‘Coffee With Collector” என்ற 102- வது கலந்துரையாடல் நிகழ்ச்சி
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (03.09.2024) விருதுநகர் கல்வி மாவட்டத்தை சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து கடந்த வாரம் ஸ்ரீ ஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்திற்கு பார்வையிட சுற்றுலா சென்று வந்த 40 பள்ளி மாணவர்களுடனான ‘Coffee With Collector” என்ற 102- வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் மாணவர்களுடன் கல்வி சுற்றுலா அனுபவம் குறித்து கலந்துரையாடி, கல்லூரிகள் தேர்வு, உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்து உரிய வழிகாட்டுதல்களை வழங்கினார்.
விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, இன்று 102-வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தேகங்களை அகற்றி, அவர்கள் வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்பதெல்லாம், வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால் நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.
மேலும், மாவட்டத்தில் அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்து, திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையம்,ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிக்கோட்டா சதீஸ் தவான் விண்வெளி மையம், மதுரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி அருங்காட்சியகம், தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான ஸ்டெம் அறிவியல் பூங்கா, பந்தல்குடியில் உள்ள ராம்கோ சுற்றுசூழலியல், கொடைக்கானலில் சேக்ரட் ஹாட் இயற்கை அறிவியில் அருங்காட்சியகம், கொடைக்கானல் சூரிய வான் ஆய்வகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தொடர்ச்சியாக கல்விச் சுற்றுலாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில், விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 22.08.2024 மற்றும் 23.08.2024 ஆகிய இரண்டு தினங்கள் 40 அரசுப்பள்ளி மாணவர்கள் ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிக்கோட்டா சதீஸ் தவான் விண்வெளி மையத்தினை பார்வையிட சென்ற வந்த மாணவர்களிடம் சுற்றுலா பற்றிய அனுபவங்களை கேட்டறிந்தார்.விண்வெளி மையத்தில் உள்ள இரண்டு ராக்கெட் ஏவு தளங்கள் குறித்தும், ஏவுதளம் ஒன்று மற்றும் ஏவு தளம் இரண்டு இரண்டின் சிறப்புகளையும் விளக்கினர். இந்தியாவிற்கு பெருமை சேர்த்த மங்கள்யான், சந்திராயன், பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி போன்ற ராக்கெட்டுகள் ஏவுதளம் இரண்டிலிருந்து ஏவப்பட்டதை குறித்த விளக்கத்தினையும், அனுபவங்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் மாணவர்கள் பகிர்ந்து கொண்டனர்.மேலும், இஸ்ரோவில் வேலைக்கு சேர்வது எப்படி என்றும், இஸ்ரோவில் விஞ்ஞானியாக பணியாற்றுவதற்கும், அஸ்ட்ரோநட்டாக பணியாற்றுவதற்கும் என்ன செய்ய வேண்டும் என்ற பல்வேறு கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு விஞ்ஞானிகள் அளித்த தெளிவாக பதில் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது என மாணவர்கள் தெரிவித்தனர்.
பன்னிரெண்டாம் வகுப்பில் எடுக்க கூடிய மதிப்பெண்களை பயன்படுத்தி நமக்கான நல்ல வாயப்புகளை உருவாக்கி கொள்ள வேண்டும். உயர்கல்வி எங்கு பயின்றாலும், இந்தியாவில் சிறந்த கல்லூரியை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். வெற்றிக்கு தேவையான விஷயங்களை தொடர்ந்து ஆர்வத்துடன், கவனசிதறல் இல்லாமல், தொடர்ந்து விடா முயற்சியுடனும், கடினமாக உழைத்தால் எளிதாக வெற்றி பெறலாம்.மேலும், ஒவ்வொருவருக்கும் என்று தனித்திறமைகள் உள்ளன. அத்திறமைகளை அனைவரும் வளர்த்து கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
0
Leave a Reply