விருதுநகர் மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறையின்; சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் (30.05.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்படி, வெம்பக்கோட்டை வட்டாரம், இரவார்பட்டி கிராமத்தில், தமிழ்நாடு நீடித்த நிலையான பசுமை போர்வைக்கான இயக்கம் 2023-24 (TNMSGCF) திட்டத்தின்கீழ், 5 ஏக்கர் பரப்பளவில் 950 சவுக்கு மரக்கன்றுகள் நடப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருவதையும்,அதனை தொடர்ந்து, சுப்பிரமணியபுரம் கிராமத்தில் தோட்டக்கலைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் நுண்ணீர் பாசனம் முறையில் 5 ஏக்கர் பரப்பளவில் தென்னை மரங்கள் நடப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருவதையும்,தாயில்பட்டி கிராமத்தில் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், கமலம் பழம் மானியத்தில் வழங்கப்பட்டு சாகுபடி செய்யப்பட்டுள்ளதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார் ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின் போது வேளாண்மை இணை இயக்குநர் திருமதி க.விஜயா, வேளாண்மை துணை இயக்குநர் /மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திருமதி ஆ.நாச்சியார் அம்மாள், திருவில்லிபுத்தூர் வேளாண்மை உதவி இயக்குநர் திருமதி கு.தனலட்சுமி, வேளாண்மைத்துறை அலுவலர்கள், தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு அரசு சாலை பாதுகாப்பு, சாலை விபத்துகளைக் குறைத்தல், சாலை விபத்தில் உயிரிழப்புகளைத் தடுத்தல் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தி பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றது. அந்த வகையில், சாலை விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைத்திடும் நோக்கில் தமிழக அரசால் வகுக்கப்பட்ட உன்னத திட்டமே இன்னுயிர் காப்போம் திட்டம்.இத்திட்டத்தின் முக்கிய அங்கமாக, சாலை விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கான அவசர மருத்துவ சிகிச்சை செலவைத் தமிழக அரசே மேற்கொள்ளும் வகையில் "இன்னுயிர் காப்போம்-நம்மைக் காக்கும் 48" திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் மூலம் முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு அட்டை உடையவர்கள், இல்லாதவர்கள், பிற மாநிலத்தவர், வெளிநாட்டவர் என அனைவருக்கும் வருமான வரம்பு ஏதும் கணக்கில் கொள்ளாமல், தமிழ்நாட்டின் எல்லைக்குள் ஏற்படும் சாலை விபத்துகளில் காயமடைவோர்களுக்கு முதல் 48 மணி நேரம் வரை கட்டணமின்றி மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட 81 மருத்துவ சிகிச்சை முறைகளுக்கு நபர் ஒருவருக்கு ரூ.1 லட்சம் வரை செலவினத்தில் சிகிச்சை மேற்கொள்ளப்படும்.சாலை விபத்துகளில் ஏற்படும் உயிர் இழப்புகளை குறைப்பதோடு அதனால் குடும்பங்களுக்கு ஏற்படும் மருத்துவச் செலவினங்களை குறைக்கும் இந்த உயிர்காக்கும் உன்னத திட்டத்தின் கீழ் விபத்து நிகழும் பகுதிகளுக்கு அருகாமையிலுள்ள 683 மருத்துவமனைகளில் 213.47 கோடி ரூபாயில் செலவில் ரூ.2.45 இலட்சம் நபர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் இத்திட்டத்தின் வாயிலாக 61,802 நபர்களுக்கு ரூ.45.87 கோடி மதிப்பில் மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், (29.05.2024) சாரண, சாரணியர் இயக்கம் சார்பாக தேசிய வனப்பயிற்சி முகாமிற்கு டார்ஜிலிங் அழைத்துச் சென்றுவரப்பட்ட 54 மாணவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் ,I A S, அவர்களை சந்தித்து தங்கள் பயிற்சி அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். பங்கு பெற்ற மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் 13.05.2024 முதல் 17.05.2024 வரை தேசிய அளவிலான “அட்வன்ஜர் முகாம்” நடைபெற்றது. இம்முகாமில், திருவில்லிபுத்தூர் கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மெட்ரிக் பள்ளிகளைச் சேர்ந்த 40 சாரணர்கள், 14 சாரணியர்கள் உட்பட 6 ஆசிரியர் பெருமக்கள் கலந்து கொண்டனர்.மேலும், இம்முகாமில் சாரண, சாரணியர்களுக்கு மலையேறும் பயிற்சி, துப்பாக்கி சுடுதல், வில் எரிதல், கயிறு ஏறுதல் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டது.
சுதந்திர தினவிழாவின்போது, தமிழக முதல்வர் அவர்கள் தலைமையில், பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட, சிறந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கு, சுதந்திர தின விருது 2024 வழங்கப்பட உள்ளது. அதனைத்தொடர்ந்து சிறந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விதிமுறைகள்தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும் 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூகநலன் சார்ந்த நடவடிக்கைகள் பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து, மக்களுக்கு தொண்டாற்றும் வகையில், தொடர்ந்து பணியாற்றும் சிறந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறன்றன. தொண்டு நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகவும் இருத்தல் வேண்டும். மேற்குறிப்பிட்ட தகுதியுடைய சிறந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனம் இருப்பின் (https://awards.tn.gov.in) என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக 20.06.2024-க்குள் விண்ணப்பித்து, பின்பு உரிய ஆவணங்களுடன் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் 24.06.2024-க்குள் நேரில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.மேலும் மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், விருதுநகர் மாவட்டம். அலைபேசி எண்: 04562-252701 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், IAS அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக மாநில அரசால் அறிவிக்கப்படும் அனைத்து விதமான போட்டித் தேர்வுகளுக்கும் கட்டணமில்லாத பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 90 காலிப்பணியிடங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி- I (குரூப் 1) தேர்வு வரும் 13.07.2024 அன்று நடைபெற உள்ளது.இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள விருதுநகர் மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் பொருட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக, இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்இசூலக்கரையில் நடைபெற்று வருகிறது. இப்பயிற்சி வகுப்புகள் திறன் வாய்ந்த பயிற்று நர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. மேலும் வாரம் தோறும் மாதிரி தேர்வுகளும் நடத்தப்படுகிறது. இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உடையவர்கள் https://t.me/vnrstudycircle என்ற டெலிகிராம் மூலமாகவோ, studycirclevnr@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ 93601-71161 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.எனவே, TNPSC குரூப் 1 தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்துக்கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
முதலமைச்சரின் விடியல் பயணத்திட்டமானது, அரசு நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் இல்லதரசிகள், உயர்கல்வி பயிலும் மாணவிகள், பணிபுரியும் பெண்கள் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லா பயணம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தால், பெண்கள் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைந்து வருகிறார்கள்.இத்திட்டமானது தமிழகத்தை பின்பற்றி கர்நாடகா, தெலுங்கானா, கேரளா, டெல்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தவரையில், அனைத்து தரப்பு மக்களிடத்திலும் இத்திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. பணிபுரியும் பெண்கள் மட்டுமின்றி, சுயதொழில் செய்யும் பெண்கள், இலவச பயிற்சி வகுப்புகளுக்கு செல்லும் பெண்கள், குழந்தைகளை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் தாய்மார்கள், குழந்தைகளை நாள்தோறும் பள்ளிக்கு அழைத்து செல்லும் பெண்கள், வயதான பெண்கள்; மற்றும் திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு இத்திட்டம் மிகுந்த பயனுள்ளதாக அமைந்துள்ளது.