வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம், கைபேசியால் இயங்கும் தானியங்கி பம்பு செட்டுகள் கட்டுப்படுத்தும் கருவி புதிய மின் மோட்டார் பம்பு செட்டுகள் மற்றும் சிறு தானிய உழவிற்கு பின்னேற்பு மானியம் பெற தகுதியான விவசாயிகளுக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்
தமிழக அரசு, வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம், அரசு மானியத்தில் கைபேசியால் இயங்கும் தானியங்கி பம்பு செட்டுகள் கட்டுப்படுத்தும் கருவி, பழைய திறன் குறைந்த மின் மோட்டார் பம்பு செட்டுக்கு பதிலாக புதிய மின் மோட்டார் பம்பு செட்டு வழங்குதல், சிறு தானிய உழவிற்கு பின்னேற்பு மானியம் வழங்குதல் போன்ற விவசாயிகளுக்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
விவசாயிகள் இரவு நேரங்களில் மற்றும் மழைக் காலங்களில் வயல்வெளிகளில் உள்ள பம்பு செட்டுகளை இயக்கச் செல்கிறார்கள். அவ்வாறு செல்லும் போது, பாம்புகள், விசப்பூச்சிகள் போன்றவற்றால் பிரச்சினைகளில் சிக்க நேரிடுகின்றது. இதைத் தவிர்க்கும் வகையில், தங்களது பம்பு செட்டுகளை வீடுகளில் இருந்தபடியே இயக்கிட கைபேசியால் இயங்கும் தானியங்கி பம்பு செட்டுகள் கட்டுப்படுத்தும் கருவி வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலமாக மானியத்தில் வழங்கப்படுகிறது.
இதன் மூலம் விவசாயிகள் தங்களது நிலத்தில் உள்ள கிணறுகளில் ஃ ஆழ்துளை கிணறுகளில் பொருத்தப்பட்டுள்ள பம்பு செட்டுகளை தொலைவில் இருந்து கைபேசியின் மூலமாக இயக்கிடவும் நிறுத்திடவும் உதவுகிறது. மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பினர்/ சிறு/குறு /பெண் விவசாயிகளுக்கு மொத்த செலவில் 50 சதவீதம் அல்லது அதிக பட்சமாக ரூ.7000/- மற்ற விவசாயிகளுக்கு மொத்த செலவில் 40 சதவீதம் அல்லது அதிக பட்சமாக ரூ.5000/- வழங்கப்படும்.
மேலும், பழைய திறன் குறைந்த மின் மோட்டார் பம்பு செட்டுக்கு பதிலாக புதிய மின் மோட்டார் பம்பு செட்டு வழங்கிட சொட்டு நீர்/தெளிப்பு நீர் பாசனம் அமைத்துள்ள சிறு குறு விவசாயிகளுக்கு மட்டும் அதிக பட்சமாக ரூ.15000/- மானியம் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலமாக வழங்கப்படுகிறது.
சிறு தானியம் பயிர் செய்ய ஆர்வமுள்ள விவசாயிகள் சிறுதானிய சாகுபடிக்கு உழவு மானியமாக ஹெக்டேருக்கு அதிகபட்சம் ரூ.5400/- வழங்கப்படுகிறது.
விருப்பமுள்ள விவசாயிகள் தங்கள் அருகிலுள்ள வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகங்களில் 10(1)பட்டா, அடங்கல், ஆதார் நகல், குடும்ப அட்டை நகல், கடவுச்சீட்டு அளவு புகைப்படம் (2), சிறு/குறு விவசாயி சான்று, வகுப்புச் சான்று ஆகியவற்றுடன் விண்ணப்பித்து முன்னுரிமை அடிப்படையில் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply