வெப்பம் பாலைவனத்தை விஞ்சி வாட்டுகிறது.அவரவர் வீட்டைச் சுற்றிலும் பத்து மரங்களை நடுங்கள். அதனால் என்னாயினும் பார்த்துக்கொள்ளலாம்.
என் வீட்டில் பெரிதாய் இரு மாமரங்கள், இரு தென்னை மரங்கள் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மரங்கள் இருக்கின்றன. ஆனால், வீட்டிற்குள் இருக்க முடியவில்லை. வெந்து தணிகிறது.
நான் மட்டும் மரங்களை வளர்த்து என்ன பயன் ? சுற்றிலும் உள்ள வீடுகளில் மருந்துக்கூட மண்தரை இல்லை. ஆயிரம் வீடுகட்கு ஐம்பது மரங்கள் என்ற அளவில்கூட இல்லை. வெப்பம் பாலைவனத்தை விஞ்சி வாட்டுகிறது.
இணையத்தில் ஊர்வெப்பத்தைத் தேடியபோது செல்சியசில் 46 பாகை காட்டுகிறது. அதனைப் பாரன்ஹீட்டில் மாற்றிப் பார்த்தால் 114.8 பாகை என்று வருகிறது. இன்னும் நம் ஊடகங்கள் “வெப்பநிலையில் செஞ்சுரி அடித்த நகரங்கள்” என்று கொண்டாட்டமாகச் செய்தி வெளியிட்டுக்கொண்டுள்ளன.
எண்ணிப் பாருங்கள், நூற்றிரண்டு பாகை வெப்பநிலையில் காய்ச்சல் என்றாலே நம் உடல் எப்படிக் கொதிக்கிறது ! நம்மைச் சுற்றி நூற்றுப் பதினைந்து பாகை வெப்பம் நிலவுகிறது. வீட்டின் வெளிச்சுவரை உட்புறம் தொட்டுப் பார்த்தால் அதுவே தகதகவென்று கொதிக்கிறது. இது முற்றிலும் கொடியது.
ஆடு மாடு எருமை கன்றுகளின் நிலை என்ன ? பிற அஃறிணைகள் குடிநீர்க்கு என்ன செய்கின்றன ? அவற்றுக்கு ஏதேனும் நாமாவது செய்கிறோமா ?
பகல் நேர வெளிப்பணியாளர்கள் வேலை செய்வதற்கு மாற்றாக என்ன பரிந்துரைக்கப்பட்டுள்ளது ? அவர்கட்கு மாற்றீடு என்ன ?
வெட்டி வீழ்த்தப்பட்ட, பிடுங்கியெறியப்பட்ட பெருமரங்களால் விளைந்த வெப்பக்கேடுகள் பற்றிய அளவீடு உண்டா ? அவற்றுக்கு மாற்றாக ஒரு புல்லையேனும் வளர்க்க முயன்றார்களா ? வளர்ச்சி என்பது சாலை நீளமா, சாலை அகலமா ?
இக்காலகட்டத்தில் தொழிற்சாலைகள் வெப்பத்தை, வெம்புகையை உமிழாமல் இருக்கும்படி ஏதேனும் கட்டுப்பாடுகள், பரிந்துரைகள் உண்டா ? எதுவுமே இராது. எல்லாம் அப்படியப்படியே கிடக்கும்.
அரசுகள் எதனைத்தான் செய்கின்றன ! நம்மை ஆள்பவர்கட்குச் சுற்றுச்சூழல் நுண்ணுணர்ச்சி உண்டா ? இந்நேரம் விரைந்து நின்று பலப்பல காப்பு நடவடிக்கைகள் எடுத்திருக்கவேண்டாவா ? ஐயோ, இதற்கு என்ன செய்யலாம் என்று ஆளும் தரப்பு மண்டையை உலுக்கிச் சிந்தித்துக்கொண்டிருக்கும் என்றா நினைக்கிறீர்கள் !
மக்களாகிய நாம்தான் இனியும் யாரையும் நம்பிக்கொண்டிருக்கக் கூடாது. உடனடியாக அவரவர் வீட்டைச் சுற்றிலும் பத்து மரங்களை நடுங்கள். அதனால் என்னாயினும் பார்த்துக்கொள்ளலாம்.
வீட்டிற்குள் வேர் பரவாத, பருக்காத பலமரங்கள் இருக்கின்றன, அவற்றை வளருங்கள்.
ஏதாவது ஒன்றை இறங்கிச் செய்யுங்கள். இல்லையேல் அடுத்த ஆண்டில் இன்னும் ஐந்தாறு பாகைகள் கூடக்கூடும்.
இனிமேல்கூடும் ஒவ்வொரு பாகையும் நம் நிலத்தைக் கரித்துவிடும். வாழத் தகுதியற்றதாக்கிவிடும்.
இருக்கப்பட்டவர்கள் காலப்போக்கில் வேற்றிடம் தேடிப் போய்விடுவார்கள். நமக்கு நம் மண்தான் ஒரே போக்கிடம். அதன் வாழ்தகுநிலையைக் காப்பதன்றி வேறு வழி நமக்கில்லை. fb பதிவு
0
Leave a Reply