வெயில் நேரத்தில் குழந்தையை ஏ.சி.,யில் வைத்திருக்கலாமா?
கோடை வெப்பத்தால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகிறது . நம் உடலில் ரத்தம், திசு, செல்கள் என்ற எல்லாவற்றிலும் 65 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது. இதுவே பிறந்த குழந்தையின் உடலில் அதிகபட்சம்85 சதவீதம் வரை நீர்ச்சத்து இருக்கும். ஒரு வயது வரைக்கும்70 சதவீதம் வரை இருக்கும்.நீர்ச்சத்தின் அளவு அதிகமாக இருந்தால், உஷ்ணத்தால் வெளியேறும் திரவத்தின் அளவும் அதிகமாக இருக்கும். குறிப்பிட்ட வயது வரை, தாங்களாகவே சென்று தண்ணீர் குடிக்கவோ, தாகத்தை உணரவோ குழந்தைகளுக்குத் தெரியாது. அதனால், குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு முறை திரவ உணவுகளைக் கொடுக்க வேண்டும்.
நம்மைவிட கோடையின் பாதிப்பு குழந்தைகளிடம் தான் முதலில் தெரிய ஆரம்பிக்கும்.வழக்கம் போல சிறுநீர் போவதில்லை. திட உணவு சாப்பிடுவதில்லை, குழந்தையின் கை, கால் முக்கியமாக நெற்றி, தலை, மார்பு பகுதியில் சிவந்த தடிப்புகள், காரணமே இல்லாத அழுகை.உஷ்ணம் அதிகரிக்கும் போது, செரிமான சக்தி குறைவாக இருக்கும். திரவ உணவுகளையே அதிகம் விரும்புவோம். குழந்தைகளும் அப்படித்தான். இதை பெற்றோர் புரிந்து கொண்டு இளநீர், மோர், பழச்சாறு, அடிக்கடி தரலாம். கம்மங் கூழ், தயிர் சாதம் தரலாம்.சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், வழக்கத்தைவிட குறைவாக சிறுநீர் கழிக்கிறதா என்று கவனிக்க வேண்டும். பச்சிளங் குழந்தை குறைந்த பட்சம்3 மணி நேரத்திற்கு ஒரு முறை, ஒரு வயதிற்கு மேல் ஒரு நாளில் ஐந்தாறு முறை சிறுநீர் கழிக்கிறார்களா என்பதை கவனமாகப் பார்க்க வேண்டும்.
எவ்வளவு அதிகமாக உஷ்ணம் இருந்தாலும் குழந்தையை ஏ.சி.,யில் வைத்திருக்கக் கூடாது என்ற தவறான எண்ணம் பரவலாக உள்ளது. வெறும் துணியில் குழந்தையை சுற்றி வைக்கும் வழக்கமும் உள்ளது. உஷ்ணத்தின் தன்மையை நாம் எப்படி உணர்கிறோமோ அதைவிட இரு மடங்கு அதிகமாக குழந்தைகள் உணர்வர். ஏ.சி.யில், வைத்திருப்பது தவறில்லை. காற்றோட்டமான இடத்தில் குழந்தையை வைத்திருப்பது, பருத்தி துணிகளை அணிவிப்பது, ஒரு வயதிற்கு கீழ் இருந்தால், ஈரத் துணியால் உடம்பைத் துடைப்பது உடல் உஷ்ணத்தைக் குறைக்க உதவும்.அதிக உஷ்ணம் காரணமாக காய்ச்சல் வரும் வாய்ப்புகள் உள்ளன. இதனால், சில குழந்தைகள் துாங்கவே முடியாமல் சிரமப்படுவார்கள். அதீத உஷ்ணத்தால், மூக்கில் உள்ள ரத்த நாளங்கள் வெடித்து ரத்தக் கசிவு ஏற்படலாம்.இது குழந்தைகளுக்கு ஏற்படும் பொதுவான விஷயம். மூக்கு நுனியை அழுத்திப் பிடித்து தலையை மேல் நோக்கி வைத்து, ஐஸ் ஒத்தடம்தரலாம்.
சில நிமிடங்களில் ரத்தக் கசிவு நிற்காவிட்டால், டாக்டரிடம் ஆலோசனை பெற வேண்டும். இது தவிர, பசி குறைவது, வாந்தி, குடலின் இயக்கம் அதிகரிப்பதால் வயிற்றுப் போக்கு உஷ்ணத்தின் அறிகுறிகளாக இருக்கலாம்.இது மாதிரி நேரங்களில் மருந்துகள் தருவதை விட, உடம்பின் உஷ்ணத்தைக் குறைப்பது தான் முக்கியம்.திட உணவுகள் சாப்பிடாவிட்டால் குழந்தைக்கு ஊட்டச்சத்து குறைபாடு வந்துவிடாதா என்பதும் பலரின் சந்தேகம். ஒரே நாளில் ஊட்டச்சத்து குறைபாடு வராது. அத்துடன் திரவ உணவுகளிலும் அவசியமான நுண்ணுாட்டச் சத்துகள் உள்ளன.
0
Leave a Reply