இராஜபாளையம் ராஜூக்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குழந்தை திருமணத்தை தடுத்து, குழந்தைகள் பாதுகாப்பை உறுதிசெய்ய கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வு கருத்தரங்கம்.
குழந்தை திருமணத்தை தடுத்து, குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கில் கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் கருத்தரங்கம் இராஜபாளையம் ராஜூக்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, விருதுநகர் மாவட்டம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் சைமா அறக்கட்டளை, ஆகியவற்றின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.
நிகழ்ச்சி தமிழ் தாய் வாழ்த்து மற்றும் குத்துவிளக்கு ஏற்றுதலுடன் தொடங்கியது.
வரவேற்புரையை முனைவர் திருமதி உமா சங்கரேஸ்வரி, உதவிப் பேராசிரியர், வேதியியல் துறை, ராஜூக்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு முனைவர் திரு. ராமகிருஷ்ணன், முதல்வர், ராஜூக்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அவர்கள் தலைமையுரை ஆற்றினார். அவர் தனது உரையில், குழந்தை திருமணம் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு பெரும் தடையாக உள்ளதாகவும், இளைஞர்கள் இதை எதிர்க்க முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து “குழந்தை திருமணத்தை எதிர்த்து நிற்போம்” என்ற உறுதிமொழி ஏற்கப்பட்டு, விழிப்புணர்வு போஸ்டர் வெளியிடப்பட்டது.
டாக்டர் திருமதி இ. ராதா, ராதா மருத்துவமனை, ராஜபாளையம் மற்றும் துணை ஆளுநர், ரோட்டரி கிளப் ஆப் இராஜபாளையம் அவர்கள், “குழந்தை திருமணத்தை தடுத்திட சமூகத்தின் பங்கு” என்ற தலைப்பில் உரையாற்றி, குழந்தை திருமணத்தின் உடல், மனநல பாதிப்புகள் குறித்து விளக்கினார்.
திரு. செல்வ அழகு, உறுப்பினர், குழந்தைகள் நலக்குழு (CWC), விருதுநகர் அவர்கள், குழந்தை திருமண சம்பவங்களில் புகார் அளிக்கும் வழிமுறைகள், சட்டப்படி எடுக்கப்படும் நடவடிக்கைகள் மற்றும் உதவி எண்கள் குறித்து விளக்கினார்.
இதனைத் தொடர்ந்து திருமதி கயல்விழி, தலைமைக் காவலர், ராஜபாளையம் தெற்கு காவல் நிலையம் அவர்கள் காவல்துறையின் பங்கு குறித்து எடுத்துரைத்தார்.
வழக்கறிஞர் பக்கத்சிங், இராஜபாளையம் நீதிமன்றம் அவர்கள், குழந்தை திருமண தடுப்பு சட்டம் மற்றும் அதன் சட்ட விளைவுகள் குறித்து தெளிவாக எடுத்துரைத்தார்.
வழக்கறிஞர் பா. ராஜகோபால், இயக்குனர், சைமா அறக்கட்டளை, ஸ்ரீவில்லிபுத்தூர் அவர்கள், குழந்தை திருமண தடுப்பு யுக்திகள் மற்றும் தொடர் செயல்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு வழிகாட்டினார்.
நிகழ்ச்சியின் நன்றியுரையை செல்வி மு. வேல்மயில், இளங்கலைத் தமிழ் இலக்கியம் மாணவி வழங்கினார்.
இந்நிகழ்ச்சி தேசிய கீதத்துடன் நிறைவடைந்தது.
இக்கருத்தரங்கத்தில் 600 க்கும் அதிகமான கல்லூரி மாணவிகள் பங்கேற்று, குழந்தை திருமணத்தை தடுப்பதில் தங்களது பங்கை உறுதியாக ஏற்கும் வகையில் விழிப்புணர்வு பெற்றனர்.
0
Leave a Reply