விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு வேலை வாய்ப்புகளுக்காக இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்வது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சமீபகாலமாக தகவல் தொழில்நுட்ப பணி என்ற பெயரில், கம்போடியா, தாய்லாந்து, மியான்மர் (பர்மா) உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு சுற்றுலா விசாவில் தமிழ்நாட்டு இளைஞர்கள் அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு சென்றவுடன் சட்டவிரோதமான இணையதள நடவடிக்கைகளில் ஈடுபடும்படி அவர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். அம்மாதிரி சட்டவிரோதமான இணையதள பணிகளை செய்ய மறுக்கும் நபர்களை கடுமையாக துன்புறுத்துகிறார்கள். நமது விருதுநகர் மாவட்டத்தில் இருந்து இதுபோல் தகவல் தொழில்நுட்ப பணி என்ற பெயரில் வெளிநாட்டிற்கு சென்ற இளைஞர்கள் பலர் ஏமாற்றப்பட்டுள்ளனர். அவர்களை நம்நாட்டிற்கு மீட்டெடுத்து வருவதில் மிகுந்த சிரமங்களும், கால தாமதமும் ஏற்படுகிறது. அன்மைகாலங்களில் தாய்லாந்து வழியாக லாவோஸ் நாட்டிற்கு தகவல் தொழில்நுட்ப பணி என்றும் டிஜிட்டல் சேவைகளை சந்தைபடுத்துகின்ற மேலாண்மை பணி என்றும் நமது இளைஞர்களை அழைத்துச் சென்று சட்டவிரோத செயல்களில் ஈடுபட கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இம்மாதிரியாக இளைஞர்களை கவர்ந்து அழைத்து செல்லும் முகவர்கள் துபாய், தாய்லாந்து, சிங்கப்பூர் மற்றும் இந்தியாவில் செயல்பட்டு வருகின்றனர். இம்முகவர்கள் இளைஞர்களுக்கு தகவல் தொழில்நுட்ப பணிக்கென்று மிக எளிமையான நேர்காணல் வழியாகவும், எளிமையான தட்டச்சு தேர்வு வைத்து தெரிவு செய்வதோடு அதிக சம்பளம், தங்குமிட வசதி, நாடு திரும்புவதற்கான விமானப் பயணச் சீட்டு மற்றும் விசா ஏற்பாடு செய்யப்படும் என்று ஆசை வார்த்தைகளை சொல்லி இளைஞர்களை பணிக்கு தேர்வு செய்கின்றனர்.தகவல் தொழில்நுட்ப பணி என்று நம்பி சென்ற இளைஞர்கள் சட்டவிரோதமாக தாய்லாந்து எல்லை வழியாக லாவோஸ் நாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, லாவோஸில் உள்ள Golden Triangle என்ற சிறப்பு பொருளாதார மண்டலத்தில் கடுமையான மற்றும் கட்டுப்பாடான நிலைமைகளின் கீழ் பணிபுரிய சிறைபிடிக்கப்படுகின்றனர்.தாய்லாந்து அல்லது லாவோஸ் நாடுகளில் வருகைக்கான விசா (Arrival visa) வேலைவாய்ப்பை அனுமதிக்காது. மேலும், அத்தகைய விசாவில் லாவோஸ் நாடுகளுக்கு வருபவர்களுக்கு லாவோஸ் நாட்டு அதிகாரிகள் வேலைக்கான அனுமதியை (Work Permit) வழங்குவதில்லை. சுற்றுலா விசா, சுற்றுலா நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. லாவோஸில் மனித கடத்தல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு 18 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.இதுபோன்ற மோசடி வலையில் நமது இளைஞர்கள் மாட்டிக்கொள்ளாமல் எச்சரிக்கை உணர்வுடன், ஆட்சேர்ப்பு முகவர் மற்றும் வேலை செய்யவிருக்கும் நிறுவனத்தை பற்றி நன்றாக விசாரித்து பணிக்கு செல்லவும் அறிவுறுத்தப்படுகிறது. மேலும் வேலைக்கான விசாவின் உண்மைதன்மை மற்றும் முறையான பணி ஒப்பந்தம் (Work Permit) குறித்து பயணிப்பதற்கு முன் பணிபுரிய செல்ல உள்ள நாட்டிலுள்ள இந்திய தூதரகம் அல்லது இந்தியாவிலுள்ள அந்நாட்டின் தூதரகம் மூலம் கட்டாயம் அறிந்து கொள்ளவேண்டும்.லாவோஸ் மற்றும் கம்போடியாவில் வேலை வாய்ப்புகள் குறித்த விவரங்களை லாவோஸ் நாட்டிலுள்ள இந்திய தூதரகத்தின் தொலைபேசி எண் 856-2055536568, மின்னஞ்சல் cons.vientianne@mea.gov.in மற்றும் கம்போடியாவில் உள்ள இந்திய தூதரகத்தின், மின்னஞ்சல் cons.phnompehh@mea.gov.in. visa.phnompehh@mea.gov.in ஆகியவற்றின் மூலம் சரிபார்க்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.அயலக வேலைவாய்ப்பு தொடர்பான விவரங்கள் மற்றும் அயல்நாடுகளில் உள்ள தமிழர்கள் சந்திக்கும் இன்னல்கள் குறித்து தீர்வு காண தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறையின் கட்டணமில்லா தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.அ) 18003093793 (இந்தியாவிற்குள்)ஆ) 8069009901 (அயல்நாடுகளிலிருந்து தொடர்புக்கு)இ) 8069009900 (Missed Call No..)மேலும் குடிப்பெயர்வு பாதுகாப்பு அலுவலர், சென்னை (Protector of Emigrants,Chennai) உதவி எண்- 90421 49222 அவர்களையும் தொடர்பு கொள்ளலாம். தமிழ்நாட்டில் ஒன்றிய அரசில் பதிவு பெறாமல் வெளிநாட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் முகவர்கள் / முகமைகள் மீது காவல்துறை மூலம் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே வெளிநாட்டிற்கு செல்லும் இளைஞர்கள்; எச்சரிக்கை உணர்வுடன், மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் (24.05.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்படி திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம், கிருஷ்ணன்கோவில் ஊராட்சி, விழுப்பனூர் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.9.77 இலட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக்கடை கட்டப்பட்டு வருவதையும்,விழுப்பனூர் ஊராட்சியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ், ரூ.5.83 இலட்சம் மதிப்பில் சுற்றுச்சூழல் வளர்ச்சிக்காக ஊரணி தூர்வாருதல், கால்வாய் ஆழப்படுத்துதல், தடுப்புச்சுவர் கட்டுதல் மற்றும் குழந்தைகளுக்கான நீச்சல் குளம் கட்டப்பட்டு வருவதையும்,அச்சன்குளம் ஊராட்சியில் அயோத்தி தாஸ் பண்டிதர் திட்டத்தின் கீழ் ரூ.25 இலட்சம் மதிப்பில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டு வரும் பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரைந்தும், தரமாகவும் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.இந்த நிகழ்வுகளில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவிப் பொறியாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் (24.05.2024) விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுத்தப்படவுள்ள மேற்பார்வையாளர்கள் / உதவியாளர்கள் மற்றும் நுண் பார்வையாளர்கள் ஆகியோர்களுக்கான முதற்கட்ட சீரற்ற தெரிவு பணிகள் (1st Randomization process) தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.மக்களவை பொதுத்தேர்தல் - 2024 கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்பரங்குன்றம், திருமங்கலம், சாத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை ஆகிய 6 தொகுதியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையமான விருதுநகரில் உள்ள வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது.மேலும், விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையானது வருகின்ற 04-06-2024 அன்று நடைபெற உள்ளது. இவ்வாக்கு எண்ணிக்கையில், வாக்கு எண்ணிக்கைக்கான மேற்பார்வையாளர்கள்,உதவியாளர்கள் மற்றும் நுண் பார்வையாளர்கள் ஆகியோர்கள் மூன்று கட்டமாக சீரற்ற தெரிவு முறையில் (Randomization process) தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணியாளர்களை தேர்வு செய்வதற்கான முதற்கட்ட சீரற்ற தெரிவு முறையானது தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் அவர்களால் வழங்கப்பட்ட மென்பொருளில் மேற்கொள்ளப்பட்டது.இதில், கீழ்கண்ட விபரப்படி வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள்/ உதவியாளர்கள் மற்றும் நுண் பார்வையாளர்கள் ஆகியோர்கள் சீரற்ற தெரிவு முறையில் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட 120 வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள், 120 வாக்கு எண்ணிக்கை உதவியாளர்கள் மற்றும் 120 நுண் பார்வையாளர்கள் என மொத்தம் 360 வாக்கு எண்ணிக்கை பணியாளர்களுக்கு முதற்கட்ட பயிற்சி வகுப்பானது, 27.05.2024 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து தனித்தனியாக தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.இதன் பின்னர், தேர்தல் பொதுப் பார்வையாளர் அவர்கள் வரப்பெற்ற பின்பு 2ம் கட்ட சீரற்ற தெரிவு முறையில் சட்டமன்றத் தொகுதிக்கு தேர்வு செய்வதற்கான பணியானது தேர்தல் பொது பார்வையாளர் அவர்கள் முன்னிலையில் நடைபெறும். அப்போது 2ம் கட்ட பயிற்சியானது, தேர்தல் பொது பார்வையாளர் அவர்கள் தலைமையில் வழங்கப்படும்.மேலும், 3ம் கட்ட சீரற்ற தெரிவு முறை தேர்வானது, வாக்கு எண்ணிக்கை அன்று (04.06.2024) வாக்கு எண்ணிக்கை மையத்தில் வைத்து அன்று காலை 5.00 மணியளவில் தேர்தல் பொது பார்வையாளர் அவர்கள் முன்னிலையில், ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் மேஜை வாரியாக தேர்வு செய்யப்படவுள்ளனர் என தேர்தல் நடத்தும் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
தமிழ்நாடு சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பில் பசுமைத் தமிழ்நாடு இயக்கம் மூலம் காடு மற்றும் மரங்களின் பரப்பளவை அதிகரிக்கும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன.விருதுநகர் மாவட்டத்தில் பசுமை பரப்பளவை அதிகரிக்கும் நோக்கில் பசுமை தமிழ்நாடு இயக்கம் மூலமும், மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக பசுமை விருதுநகர் இயக்கம் மூலமும் பல்வேறு கட்டங்களாக மரக்கன்றுகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அந்த வகையில் உலக பல்லுயிர் தினத்தை முன்னிட்டு, மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசுத்துறைகள் சார்பில் 5 இலட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டன.இதன் தொடர்ச்சியாக, வருகின்ற ஜீன்-5 உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, ஜீன் மாதத்தில் 10 இலட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு மாவட்ட நிர்வாகத்தால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து அரசு அலுவலர்கள், பொதுமக்கள், அமைப்புச்சாரா நிறுவனங்கள், தன்னார்வலர்கள், தனியார் மற்றும் பொது நிறுவனங்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பள்ளிக், கல்லூரி மாணவ மாணவியர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்கலாம்.இந்த மரக்கன்றுகள் நடும் நிகழ்வில் பங்கேற்க விரும்புவோர் உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) 74026-08260 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.சமீப காலமாக புவி வெப்பமடைதல் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றால் ஏற்படும் வறட்சியினை தடுப்பதற்கும் கோடை காலங்களில் ஏற்படும் குடிநீர் பற்றாக்குறையினை போக்குவதற்கும், மரம் நடுதல் ஒன்றே சிறந்த தீர்வாக இருக்க முடியும் என்பதையும் பல்வேறு சமூக ஆர்வலர்கள், அறிஞர்கள், ஊடகவியாளர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து இதை மக்கள் இயக்கமாக முன்னெடுக்க வேண்டியதின் அவசியத்தை அனைவரும் வலியுறுத்தி வருகின்றனர்.இது போன்று தொடர்ச்சியாக மாவட்டம் முழுவதும் மரக்கன்றுகள் நடும் நிகழ்வுகள் நடைபெற உள்ளன. மாவட்டத்தில் ஒரு கோடி மரக்கன்றுகள் நடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, இந்த சீரிய முயற்சியில் அனைவரும் தவறாது பங்கு கொண்டு ஒரு மக்கள் இயக்கமாக இணைந்து மரக்கன்றுகளை நடவு செய்து இந்த பூமியை அனைவருக்குமான ஒரு சிறந்த வாழ்விடமாக மாற்ற அனைவரும் ஒத்துழைக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கிராம, நகர்புற பகுதிகளில் உள்ள குழந்தைகள் பள்ளிகள் தூரமாக இருப்பதாலும், சிலர் குடும்ப சூழ்நிலை காரணமாகவும் காலை உணவு சாப்பிடுவதில்லை என்பதை கருத்தில் கொண்டும், அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்காகவும், இடைநிற்றலை தவிர்ப்பதற்காகவும், ஊட்டசத்து குறைபாட்டை போக்குவதற்காகவும் இந்திய நாட்டிலேயே முன்னோடி திட்டமான அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டமான “முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம்”-னை கடந்த 15.09.2022 அன்று முதற்கட்டமாக தொடங்கி வைத்தார்கள்.அதனடிப்படையில், மாணவ, மாணவிகள் பசியின்றி பள்ளிக்கு வருதல், ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படாமலிருத்தல், ஊட்டச்சத்து நிலையை உயர்த்துதல், பள்ளிகளில் மாணவர்களின் வருகையை அதிகரித்தல், வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைத்தல் ஆகியவை குறிக்கோளாக கொண்டு, விருதுநகர் மாவட்டத்தில் முதல் கட்டமாக இத்திட்டத்தின் கீழ், ரூ.99.73 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 69 அரசு தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 3098 மாணவர்கள் பயன்பெறும் வகையில் தொடங்கி வைக்கப்பட்டது.அதனைத்தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக ரூ.7.05 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்கள் மற்றும் 7 பேரூராட்சிகளில் உள்ள 768 அரசு தொடக்க பள்ளிகளில் பயிலும் 33231 மாணவர்கள் பயன்பெறும் வகையில் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் மூலம், வழங்கப்படும் காலை உணவினால், பசிப்பிணி நீங்கி மனநிறைவோடு பிள்ளைகள் படிப்பார்கள். அவர்கள் மனதில் பாடங்கள் பதியும். மாணவர்கள் பள்ளிக்கு ஆர்வத்துடன் வருவதுடன், சீரான வருகைப் பதிவும் இருக்கும். தமிழ்நாட்டின் கல்வி கற்போர் விகிதமும் அதிகம் ஆகும். இதன் மூலம் கல்வியில் சிறந்த மாநிலமாக உருவாவதற்கும்,மாணவர்களுக்கு ஒரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் இத்திட்டம் அடித்தளமாக இருக்கும்இத்திட்டத்தில் பயன்பெற்று வரும் மாணவி தெரிவிக்கையில்:என் பெயர் ஆனந்தி. நான் பாலவனத்தம் அரசு தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறேன். என் தந்தை தினக்கூலி வேலை செய்து வருகிறார். தாய் விவசாயம் கூலி வேலை செய்து வருகிறார். நான் தினமும் பள்ளிக்கு வரும்போது, என் பெற்றோர் வேலைக்கு செல்வதன் காரணமாக அவர்களால் காலை உணவை சரிவர எனக்கு தயார் செய்து கொடுக்காமல் அவசர அவசரமாக வேலைக்கு சென்று விடுவார். நானும் வீட்டில் இருந்த உணவுகளை சாப்பிட்டு விட்டு பள்ளிக்கு வருவேன். சில நேரங்களில் காலை உணவை சாப்பிடாமல் கூட பள்ளிக்கு வந்துள்ளேன். இந்த நிலையில் முதலமைச்சர் ஐயா அவர்கள் எங்களுக்கு காலை உணவு திட்டத்தை செயல்படுத்தி உணவு வழங்கி வருகின்றனர். இதில் உப்புமா, கிச்சடி உள்ளிட்ட உணவுகள் வழங்கப்படுகின்றன. இந்த காலை உணவினால் எனக்கு மிகவும் உற்சாகம், சுறுசுறுப்பாகவும் இருக்கின்றது. இங்கு வழங்கப்படும் உணவுகள் சுவையாகவும் இருக்கின்றது. எங்களுக்கு இந்த காலை உணவு திட்டத்தை கொண்டு வந்து காலை உணவு அளித்த தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.பள்ளி குழந்தைகளுக்கு முதலில் மதிய உணவு திட்டம் மூலம் உணவு வழங்கப்பட்டு வந்தது. தற்போது காலை உணவும் சேர்த்து வழங்கப்படுகிறது. இதனால் பள்ளி குழந்தைகள் இரண்டு வேளை திருப்தியாக உணவருந்துகிறார்கள். இத்திட்டத்தினால் பள்ளி மாணவர்களின் வருகைப் பதிவும், அவர்களின் கற்றல் திறனும் மேம்பட்டுள்ளது. இத்திட்டம் ஏழை, எளிய மற்றும் கிராமப்புற பகுதிகளில் இருந்து வரும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் சமீபகாலங்களில் நீர் நிலைகளில் மூழ்கி உயிரிழப்பு சம்பவங்கள் ஏற்படுவதை தவிர்க்க தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்கள் .விருதுநகர் மாவட்டத்தில் கோடைகாலங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. கோடை விடுமுறையில் மாணவ/மாணவிகள் எவ்வித பாதுகாப்புமின்றி நீர்நிலைகள் அருகிலோ அல்லது குளிக்கவோ கூடாது என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. கல்குவாரிகள் மற்றும் நீர் நிலைகள் நிரம்பிய குட்டைகள் அருகே குழந்தைகளை விட வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.இடி மற்றும் மின்னலினால் ஏற்படும் அபாயத்தை மக்கள் குறைத்து மதிப்பிடுவதாலும், விழிப்புணர்வு இல்லாததாலும் மனித உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் அதிகமாக ஏற்படுகின்றன. மழைபெய்யும் போது இடி மின்னல் நேரங்களில் பொதுமக்கள் கைபேசி ஃ தொலைபேசியினை உபயோகிக்க வேண்டாம். இடி சப்தம் கேட்கும் போது முற்றிலும் தவிர்க்க முடியாத காரணங்களை தவிர வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். மின்னல் ஏற்படும் போது கால்நடைகளை மரத்தடியில் கட்டுவதை தவிர்க்க வேண்டும். உயர் மின்தடங்களை தாங்கி நிற்கும் கோபுரங்களுக்கு அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும். குறைந்தபட்ச 50 அடி தூரத்தில் இருப்பது நல்லது. வெட்ட வெளியில் உலோக பொருட்களை மின்னல் ஏற்படும் போது பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. சிறிய அளவு மின்சாரத்தை உணரும் போதோ, உடலில் உள்ள உரோமங்கள் சிலிர்க்கும் போதோ அல்லது உடல் கூச்சம் ஏற்படும் போதோ மின்னல் தாக்குவதற்கான அறிகுறிகளாகும். எனவே அச்சமயம் தரையில் உடனடியாக அமர்ந்திட வேண்டும் எனவும், இது தொடர்பாக பேரிடர் மேலாண்மைத்துறை வெளியிட்டுள்ள விழிப்புணர்வு காணொலிகளையும் கண்டு பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றிடவும் பொதுமக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் I.A.S. அவர்கள் கேட்டுக் கொள்கிறார்;.
தமிழகத்தில் ஏழை, எளிய குடும்பங்களைச் சார்ந்த பெண்களின் கல்வியை ஊக்குவிக்கும் விதமாகவும், பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சார்ந்த பெண்களின் உயர்கல்வியை உறுதி செய்யும் வகையிலும், சமூக நலன் (ம) மகளிர் உரிமைத்துறை மூலம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் படித்த மாணவிகள் உயர்கல்வியின் போது மாதம் ரூ.1000/- உதவித்தொகை பெறும் விதமாக புதுமைப்பெண் என்ற திட்டத்தினை தொடங்கி வைத்தார்.பெண்களுக்கு உயர் கல்வி அளிப்பதன் மூலம் சமத்துவத்தை ஏற்படுத்துதல், குழந்தை திருமணத்தை தடுத்தல், குடும்ப சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்க இயலாத மாணவிகளுக்கு பொருளாதார ரீதியாக உதவுதல், பெண் குழந்தைகளின் விருப்ப தேர்வுகளின்படி அவர்களின் மேற்படிப்பை தொடர ஊக்குவித்தல், உயர் கல்வியினால் பெண்களின் திறமையை ஊக்கப்படுத்தி அனைத்து துறைகளிலும் பங்கேற்கச் செய்தல், உயர்கல்வி உறுதி திட்டத்தின் மூலம் பெண்களுக்கான தொழில் வாய்ப்புகளை அதிகரித்தல், பெண்களின் சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்தல், இத்திட்டத்தின் மூலம் அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க வழிவகை செய்தல் ஆகியவை புதுமை பெண் திட்டத்தின் நோக்கமாகும்.இத்திட்டத்தின் கீழ் மாணவிகள் 6ஆம் வகுப்பு முதல் 12ம் ஆம் வகுப்பு வரை தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளான ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், பழங்குடியினர் நலப்பள்ளிகள், கள்ளர், சீர்மரபினப் பள்ளிகள், மாற்றுத்திறனாளிகள் நலப்பள்ளிகள், சமூகப் பாதுகாப்பு துறை பள்ளிகள் ஆகியவற்றில் படித்து, தமிழ்நாட்டில் உயர்கல்வி பயில்பவராக இருக்க வேண்டும். தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் 6 ஆம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயின்ற பின் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவியர் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற்று வருகின்றனர்.இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் படித்து, மேற்படிப்பில் சேர்ந்த 2.73 இலட்சம் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000ஃ- உதவித்தொகை வழங்கப்படுகிறது.விருதுநகர் மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் இத்திட்டத்தின் வாயிலாக மாவட்டத்தில் உள்ள 30 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 7 மருத்துவப்பிரிவு கல்லூரிகள், 12 பொறியியல் கல்லூரிகள், 12 பாலிடெக்னிக் கல்லூரிகள், 6 தொழிற்பயிற்சி நிலையங்கள், 1 செவிலியர் கல்லூரி, 2 இதர பிரிவு கல்லூரிகள் என மொத்தம் 70 கல்லூரிகளில் பயிலும் 5781 மாணவிகளுக்கு மாதந்தோறும்; 1000/- வீதம் அவர்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. பெயர் அபிநயா. எனது தந்தை ஒரு விவசாயி. அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்று, தற்போது அரசின் 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில், விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறேன். பெண்கள் முன்னேற்றத்தின் அளவை வைத்துத்தான், சமுதாயத்தின் முன்னேற்றம் முழுமையடையும். பெண்களின் கல்வி அறிவு பெறுவதற்கு பல்வேறு தடைக்கற்கள் இருந்தாலும், பொருளாதார தடைக்கல்லும் முக்கியமானதாகும். அந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்தியுள்ள புதுமை பெண் என்ற திட்டம் மூலம் அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000/- உதவித்தொகையினை வங்கி கணக்கு மூலம் பெற்றுக் கொள்ளும் திட்டம் மிகவும் பயனுள்ளதாகும். இத்திட்டம் மூலம் பெண்கள் உயர்கல்வி பயின்று, வேலைவாய்ப்பை பெற்று தங்கள் சொந்தக்காலில் நிற்க முடியும். இத்திட்டம் மூலம் பயனடைந்து, ஒரு சிறந்த மருத்துவராகி என்னால் இயன்ற மக்கள் சேவையில் ஈடுபடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. இதுபோன்ற திட்டங்கள் மூலம் பெண் கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டு வரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது நன்றிகள்.எனது பெயர் சௌமியா. நான் 3-ம் வருடம் பி.ஏ படித்துக் கொண்டிருக்கிறேன். எனது தாய், தந்தை தினக்கூலி வேலை செய்து வருகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிமுகப்படுத்திய இந்த புதுமை பெண் திட்டம், எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. என்னை போன்ற வசதி இல்லாத குடும்ப பின்னணியில் இருந்து படித்துக் கொண்டிருக்கும் மாணவிகளுக்கு, இந்த திட்டம் மூலம் மாதந்தோறும் கிடைக்கும் ரூ.1000/- ஊக்கத்தொகையை கொண்டு, படிப்பிற்கு தேவையான செலவுகளை செய்ய முடியும். எனது பெற்றோர்கள் சம்பாதிக்கும் தொகை, குடும்ப செலவிற்கே போதாத நிலையில், சின்ன சின்ன படிப்பு செலவிற்காக பெற்றோர்களை கஷ்டப்பட வைக்காமல், இந்த தொகை மூலம் பூர்த்தி செய்ய முடியும். இந்த ஊக்கத்தொகையினை அளித்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் உத்தரவின்படி 2024-ம் ஆண்டு கடந்த மார்ச் மாதம் இராஜபாளையம், விருதுநகர் மற்றும் காரியாபட்டி அரசு மருத்துவமனைகளில் குடி மற்றும் போதை சிகிச்சைக்கான உள்நோயாளிகள் பிரிவு தொடங்கப்பட்டது.அரசு மருத்துவமனை, இராஜபாளையத்தில் 6 படுக்கை வசதியுடனும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, விருதுநகரில் 5 படுக்கை வசதியுடனும் மற்றும் அரசு மருத்துவமனை, காரியாபட்டியில் 4 படு;க்கை வசதியுடனும் செயல்பட்டு வருகிறது. இதில் உள்நோயாளிகளாக தற்போது வரை 95 நோயாளிகள் மனநல மருத்துவர்கள் மூலம் சிகிச்சைப் பெற்று குணமடைந்துள்ளனர்.உள்நோயாளிகளாக சிகிச்சைப் பெற்ற அனைவரும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் மற்றும் மாவட்ட மனநலத் திட்டத்தின் கீழ் தொடர் சிகிச்சை மற்றும் கண்காணிப்பில் உள்ளனர். மேலும், மாவட்டத்தில் உள்ள குடி மற்றும் போதை தொடர்பான சிகிச்சை தேவைப்படுவோர் போதை சிகிச்சை பிரிவினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.மேலும் பொதுமக்கள் மனநலம் சம்பந்தமான ஆலோசனைக்கு மாவட்ட மனநல ஆலோசனை மையம் கைபேசி எண்:8300263423 –ஐ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள உயர்கல்வி சேர்க்கை ஆலோசனை மையத்தில், உயர்கல்வி சேர இருக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் உயர்கல்வியில் சேர்வதில் உள்ள தங்களுக்கான சந்தேகங்கள் குறித்து வல்லுனர்களுடன் கேட்டு தெரிந்து கொண்டு, ஆலோசனை உதவிகளை பெற்று வருகின்றனர்.2024-25 ஆம் கல்வியாண்டிற்கான உயர்கல்வி சேர இருக்கும் மாணவர்கள், உயர்கல்வியில் சேர்வதில் தங்களுக்கு எழும் சந்தேகங்களை தீர்ப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை அலுவலகம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.உயர்கல்வி குறித்து மாணவர்களுக்கு சந்தேகங்கள் இருப்பின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் வந்து விவரங்கள் கேட்டு அறிந்து கொள்ளலாம். மேலும் 8072918467, 7598510114, 8838945343 மற்றும் 9597069842 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டும் கேட்டுக் கொள்ளலாம்.இது தவிர, ஒவ்வொரு ஒன்றியத்திற்கும், ஒவ்வொரு ஆசிரியரும் நியமிக்கப்பட்டுள்ளனர். அருப்புக்கோட்டை ஒன்றியத்திற்கு 8754271045 எண்ணிலும், காரியாபட்டி ஒன்றியத்திற்கு 9789560011 எண்ணிலும், நரிக்குடி ஒன்றியத்திற்கு 9488501938 எண்ணிலும், இராஜபாளையம் ஒன்றியத்திற்கு 9788396946 எண்ணிலும், சாத்தூர் ஒன்றியத்திற்கு 7010762308 எண்ணிலும், சிவகாசி ஒன்றியத்திற்கு 9500205414 எண்ணிலும், திருவில்லிபுத்தூர் ஒன்றியத்திற்கு 8220846444 எண்ணிலும், திருச்சுழி ஒன்றியத்திற்கு 9944762424 எண்ணிலும்,வெம்பக்கோட்டை ஒன்றியத்திற்கு 9443669462 எண்ணிலும், விருதுநகர் ஒன்றியத்திற்கு 9488988222 எண்ணிலும் தொடர்பு கொண்டு உயர்கல்வி சேர்க்கையில் சந்தேகங்கள், ஆலோசனை உதவிகள் ஆகிய விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம். இதனை மாவட்டத்தில் உள்ள 12 ஆம் வகுப்பு முடித்துள்ள மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தினால் நடத்தப்படும் 2024-ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 18 வயது உட்பட்ட (Under 18) மாணவ / மாணவியர்களுக்கு 29.04.2024 முதல் 13.05.2024 வரை 15 நாட்கள் காலை 6.30 முதல் 9.00 மணி வரை மற்றும் மாலை 4.00 மணி முதல் 6.30 மணி வரை விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.அதனை தொடர்ந்து, இப்பயிற்சி முகாமில் வளைகோல்பந்து, டென்னிஸ், தடகளம், கால்பந்து, மற்றும் குத்துச்சண்டை, போன்ற விளையாட்டுகளில் மாணவ, மாணவியருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி முகாமில் முட்டை/ பிஸ்கட் வழங்கப்பட்டது.13.05.2024 அன்று நடைபெற்ற பயிற்சி நிறைவு விழாவில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் திரு.சே.குமரமணிமாறன் அவர்களால் 76 மாணவர்கள் மற்றும் 22 மாணவிகள் என மொத்தம் 98 நபர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ்கள் மற்றும் டி.சர்ட் வழங்கப்பட்டது.