இந்தியாவில் புதிய விமானம் நிறுவனம் ஃப்ளை91..
சரியான திட்டத்துடன், சரியான கட்டணத்தையும் கொண்டு இயங்கினால் இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் மிகப்பெரிய வர்த்தக வாய்ப்பு உள்ளது என்பது தான் தற்போதைய விமானச் சந்தையின் நிலவரம். சில நாட்களுக்கு முன்பு வடகிழக்கு மாநிலங்களை மட்டுமே டார்கெட் செய்து JettWings என்ற விமானச் சேவை நிறுவனம் அறிமுகமான நிலையில், புதிதாக ஒரு நிறுவனம் களத்தில் இறங்கியுள்ளது.
இந்த ஏவியேஷன் துறையில் புதிதாக ப்ளை 91 நிறுவனம் (FLY91) தனது பயணச் சேவைகளைத் தொடங்கியுள்ளது. கோவாவின் மனோகர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து காலை 7:55 மணிக்குப் புறப்பட்ட நிறுவனத்தின் முதல் பயணிகள் விமானம் பெங்களூருவின் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தை இலக்காகக் கொண்டு பறந்தது. மேலும், தனது முதல் இயக்க நாளில், ஃப்ளை91 பெங்களூருவிலிருந்து சிந்துதுர்க் (Sindhudurg) செல்லும் தனது முதல் விமானத்தை வெற்றிகரமாக இயக்கியுள்ளது.
ஃப்ளை91 நிறுவனம் முதல்கட்டமாகக் கோவா, ஹைதராபாத், பெங்களூரு மற்றும் சிந்துதுர்க் இடையே பறக்கும், ஏப்ரல் மாதத்தில் அகத்தி, ஜல்கான் மற்றும் புனே ஆகிய இடங்களுக்கான சேவைகளை விரிவாக்கம் செய்ய உள்ளது. திங்கள், வெள்ளி, சனிக்கிழமைகளில் கோவா-பெங்களூரு இடையேயும், இதே போன்ற அட்டவணையில் பெங்களூரு-சிந்துதுர்க் இடையேயும் இயக்கப்படும். மேலும், கோவா-ஹைதராபாத் இடையேயும், சிந்துதுர்க்-ஹைதராபாத் இடையேயும் வாரத்திற்கு இரண்டு முறை சேவைகள் இயக்கப்படும் என ஃப்ளை91 தெரிவித்துள்ளது. இந்தியாவை இதுவரை இல்லாத வகையில் இணைப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த முதல் பயணம் வெறும் இடத்தை அடைவது பற்றி மட்டுமல்ல; ஒரு தேசத்தின் கனவுகள் மற்றும் ஆசைகள் ஆகியவற்றுடன் பறப்பதைக் குறிக்கிறது" என்று நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி மனோஜ் சாக்கோ தெரிவித்தார். ஃப்ளை91 ஒரு பிராந்திய விமான நிறுவனம் ஆகும், இது இந்தியா முழுவதும் 2ம் நிலை மற்றும் 3ம் நிலை நகரங்களை வான்வழி போக்குவரத்து மூலம் தங்களுடைய இணைப்பை மேம்படுத்த முயல்கிறது.
0
Leave a Reply