விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் மற்றும் அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து (15.10.2025)மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S,. அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்படி, இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம், மேலராஜகுலராமன் ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.10.00 இலட்சம் மதிப்பில் நர்சரி பூங்கா அமைக்கப்பட்டு மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், மேலராஜகுலராமன் ஊராட்சியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.8.00 இலட்சம் மதிப்பில் பேருந்து நிறுத்த நிழற்குடை கட்டப்பட்டு வருவதையும், சத்திரப்பட்டியில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.10.00 இலட்சம் பேருந்து நிறுத்த நிழற்குடை கட்டப்பட்டு வருவதையும், சம்சிகாபுரம் ஊராட்சியில் சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.20.00 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தின் கட்டுமானப் பணிகளையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும், சம்சிகாபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை நேரில் சென்று பார்வையிட்டு சொத்து வரி வசூலித்தல், வரவு-செலவு தொடர்பான அறிக்கைகள், கோப்புகள் குறித்து கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.அதனைத்தொடர்ந்து, சம்சிகாபுரம் ஊராட்சி வேலாயுதபுரம் கிராமத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3.50 இலட்சம் மானியத்தில் வீடுகட்டும் பணிகள் நடைபெற்று வருவதை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து பயனாளியிடம் கலந்துரையாடி கருத்துக்களை கேட்டறிந்தார்.மேலும், சம்சிகாபுரம் ஊராட்சி வேலாயுதபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியினை பார்வையிட்டு மாணவர்களின் கற்றல் மற்றும் எழுத்தறிவுத்திறன் குறித்தும், பயிற்றுவிப்பு முறைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வின்போது, மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை துரிதமான முறையில் விரைந்து முடித்து அதனை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.இந்த ஆய்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவிப் பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம் மேலராஜகுலராமன் ஊராட்சி, சத்திரப்பட்டி மற்றும் சிவகாசி ஊராட்சி ஒன்றியம் நாரணாபுரம் ஆகிய இடங்களில் (15.10.2025) நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.உங்களுடன் ஸ்டாலின் முகாமானது 15.07.2025 முதல் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 349 சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.இம்முகாம்கள் கிராமப்பகுதியான 11 ஊராட்சி ஒன்றிய பகுதியில் 229 முகாம்களும், நகரப் பகுதிகளான சிவகாசி மாநகராட்சி, 5 நகராட்சிகள் மற்றும் 9 பேரூராட்சி பகுதிகளில் 120 முகாம்கள் என மொத்தம் 349 முகாம்கள் நடைபெற உள்ளது. இம்முகாம்களில் நகரப்பகுதிகளில் 13 துறைகள் மூலம் 43 சேவைகளும், ஊரகப்பகுதிகளில் 15 துறைகள் மூலம் 46 சேவைகளும் அளிக்கப்படுகிறது. மேலும், இம்முகாம்களை மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், மாவட்ட ஆட்சித்தலைவர், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசுத்துறை உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொண்டு, அரசு அலுவலர்களுக்கு உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள். அதன்படி, இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம் மேலராஜகுலராமன் ஊராட்சி, சத்திரப்பட்டி மற்றும் சிவகாசி ஊராட்சி ஒன்றியம் நாரணாபுரம் ஆகிய இடங்களில் இன்று நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் என்ற சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து, பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து, மனுக்கள் பதிவேற்றம் செய்வது, அனைத்துத்துறைகளின் சேவைகள், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பெறுவதற்கான சிறப்பு பிரிவுகள் உள்ளிட்டவைகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, அலுவலர்களுக்கு உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, இம்முகாம்களில் பட்டா வேண்டி மனு அளித்து, தீர்வு பெற்றவர்களுக்கு பட்டா உத்தரவுகளையும், மின் இணைப்பில் பெயர் மாற்றம் வேண்டி விண்ணப்பித்த மனுதாரரின் மனுவை உடனடியாக பரிசீலனை செய்து மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்த நகலினையும், குடும்ப அட்டைகள் வேண்டி விண்ணப்பித்த மனுதாரர்களுக்கு குடும்ப அட்டைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இம்முகாம்களில் வழங்கப்படும் மனுக்கள் உடனடியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு அதற்கான ஒப்புகைச்சீட்டு வழங்கப்படும். பின்னர், இம்முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு 45-நாட்களுக்குள் உரிய தீர்வு காணப்படும் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், வட்டாட்சியர்கள் திரு.ராஜீவ்காந்தி(இராஜபாளையம்), திரு.லட்சம்(சிவகாசி), அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (14.10.2025) அன்று விருதுநகர் மாவட்டத்தில் குழந்தைகள் நலன் சார்ந்த பணிகள் குறித்து தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் திருமதி ஆர்.ஜெயசுதா அவர்கள் தலைமையில், ஆணைய கூராய்வுக் கூட்டம் நடைபெற்றது.மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர் மனசு ஆலோசனைப்பெட்டியும், தனியார் பள்ளிகளில் புகார் பெட்டியும் வைக்கப்பட்டுள்ளது. இப்பெட்டிகளில் மாணவர்கள் போடப்படும் புகார் கடிதங்களை பார்வையிட்டு நடவடிக்கை மேற்கொள்ள மூத்த ஆசிரியர் உள்ளிட்ட உறுப்பினர்களை கொண்டு குழுக்கள் அமைத்து அப்புகார் மனுவிற்கு தீர்வு காண வேண்டும். இப்புகார் குறித்த பதிவேடுகளை பள்ளிகளிலும், மாவட்ட கல்வி அலுவலகங்களிலும் பராமரிக்கப்பட வேண்டும். தனியார் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவ-மாணவியர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆற்றுப்படுத்துநர்கள கட்டாயம் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகளை கள ஆய்வு மேற்கொள்ள அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனவும், பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறியும் தருணங்களில், அக்குழந்தைகளுக்கு முறையாக ஆலோசனை வழங்கி அக்குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வேண்டும். அக்குழந்தைகள் குறித்து முழுமையான சமூக விசாரணை அறிக்கை தயார் செய்து ஆவணப்படுத்த வேண்டுமென்றும் தெரிவித்தார். மேலும், தமிழ்நாடு பெண்கள் விடுதிகள் மற்றும் குழந்தைகள் இல்லங்கள் (முறைப்படுத்துதல்) சட்டம் 2014-ன் கீழ் மாவட்டத்தில் பள்ளிகளின் கீழ் செயல்படும் பள்ளி விடுதிகள் அனைத்து பதிவு மற்றும் உரிமைச்சான்று பெற்றிருக்க வேண்டும். அவ்விடுதியினை முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட சமூக நல அலுவலர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். குழந்தைத் திருமணம், குழந்தைத் தொழிலாளர், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை கண்டறியப்படும் பட்சத்தில், அக்குழந்தைகளை மீட்டு குழந்தைகள் நலக்குழு முன் ஒப்படைத்து குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு பின்தொடர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அக்குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை குழந்தைகள் நலக்குழு முன் ஆஜராகி வேண்டும் என தெரிவித்தார். பின்னர், விருதுநகரில் செயல்பட்டு வரும் அன்னை சத்யா அம்மையார் அரசு குழந்தைகள் இல்லத்தினை ஆய்வு மேற்கொண்டார். மேலும், சிவகாசியில் செயல்படும் பட்டாசு ஆலைகளில் குழந்தைத் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனரா என்றும் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் திருமதி ஆர்.ஜெயசுதா அவர்கள் ஆய்வு மேற்கொண்டார் . இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமதி இல.மீனாட்சி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.கருப்பையா, முதன்மை கல்வி அலுவலர் திரு.இரா.மதன்குமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டத்தில் 30சதவீத மானியத்துடன் உழவர் நல சேவை மையம் அமைக்க வேளாண் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். அதன்படி, வேளாண்மை / தோட்டக்கலை / வேளாண் பொறியியல் பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு முடித்த இளைஞர்களின் திறன், விவசாயிகளுக்கு உதவியாக இருந்து, உற்பத்தியை உயர்த்தும் வகையில் உழவர் நலசேவை மையங்கள் 1000 வரை அமைக்க அரசு ரூ.42 கோடி ஒதுக்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ரூ.10 முதல் 20 இலட்சம் மதிப்பில் உழவர் நல சேவை மையங்கள் அமைக்க 30 சதவீத மானியமாக ரூ.3 இலட்சம் முதல் 6 இலட்சம் வரை வழங்கப்படும் .இந்த மையங்களில் உழவர்களுக்கு, தேவையான விதைகள், உரங்கள் உள்ளிட்ட இடுபொருட்கள் விற்பனை செய்யப்படுவதோடு, பயிர்களில் ஏற்படும் பூச்சி, நோய் மேலாண்மைக்கு தேவையான மற்றும் நவீன தொழில்நுட்பம் , வேளாண் விளைபொருட்களை மதிப்பு கூட்டுதல் குறித்த ஆலோசனை வழங்கப்படும். அத்திட்டத்தில் பயன்பெற வயது 20 முதல் 45-க்குள் இருப்பவர்கள், விரிவான அறிக்கையுடன் வங்கியில் கடன் பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.வங்கியில் கடன் ஒப்புதல் பெற்ற பின், மானிய உதவி பெற https://www.tnagrisnet.tn.gov.in/KaviaDP/register என்ற இணையதள முகவரியில் ஆவணங்களை சமர்ப்பித்து விண்ணப்பிக்க வேண்டும். இந்த வாய்ப்பை வேளாண் பட்டதாரிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (14.10.2025) கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் மதுபான விற்பனையில் ஈடுபட்டு, பின்பு மனம் திருந்திய 17 நபர்களுக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்திரவைத் துறை சார்பில் 2025-2026ஆம் ஆண்டு மறு வாழ்வு நிதிக்கான கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I AS., அவர்கள் வழங்கினார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு தெ.கண்ணன த.கா.ப. அவர்கள் உள்ளார்.
விருதுநகர் மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களான விருதுநகர்/ அருப்புக்கோட்டை / சாத்தூர் / திருச்சுழி ஆகியவற்றில் 2025-ம் ஆண்டிற்கான ஓராண்டு / ஈராண்டு தொழிற்பிரிவுகளில் பயிற்சியாளர்களின் நேரடிச்சேர்க்கை 30.09.2025 முடிய காலஅவகாசம் வழங்கப்பட்டிருந்தது. தற்போது இச்சேர்க்கையில் பூர்த்தி செய்யப்பட்ட இடங்கள் போக மீதம் காலியாகவுள்ள தொழிற்பிரிவுகளில் இன ஒதுக்கீடு மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள மதிப்பெண்களின் தரவரிசை அடிப்படையில் நேரடிச்சேர்க்கைக்கான கால அவகாசம் 17.10.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் உரிய அசல் கல்விச்சான்றிதழ்களுடன் நேரில் வருகை புரிந்து இந்நேரடிச்சேர்க்கையில் மாணவ / மாணவிகள் அதிகளவில் சேர்ந்து தொழிற்கல்வியினை பயின்று வேலை வாய்ப்பினை பெற்று பயன்பெறலாம். மேலும் இப்பயிற்சியில் ஓராண்டு தொழிற்பிரிவுக்கான கட்டணம் ரூ.185/--ம் மற்றும் ஈராண்டு தொழிற்பிரிவுக்கான கட்டணம் ரூ.195/-ம் நேரிடையாக செலுத்தப்பட வேண்டும். இந்நிலையத்தில் பயிற்சி பெறும் தகுதியுள்ள அனைத்து பயிற்சியாளர்களுக்கும் விலையில்லா மிதிவண்டி / கட்டணமில்லா பேருந்து பயணச் சலுகை / மாதாந்திர கல்வி உதவித் தொகை ரூ.750/- (வருகைக்கு ஏற்ப) / சீருடை 2 செட் (தையல்கூலியுடன்) / மூடு காலணி 1 செட் / பாடப்புத்தகங்கள் / வரைபட கருவிகள் மற்றும் பயிற்சியாளர் அடையாள அட்டை/ இவற்றுடன் 6ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு முடிய அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி பெறும் ஆண் / பெண் பயிற்சியாளர்களுக்கு தமிழ்புதல்வன் / புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ.1000/- கூடுதலாக உதவித்தொகை பெற்று வழங்கப்படும். இவ்வாய்ப்பினை 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மற்றும் அதற்கு மேல் கல்வித்தகுதியுடைய +1 / +2 / பட்டய / பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற / தோல்வியடைந்த / இடைநின்ற மாணவ / மாணவியர் தொழிற்கல்வியினை பயின்று நல்ல ஊதியத்துடன் வேலை வாய்ப்பினை தனியார் / மத்திய / மாநில அரசு தொழிற் நிறுவனங்களில் வளாகத் தேர்வு மூலம் வேலை வாய்ப்பு பெற்று தரப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பாகச் சீரிளமைத் திறம் கொண்ட அன்னைத் தமிழுக்கு அருந்தொண்டாற்றி வரும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகிறது. முதுமைக்காலத்திலும் பொருள்வறுமை, தமிழ்த்தொண்டர் பெருமக்களைத் தாக்காவண்ணம் திங்கள்தோறும் உதவித்தொகை ரூ.7500/-மும், மருத்துவப்படி ரூ.500/-மும் என மொத்தம் எட்டாயிரம் ரூபாய் வழங்கப்பெறுகிறது. தமிழுக்காகத் தம் வாழ்நாளை ஈந்துவரும் பெருமக்களுக்கு இந்த உதவித்தொகை அவர்கள் வாழுங்காலமெல்லாம் தமிழ்த் திருப்பணியில் தொய்வின்றி ஈடுபடும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது. தகைமைமேல் தகைமையாக, அகவை முதிர்ந்த தமிழ்ச் சான்றோர் பெருமக்களுக்கு அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணச் சலுகையும் வழங்கப்படுகிறது. தமிழ்க் காத்த தகைமைக்காக உதவித்தொகை பெற்ற தமிழறிஞர் பெருமக்களின் மறைவுக்குப் பின்னர், அவரின் வாழ்விணையர் / திருமணமாகாத மகள் / விதவை மகளுக்கு வாழ்நாள் முழுவதும் ரூ.2500/- மற்றும் மருத்துவப் படி ரூ.500/- என அத்திருத்தொண்டு தொடர்கிறது. அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் அகவை முதிர்ந்த தமிழறிஞர் பெருமக்களிடமிருந்து 2025-2026ஆம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் 2025-26ஆம் ஆண்டு முதல் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு. உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் பயன்பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையினை 100-இலிருந்து 150 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ‘மகளிர் உரிமைத் தொகை, சமூகநலப் பாதுகாப்பு உதவித்தொகை போன்ற தமிழ்நாடு அரசின் வேறு திட்டங்களின் வாயிலாக உதவித்தொகை அல்லது ஓய்வூதியம் பெற்று வரும் பயனாளிகள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க இயலாது‘.உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பதற்கு 01.01.2025 ஆம் நாளன்று 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருவாய் ரூ.1,20,000/-க்குள் இருக்க வேண்டும். (வட்டாட்சியர் அலுவலகத்தில் இணையவழியில் பெறப்பட்ட வருமானச் சான்று இணைக்கப்படவேண்டும்), தமிழ்ப்பணிஆற்றியமைக்கானவிவரக்குறிப்பு. தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான பரிந்துரைச் சான்று இரண்டு தமிழறிஞர்களிடமிருந்து பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் (ஸ்மார்ட் கார்டு), மரபுரிமையர் (கணவன் / மனைவி) இருப்பின் அவரது ஆதார் அட்டை நகல் இணைக்க வேண்டும். அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் விண்ணப்பப்படிவத்தினை மண்டில / மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை/ உதவி இயக்குநர் அலுவலகத்திலேயே நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் வலைத்தளத்தில் (www.tamilvalarchithurai.tn.gov.in) கட்டணமில்லாமல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் தெரிவு செய்யப்படுபவருக்கு முன்னர் கூறியதுபோல், திங்கள்தோறும் உதவித்தொகையாக ரூ.7500/-மும் மருத்துவப்படி ரூ.500/-மும் அவருடைய வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கிவரும் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் 17.11.2025க்குள் அளிக்க வேண்டுமென விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
01.01.2026 தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல்களை திருத்தம் செய்வதற்கான சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளைத் தொடங்க இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களான வட்டாட்சியர்கள் மற்றும் மாநகராட்சி / நகராட்சி ஆணையர்கள் ஆகியோருக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 09.10.2025 அன்று பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.வாக்காளர் பட்டியல் தீவிரத் திருத்தத்தின் போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்தும், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் பணிகள் குறித்தும் பயிற்சி வழங்கப்பட்டது. வாக்காளர்களின் விபரங்கள் அச்சிடப்பட்ட கணக்கெடுப்புப் படிவங்களை ஒவ்வொரு வாக்காளருக்கும் வீடு வீடாகச் சென்று வழங்கி, அப்படிவங்களில் வாக்காளர்கள் கையொப்பம் பெற்று அவற்றைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், 2002-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டிருந்தவர்கள் அப்படிவங்களுடன் எந்த ஆவணத்தையும் இணைக்கத் தேவையில்லை என்றும், மற்றவர்கள் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள ஆவணங்களில் ஒன்றை இணைத்து அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.மேலும், கணக்கெடுப்புப் படிவம் மற்றும் இணைப்பு ஆவணங்களை வலைதளம் மூலமாக வாக்காளர்கள் சுயமாக பதிவேற்றம் செய்யவும் இயலும் என்றும், 2002-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலை www.virudhunagar.nic.in என்ற விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பார்த்துக் கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றும், சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்கான கால அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டவுடன் அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கும் இதே போன்ற பயிற்சிகளை அந்தந்த சட்டமன்ற தொகுதிக்கான வாக்காளர் பதிவு அலுவலர்கள் அளிப்பார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தலைமையில் (13.10.2025) நடைபெற்றது.இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலை வாய்ப்பு, விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நல உதவித்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது. மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்தகுடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இம்மனுக்கள் மீது தொடர்புடைய அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்குமாறும், முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.இக்கூட்டத்தில், நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், அ.முக்குளம் இந்து அரசு உதவிபெறும் துவக்கப்பள்ளியில் சத்துணவு சமையலராக பணிபுரிந்த (லேட்) திருமதி ஜி.மகாலட்சுமி என்பவர் பணிக்காலத்தில் மரணமடைந்ததைத் தொடர்ந்து, அவரின் வாரிசுதாரரான மகள் திருமதி கு.அம்பிகாபாண்டி என்பவருக்கு நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், ஒட்டங்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர் பணியிடத்திற்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையினையும், பின்னர், 2024-2025 ஆம் நிதியாண்டில் தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு பால் வழங்கிய இராஜபாளையம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்திற்கு முதற்கட்டமாக ரூ.1.41 கோடி புரவு தள்ளுபடி தொகை வழங்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் கட்டமாக திருவில்லிபுத்தூர் மற்றும் விருதுநகர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு ரூ.64.00 இலட்சம் புரவு தள்ளுபடி தொகைக்கான காசோலையினையும்,பின்னர், விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம், வடகரையில் மெ/ஸ்.யுவராஜ் பயர் ஒர்க்ஸ் பட்டாசு தொழிற்சாலையில் நடந்த வெடிவிபத்தில் மரணமடைந்த திருமதி சவுண்டம்மாள், திருமதி பேச்சியம்மாள், திரு. கருப்பையா, திரு. கணேசன் ஆகிய நான்கு நபர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.4.00 இலட்சங்களும், வெடி விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்த திரு. முருகன் என்பவரின் வாரிசுதாரருக்கு ரூ.1.00 இலட்சமும் மற்றும் வெடி விபத்தில் படுகாயமடைந்த திருமதி மாரியம்மாள், என்பவருக்கு ரூ.50 ஆயிரம் என மொத்தம் 17 இலட்சத்து 50 ஆயிரம் முதலமைச்சர் பொது நிவாரண தொகைக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் வழங்கினார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திரு.