வத்திராயிருப்பு வட்டத்தில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற திட்டத்தின் கீழ், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் பொதுமக்களிடம் சென்றடைவது குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கள ஆய்வு
மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் மக்களை தேடிச்சென்று குறைகளைக் கேட்டறியவும், பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும், மக்களை நாடி மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே சென்று ஆய்வு செய்திட "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற புதிய திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டத்தில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற திட்டம் மூலம் 28.05.2025 நேற்று காலை 9 மணி முதல் 29.05.2025 இன்று காலை 9 மணி வரை நடைபெற்றது. இந்த முகாமின் கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் அரசின் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும் கள ஆய்வு மேற்கொண்டனர்.அதன்படி இரண்டாம் நாளான இன்று வத்திராயிருப்பு வட்டார பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.
திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையினை பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்கு சிகிச்சை முறைகள், மருந்துகளின் இருப்பு, அடிப்படை வசதிகள் உள்ளிட்டவைகள் குறித்தும், அதனை தொடர்ந்து, வத்திராயிருப்பு பேருந்து நிலையத்தினை ஆய்வு செய்து, அங்கு வரும் பேருந்துகளின் வருகை, நேரம் மற்றும் அடிப்படை வசதிகள் உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு செய்தார்.பின்னர், வத்திராயிருப்பு நாடார் பஜாரில் தண்ணீர் குழாயில், தண்ணீரில் கலந்துள்ள குளோரின் மற்றும் குடிநீர் விநியோகம் செய்யப்படும் முறை குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டறிந்தார்.இந்த நிகழ்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply