12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை.
ராஜபாளையத்தில் கோடை கால குடிநீர் தேக்கம் முழுமையாக வறண்டுள்ள நிலையில், தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் கிடைக்கும் தண்ணீரின் அளவும் குறைந்துள்ளது. இதனால் பொதுமக்களுக்கு 7 நாட்களுக்கு ஒருமுறை வழங்கப்பட்டு வந்த குடிநீர் சப்ளை, தற்போது 12 நாட்களுக்கு ஒருமுறை என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் குடிநீர் பிரச்சினை மேலும் மோசமடையும் என பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
ராஜபாளையம் நகரப் பகுதி மக்களின் குடிநீர் தேவைக்கு அய்யனார் கோயில் ஆறு முக்கிய நீராதாரமாக உள்ளது. இங்கு அமைந்துள்ள கோடை கால குடிநீர் தேக்கம் தற்போது முழுமையாக வறண்டுள்ளது. போதிய மழை இல்லாததால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஆழ்துளை கிணறுகள் மூலம் கிடைக்கும் தண்ணீர் மற்றும் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் பெறப்படும் தண்ணீரை கொண்டு நகர மக்களின் குடிநீர் தேவையை சமாளித்து வந்தனர்.
இதன்படி, இதுவரை 7 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது தாமிரபரணி குடிநீர் வரத்து குறைவு, மின்வெட்டு, மோட்டார் பழுது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் குடிநீர் விநியோகத்திற்கான இடைவெளி அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:தற்போது குடிநீர் தேக்கம் வறண்டுள்ளதால், அதைச் சுற்றியுள்ள 11 கிணறுகள் மற்றும் 28 ஆழ்துளை குழாய்கள் மூலம் தண்ணீர் பெறப்பட்டு வருகிறது. இதற்காக கிணறுகளில் சுமார் 2 மணி நேரம் தண்ணீர் ஊற வைத்து பின்னர் சேகரிக்கப்படுகிறது.
தாமிரபரணி குடிநீர் திட்டத்தில் சங்கரன்கோவில், மானூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 3 பம்பிங் நிலையங்கள் மூலம் தண்ணீர் பெறப்படுகிறது. அங்கு ஏற்படும் மோட்டார் பழுது, குழாய் கசிவு மற்றும் மின்வெட்டு காரணமாக தண்ணீர் வருவதில் தாமதம் ஏற்படுகிறது.
ராஜபாளையத்திற்கு தினமும் 14 எம்.எல்.டி. தண்ணீர் வர வேண்டும். ஆனால் தற்போது 8 முதல் 9 எம்.எல்.டி. அளவு மட்டுமே கிடைக்கிறது. இதனால் உள்ளூர் நீராதாரங்களிலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், குடிநீர் விநியோக இடைவெளி 12 நாட்கள் வரை அதிகரித்துள்ளது.
அடுத்த வாரத்திற்குள் மோட்டார் பழுதுகள் சரிசெய்யப்பட்டாலோ அல்லது மழை பெய்தாலோ குடிநீர் விநியோக இடைவெளி குறைய வாய்ப்புள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
0
Leave a Reply