25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Aug 29, 2024

விருதுநகர் வட்டத்தில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற திட்டம்

மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் மக்களை தேடிச்சென்று குறைகளைக் கேட்டறியவும், பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும், மக்களை நாடி மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே சென்று ஆய்வு செய்திட "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற புதிய திட்டம்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதன்படி, விருதுநகர் மாவட்டம், விருதுநகர் வட்டத்தில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற புதிய திட்ட முகாமானது 28.08.2024 இன்று காலை 9 மணி முதல் மறுநாள் 29.08.2024 அன்று காலை 9 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த முகாமின் கீழ், பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் அரசின் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.அதனடிப்படையில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று மல்லையநாயக்கன்பட்டியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு சென்று பார்வையிட்டு, அங்குள்ள குழந்தைகளின் எண்ணிக்கை, வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவுகள், வயதுகேற்ற எடை, உயரம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தார்.பின்னர், புதுப்பட்டி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.5 இலட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டுள்ளதையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.9.77 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய நியாயவிலை கடையினையும் மற்றும் புதுப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் ரூ.9.85 இலட்சம் மதிப்பில் வகுப்பறைகள் புதுப்பிக்கப்பட்டுள்ள பணிகளையும், பார்வையிட்டு பணிகளின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.அதனை தொடர்ந்து, புதுப்பட்டி நியாயவிலை கடையினை பார்வையிட்டு, குடிமைப் பொருட்களின் இருப்பு, தரம், கைரேகை இயந்திரத்தின் செயல்பாடு உள்ளிட்டவை குறித்தும், புதுப்பட்டி கிராமத்தில் உள்ள நூலகத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும், அப்பையநாயக்கன்பட்டி கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.9.45 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய நியாயவிலை கடையினையும், தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ், ரூ.3.50 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சிறிய அளவிலான சுகாதார வளாகத்தினையும் மற்றும் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், ரூ.3.50 இலட்சம் மானியத்தில் வீடு கட்டப்பட்டு வரும் பணிகளையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.7.50 இலட்சம் மதிப்பில் ஊருணி தூர்வாரப்பட்டு குளியல் தொட்டி மற்றும் தடுப்புச்சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர், அப்பையநாயக்கன்பட்டி காவல்; நிலையத்தினை நேரில் சென்று பார்வையிட்டு; சட்டம் ஒழுங்கு, குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை, அதன் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், சாலைபாதுகாப்பு, கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார்.வீரார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்குள்ள ஆசிரியர்களிடம் மாணவர்களின் கல்வி தரம், கற்பிக்கும் முறைகள் குறித்து கேட்டறிந்து, பசுமை மன்றம், 7.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு, புதுமைப் பெண், தமிழ் புதல்வன்  உள்ளிட்ட மாணவர்களுக்கான அரசின்  திட்டங்கள் குறித்து, மாணவர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் பங்களிப்பை வழங்க தேவையான ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளை வழங்கினார்.அதனை தொடர்ந்து, விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்.பின்னர் அனைத்து ஊராட்சிகளில் மேற்கொள்ள வேண்டிய குடிநீர், சுகாதாரம் மற்றும் சாலைப் பணிகள், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் உரிய பயனாளிகளை சென்றடைவதை உறுதி செய்வது குறித்து அனைத்து அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தெ.கண்ணன்,த.கா.ப., அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில், விருதுநகர் வட்டாரத்தைச் சேர்ந்த 6 பயனாளிகளுக்கு ரூ.1.65 இலட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும், 2 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் உத்தரவுகளையும், 1 பயனாளிக்கு உறவு முறைசான்றினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மரு.தண்டபாணி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திரு.காளிமுத்து, சாத்தூர் கோட்டாட்சியர் திரு.சிவகுமார், கூட்டுறவு சங்க மண்டல இணைப்பதிவாளர் திரு.செந்தில்குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி அனிதா, வட்டாட்சியர் உட்பட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Aug 29, 2024

தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வது மற்றும் இருப்புவைப்பது குறித்து மாவட்டம் முழுவதும் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

தமிழ்நாடு அரசின் போதைப் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தீவிர ஒழிப்புத் திட்டத்தின்படி, உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல் துறையினரும் இணைந்த 6 குழுக்கள்அமைக்கப்பட்டு, பள்ளி, கல்லூரிகள் அருகாமையில் உள்ள கடைகளிலும் மற்றும் இதர பகுதிகளில் உள்ள கடைகளிலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.கடந்த  01-01-2024 முதல்  17-08-2024 முடிய உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல் துறையினரும் குழுவாக இணைந்து 538 முறை தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் உள்ளதா என சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில், தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கண்டறியப்பட்ட 238 கடைகள் மற்றும் 23 வாகனங்களில் 1094 கிலோ 851 கிராம் எடையிலான புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக 238 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டன. மேலும், 238 கடைகள் மற்றும் 23 வாகனங்களுக்கும்;;  ரூ.60,60,000/-( ரூபாய் அறுபது இலட்சத்து அறுபது ஆயிரம் )அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.கடந்த 18-08-2024 முதல் 24-08-2024 முடிய ஒரு வாரத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளும், காவல் துறையினரும்  இணைந்து மேற்கொள்ளப்பட்ட 18 குழு ஆய்வுகளில் 5 கடைகள் மற்றும் 3 வாகனத்தில் 20 கிலோ 125 கிராம் எடையுள்ள புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக 5 கடைகள் சீல் வைக்கப்பட்டன. 5 கடைகள் மற்றும்  3 வாகனத்திற்கு ரூ.2,00,000/-(ரூபாய் இரண்டு இலட்சம்)அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.முதன் முறையாக தடைசெய்யப்பட்ட புகையிலை விற்பது கண்டுபிடிக்கப்பட்டால்  ரூ.25 ஆயிரம் அபராதம், 15 நாட்களுக்கு கடை மூடி சீல் வைக்கப்படும். 2-வது முறையாக தவறு செய்தால் ரூ.50 ஆயிரம் அபராதம் ஒரு மாதம் வரைகடை மூடி சீல் வைக்கப்படும், 3-வது முறையும் தவறு செய்தால்  ரூ.1 லட்சம் அபராதம், மூன்று மாதங்களுக்கு கடை மூடி சீல் வைக்கப்படும். இம்மாவட்டம் முழுவதும் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு, தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வது மற்றும் இருப்பு வைப்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர்   முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S.,அவர்கள் தெரிவித்துள்ளார்.

Aug 28, 2024

சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் , I A S,அவர்கள்(27.08.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்படி சாத்தூர் ஊராட்சி ஒன்றியம், மேட்டமலை ஊராட்சி மடத்துக்காடு கிராமத்தில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் தலா ரூ.2.78 இலட்சம் மானியத்தில் 86  குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டு வருவதையும், மேட்டமலை கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.26.44 இலட்சம் மதிப்பில் குளம் தூர்வாரப்பட்டு வரும் பணிகளையும், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3.50 இலட்சம் மானியத்தில் குடியிருப்பு வீடு கட்டப்பட்டு வருவதையும்,சடையம்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.15.61 இலட்சம் மதிப்பில் குளம் தூர்வாரப்பட்டு வரும் பணிகளையும், தெர்;கூர் கிராமம் சின்னகொல்லம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.3.50 இலட்சம் மதிப்பில் மிதிவண்டி நிறுத்தக்கூடம் அமைக்கப்பட்டுள்ளதையும்,பெரியஓடைப்பட்டி கிராமத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3.50 இலட்சம் மானியத்தில் குடியிருப்பு வீடு கட்டப்பட்டு வருவதையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.11.59 இலட்சம் மதிப்பில் சங்கரலிங்காபுரம் ஊரணி தூர்வாரப்பட்டு வரும் பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும் நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Aug 28, 2024

திருவிருந்தாள்புரம் ஊராட்சியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் திருவிருந்தாள்புரம் ஊராட்சியில்  (27.08.2024) செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக வைக்கப்பட்டுள்ள தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டனர்.

Aug 28, 2024

வங்கிப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ள Probationary Officers (PO) பணியிடங்களுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களுக்கான அடிப்படை பயிற்சி வகுப்பு

விருதுநகர் மாவட்ட தொழில் மைய கூட்டரங்கில், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், வங்கிப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ள 4455 Probationary Officers (PO) காலிப்பணியிடங்களுக்கு  விண்ணப்பித்துள்ள தேர்வர்களுக்கு நடைபெற்ற ஒரு நாள் அடிப்படை பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர்   முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S,அவர்கள்(27.08.2024) தொடங்கி வைத்தார்.வங்கிப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ள 4455 Probationary Officers (PO) பணிக்காலியிடங்களுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்கள் பயன்பெறும் வகையில் இந்த ஒருநாள்அடிப்படைபயிற்சிவகுப்புஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.போட்டித் தேர்வு என்பது பயிற்சி பெற்றவர்களுக்கும், மற்றவர்களுக்குமான ஒரு போட்டியாகும். வெற்றி பெற்றவர்களுக்கும், வெற்றி பெறாதவர்களுக்கும் இடையில் உழைப்பு, படிப்பு ஆகியவற்றில் பெரியதாக வேறுபாடுகள் இருக்காது. ஆனால் அவர்கள் பெற்றிருக்கக் கூடிய மதிப்பெண்களில்  சிறு இடைவெளி தான் இருக்கின்றன.ஆனால் அதில் வெற்றி பெற்றவர்களுக்கு உள்ள தனித்தன்மை என்ன என்று எடுத்து பார்த்தால், சில நுணுக்கங்களை அவர்கள் கற்றுக் கொண்டிருப்பார்கள். அந்த நுணுக்கங்களை கற்றுக் கொள்ளவில்லை என்றால் மறுபடியும் அந்த தேர்வு எழுதுவதற்கு ஓராண்டு ஆகிவிடும். இதனால் கால தாமதமாகும்.விளையாட்டு, படிப்பு என எந்த ஒரு போட்டிக்கும் சிறப்பான நுணுக்கங்கள் இருக்கும். அந்த நுணுக்கங்களை தாங்களாகவே தவறுகள் மூலம் கற்றுக் கொண்டு, தேர்ச்சி பெறுவதற்கு காலம் ஆகும்.அதற்கான கால விரையத்தை குறைக்க வேண்டும். இந்த பயிற்சியின் மூலம் நுணுக்கங்களை கற்றுக்கொள்ள வேண்டும்.இப்பயிற்சிகள் மூலம் கவனக் குறைவு, தவறுகளை தவிர்த்தல் போன்றவைகள் பற்றி பயிற்சி அளிக்கும் போது அவர்கள் நல்ல முறையில் தேர்வு எழுத முடியும் என்பதற்காக தான் இந்த பயிற்சி.பள்ளி மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும், கல்லூரி முடித்து போட்டித் தேர்வுக்கு படிக்கும் மாணவர்களுக்கும் நான் முதல்வன் என்ற முக்கியமான திட்டத்தின் கீழ் பல்வேறு பயிற்சிகளை தமிழ்நாடு அரசு வழங்குகிறது.அதில் குறிப்பாக இத்திட்டத்தில் போட்டித் தேர்வுக்கு என்று தனி ஒரு அமைப்பு மூலமாக நான் முதல்வன் போட்டி தேர்வு பிரிவில் நிறைய பயிற்சிகள் வழங்குகின்றார்கள்.இந்தியா முழுவதும் ரயில்வே, எஸ்.எஸ்.சி, வங்கி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் மூலமாக பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.இதில் தமிழ்நாட்டை சார்ந்த மாணவர்கள் நிறைய பேர் ஆங்கிலம் கணிதம் கடினமாக இருக்கும் என்று நினைக்கிறார்கள். இந்த இடைவெளியை நாம் நீக்க வேண்டும் என்ற நோக்கில் இணையதள பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.குறிப்பாக தமிழ்நாடு அரசினுடைய வேலைவாய்ப்பு பயிற்சித்துறை, நான் முதல்வன் இணையதளம், அண்ணா பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் ஆகியவற்றின் இணையதளம் மற்றும் யூ-டியூப் மூலம் நடத்தப்படும் 20 மணி நேர ஆங்கிலம், திறனறிவு உள்ளிட்ட வகுப்புகளில் பயிற்சி செய்யும் போது நீங்கள் நிறைய கற்றுக் கொள்ளலாம்.அதில் நீங்கள் அதிகமான வினாக்களுக்கு பதில் அளிக்கக் கூடிய அளவிற்கு இந்த பயிற்சிகள் உங்களுக்கு உதவி செய்யும். இன்றைக்கு நிறைய பேர் கடந்த ஆண்டு வெற்றி பெற்ற மாணவர்களை பார்க்கும்போது, முழுக்க இணைய வழியில் பயிற்சி செய்து இணைய வழியில் மாதிரி வினாத்தாள்களை எடுத்து அதில் முறையாக பயிற்சி எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆகையால் இதன் மூலமாக தெரிந்து கொள்ள வேண்டியது முறையாக நீங்கள் பயிற்சி பெற்று, அந்த பயிற்சியில் வழங்கக்கூடிய நுணுக்கங்கள் அடிப்படையில் கடினமாக உழைத்தால் நிச்சயமாக போட்டி தேர்வுகளில் வெற்றி பெற முடியும் என தெரிவித்தார்.

Aug 28, 2024

நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு சென்னையில் 21.09.2024 முதல் 06.10.2024 வரை நடைபெறும் கண்காட்சி மற்றும் விற்பனையில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தங்கள் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தலாம்

விருதுநகர் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) மூலம் கிராமப்புற மற்றும் நகர்ப்புற மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நிர்வாக பயிற்சி, நிதி மேலாண்மை பயிற்சி மற்றும் வாழ்வாதார மேம்பாட்டு பயிற்சிகள் (தொழில் முனைவோர் பயிற்சி) அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், வாழ்வாதார மேம்பாட்டு பயிற்சி பெற்ற மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தொழில் முனைவோர்களாகி சுய தொழில் செய்து வருகின்றனர்.தற்போது சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை சந்தைப்படுத்தும் வகையில் பல்வேறு கண்காட்சி மற்றும் விற்பனை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 21.09.2024 முதல் 06.10.2024 முடிய நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு சென்னை, வள்ளுவர் கோட்டம், அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெறவுள்ளது. இக்கண்காட்சியில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் அனைத்து வகை பொருட்களையும் குறிப்பாக நவராத்திரி திருவிழா சார்ந்த பொருட்கள் மற்றும் கொலு பொம்மைகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்ய அரிய வாய்ப்பு தரப்படுகிறது.எனவே, இக்கண்காட்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் தங்கள் பெயர், முகவரி, உற்பத்தி செய்யும் பொருட்களின் விவரம் மற்றும் அலைபேசி எண் ஆகியவற்றை 31.08.2024 அன்று மாலை 6.00 மணிக்குள் https://exhibition.mathibazaar.com/login என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்களால் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Aug 28, 2024

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2024-ம் ஆண்டிற்கான ஓராண்டு / ஈராண்டு தொழிற்பிரிவுகளில் சேர பயிற்சியாளர்கள் நேரடிச்சேர்க்கைக்கு 31.08.2024 அன்று வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது

விருதுநகர் மாவட்டத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களான விருதுநகர்/ அருப்புக்கோட்டை / சாத்தூர்/ திருச்சுழியில் 2024-ம் ஆண்டிற்கான ஓராண்டு /ஈராண்டு தொழிற்பிரிவுகளில் சேர பயிற்சியாளர்கள் நேரடிச்சேர்க்கை மூலம் 16.08.2024 முடிய சேர்ந்து கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டது. தற்போது ஒரு சில தொழிற்பிரிவுகளில் 100 % பயிற்சியாளர்கள் சேர்க்கை பூர்த்தியடையாத காரணத்தினால் மேலும் 31.08.2024 முடிய நேரடி சேர்க்கைக்கு காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.இப்பயிற்சிக்கு இருபாலரும் (ஆண்/பெண்) 31.08.2024-க்குள் உரிய தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடியாக விண்ணப்பித்து பயன் பெறலாம். இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கு மேல் பயின்ற அனைவரும் தகுதியானவர்கள். வயது வரம்பு ஆண்களுக்கு குறைந்தபட்ச வயது 14 முதல் அதிகபட்ச வயது 40 வரை மற்றும் மாற்றுத்திறனாளி / முன்னாள் இராணுவத்தினருக்கு விதிகளின்படி 5 ஆண்டு வயது வரம்பில் தளர்வு உண்டு. பெண்களுக்கு குறைந்தபட்சம் 14 முதல் அதிகபட்ச வயது உச்ச வரம்பு ஏதும் இல்லை.விண்ணப்பக்கட்டணமாக ரூ.50/-யை செலுத்தி விருதுநகர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள (கடைசலர், இயந்திர வேலையாள், தீயணைப்பு தொழில்நுட்பம் மற்றும் தொழிற்சாலை பாதுகாப்பு மேலாண்மை, உட்புற வடிவமைத்தல் மற்றும் அலங்கரித்தல் மற்றும் தொழிற்துறை எந்திரவியல் மற்றும் எண்ணியல் உற்பத்தி தொழில்நுட்பவியலாளர்) ஓராண்டு/ஈராண்டு தொழிற்பிரிவுகளில் சேரலாம்.மேலும், சேர்க்கை கட்டணம் ஓராண்டு தொழிற்பிரிவிற்கு ரூ.185/- ஈராண்டு தொழிற்பிரிவிற்கு ரூ.195/- ஆகும்.  அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவ / மாணவிகளுக்கு தமிழக அரசால் பின்வருமாறு விலையில்லா உபகரணங்கள் வழங்கப்படுகிறது. மிதிவண்டி / கட்டணமில்லா பேருந்து பயணச் சலுகை / மாதாந்திர கல்வி உதவித் தொகை ரூ.750/- (வருகைக்கு ஏற்ப) / சீருடை 2 செட் (தையல்கூலியுடன்) /மூடு காலணி 1 செட்  /பாடப்புத்தகங்கள் / வரைபட கருவிகள் / பயிற்சியாளர் அடையாள அட்டை / அரசு பள்ளியில் 6 முதல் 10 ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பெறும் பெண்களுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 /- மற்றும் 2024-ம் ஆண்டு ஆகஸ்ட முதல் பயிற்சியில் சேரும் ஆண் பயிற்சியாளர்களுக்கு தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 /- கூடுதலாக உதவித்தொகை வழங்கப்படும்.விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் (10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்  (2021-ம் ஆண்டு தேர்ச்சி பெற்ற 10-ம் வகுப்பு மாணவர்கள் 9-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்) /பள்ளி மாற்றுச்சான்றிதழ் / சாதிச்சான்றிதழ் / ஆதார் அட்டை /பாஸ்போர்ட் அளவு புகைப்படம்) மற்றும் மின்னஞ்சல் முகவரி கைபேசி எண் விவரம்.மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய அரசு தொழிற்பயிற்சி நிலைய தொலைபேசி எண்களான விருதுநகர்: 04562-294382 / 252655, அருப்புக்கோட்டை: 04566-225800 சாத்தூர்: 04562-290953 / திருச்சுழி: 95788-55154 / 70100-40810 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன். I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

Aug 27, 2024

தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்தின் கீழ், சமுதாய அமைப்பாளர்கள் பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்

