3-வது விருதுநகர் புத்தகத் திருவிழா - 2024 நடைபெறுவதை முன்னிட்டு, “மரமும் மரபும்” என்ற தலைப்பில் “சுற்றுச்சூழலும் தொன்மையும்” என்ற கருத்தினை மையப்படுத்தி பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இலச்சினை(LOGO) மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வெளியிட்டார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (02.09.2024) மூன்றாவது விருதுநகர் புத்தக திருவிழா, விருதுநகரில் அமைந்துள்ள கே.வி.எஸ்.மேல்நிலைப்பள்ளி வளாக பொருட்காட்சி மைதானத்தில் 27.09.2024 முதல் 07.10.2024 வரை 11 நாட்களுக்கு நடைபெறவுள்ளதை முன்னிட்டு, “மரமும் மரபும்” என்ற தலைப்பில் சுற்றுச்சூழலும் தொன்மையும் என்ற கருத்தினை மையப்படுத்தி பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இலச்சினையினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் வெளியிட்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சமுதாயத்தை அறிவார்ந்த நிலைக்கு உயர்த்துவதில், புத்தகவாசிப்பு முக்கிய பங்குவகிக்கிறது. எனவே, பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே புத்தக வாசிப்புப் பழக்கத்தினை ஊக்கப்படுத்த வேண்டும். புத்தகவாசிப்பினை ஒருமக்கள் இயக்கமாக எடுத்துச் செல்ல சென்னை புத்தகக் காட்சி போன்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், இலக்கிய சிந்தனைமிக்க தமிழ் மொழியின் இலக்கிய மரபுகளைக் கொண்டாடும் வகையில் புத்தகக் காட்சிகள் மற்றும் இலக்கியத் திருவிழாக்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு, ஆண்டுதோறும் புத்தகத்திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகமும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கமும் இணைந்து, விருதுநகரில் அமைந்துள்ள கே.வி.எஸ்.மேல்நிலைப்பள்ளி வளாகத்திலுள்ள பொருட்காட்சி மைதானத்தில் 27.09.2024 முதல் 07.10.2024 வரை 11 நாட்களுக்கு காலை 11.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை மாபெரும் புத்தகத் திருவிழா நடத்தப்பட இருக்கிறது.
இப்புத்தகத் திருவிழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள், பிரபல எழுத்தாளர்களின் கருத்தரங்கு, சிறப்புப் பட்டிமன்றங்கள், பள்ளி மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள், நாட்டுபுற கலைநிகழ்ச்சிகள், தொல்லியல்துறை அரங்குகள், அரசுத்துறைகளின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த அரங்குகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் அனைத்துத் தரப்பு மக்களும் மாணவ, மாணவியர்களும் கலந்து கொண்டு பயன்பெறுவதற்கு திட்டமிடப்பட்டு அதற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.அதன்படி, இந்த புத்தகக் கண்காட்சி குறித்து அனைவரும் அறிந்து கொள்ளும் வகையிலும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், “மரமும் மரபும்” என்ற தலைப்பில் சுற்றுச்சூழலும் தொன்மையும் என்ற கருத்தினை மையப்படுத்தி பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இலச்சினை வெளியிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள், மாணவ, மாணவியர்கள், இளைஞர்கள், புத்தக வாசிப்பை விரும்பும் அனைவரும் பயன்பெறும் வகையில், இந்தப் புத்தகத் திருவிழா சிறப்புடன் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதனை அனைவரும் கண்டுகளித்து, புத்தகத் திருவிழாவில் இடம்பெறும் பதிப்பகங்களில் தாங்கள் விரும்புகின்ற புத்தகங்களை வாங்கி பயன்பெறுமாறும், இந்த புத்தகத் திருவிழா குறித்து அனைத்துத் தரப்பினருக்கும் தகவல்களையும் கொண்டு செல்வதற்கு, போதுமான விளம்பரம் மற்றும் விழிப்புணர்வு பணிகளை செய்து, அனைவரும் பயன்பெறுவதற்கு பத்திரிகை மற்றும் ஊடகத்துறை நண்பர்கள் போதிய ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
0
Leave a Reply