ஆசிய விளையாட்டுப் போட்டிகள் (ஜப்பான்)
ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரில் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
ஸ்குவாஷ்.
ஆண்கள் ஒற்றையர்: இறுதிப்போட்டியில் இந்தியாவின் அபே சிங் (தமிழ்நாடு), மலேசியாவின் ஈன் யோவ் உடன் மோதினார். 44 நிமிடங்கள் நீடித்த இப்போட்டியில் 0-3 (9-11, 5-11, 5-11) என்ற கணக்கில் தோல்வியடைந்த அபே சிங் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
பெண்கள் ஒற்றையர்: இறுதிப்போட்டியில் இந்தியாவின் அனாஹத் சிங், மலேசியாவின் சிவசங்கரியை எதிர்கொண்டார். 27 நிமிடங்கள் நடைபெற்ற இப்போட்டியில் 0-3 (4-11, 4-11, 7-11) என்ற கணக்கில் தோல்வியடைந்த அனாஹத் சிங் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார்.
இம்முறை ஸ்குவாஷ் போட்டிகளில் இந்தியா 2 வெள்ளி, 1 வெண்கலம் என மொத்தம் 3 பதக்கங்களை வென்றுள்ளது.
தடகளம்
நீளம் தாண்டுதல் (பெண்கள்): இறுதிப்போட்டியில் இந்தியாவின் ஆன்சி சோஜன், ஷைலி சிங் பங்கேற்றனர். இதில் ஆன்சி சோஜன் தனது 5-வது முயற்சியில் 6.53 மீ. தூரம் தாண்டி 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். ஷைலி சிங் 6.42 மீ. தூரம் தாண்டி 4-வது இடம் பிடித்தார்.
உயரம் தாண்டுதல் (ஆண்கள்): இறுதிப்போட்டியில் இந்தியாவின் சர்வேஷ் குஷாரே மற்றும் சைனீஸ் தைபேயின் பு சாவ்-சுவான் ஆகிய இருவருமே அதிகபட்சமாக 2.25 மீ. உயரம் தாண்டினர். இருப்பினும், முதல் முயற்சியிலேயே இலக்கை எட்டியதால் சைனீஸ் தைபே வீரர் தங்கப் பதக்கமும், 2-வது முயற்சியில் தாண்டிய சர்வேஷ் குஷாரே வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.
மகளிர் ஹாக்கி.
'பி' பிரிவில் நடைபெற்ற லீக் போட்டியில் இந்திய அணி, சிங்கப்பூரை எதிர்கொண்டது. ஆட்டம் தொடங்கியதில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 7-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. லீக் சுற்றின் 5 போட்டிகளிலும் வெற்றி பெற்று 15 புள்ளிகளுடன் 'பி' பிரிவில் முதலிடம் பிடித்த இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
குத்துச்சண்டை.
ஆண்களுக்கான 80 கிலோ பிரிவு காலிறுதிப்போட்டியில் இந்தியாவின் அங்குஷ் பங்கால், தஜிகிஸ்தானின் நெக்ரூஸ் சலிமோவை எதிர்கொண்டார். சமீபத்தில் கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற அங்குஷ், 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியதுடன், ஆசிய விளையாட்டில் தனது முதல் பதக்கத்தையும் உறுதி செய்தார்.
வில்வித்தை.
காம்பவுண்ட் (ஆண்கள் அணி): காலிறுதியில் குஷால், சாஹில், கணேஷ் மணி அடங்கிய இந்திய அணி 235-232 என்ற கணக்கில் பூடானை வீழ்த்தியது.
காம்பவுண்ட் (பெண்கள் அணி): காலிறுதியில் சிகிதா, பிரித்திகா, ஜோதி சுரேகா அடங்கிய இந்திய அணி 233-230 என்ற கணக்கில் கஜகஸ்தானை தோற்கடித்தது.
ரீகர்வ் (ஆண்கள் அணி): காலிறுதியில் தீராஜ், சஞ்சய் யாஷ்தீப், நீரஜ் சவுகான் அடங்கிய இந்திய அணி 5-1 என்ற கணக்கில் சீனாவை வீழ்த்தியது.
ரீகர்வ் (பெண்கள் அணி): காலிறுதியில் கும்கும், அன்கிதா பகத், கீர்த்தி அடங்கிய இந்திய அணி 6-0 என்ற கணக்கில் சைனீஸ் தைபே அணியை தோற்கடித்தது.
காம்பவுண்ட் (கலப்பு அணி): காலிறுதியில் இந்தியாவின் சிகிதா - சாஹில் ராஜேஷ் ஜாதவ் ஜோடி 159-154 என்ற கணக்கில் கஜகஸ்தான் ஜோடியை வீழ்த்தியது.
ரீகர்வ் (கலப்பு அணி): காலிறுதியில் இந்தியாவின் கும்கும் - தீராஜ் ஜோடி 6-0 என்ற கணக்கில் வியட்நாம் ஜோடியை தோற்கடித்தது.
0
Leave a Reply