அரசுப்பேருந்துகளில் அனைத்து மகளிர் , திருநங்கைகள் , மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் இந்த திட்டத்தின் வாயிலாக 445 கோடி முறை பயணம் செய்து மாதந்தோறும் ரூ.888 வரை சேமிக்கப்பட்டுள்ளது.அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில், இத்திட்டத்தின் வாயிலாக மூன்று ஆண்டுகளில் 11.27 கோடி மகளிர்கள், 73,552 திருநங்கைகள், 9.44 இலட்சம் மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 11.37 கோடி நபர்கள் அரசு பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொண்டு பயனடைந்துள்ளனர்.மேலும், பொது போக்குவரத்து பயணங்களை ஊக்குவிப்பதும் பெண்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கு வித்தாக அமைந்துள்ளதால், அனைத்து தரப்பு மக்களிடமும் மகளிருக்கான கட்டணமில்லா பயணத்திட்டம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
“நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்”;நோய் என்ன? நோயிக்கான காரணம் என்ன? நோய் தீர்க்கும் வழி என்ன? இவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கு ஒப்ப, தமிழக அரசு பதவியேற்று மக்களின் நலனுக்காகவே தன்னை அர்ப்பணித்து சிறப்பாக பணியாற்றி நல்லாட்சியை மக்களுக்கு வழங்கி கொண்டு, தொற்றா நோயாளிகளின் தன்மை அறிந்து, அவர்களின் அலைச்சலையும், மன உலைச்சலை தவிர்க்கும் வண்ணம், தொற்றா நோய்களின் சுமையை எதிர்கொள்ளும் விதமாக நோயாளிகளின் இல்லங்களுக்கே சென்று சில அத்தியாவசியமான சுகாதாரச் சேவைகள் வழங்கப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில், இந்தியாவிலேயே முதன் முறையாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் ‘மக்களைத் தேடி மருத்துவம்” என்ற உன்னதமான திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.‘மக்களை தேடி மருத்துவம்” என்ற திட்டம் பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று தொற்றா நோய்களான நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம் உள்ளிட்ட நோயாளிக்கு பரிசோதனைகளைச் செய்தல், தேவைப்படும் மருந்துகளை வழங்குதல், இயன்முறைச் சிகிச்சை, இயலா நோயாளிகளுக்கு வழங்கக்கூடிய வலி நிவாரணம், ஆதரவு சிகிச்சை ஆகியவற்றை உள்ளடக்கிய மருத்துவச் சேவைகளை நோயாளிகளின் இருப்பிடத்திற்கே சென்று அளிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.இந்த திட்டத்தின் மூலம், பரிசோதனை செய்து பட்டியலிடப்பட்ட நோயாளிகளில் 45 வயதும் அதற்கு மேற்பட்டவர்கள் மற்றும் இயலாமையில் உள்ள நபர்களுக்கு உயர் இரத்த அழுத்தம்,நீரிழிவு நோய்க்கான மருந்துகளைக் களப்பணியாளர்கள் இல்லங்களுக்கே சென்று வழங்குதல், நோய் ஆதரவு சேவைகள், இயன்முறை மருத்துவச் சேவைகள், சிறுநீரக நோயாளிகளைப் பராமரித்தல், அத்தியாவசிய மருத்துவச் சேவைகளுக்கான பரிந்துரை, குழந்தைகளின் பிறவிக் குறைபாடுகளைக் கண்டறிந்து தெரிவித்தல் போன்ற ஒரு குடும்பத்திற்குத் தேவையான அனைத்து சுகாதாரத் தேவைகளையும் வழங்குவதுடன் தொடர்ந்து கண்காணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், சமுதாயநலப் பதிவேட்டில் ஒவ்வொரு நோயாளியையும் பதிவு செய்து தொடர்ந்து கண்காணித்து வகைப்படுத்துவது இத்திட்டத்தின் மற்றொரு முக்கிய அம்சமாகும்.இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் ஏழை எளியோரின் இல்லம்தேடிச் சென்று இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் மருந்து மாத்திரைகள் வழங்கும் இத்திட்டத்தினால் தமிழகத்தில் ரூ.1.70 கோடி நபர்கள் பயனடைந்துள்ளனர். அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் இத்திட்டத்தின் கீழ், 3,31,833 நபர்கள் உயர் இரத்த அழுத்தத்தினாலும், 1,52,307 நபர்கள் நீரிழிவு நோயினாலும், 1,43,683 நபர்கள் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயினாலும் பாதிக்கப்பட்டு என மொத்தம் 6,27,823 நபர்கள் பயனடைந்துள்ளனர். மேலும், 130 -ற்கும் மேற்பட்ட மருத்துவ அதிகாரிகள், 55 செவிலியர்கள், 13 பிசியோதெரபிஸ்ட், 11 வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளிக்கும் செவிலியர்கள், 205 இடைநிலை சுகாதார பணியாளர்கள், 245 பெண் சுகாதார தன்னார்வலர்கள் ஆகியோர்கள் இத்திட்டத்தின் கீழ் பணியாற்றினார்கள்.
விருதுநகர் மாவட்டம், உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல் துறையினரும் இணைந்து கடந்த ஒரு வாரத்தில் பெட்டிக்கடைகளில் நடத்திய ஆய்வில் தடை செய்யப்பட்ட புகையிலை வைத்திருத்த கடைகளுக்கு ரூ.4 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து, கடந்த ஒரு வாரத்தில் (19.05.2024 முதல் 25.05.2025 வரை) உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளும், காவல் துறையினரும் இணைந்து பெட்டிக் கடைகள் மற்றும் வாகனங்களில் தடை செய்த புகையிலை பொருட்கள் உள்ளதா என சோதனை நடத்தினர். அதில் 16 பெட்டிக்கடைகளில் 20 கிலோ 350 கிராம் எடையுள்ள ரூபாய் இருபதாயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக 16 பெட்டிக்கடைகள் சீல் வைக்கப்பட்டு ரூ.4 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.முதன் முறையாக தடை செய்யப்பட்ட புகையிலை விற்பது கண்டுபிடிக்கப்பட்டால் ரூ.25 ஆயிரம் அபராதம், 15 நாட்களுக்கு கடை மூடி சீல் வைக்கப்படும். 2-வது முறையாக தவறு செய்தால் ரூ.50 ஆயிரம் அபராதம் ஒரு மாதம் வரை கடை மூடி சீல் வைக்கப்படும.3-வது முறையும் தவறு செய்தால் ரூ.1லட்சம் அபராதம், மூன்று மாதங்களுக்கு கடை மூடி சீல் வைக்கப்படும். இம்மாவட்டம் முழுவதும் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மேலும், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வது மற்றும் இருப்பு வைப்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட நியமன அலுவலர் (உணவு பாதுகாப்புத்துறை) அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை, ஏகம் அறக்கட்டளை மற்றும் கோவை ஜி.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச இருதய மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் (25.05.2024) பார்வையிட்டார்.இம்முகாம் மூலமாக விருதுநகர் சுகாதார பிரிவு மாவட்டத்தில் 60 குழந்தைகள் மற்றும் சிவகாசி சுகாதார பிரிவு மாவட்டத்தில் 90 குழந்தைகள் தேசிய குழந்தைகள் நலவாழ்வு திட்டம் (Rashtriya Bal Swasthya Karyakram-RBSK) ) குழு மூலமாக அழைத்து வரப்பட்டனர்.மேலும், இக்குழந்தைகளுக்கு இருதய நோய் நிபுணர்கள் இருதய பரிசோதனையான ECHO SCAN செய்வதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.பின்னர் அவர்களில் தேசிய குழந்தைகள் நலவாழ்வு திட்டம் மூலம் அழைத்து வரப்பட்ட குழந்தைகளுக்கு பரிசோதனை செய்து, அறுவை சிகிச்சை தேவைப்படும் குழந்தைகள் உயர் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்படுவர்;. அவர்களுக்கான அறுவை சிகிச்சைகள் கோவை ஜி.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் (CMCHIS) மூலமாக நடைபெறும் என்று தெரிவித்தார்கள்.இம்முகாமில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வர்.மரு.கி.சீதாலெட்சுமி, துணை முதல்வர் மரு.திருமதி.ச.அனிதா மோகன், மாவட்ட சுகாதார அலுவலர்கள் மரு.திருமதி.வே.யசோதாமணி (விருதுநகர்), மரு.திரு.நா.கலுசிவலிங்கம் (சிவகாசி), மருத்துவர்கள் திரு.மு.கல்யாணசுந்தரம், திரு.இரா.விஜயக்குமார் (இருதய நோய் நிபுணர்கள், ஜி.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை, கோவை) ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
உலக அளவில் சுயமரியாதையாக வாழக்கூடிய பல்வேறு சமூகங்களில், ஒடுக்கப்பட்டோர், விளிம்பு நிலை மனிதர்களுடைய வாழ்க்கை மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு மிக முக்கியமான காரணம் அவர்கள் கைகளில் பணம் இருக்க வேண்டும்.ஒவ்வொருவருடைய கைகளில் பணம் இருக்கின்ற போது, அது தரக்கூடிய தன்னம்பிக்கையும், ஆறுதலும் எழுத்திலும் சொல்லிலும் சொல்ல முடியாது. இன்றைய நவீன பொருளாதார அறிஞர்கள் கூட, மக்கள் கையில் அவர்கள் விருப்பத்திற்கும் அத்தியாவசியமான செலவுக்கு பணம் கையில் இருப்பது பொருளாதார வளர்ச்சிக்கும் தனி மனிதனுடைய மேம்பாட்டிற்கும் மிக முக்கியம் என்று குறிப்பிடுகிறார்கள்.இது இன்றைக்கு மட்டுமல்ல 2000 ஆண்டுகளுக்கு முன்பு கூட தமிழர்களின் உடைய அறிவின் அடையாளமாக கருதப்படும் திருக்குறளில்“செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும் எஃகதனிற் கூரிய தில்” என பகைவரின் செருக்கை அழிக்கும் தகுதியான கருவி பொருளைத் தவிர வேறொன்றும் இல்லை என திருவள்ளுவர் கூறுகிறார்.ஒரு நாட்டினுடைய பொருளாதாரத்தை அந்த நாட்டில் உற்பத்தியாகும் பொருட்கள் மற்றும் சேவைகளின் மூலமாக கணக்கிடப்படும் பொழுது உழைப்பை முதலீடாகக் கொண்ட பல்வேறு அங்கத்தினரின் உழைப்பு முறையாக கணக்கிடப்படவில்லை என்று பொருளாதார அறிஞர்கள் தொடர்ச்சியாக குறிப்பிடுகிறார்கள். அதிலும் குறிப்பாக ஒவ்வொரு நாளும் அதிகாலையில் இருந்து இரவு வரை வீட்டு வேலைகளை செய்யக்கூடிய நம் மகளிர் தன்னுடைய அவர்களின் உழைப்பு முறையாக வகைப்படுத்தப்பட்டு அங்கீகரிக்கப்பட்டிருக்கிறதா என்று பார்த்தால் அதை அதில் பெரிய இடைவெளி இருப்பதாக பல்வேறு ஆராய்ச்சிகளும் பொருளாதார அறிஞர்களும் குறிப்பிடுகின்றனர். அந்த வகையில் பெண்களுடைய உழைப்பை அங்கீகரிக்கக் கூடிய வகையில் அவர்களுக்கான உரிமை தொகை வழங்கும் இந்த கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை என்ற சிறப்புமிகு திட்டம் தமிழ்நாடு முழுவதும் தொடங்கி வைக்கப்பட்டு, மாதந்தோறும் ரூ.1000/- பெண்களின் வங்கி கணக்கில் வழங்கப்பட்டு வருகிறது.பிரதிபலன் பாராமல் வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக்கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்கு அங்கீகாரம் கொடுப்பதும், பெண்களின் வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக இருந்து, வறுமையை ஒழித்து, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சுயமரியாதையோடு சமூகத்தில் அவர்கள் வாழ்வதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.வீட்டை விட்டு வெளியில் சென்று வேலை பார்ப்பவர்கள் தான் வேலை செய்கிறார்கள் என்று காலம் காலமாக இருந்து வருகிறது. இந்த சமுதாயத்திற்கு அடிப்படையான குடும்பத்தின் ஆணிவேராக இருப்பது பெண்கள்தான்.குடும்பத்தை உயர்த்துவதற்கும், குழந்தைகள், கணவர்கள், குடும்ப உறுப்பினர்கள் என அனைவருக்காகவும் உழைக்கும் பெண்களுக்கு இந்தியாவிலேயே முதல் முதலாக அங்கீகாரம் கொடுத்தது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான தமிழ்நாடு அரசு.இது உதவியாக இல்லாமல் இதை பெறுவதற்கு பெண்களுக்கு உரிமை இருக்கின்றது. பெண்கள் செய்து கொண்டிருக்கின்ற கடமைக்கான உரிமையை பெற்றுக் கொண்டு இருக்கிறார்கள்.அதன்படி தமிழகத்தில் முதற்கட்டமாக 15.09.2023 அன்று 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் மகளிர் பயன்பெறும் வகையில், மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000/- வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.இரண்டாம் கட்டமாக 10.11.2023 அன்று மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000ஃ- வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில், கள ஆய்வு நிலுவையில் இருந்த விண்ணப்பங்கள் இறுதி செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய பயனாளிகளான 7.35 இலட்சம் மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டது.அதன் தொடர்ச்சியாக தற்போது வரை இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாட்டில் குடும்பத்தலைவிகளுக்கு உரிய விதிமுறைகளைப் பின்பற்றி மாதந்தோறும் 1000 ரூபாய் அவர்களின் வங்கிக்கணக்கில், வரவு வைக்கும் இத்திட்டத்தின் மூலம் நாளது வரையில் 1 கோடியே 15 இலட்சம் குடும்பத் தலைவிகள் பயனடைந்துள்ளனர்.அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில் 3,27,830 குடும்பத் தலைவிகள் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகின்றனர்.