20வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: இந்தியாவின் பதக்க வேட்டை!
ஜப்பானின் அய்ச்சி நகோயா நகரில் நடைபெற்றுவரும் 20வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர்கள் பல்வேறு பிரிவுகளில் தங்கமும் பதக்கங்களும் குவித்து அசத்தி வருகின்றனர்.
வில்வித்தை (Archery)
பெண்கள் காம்பவுண்டு அணி: அரையிறுதியில் தென் கொரியாவை 234-233 என்ற கணக்கில் திரில் வெற்றிகொள்ள, பைனலில் சீனாவை 238-234 என வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது.
கலப்பு அணிகள் பிரிவு: சாஹில், சிகிதா ஜோடி அரையிறுதியில் தாய்லாந்தை 156-155 என்ற கணக்கிலும், பைனலில் 158-157 என்ற கணக்கிலும் வீழ்த்தி தங்கம் கைப்பற்றியது.
ஆண்கள் அணி: குஷால் தலால், சாஹில் ராஜேஷ், கணேஷ் மணிரத்னம் திருமுரு கொண்ட அணி அரையிறுதியில் தென் கொரியாவை (236-229) வென்றது. இறுதிப் போட்டியில் சீனாவை 238-237 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி மகுடம் சூடியது.
ஹாக்கி (Hockey)
பெண்கள் ஹாக்கி அரையிறுதியில் இந்திய அணி தென் கொரியாவை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடந்த ஆட்டத்தில் இந்தியாவின் இஷிகா (44வது நிமிடம்) மற்றும் கேப்டன் சலிமா (48வது நிமிடம்) ஆகியோர் கோலடிக்க, 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது இந்திய அணி. நாளை நடக்கும் இறுதிப் போட்டியில் இந்தியாவும் சீனாவும் மோதுகின்றன.
மல்யுத்தம் (Wrestling)
ஆண்கள் கிரிகோ ரோமன் பிரிவில் (87 கிலோ) இந்தியாவின் சுனில் குமார் களமிறங்கினார். காலிறுதியில் முகமதுவை (தஜிகிஸ்தான்) வீழ்த்திய அவர், அரையிறுதியில் ஜப்பானிடம் தோல்வியடைந்தார். பின் நடந்த வெண்கலப் பதக்கத்திற்கான சுற்றில் பிலிப்பைன்ஸின் ராபர்ட்சை 9-0 என்ற கணக்கில் வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றார். ஆசிய விளையாட்டு மல்யுத்தத்தில் அவர் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெண்கலம் வெல்வது குறிப்பிடத்தக்கது.
துப்பாக்கிச் சுடுதல் (Shooting)
கலப்பு அணிகளுக்கான 'டிராப்' தகுதிச்சுற்றில் கினன் செனாய் மற்றும் நீரு தண்டா ஜோடி 136 புள்ளிகளுடன் நான்காம் இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறியது. இறுதிப் போட்டியில் அசத்திய இந்திய ஜோடி 34 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துத் தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றியதுடன், புதிய ஆசிய சாதனையையும் படைத்துள்ளது.
குத்துச்சண்டை (Boxing)
75 கிலோ பிரிவு: அரையிறுதியில் இந்தியாவின் லவ்லினா, கஜகஸ்தானின் நடால்யாவை எதிர்கொண்டார். தொடக்கத்தில் பின்தங்கினாலும், இறுதியில் 3-2 என்ற கணக்கில் வென்று தொடர்ந்து இரண்டாவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார்.
60 கிலோ பிரிவு: பிரியா சீனாவின் செங்யு யாங்கை எதிர்கொண்டு தோல்வியடைந்த நிலையில், வெண்கலப் பதக்கம் வென்றார்.
90 கிலோ பிரிவு: கபில் கஜகஸ்தானின் டுராபெக்கிடம் போராடித் தோல்வியடைந்து வெண்கலப் பதக்கம் பெற்றார்.
0
Leave a Reply