காளிமுத்து, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி பிரதௌஸ் பாத்திமா, அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காந்திநகர் அங்கன்வாடி மையம் மற்றும் பழைய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் (12.10.2025)பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை சார்பில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர்மரு.என்.ஓ.சுகபுத்ரா,IAS.,அவர்கள்தலைமையில்வருவாய்மற்றும்பேரிடர்மேலாண்மைத்துறைஅமைச்சர்திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் தொடங்கி வைத்தார்.போலியோ எனப்படும் இளம்பிள்ளைவாத நோயை இந்தியாவிலிருந்து ஒழிக்கும் பொருட்டு கடந்த 1995 ம் ஆண்டு முதல் 30 ஆண்டுகளாக தீவிர முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது தேசிய பல்ஸ் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் விருதுநகர், மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.இம்முகாமில் பிறந்ததிலிருந்து 5 வயதிற்குட்பட்ட (0-5 வயது) அனைத்துக் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், பள்ளிகள், சாவடிகள், கோயில்கள் உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 1,137 மையங்கள் மூலம் காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை 1,30,437 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து இலவசமாக வழங்கப்படுகிறது. இம்முகாமில் சுகாதாரப் பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட4580 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் 28 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டு இலங்கை அகதிகள் முகாம், நரிக்குறவர்கள் மற்றும் தற்காலிக குடியிருப்புகளில் வசிக்கும் குழந்தைகளுக்கும்,46 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டு ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள், கோயில் திருவிழாக்கள் மற்றும் திருமண விழாக்களில் உள்ள குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.அருப்புக்கோட்டை பகுதியில் உள்ள பந்தக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் 28 மையங்கள் மற்றும் 1 நடமாடும் குழு, கோபாலபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் 22 மையங்கள் மற்றும் 2 நடமாடும் குழுக்கள் மூலமும், பாலவநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் 13 மையங்கள் மற்றும் 1 நடமாடும் குழு, மலைப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் 11 மையங்கள், அருப்புக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் 17 மையங்கள் மற்றும் 1 நடமாடும் குழு என மொத்தம் 96 குழுக்கள் மூலம் 364 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு, 5 வயதிற்குட்பட்ட சுமார் 11,676 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.ஏற்கனவே முறையான தவணைகளில் சொட்டு மருந்து கொடுக்கப்பட்டிருந்தாலும் இம்முகாமிலும் சொட்டு மருந்து தவறாது கொடுக்கப்பட வேண்டும். லேசான ஜூரம், சளி, இருமல், வயிற்றுப்போக்கு இருந்தாலும் போலியோ சொட்டு மருந்து கொடுக்கலாம்.எனவே, பொதுமக்கள் அனைவரும் 5 வயதிற்குட்ட தங்கள் குழந்தைகளை போலியோ சொட்டு மருந்து முகாமிற்கு அழைத்துச் சென்று சொட்டு மருந்து வழங்கி, குழந்தைகளை போலியோ நோயிலிருந்து பாதுகாத்து போலியோ இல்லாத சமுதாயத்தை அமைக்க ஒத்துழைப்பு வழங்குமாறு தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதார அலுவலர்(விருதுநகர்) மரு.யசோதாமணி, அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் திரு.மாரிமுத்து, அருப்புக்கோட்டை நகர்மன்றத்தலைவர் திருமதி சுந்தர்லட்சுமி சிவப்பிரகாசம், அருப்புக்கோட்டை நகராட்சி ஆணையர் திரு.ராஜமாணிக்கம் உட்பட அரசு அலுவலர்கள், மருத்துவப்பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.