ராஜபாளையத்தில் கோடை கால குடிநீர் தேக்கம் முழுமையாக வறண்டுள்ள நிலையில், தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் கிடைக்கும் தண்ணீரின் அளவும் குறைந்துள்ளது. இதனால் பொதுமக்களுக்கு 7 நாட்களுக்கு ஒருமுறை வழங்கப்பட்டு வந்த குடிநீர் சப்ளை, தற்போது 12 நாட்களுக்கு ஒருமுறை என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் குடிநீர் பிரச்சினை மேலும் மோசமடையும் என பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.ராஜபாளையம் நகரப் பகுதி மக்களின் குடிநீர் தேவைக்கு அய்யனார் கோயில் ஆறு முக்கிய நீராதாரமாக உள்ளது. இங்கு அமைந்துள்ள கோடை கால குடிநீர் தேக்கம் தற்போது முழுமையாக வறண்டுள்ளது. போதிய மழை இல்லாததால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஆழ்துளை கிணறுகள் மூலம் கிடைக்கும் தண்ணீர் மற்றும் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் பெறப்படும் தண்ணீரை கொண்டு நகர மக்களின் குடிநீர் தேவையை சமாளித்து வந்தனர்.இதன்படி, இதுவரை 7 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது தாமிரபரணி குடிநீர் வரத்து குறைவு, மின்வெட்டு, மோட்டார் பழுது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் குடிநீர் விநியோகத்திற்கான இடைவெளி அதிகரித்துள்ளது.இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:தற்போது குடிநீர் தேக்கம் வறண்டுள்ளதால், அதைச் சுற்றியுள்ள 11 கிணறுகள் மற்றும் 28 ஆழ்துளை குழாய்கள் மூலம் தண்ணீர் பெறப்பட்டு வருகிறது. இதற்காக கிணறுகளில் சுமார் 2 மணி நேரம் தண்ணீர் ஊற வைத்து பின்னர் சேகரிக்கப்படுகிறது.தாமிரபரணி குடிநீர் திட்டத்தில் சங்கரன்கோவில், மானூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 3 பம்பிங் நிலையங்கள் மூலம் தண்ணீர் பெறப்படுகிறது. அங்கு ஏற்படும் மோட்டார் பழுது, குழாய் கசிவு மற்றும் மின்வெட்டு காரணமாக தண்ணீர் வருவதில் தாமதம் ஏற்படுகிறது.ராஜபாளையத்திற்கு தினமும் 14 எம்.எல்.டி. தண்ணீர் வர வேண்டும். ஆனால் தற்போது 8 முதல் 9 எம்.எல்.டி. அளவு மட்டுமே கிடைக்கிறது. இதனால் உள்ளூர் நீராதாரங்களிலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், குடிநீர் விநியோக இடைவெளி 12 நாட்கள் வரை அதிகரித்துள்ளது.அடுத்த வாரத்திற்குள் மோட்டார் பழுதுகள் சரிசெய்யப்பட்டாலோ அல்லது மழை பெய்தாலோ குடிநீர் விநியோக இடைவெளி குறைய வாய்ப்புள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடும் வெப்பம் காரணமாக கண்மாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளியில் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.வெயிலின் தாக்கத்தை சமாளிக்க கரும்புச்சாறு, இளநீர், சர்பத், பதனீர், மோர் உள்ளிட்ட குளிர்ச்சியான பானங்களை பொதுமக்கள் அதிகளவில் நாடி வருகின்றனர்.கோடை வெப்பம் அதிகரித்துள்ள நிலையில், இளநீரின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த செவ்விளநீர் தற்போது ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் ரூ.40-க்கு விற்கப்பட்ட பச்சை இளநீர் தற்போது ரூ.80 வரை விலை உயர்ந்துள்ளது.இளநீரின் விலை இரு மடங்கு அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இருப்பினும், கடும் வெப்பத்தில் இருந்து தப்பிக்க வேறு வழியின்றி அதிக விலை கொடுத்து இளநீரை வாங்கிச் செல்கின்றனர்.வெயிலின் தாக்கம் தொடர்ந்து நீடித்தால், இளநீரின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
சிருங்கேரி ஸ்ரீ சாரதாம்பாள் திருக்கோவில் வித்யாதீர்த்தபுரம், இராஜபாளையம்.சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம்,ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை17.08.2026 திங்கள் கிழமை ,காலை 09.00 மணிக்குகணபதிஹோமம், தூர்வா ம்ருத்யுஞ்ஜய ஹோமம்காலை 10.45 மணிக்குபூர்ணாஹுதி, தீபாராதனை நடைபெறும்.ஆஸ்தீக மஹாஜனங்கள் திரளாக கலந்து கொண்டு இறையருளுக்கு பாத்திரர்களாகுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.இப்படிக்கு"குருபக்தமணி" பி.ஆர். வெங்கட்ராம ராஜா தலைவர் - ஸ்ரீ சாரதா சமிதி, இராஜபாளையம் & ஸ்ரீவில்லிபுத்தூர்.
இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம்இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”நூற்றாண்டு கண்ட இராஜபாளையத்தின் நூற்றுக்கு மேற்பட்ட சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவு கூறும் விழா (RFWA வின் 49வது நிகழ்ச்சி )15 ஆகஸ்ட் சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு கொண்டாடப்பட்டது.அன்றைய சுதந்திர தினவிழாவில் 375 பேர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம் 12-08-2026 அன்று சிறப்பாக நடைபெற்றது.நிகழ்வில் rotary சங்க தலைவர் Rtn. Priya Anand, உதவி ஆளுநர் Rtn. K.S. வெங்கட் ராஜா, Community Service chairman Rtn. Dr. M. ராதா, முன்னாள் தலைவர் Rtn. Ananthi, Rtn. Suresh Kumar மற்றும் Rtn. Lakshmi Narayanan ஆகியோர் கலந்துகொண்டு முகாமைச் சிறப்பித்தனர்.முகாமில் BMI மற்றும் உடல்நிலை பரிசோதனை, சர்க்கரை மற்றும் நாடித்துடிப்பு பரிசோதனைகள், மருத்துவ ஆலோசனைகள், ECG மற்றும் ECHO உள்ளிட்ட இருதயப் பரிசோதனைகள் இலவசமாக வழங்கப்பட்டன. மொத்தம் 102 பயனாளர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.அனைத்து அமைப்புகளின் ஒருங்கிணைந்த ஒத்துழைப்பாலும், மருத்துவக் குழுவினர் மற்றும் தன்னார்வலர்களின் அர்ப்பணிப்பான சேவையாலும் முகாம் வெற்றிகரமாக நிறைவுற்றது.
இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும்யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026VI முதல் VIII வரை"யானை - என் நண்பன்"IX முதல் XII வரை''காட்டின் பாதுகாவலன் யானை"கல்லூரி மாணவர்களுக்கு "யானைகள் சந்திக்கும் சவால்கள்”ஓவியப்போட்டிகள்ஆகஸ்ட் 13 மற்றும் 17ஆம் தேதிகளில் நடைபெற உள்ளன. மாணவர்களுக்கு வாழ்த்துகள்!RTN.R. ஆனந்தி - நிறுவனர்நாற்று இலக்கிய அமைப்புRTN . பிரியா ஆனந்த் - தலைவர் இராஜபாளையம் ரோட்டரி சங்கம்.
ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,இராஜபாளையம் ரோட்டரி சங்கமும், நாற்று இலக்கிய அமைப்பும் இணைந்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள் நடத்தினோம்.யானை என் நண்பன்,யானை காட்டின் பாதுகாவலன்,யானைகள் சந்திக்கும் சவால்கள் (கல்லூரி அளவில்) என வகைமைப் படுத்தினோம்.P.A.C.R. அம்மணி அம்மாள் பதின்மப் பள்ளி,கேசா டி மிர்,ஆனந்தா வித்யாலயா,நாடார் மெட்ரிக் மேனிலைப் பள்ளி , மற்றும் PACR . பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.யானைகளை நாம் நேசிக்க வேண்டும். பாதுகாக்க வேண்டும். அவற்றிற்கு இடையூறுகள் செய்யக் கூடாது என்று கூறி , போட்டிகளை தொடங்கி வைத்தோம். யானையின் நலமே காட்டின் வளம்.காட்டின் வளமே நாட்டின் உயர்வு - என்பதை நாம் எடுத்துக் கூற வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம்.ஒன்றிணைந்து செயல்படுவோம். சிறப்புறுவோம்.
ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து ஆறுகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளுக்குச் சென்று முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் செலுத்தினர். புதுமணத் தம்பதியினர் கோயில்களில் சிறப்பு பூஜை செய்தனர். அம்மன் கோயில்களில் பெண்கள் மாங்கல்யக் கயிறு மாற்றி சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.ஆடிப்பெருக்கு நாளில் புதிய முயற்சிகளைத் தொடங்குவது வளர்ச்சியையும் வளத்தையும் தரும் என்ற நம்பிக்கையின்படி, பலர் பத்திரப்பதிவு, புதிய தொழில்கள் தொடங்குதல், அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் வாங்குதல் போன்ற பணிகளை மேற்கொண்டனர்.வீடுகளில் பலர் தங்களது தோட்டங்களில் காய்கறி விதைகளை நட்டனர். விவசாயிகள் இறைவனை வழிபட்டு சாகுபடி பணிகளைத் தொடங்கினர்.ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில், பச்சமடம் மாரியம்மன் கோயில் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதி கோயில்களில் சிறப்பு பூஜைகள், அன்னதானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ராஜபாளையம் சமத்துவபுரம் அருகே, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.80 கோடி மதிப்பில் மூன்று மாடிகளுடன் 864 அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்டு, 2025-ஆம் ஆண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டன. இங்கு குடியேறி 15 மாதங்கள் கடந்தும் அலைபேசி சிக்னல் கிடைக்காததால் குடியிருப்புவாசிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.அலைபேசியில் பேசவோ, அழைப்புகளைப் பெறவோ முடியாததால், ஒவ்வொரு முறையும் குடியிருப்பிலிருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிரதான சாலைக்குச் சென்று சிக்னல் தேட வேண்டிய நிலை இருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை மற்றும் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டுகின்றனர்.குடியிருப்புவாசி பிரபா கூறுகையில், "எங்கள் பகுதியில் அலைபேசி டவர் சிக்னல் முற்றிலும் இல்லை. பேச வேண்டுமென்றால் பிரதான சாலைக்கு சென்று அலைபேசியை உயர்த்திப் பிடித்து சிக்னல் தேட வேண்டிய நிலை உள்ளது. அவசர நேரங்களில் ஆம்புலன்ஸை கூட தொடர்புகொள்ள முடியவில்லை. மலைப்பகுதிகளில்கூட தொடர்பு வசதி உள்ள நிலையில், நகர்ப்புற குடியிருப்பில் 15 மாதங்களாக தொடர்பு எல்லைக்கு வெளியே வாழ்ந்து வருகிறோம். மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூர் கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் வயல் தின விழா நடைபெற்றது. இதில் நெல் சாகுபடியில் உர மேலாண்மை, இலை வண்ண அட்டை பயன்பாடு, மண்வள அட்டை மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பாக விவசாயிகளுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.