அருப்புக்கோட்டை வட்டாரத்தில் உள்ள 191 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.9.24 கோடி மதிப்பிலான கடனுதவிகளை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வேல்ராஜன் மண்டபத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மற்றும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் (18.09.2025) நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தலைமையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் அருப்புக்கோட்டை வட்டாரத்தில் ஊரகம் மற்றும் நகர்ப்புர பகுதிகளில் உள்ள 191 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.9.24 கோடி மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார்.
அதன்படி, அருப்புக்கோட்டை வட்டாரத்தில் 94 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.845.55 இலட்சம் மதிப்பிலான வங்கிக் கடனுதவிகளையும், 51 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.53.5 இலட்சம் மதிப்பிலான சமூக முதலீட்டு நிதிகளையும், 4 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.4 இலட்சம் மதிப்பிலான வாழ்வாதார நிதி கடனுதவிகளையும், 40 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.20 இலட்சம் மதிப்பிலான வட்டார வணிக வள மைய கடனுதவிகளையும், 2 பகுதி அளவிலான மகளிர் சுய உதவிக்குழு கூட்டமைப்பிற்கு ரூ.1 இலட்சம் மதிப்பிலான கடனுதவிகளையும் என மொத்தம் 191 மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 1304 மகளிர்களுக்கு ரூ.9.24 கோடி மதிப்பிலான வங்கி கடன் உதவிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் வழங்கினார்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், இந்தியாவிலேயே முதன்முறையாக மகளிர் சுய உதவிக் குழு இயக்கத்தினை தொடங்கி வைத்தார். தற்பொழுது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டு, ஊரக மற்றும் நகர்ப்புரங்களில் உள்ள ஏழை மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கான திட்டங்கள் திறம்பட செயல்படுத்தப்பட்டு வருகிறது.பெண்கள் பொருளாதாரத்தில் யாரையும் எதிர்பார்க்காமல் தன்னுடைய சொந்த காலில் நிற்க வேண்டும் என்பதற்காக இந்த மகளிர் சுய உதவி குழு செயல்படுத்தப்படுகிறது.
ஒரு காலத்தில் பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் போன்ற அரசு அலுவலகங்களுக்கு செல்வது குறைவாகவே இருந்தது. ஆனால் மகளிர் சுய உதவிக்குழுக்கள் வந்த பிறகு தான் நம்முடைய சகோதரிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருவதும் அவர்களுக்கான குறைகளை அளிப்பதும், தேவைகளை கேட்பதும் அதிகமாகியுள்ளது.
அதேபோன்று அரசின் பல திட்டங்களை செயல்படுத்துவதில் அந்தந்த பகுதிகளில் இருக்கக்கூடிய மகளிர் சுய உதவிக்குழு பெண்களும் ஈடுபடுகிறார்கள்.சுய உதவிக் குழுக்கள் மூலமாகவோ, தனிப்பட்ட முறையிலோ கடன் உதவி பெறும் போது அதனை திருப்பி செலுத்துவதில் பெண்கள் நியாயமாக உள்ளார்கள்.எவ்வித அடமானம் இல்லாமல் ரூ.50 இலட்சம் வரை கடன் மகளிர் சுயஉதவிக் குழு மூலம் பெண்களுக்கு வழங்கப்படுகிறது. அந்த அளவிற்கு அரசு பெண்கள் மீது நம்பிக்கை கொண்டுள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் கடனுக்கான பணத்தை கட்டும் போது, அடுத்த தடவை அதிகப்படியான கடன் உதவி தரப்படுகிறது. இதன்மூலம் பெண்கள் தொழில் செய்யலாம். சமுதாயத்தில் தலைநிமிர்ந்து நிற்கலாம். அதனை உருவாக்கித்தந்தவர் டாக்டர் கலைஞர் அவர்கள். அதனை மென்மேலும் மேம்படுத்தி வருபவர் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்.
அதுபோல, பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், பள்ளிக் குழந்தைகள் பசியோடு வரக்கூடாது என்பதற்காக காலை உணவுத்திட்டம், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டம் மூலம் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000/-, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை மூலம் குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000/- உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
தற்போது, உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், மக்களைத் தேடி அரசு அதிகாரிகள் சென்று அவர்களுடைய குறைகளை கேட்டு குறிப்பிட்ட நாட்களுக்குள் மக்களுக்கு உரிய தீர்வை வழங்கும் வகையில், சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியுள்ள விடுபட்ட மகளிர்கள் இம்முகாமிற்கு சென்று விண்ணப்பங்கள் அளித்தால் அவர்களுடைய தகுதியின் அடிப்படையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பெண்களின் உரிமைக்காகவும், மேம்பாட்டிற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் இது போன்ற எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசுக்கு தொடர்ந்து தங்கள் ஆதரவு வழங்க வேண்டும் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் தெரிவித்தார்.தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மற்றும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் மகளிர் சுய உதவிகுழுக்களுக்கு ரூ.3500 கோடி வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கும் நிகழ்வினை தொடங்கி வைத்தார்.
அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள 992 மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 10,996 மகளிர்களுக்கு ரூ.95.69 கோடி மதிப்பிலான வங்கி கடன் இணைப்புகள் வழங்கப்படவுள்ளன.அந்த வகையில், அருப்புக்கோட்டை வட்டாரத்தில் அருப்புக்கோட்டை வட்டாரத்தில் ஊரகம் மற்றும் நகர்ப்புர பகுதிகளில் 191 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.9.24 கோடி மதிப்பிலான கடனுதவிகள் இன்று வழங்கப்பட்டுள்ளன.தமிழ்நாடு அரசின் புதுமைப்பெண், மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணத்திட்டம் உள்ளிட்ட பெண்களுக்கான பல்வேறு திட்டங்களோடு இன்றைய நிகழ்ச்சிகளில் பெண்களுக்கு கடன் உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்த அரசு திட்டங்களை எல்லாம் நன்கு பயன்படுத்தி கொண்டு, பெண்கள் பொருளாதாரத்தில் வலிமை பெற்றவர்களாக திகழ வேண்டுமென தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர்(தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கம்) திரு.ஜார்ஜ் ஆண்டனி மைக்கேல், அருப்புக்கோட்டை நகர்மன்றத்தலைவர் திருமதி சுந்தரலட்சுமி சிவப்பிரகாசம், உதவி திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) திருமதி வசுமதி, மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply