நீரஜ் சோப்ரா காயத்தால் பறிபோன தங்கப்பதக்கம்.
.பிரான்சில் பாரிஸ்ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் பைனலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா, கிரனாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ், பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் உட்பட 12 பேர் பங்கேற்றனர். ஒவ்வொரு வீரருக்கும் தலா 3 வாய்ப்பு வழங்கப்பட்டது. முதல் வாய்ப்பில் நீரஜ் சோப்ரா, அர்ஷத் நதீம் தவறு செய்தனர்.இரண்டாவது வாய்ப்பில் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் எறிந்து முதலிடம் பிடிக்க, நீரஜ் சோப்ராவுக்கு நெருக்கடி ஏற்பட்டது. 2வது வாய்ப்பில் 89.45 மீட்டர் எறிந்த நீரஜ் சோப்ரா 3 வது வாய்ப்பில் மீண்டும் தவறு செய்ய 2வது இடத்தை தக்க வைத்துக் கொண்டார் . முதல் 8 இடம் பிடித்த வீரர்களுக்கு மீண்டும் தலா 3 வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் மூன்று வாய்ப்புகளிலும் நீரஜ் சோப்ரா தவறு செய்ய டோக்கியோ ஒலிம்பிக்கில் வென்ற தங்கப்பதக்கத்தை தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. வெள்ளிப் பதக்கத்துடன் ஆறுதல் அடைந்தார் நீரஜ் சோப்ரா.
நீரஜ் சோப்ரா கூறுகையில் போட்டியின்போது காயம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதில் மட்டும் கவனமாக இருந்தேன். இதனால் வேகமாக ஒடவில்லை. கடந்த ஆண்டு ஆப்பரேஷன் செய்து கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தினர். ஆனால் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராக வேண்டியிருந்ததால் சற்று யோசித்தேன்.விளையாட்டில் காயத்தை லேசாக கருதிவிடக் கூடாது. உடனடியாக சிகிச்சை பெற வேண்டும். உடற்தகுதியுடன் இருந்தால் மட்டுமே நீண்ட நாட்கள் எந்த ஒரு விளையாட்டிலும் பங்கேற்க முடியும். எனது பயிற்சியாளர் குழுவினருடன் ஆலோசித்து ஆப்பரேஷன் செய்வது குறித்து முடிவு செய்ய உள்ளேன் என்றார்.பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் சர்வதேச அரங்கில் நீரஜ் சோப்ரா மீண்டும் மீண்டும் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். இவர் பதக்கம் வென்றதால் இந்தியா பெருமை கொள்கிறது. என தெரிவித்திருந்தார்.
0
Leave a Reply