விருதுநகர் மாவட்டம், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்தின் கீழ்,  மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் காலியாக உள்ள சமுதாய அமைப்பாளர்கள் பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளது. இப்பணியிடத்திற்கு கீழ்கண்ட கல்வி மற்றும் அனுபவ தகுதிகளின் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.சமுதாய அமைப்பாளர்கள் பணிக்கான தகுதியான நிபந்தனைகள் : (Eligibility conditions) மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 35 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும் (05.08.2024 அன்று). ஏதேனும் ஒரு பாடத்திட்டத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றவராக இருத்தல் வேண்டும். அரசு சார்ந்த திட்டங்களில் விரிவான களப்பணி மூலம் குறைந்தது ஒரு வருட கால அனுபவம் இருத்தல் வேண்டும். கண்டிப்பாக கணினியில் குறைந்தபட்சம் MS Word, Excel பயன்படுத்த தெரிந்தவராக இருத்தல் வேண்டும். பகுதி அளவிலான கூட்டமைப்பில் உறுப்பினராக இருத்தல் வேண்டும்.சம்மந்தப்பட்ட பகுதி அளவிலான கூட்டமைப்பிலிருந்து தீர்மானம் நிறைவேற்றி அதற்கான அறிக்கையினை சமர்பிக்க வேண்டும்.தகவல் பரிமாற்றத்தில் திறமையுடையவராக இருத்தல் வேண்டும். இரு சக்கர வாகன உரிமம் பெற்றிருக்க வேண்டும். அடிப்படை கணினி திறன் பெற்றவராக இருத்தல் வேண்டும். விருதுநகர் மாவட்டத்திற்குள் வசிப்பவராகவும் மற்றும் 2 ஆண்டுகளுக்கு மேலாக அமைக்கப்பட்ட பகுதி அளவிலான கூட்டமைப்பில் உறுப்பினராக இருக்க வேண்டும். நிர்வாகம் மற்றும் நிதி முறைகேடுகள் காரணமாக TNSRLM/Pudhu Vaazhvu Project/IFAD  ஆகிய திட்டத்திலிருந்து பணி நீக்கம்/ தகுதி நீக்கம் செய்யப்பட்டவராக இருத்தல் கூடாது.மேற்காணும் தகுதிகள் உள்ள நபர்கள் 05.09.2024 தேதிக்குள், மாலை 5.45 மணிக்குள் மேலாளர், நகர்ப்புர வாழ்வாதார மையம், இராஜபாளையம் நகராட்சி – 626117- 04563-296624 / 83445-43852 என்ற முகவரிக்கு விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர்  முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S , அவர்கள் தெரிவித்துள்ளார்.

Aug 27, 2024

நுகர்வோர் விழிப்புணர்வு பிரச்சார பேரணி

விருதுநகரில் இந்திய தரநிர்ணய அமைவனம், மதுரை சார்பில் (24.08.2024) நடைபெற்ற நுகர்வோர் விழிப்புணர்வு பிரச்சார பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் I A S., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Aug 26, 2024

மாவட்ட நிர்வாகம் சார்பில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 40 அரசுப்பள்ளி மாணவர்கள் ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஶ்ரீஹரிக்கோட்டா சதீஸ் தவான் விண்வெளி மையத்தினை பார்வையிட்டனர்.

விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இயற்பியலில் சிறந்து விளங்கும் 40 மாணவ, மாணவியர்கள் ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஶ்ரீஹரிக்கோட்டா  சதீஸ்  தவான் விண்வெளி மையத்திற்கு 2 நாட்கள் அறிவியல் பயணம் சென்று   பார்வையிட்டனர். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழக மாணவர்களின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்கள்.அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில், தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக, பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள், அவர்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக கோடைகால சிறப்பு பயிற்சி வகுப்புகள், போட்டித்தேர்வுகளுக்கு தயார் படுத்துவதற்காக சிறப்பு பயிற்சி வகுப்புகள், உயர்கல்வி குறித்த புரிதல் மற்றும் உயர்கல்வி படிப்புகளில் உள்ள துறைகள் குறித்து வழிகாட்டும் நோக்கில் கல்லூரிகளுக்கு கல்விச் சுற்றுலா, உயர்கல்வி படிப்பதற்கு விரிவான வழிகாட்டுதலையும், அவர்களின் எதிர்கால கல்வி நோக்கங்கள் குறித்து தகவல் அறிந்து முடிவுகளை எடுக்க மாணவர்களுக்கு உதவிடும் வகையிலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம், சுற்றுச்சூழல் மற்றும் வன உயிரினங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி பசுமை ஆர்வலர்களை உருவாக்கும் திட்டம், மாணவர்களுக்கு கல்வியோடு, அவர்களின் கல்வி இணை செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அறிவோம் தெளிவோம் என்ற சிறப்புத் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்கள் அருகில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு  சென்று, அங்குள்ள அலுவலக நடைமுறைகளையும், அங்கு வழங்கப்படும் சேவைகளையும் தெரிந்து கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது.மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடர்ச்சியாக காபி வித் கலெக்டர் நிகழ்ச்சிகள் மூலம் பல்வேறு தனித்திறமைகளில் சிறந்து விளங்கும் அரசுப்பள்ளி மாணவர்களை சந்தித்தும், அரசுப்பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுடன் கலந்துரையாடி, இலக்கை நிர்ணயிப்பது, அந்த இலக்கை எவ்வாறு அடைவது, வாய்ப்புகளை பயன்படுத்துவது, தொடர்ச்சியான செயல்பாட்டினால் திறமையை வளர்த்துக் கொண்டு வாழ்வில் வெற்றி பெறுவது, தவறுகளில் இருந்து படிப்பினை கற்றுக் கொண்டு எவ்வாறு வாழ்வில் முன்னேறுவது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை கூறி, அறிவுரை மற்றும் ஆலோசனைகளுடன் கூடிய உரிய வழிகாட்டுதல்களை மாணவர்களுக்கு வழங்கி வருகிறார்கள்.மேலும், மாவட்டத்தில்  அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்து, திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையம்,ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஶ்ரீஹரிக்கோட்டா  சதீஸ்  தவான் விண்வெளி மையம், மதுரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி அருங்காட்சியகம்,u தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான ஸ்டெம் அறிவியல் பூங்கா, பந்தல்குடியில் உள்ள ராம்கோ சுற்றுசூழலியல், கொடைக்கானலில் சேக்ரட் ஹாட் இயற்கை அறிவியில் அருங்காட்சியகம், கொடைக்கானல் சூரிய வான் ஆய்வகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தொடர்ச்சியாக கல்விச் சுற்றுலாவிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.அதன் ஒரு பகுதியாக 22.08.2024 மற்றும் 23.08.2024 ஆகிய இரண்டு தினங்கள் 40 அரசுப்பள்ளி மாணவர்கள்ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஶ்ரீஹரிக்கோட்டா  சதீஸ்  தவான் விண்வெளிமையத்தினை பார்வையிட்டனர்.இந்த அறிவியல் பயணத்தில்  விண்வெளி நிலையத்தில் உள்ள விஞ்ஞானிகள் மாணவர்களுக்கு இந்தியாவின் விண்வெளி பயணம் குறித்தும் எதிர்கால திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தனர். மேலும், அங்கு  செயல்படுத்தப்படும் திட்டங்களை பற்றி விஞ்ஞானிகள் எடுத்துரைத்தார்கள்.இஸ்ரோவின் வருங்கால  திட்டம் குறித்த விளக்கங்களை விஞ்ஞானிகள் வழங்கினார்கள்.பின்பு விண்வெளி மையத்தில் உள்ள இரண்டு ராக்கெட் ஏவு தளங்களையும் பார்வையிடுவதற்கு மாணவர்களை அழைத்து சென்றனர். ஏவுதளம் ஒன்று மற்றும் ஏவு தளம் இரண்டு இரண்டின் சிறப்புகளையும் விளக்கினர். இந்தியாவிற்கு பெருமை சேர்த்த மங்கள்யான், சந்திராயன், பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி போன்ற ராக்கெட்டுகள் ஏவுதளம் இரண்டிலிருந்து ஏவப்பட்டதை மாணவர்களுக்கு விளக்கினார்கள். மேலும், இஸ்ரோவில் வேலைக்கு சேர்வது எப்படி என்ற வினாவுக்கும், இஸ்ரோவில் விஞ்ஞானியாக பணியாற்றுவதற்கும், அஸ்ட்ரோநட்டாக பணியாற்றுவதற்கும் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கும் விஞ்ஞானிகள் மிகவும் தெளிவாக பதில் அளித்தார்கள்.இந்த அறிவியல் களப்பயணம் விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் சார்ந்த பல்வேறு தகவல்கள் குறித்து அறிந்து கொள்ளவும், எதிர்காலத்தில் எங்களுடைய உயர் கல்வி மற்றும் வாழ்க்கைக்கான இலக்கை நிர்ணயிப்பதற்கான ஒரு தூண்டுகோலாகவும், வழிகாட்டியாகவும், முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது என மாணவர்கள் தெரிவித்தனர்.இந்த அறிவியல் பயணத்தை ஏற்பாடு செய்து, எங்களை அழைத்து வந்த மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.

1 2 ... 17 18 19 20 21 22 23 ... 69 70

AD's



More News