குறை குடம் கூத்தாடும்
குடத்தில் நிறைய தண்ணீர் இருந்தால் அலம்பாமல் தலை மேல் ஒரு குடமும், இடுப்பில் ஒரு குடமும் கையில் எடுத்துக் கொண்டு கி.மீ. கணக்கில் வேகமாக நடந்து செல்லும் பல பெண்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் அதே போல் அரை குடம் தண்ணீர் கொடுத்து எடுத்து வரச் சொன்னால் 5 அடி கூட செல்ல முடியாது. குடத்தினில் இருக்கும் தண்ணீர் இங்கும் அங்கும் அலைந்து டபக் கலக் என்ற சப்தத்துடன் தண்ணீரும் வீணாகி குடமும் கீழே விழுந்து விடும்.நிறைய விஷயம் தெரிந்தவர்கள்.நிறைவான குணம் உள்ளவர்கள் அமைதியாகவே இருப்பார்கள். நேரம் வரும்பொழுது மாத்திரம் விஷயங்களைப் பற்றி அலசிப் பேசுவார்கள். ஆனால் விஷயம் தெரியாதவர்களோ தனக்கு அதிகம் தெரிந்ததைப் போல பல விஷயங்களைப் போட்டு ரீல் விட்டுக் கொண்டே செல்வார்கள்.
தன்னைப் போல குணமும், அறிவும், விஷயமும் மற்றவர்களுக்குத் தெரியவே தெரியாது என்று முடிவே செய்து கொண்டு குறை குடத்தைப் போல அலைபாய்வார்கள். தனக்கு நல்ல குணம் இருப்பதைப் போல காட்டிக் கொள்வார்கள். தன்னுடைய குறைகளை மறைக்க மற்றவர்களை குறை சொல்வார்கள். இவர்கள் காலப் போக்கில் மன நிம்மதியை இழந்து, தானும் தாழ்ந்து, தன்னுடைய குடும்பத்தினரையும் முன்னுக்கு வரவிடமாட்டார்கள். இல்லாதவற்றை இருப்பதைப் போலவும், நடக்காதவற்றை நடத்ததைப் போலவும் சொன்னால் எல்லோரும் முதலில் ஒப்புக் கொண்டாலும் காலப்போக்கில் இவர்கள் பொய் சொல்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள நிறைய வருஷங்கள் ஆகாது. பின்பு இப்படிப்பட்டவர்கள் என்னதான் உண்மையானவற்றையும், நடப்பதையும் கூறினால் யாருமே நம்பமாட்டார்கள்.
தேவையில்லாமல் எல்லா விஷயங்களிலும் மூக்கை நுழைத்து தவறான கருத்துக்களை தெரிவித்துக் கொண்டே இருப்பார்கள். இதை உணர்ந்தவர்கள் நமட்டுச் சிரிப்பு சிரித்தாலும் அவர்களுக்குப் புரியாது. புரிந்தாலும் கோபப்படுவார்களே தவிர தன்னுடைய தவறினை திருத்திக் கொள்ள மாட்டார்கள். பொய்யாகக் காணும் விஷயங்களை தவறாகப் புரிந்து கொள்ளுவதும், சந்தேகங்களும், உறுதியில்லாத அறிவும், மனமும் இவர்களை முன்னுக்கு வர விடாமல் தடுக்கும்.சஞ்சலமான மனதை அலைபாயாமல் தடுத்தல் அவசியமான ஒன்றாகிவிட்டது. நாம் எதிர்நோக்கும் எல்லா பிரச்னைகளையும் நிறைகுடம் போல ஆடாமல், அசையாமல் ஒரே மனதுடன் இருந்துவிட்டால் தீர்த்துவிடலாம். எதற்க்கும் அசராத மனமே வெற்றிக்குப் பெரிய காரணமாக இருக்கும் பொழுது நாம் ஏன் குறை குடமாக இருக்க வேண்டும். நிறைகுடமாகவே நிறைந்து இருக்கலாம்.
0
Leave a Reply