குற்றாலத்தின் வேறு பெயர்கள்
தென்காசி அருகே மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் குற்றாலத்தை 'தமிழ்நாட்டின் புதையல்' என்றே கூறலாம். உலகின் வேறு எந்த மலை சார்ந்த ஊருக்கும் இல்லாத பெருமை குற்றாலத்திற்கு உண்டு. புராண, இலக்கிய காலங்களில் குற்றாலத்தை பிதுர் கண்டம் தீர்த்த புரம், சிவத்துரோகம் தீர்த்த புரம், வசந்தப்பேரூர், முதுகங்கை வந்தபுரம், செண்பகாரணிய சேத்ரம், நன்னகரம், வேடன் வலஞ்செய்த புரம், யானை பூசித்த புரம், சிவ முகுந்த பிரம புரம், திரிகூடபுரம், முனிக்கு உருகும் பேரூர் என்றெல்லாம் சிறப்பித்து அழைத் துள்ளனர்..
குற்றாலத்தில் எங்கும் குறுகிய ஆலமரங்கள் நிறைந்து காணப்பட்டதால் குறுகிய + ஆலம் = குற்றாலம் என்ற பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது.
தென் மேற்கு பருவமழை காலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து ஆரியங்காவு கணவாய் வழியாக கடக்கும் குளிர்ந்த காற்றே பொதிகை மலையின் தடுப்பால் சாரல் மழையாகப் பொழிந்து குற்றாலம் அருவிகளாக தண்ணீர் பொங்கிப் பாய்கிறது.
தேனருவி, செண்பகாதேவி அருவி, மெயின் அருவி, பழைய குற்றால அருவி, ஐந்தருவி, புலி அருவி, சிற்றருவி உள்ளிட்டவை குற்றாலத்திற்கு சிறப்பு சேர்ப்பவை.
குற்றால அருவிகளில் குளித்தால் மனநலன், தோல் நோய், ரத்த அழுத்தம் சார்ந்த பாதிப்புகள் குறைவதாக காலம் காலமாக நம்பிக்கை உள்ளது.
குற்றால அருவி நீர்,மலையின் மேல் ஓடி வரும்போது பல ஆயிரக்கணக்கான மூலிகைகளை தழுவியும் மலையில் இருக்கும் கனிமங்களுடன் கலந்தும் வருவதால் பல்வேறு நோய்களை தீர்க்கும் மூலிகை நீராக மாறி விடுவதாக கூறப்படுகிறது.
குற்றால மலைகளில் 2 ஆயிரம் வகையான மூலிகை தாவரங்கள் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. மா, பலா, மலை வாழை, மங்குஸ்தான், சீத்தா, கொய்யா, நெல்லி, சப்போட்டா உள்பட ஏராளமான பழமரங்களும், மலை பாறைகளில் கிடைக்கும் தேனும் தனித்துவமான ருசி கொண்டவை.
0
Leave a Reply