117- வது தேவர் ஜெயந்தி மற்றும் 62-வது தேவர் குருபூஜை மற்றும் மருது சகோதரர்கள் நினைவு தினம் தொடர்பானஆலோசனைக் கூட்டம்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், 117-வது தேவர் ஜெயந்தி மற்றும் 62-வது குருபூஜை விழா மற்றும் மருது சகோதரர்கள் நினைவு தினம் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து, தொடர்புடைய அரசு அலுவலர்கள் மற்றும் சமுதாயத் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில் (19.10.2024) நடைபெற்றது.
117-வது தேவர் ஜெயந்தி மற்றும் 62 -வது குருபூஜை விழா மற்றும் மருது சகோதரர்கள் நினைவு தினம் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, இராமநாதபுரம் மாவட்டத்தில் BNSS பிரிவு-163(1) ன் கீழ் தடை உத்தரவு அமுலில் உள்ள நிலையில் விழாவிற்கு செல்பவர்கள், பொது மக்களின் நலன் கருதி அரசு அறிவித்துள்ள அனைத்து வழிகாட்டுதல்களையும் அனைவரும் தவறாது கடைபிடிக்க வேண்டும்.
மரியாதை செலுத்த செல்ல விரும்பும் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி தலைவர்கள்/ பிரதிநிதிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் / பிரதிநிதிகள் (5 நபர்களுக்கு மிகாமல்) இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் முன் அனுமதி மற்றும் வாகனத்திற்கான முன் அனுமதியை பெற்று அரசு அறிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றி உரிய சமூக இடைவெளியை கடைபிடித்து மரியாதை செலுத்த அனுமதிக்கப்படுகிறது. அனுமதி பெற விரும்பும், பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி தலைவர்கள்/ பிரதிநிதிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள்/ பிரதிநிதிகள் 23.10.2024-ம் தேதிக்குள் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் முன் அனுமதி பெற விண்ணப்பிக்க வேண்டும். அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் செல்லும் பொழுது உடன் 3 சொந்த வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும், மேலும் தலைவர்களுக்கு ஒதுக்கப்பட்ட குறித்த நேரத்தில் அஞ்சலி செலுத்தி விட்டு செல்ல வேண்டும்.மரியாதை செலுத்த செல்பவர்கள் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே நினைவிடத்திற்கு சென்று திரும்ப வேண்டும். சட்டம் ஒழுங்கை கருத்திற்கொண்டு காவல்துறையினர் ஏற்படுத்திய சோதனைச் சாவடிகளில் வாகனங்களை சோதனைக்குட்படுத்தி காவல்துறையினரின் பணிக்கு ஒத்துழைப்பு தரவேண்டும். சொந்த வாகனங்கள் மூலம் (கார், வேன் மற்றும் பிற இலகு வாகனங்கள் மட்டும்) வருகை தருபவர்கள் வாகன எண், வாகனத்தில் பயணம் செய்வோர் விபரங்களை 23.10.2024 ஆம் தேதிக்கு முன்பாக காவல்துறை மூலமாக வாகன அனுமதி சீட்டு (Vehicle Pass) பெற்றுக் கொள்ள வேண்டும். இதனை வாகனத்தில் முன்புற கண்ணாடியில் ஒட்ட வேண்டும். வாகன அனுமதிச் சீட்டு இல்லாத வாகனங்கள் பரமக்குடி செல்வதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது.
சொந்த வாகனத்தை வாடகைக்கு விடக்கூடாது. வாகன தணிக்கையின் போது வாகனத்தில் வாகன உரிமையாளர் இருக்க வேண்டும், அசல் ஒட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.வாடகை வாகனங்கள்(T.Board) மற்றும் திறந்த வெளி வாகனங்களில்(Open type) செல்ல அனுமதி இல்லை. இரு சக்கர வாகனங்கள், டிராக்டர், டாடா ஏஸ் (TATA ACE) வேன், சைக்கிள் போன்ற வாகனங்களில் செல்லஅனுமதி இல்லை. வாகனத்தின்(பேருந்துக்கள் உட்பட) மேற்கூரை மற்றும் படிக்கட்டுகளில் பயணம் செய்யக் கூடாது. வாகனத்தில் (பேருந்துக்கள் உட்பட) ஆயுதங்கள் ஏதும் எடுத்து செல்லக் கூடாது. அஞ்சலி செலுத்த செல்லும் வழித்தடங்களில் வெடி போடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். வாகனத்தில் ஒலிபெருக்கிகள் பொருத்திச் செல்லக் கூடாது. வாகனத்தில்(பேருந்துக்கள் உட்பட) ஒலி பெருக்கிகள் பொருத்திச் செல்லக் கூடாது. வாகனங்களில் செல்பவர்கள் மேளதாளம் அடித்துச் செல்லக்கூடாது. வாகனங்களில் செல்பவர்கள் சட்டம் ஒழுங்கு பிரச்சினையில் ஈடுபடும் பட்சத்தில் அவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படுவதுடன் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் 29.10.2024 மற்றும் 30.10.2024-ம் தேதிகளில் கமுதிக்கு கூடுதல் பேருந்து வசதி செய்து தரப்படும். பசும்பொன் செல்ல கூடுதல் பேருந்து தேவைப்படும் கிராமத்தினர் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் பரிந்துரை பெற்று அரசு போக்குவரத்து கழகத்திடம் மனு அளித்திட வேண்டும். அஞ்சலி செலுத்துவதற்காக கிராமங்களிலிருந்து பேருந்துகளில் வருபவர்கள் தங்கள் கிராமங்களிலிருந்து காலை 08.00 மணிக்குள் புறப்பட வேண்டும். வாகனங்களில் (பேருந்துகள் உட்பட) பிளக்ஸ் போர்டு, பேனர், கட்சி கொடிகள் மற்றும் ஒலிபெருக்கி ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது. மேலும் ஜோதி தொடர்பான உபகரணங்களை பேருந்துகளில் எடுத்து வரக்கூடாது.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பிளக்ஸ் போர்டுகள் வைத்துக் கொள்ள அனுமதி இல்லை. மேலும் மேற்படி நிகழ்ச்சி தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருபுறமும் கொடிகள் மற்றும் பிளக்ஸ் பேனர்கள், தோரண வளைவுகள் வைக்க அனுமதி இல்லை. அலங்கார ஊர்தி அணிவகுப்பு, மாட்டு வண்டியில் செல்லுதல், தலைவர்களின் வேடமணிந்து செல்லுதல், நடைபயணமாக செல்லுதல் ஆகியவற்றிற்கும் அனுமதி இல்லை. வாகனங்களில் சாதி, மத உணர்வுகளைத் தூண்டும் வாசகங்கள் அடங்கிய பேனர்களைக் கட்டி செல்லவோ, கோஷங்களை எழுப்பவோ கூடாது. வாகனங்களில் செல்லும் பொழுது வழியில் போக்குவரத்திற்கு இடையூறு செய்யும் வகையில் வாகனங்களை நினைத்த இடங்களில் நிறுத்தக் கூடாது. கிராமங்களில் தேவர் ஜெயந்தி விழாவினை முன்னிட்டு நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு சம்மந்தப்பட்ட காவல் நிலையங்கள் / உட்கோட்ட காவல் அலுவலகங்களில் முறையான அனுமதி பெற்று, உள்ளுர் நிலைமைக்கு ஏற்ப காவல் துறையினர் (ம) வருவாய்த்துறையினர் சார்பில் தெரிவிக்கப்படும் நிபந்தனைகளை கடைபிடித்து விழா நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.
மேற்படி நிகழ்ச்சி தொடர்பாக பேனர் மற்றும் கட்அவுட்கள் வைக்கக் காவல் துறையினர் மற்றும் சம்மந்தப்பட்ட துறையினரிடம் முன்அனுமதி பெற்ற பின்னரே வைக்க வேண்டும். அவ்வாறு அனுமதி பெறாமல் வைக்கப்படும் கட்அவுட்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி அகற்றப்படும். மேலும் சுவரொட்டிகள் மற்றும் சுவர் விளம்பரம் செய்வதற்கு அனுமதி இல்லை. மேற்படி விழாவினை முன்னிட்டு அன்னதானக்கூடம் அமைப்பவர்கள் காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினரிடம் முறையான முன் அனுமதி பெற்று, பின்பு மேற்படி அன்னதானகூடம் அமையவுள்ள இடமானது புலத்தணிக்கை செய்த பின்னரே அன்னதாகக்கூடம் அமைக்கப்பட வேண்டும். அன்னதானக் கூடத்தில் வழங்கப்படும் உணவுகளை, உணவு கட்டுப்பாட்டு துறையினர் மூலம் பரிசோதனை செய்த பின்னரே பொது மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். அன்னதானக்கூடத்திற்கு அமைக்கப்படும் பந்தல்களுக்கு உறுதித்தன்மை சான்றிதழ் பொதுப்பணித்துறையினரிடமிருந்தும், மின்சாரத்துறையினயிடமிருந்து மின்னழுத்த நிலைத்தன்மை சான்றிதழ் பெறப்பட வேண்டும். மேலும் அன்னதானப்பந்தல்கள் அமையவுள்ள இடத்திற்கு முன்பாக வாகனங்கள் நிறுத்துவதற்கு முறையான இடங்களை ஏற்பாடு செய்ய வேண்டும்.மேற்கூறிய விதிமுறைகளை மீறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட நபர்களின் மீதும், அமைப்புகள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
பசும்பொன் தேவர் நினைவிடத்திற்கு செல்பவர்கள் காவல்துறையால் அனுமதிக்கப்பட்ட கீழ்கண்ட வழித்தடங்களில மட்டுமே செல்லவேண்டும்.
1. இராஜபாளையம் -திருவில்லிபுத்தூர்- சிவகாசி - சாத்தூர்- விருதுநகர் - தூத்துக்குடி, கோவில்பட்டி மற்றும் திருநெல்வேலி ஆகிய பகுதிகளிலிருந்து புறப்படும் பசும்பொன் செல்லும் வாகனங்கள் (அருப்புக்கோட்டை - காந்தி நகர் - இராமலிங்கா மில் - கல்லூரணி - எம்.ரெட்டியபட்டி - மண்டபசாலை - கமுதி விலக்கு (கானாவிலக்கு) - கமுதி வழியாக பசும்பொன் சென்று அந்த வழியே மீண்டும் திரும்ப வேண்டும்.)
2. ஆவியூர், காரியாபட்டி, மல்லாங்கிணறு, கல்குறிச்சி பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் கல்குறிச்சி - பாலையம்பட்டி பை-பாஸ் - காந்தி நகர்- இராமலிங்கா மில், கல்லூரணி - எம்.ரெட்டியபட்டி - மண்டபசாலை - கமுதி விலக்கு (கானாவிலக்கு) - கமுதி வழியாக பசும்பொன் சென்று அந்த வழியே மீண்டும் திரும்ப வேண்டும்.
3. திருச்சுழியிலிருந்து வரும் வாகனங்கள் இராமலிங்கா மில், கல்லூரணி, கமுதி விலக்கு (கானாவிலக்கு), கமுதி வழியாக பசும்பொன் சென்று அந்த வழியே மீண்டும் திரும்ப வேண்டும்.
4. நரிக்குடியிலிருந்து வரும் வாகனங்கள் வீரசோழன் விலக்கு, பிடாரிசேரி, பார்த்திபனூர், அபிராமம் வழியாக பசும்பொன் சென்றடைய வேண்டும். பின்னர் மீண்டும் திரும்பும்பொழுது, பசும்பொன் - கோட்டைமேடு - நகரத்தார்குறிச்சி -அபிராமம் வழியாக பார்த்திபனூர் - பிடாரிசேரி - வீரசோழன் விலக்கு வழியாக வரவேண்டும்.
மேற்படி விழாவிற்கு செல்லும் வாகனங்கள் கண்டிப்பாக முத்துராமலிங்கபுரம்-புதூர், மண்டலமாணிக்கம் வழியாக செல்ல அனுமதிக்கப்படமாட்டாது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தெ.கண்ணன்,த.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், சிவகாசி சார் ஆட்சியர் திருமதி ந.ப்ரியா ரவிச்சந்திரன்,I A S., வருவாய் கோட்டாட்சியர்கள், காவல் துணை கண்காணிப்பாளர்கள், வட்டாட்சியர்கள், அரசு அலுவலர்கள், சமுதாய தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply