சித்திரையில் உழவடிச்சா வருஷம் முழுசும் விவசாயம் செழிக்கும்.மானாவாரியில் மகத்தான மகசூல்
தமிழகத்தில் மொத்த விவசாயப் பரப்பில் பெரும்பாலானவை மானாவாரி நிலப்பகுதிகள்தான். சித்திரை மாதம் என்பது மானாவாரி விவசாயிகளுக்கு விவசாய வேலைகளைத் தொடங்குவதற்கான தலை மாதம். ஆண்டு முழுவதும் நல்ல மகசூல் கிடைக்க வேண்டுமென்று
சித்திரையின் முதல் நாள் உழுவது ஒரு மரபு உழவுத் தொழில் ஒரு வேலையைப்போல் இல்லாமல் ஒரு விழாவாகவே நடக்கும். இதை `சித்திரை ஏர் பூட்டுதல்' எனவும், பொன்னேர் பூட்டுதல்' எனவும் சொல்வார்கள்
தமிழ்ப் புத்தாண்டின் தலை மாதமான சித்திரையில் உழவு செய்தால் நல்ல மகசூல் கிடைக்கும் என்பது நம்பிக்கை அதனாலேயே ”சித்திரை மாத உழவு, பத்தரை மாற்றுத் தங்கம்" எனவும் சொல்வார்கள் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகேயுள்ள குருவார்பட்டி கிராமத்தில் சித்திரை முதல் நாளன்று பொன்னேர் உழவு நடைபெற்றது.
பொன்னேர் உழவு குறித்து அயன்வடமாலாபுரத்தைச் சேர்ந்த கரிசல் பூமி விவசாயிகள் கூறும்போது சித்திரையில மழை பெய்ஞ்சா பொன் ஏர் கட்டலாம்னு கிராமத்தில் சொல்வடையே இருக்கு சித்திரை மாசப் பிறப்பு நாளில் முதல் நிலத்தை உழுவோம்.மாடுகளைக் குளிப்பாட்டி, பொட்டு வச்சு மாலை போட்டு, வீட்டில் சாணி மொழுகி, விளக்கேற்றி மஞ்சளில் பிள்ளையார் பிடித்து அதுல அறுகம்புல் செருகி வைப்போம். நாழி நிறைய நெல்லு வச்சு தேங்காப்பழம் உடைச்சு மாடுகளுக்கும். ஏர்கலப்பைக்கும் சாம்பிராணி காட்டி, தோள்ல ஏரைத்தூக்கிக்கிட்டு கையில மாட்டையும் பிடிச்சுக்கிட்டு ஊர்க்காளியம்மன் கோயிலுக்கு முன்னால் கொண்டு வந்து மாடுகளை நிப்பாட்டி ஏர்கலப்பையை கோயில் வாசல்ல ஒண்ணுபோல வரிசையா வச்சிடுவோம்
ஒவ்வொரு வீட்டுலயும் அவரவர் வீடுகளில் கம்பு, சோளம், குதிரைவாலி, கேழ்வரகுனு என்ன விதை இருக்கோ, அதுல ஒரு கைப்பிடி விதையை ஓலைப்பெட்டியில சேகரிச்சு ஊர்க்கோயிலில் விதைப் பெட்டியை வச்சு சாமி கும்பிடுவோம். எல்லா விவசாயிகளோட ஏர்கலப்பைக்கும் மாடுகளுக்கும் மஞ்சள் தண்ணீர் தெளிச்சு, சூடம் காட்டினதும், ஒவ்வொரு ஜோடி மாடுகளும் ஒண்ணுக்குப் பின்னால ஒண்ணா வரிசையாப் போய், கோயிலுக்குப் பாத்தியப்பட்ட நிலத்துல வரிசையா ஏர்பூட்டி நிற்போம் சாட்டைக்குச்சி, களைக் கொத்துவான் கலப்பை ஆகியவற்றை நிலத்தில் இரு இடத்துல வச்சுட்டு சூரிய பகவானை நோக்கி சாமி கும்பிடுவோம்.
பிறகு, ஊரிலுள்ள வயதான விவசாயி ஒருவர் களைக் கொத்துவானை எடுத்து விவசாயிகளிடம் கொடுக்க, ஆளுக்கு 3 களைச் செடிகளைக் கொத்தி எடுப்பார்கள். பிறகு. அவரவர் கலப்பையை எடுத்து ஏர்பூட்டி, அன்றைய நாளில் வடக்கு சூலமாக இருந்தால் தெற்கு நோக்கியும், தெற்கு சூலமாக இருந்தால் வடக்கு நோக்கியும் உழவு செய்வோம் இப்படி நல்ல நேரம் திசை பார்த்து உழவு செய்வதால் நல்லேர் பூட்டுதல்'னு சொல்வோம். உழவு செய்ததும் அந்த வயதான விவசாயி விதைகளை அப்படியே பரவலாக தூவி விதைப்பார்.
பிறகு, மாடுகளை அங்கிருந்து விரட்டி விடுவோம். அதில் வெள்ளை நிற மாடு வேகமாக ஊருக்குள் ஓடி வந்தால் அந்த வருஷம் பருத்தி, வெள்ளைச் சோளம் ஆகிய வற்றின் மகசூலும், செவலை நிற மாடுகள் வேகமாக ஓடி வந்தால் வத்தல், துவரை, சிவப்புச் சோளம் ஆகியவற் றின் மகசூலும் அதிகரிக்கும்னு எங்களுக்கு ஒரு நம்பிக்கை. வீட்டுக்கு வந்த மாடுகளுக்கு பருத்தி விதை, புண்ணாக்கு, வைக்கோல், புற்கள் ஆகியவற்றை மகிழ்ச்சியில் வழக்கத்தைவிட கூடுதலாகக் கொடுப்போம்
ஊருக்குப் பொதுவான நிலத்தில் உழுதுவிடும் விவசாயிங்க அவரவர்கள் சொந்த நிலத்துலயும் உழுதுட்டு வீட்டுக்கு வருவோம் உழவுக்குப் போன வீட்டு ஆம்பள களைப்போட வீட்டுக்கு வரும் போது களைப்பு தீர மோர், பானக்கம்னு ஏதாவது குடிக்கக் கொடுப்பாங்க. இது இன்னைக்கு நேத்து இல்ல ரொம்ப வருசமாவே நடக்குது. . சித்திரையில் உழவடிச்சா வருஷம் முழுசும் விவசாயம் செழிக்கும்னு எங்களுக்கு நம்பிக்கை "என்றார்
0
Leave a Reply