு நங்கைகள் ஆகியோரின் உரிமைக்காகவும் பாடுபடுபவர் கால நிலை மாற்ற விஞ்ஞானியான இவரை 2018 ம் ஆண்டு சிறந்த 100 பெண்களில் ஒருவராக பிபிசி தேர்ந்தெடுத்திருக்கிறது. ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மெக்ஸிகோ அதிபர் தேர்தலில் கடந்த 200 ஆண்டுகளில் ஒரு பெண் கூட அந்தப்பதவிக்கு வந்ததில்லை. அப்படிப்பட்ட சூழலில்தான் இந்த ஆண்டு கடந்த ஜூனில் நடைபெற்ற மெக்சிகோ அதிபருக்கான தேர்தலில் கிளாடியா ஷெயின்ஸ்பாம் பார்டோ போட்டியிட்டார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சோச்சிட் கால்வேஸ் மற்றும் ஜார்ஜ் அல்வாரெஸ் ஆகியோரைத் தோற்கடித்து வெற்றிவாகை சூடியுள்ளார்.
மொத்த வாக்குகளில் 60% வாக்குகளை கிளாடியா பெற்றிருக்கிறார். மெக்ஸிகன் வரலாற்றில் ஒரு வேட்பாளருக்கு இதுவரையில் கிடைத்திராத அளவுக்கு அதிக எண்ண்க்கையிலான வாக்குகள் இவருக்குக் கிடைத்திருக்கின்றன. இது நாட்டிலுள்ள அனைத்துப் பெண்களுக்குமான வெற்றி என்று தமது மகிழ்ச்சியைத் தெரிவித்திருக்கிறார் கிளாடியா.
0
Leave a Reply