அமெரிக்காவின் மதிப்புமிக்க 100 பெண் தொழில் முனைவோர்கள் பட்டியலில் 50ஆவது இடத்தை பிடித்தார் நேஹா நர்க்கெடே.
கைநிறைய சம்பளத்துடன் அமெரிக்காவில் வேலை. இதனை யாரேனும் கைவிடுவார்களா, நிச்சயம் மாட்டார்கள். ஆனால் அமெரிக்க வேலையை கைவிட்டு , 78,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கி இருக்கிறார் இந்தியாவை சேர்ந்த ஒரு பெண். நேஹா நர்க்கெடே இவரது வெற்றி கதை தொழில்முனைவோர் குறிப்பாக பெண்களுக்கு மிக சிறந்த ஒரு முன் உதாரணமாக இருக்கும். இந்தியாவில் புனேவில் பிறந்து வளர்ந்த நேஹா, இளநிலை கல்லூரி படிப்பை முடித்துவிட்டு மேற்படிப்பை தொடர்வதற்காக அமெரிக்காவுக்கு சென்றார்.
அங்கே ஜார்ஜியா டெக் கல்லூரியில் கணினி அறிவியல் முதுகலை பட்டம் பெற்றார். படித்து முடித்த கையோடு மென்பொருள் பொறியாளராக தன்னுடைய வேலையை தொடங்கினார். அமெரிக்காவில் ஒராக்கள் (Oracle), லிங்குடின் (LinkedIn)போன்ற மிகப்பெரிய நிறுவனங்களில் இவர் பணியாற்றினார். கை நிறைய சம்பளம், நல்ல வேலை என்று அத்துடன் செட்டிலாகி விடாமல் தான் ஒரு தொழில் முனைவோராக மாற வேண்டும் என்ற உத்வேகத்தில் வேலையை கைவிட்டார். இதனை அடுத்து 2014 ஆம் ஆண்டு சொந்தமாக ஒரு நிறுவனத்தை தொடங்கினார். கன்ஃபிளூயண்ட் (Confluent) என்ற இந்த நிறுவனம் தரவுகளை மேலாண்மை செய்யும் நிறுவனமாகும்.இந்த நிறுவனத்தில் நேஹா தற்போது 6% பங்குகளை வைத்திருக்கிறார். இந்த நிறுவனத்தின் மதிப்பு 78,000 கோடி ரூபாய் ஆகும். நேஹாவின் நிகர சொத்து மதிப்பு 520 மில்லியன் டாலர்கள் ஆகும். ஒரு நிறுவனத்துடன் நேஹா நிறுத்திவிடவில்லை.
ஆஸ்கைலர் என்ற மோசடிகளை கண்டறிய கூடிய ஒரு நிறுவனத்தை தொடங்கினார். தற்போது ஆஸ்கைலர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நேஹா செயல்பட்டு வருகிறார். தன்னுடைய வெற்றிக்கு தந்தையே காரணம் எனக் கூறும் அவர். பெண்கள் பாரம்பரிய கட்டமைப்புகளை உடைத்து வெளியே வந்து தொழில் துறையில் சாதிக்க வேண்டும் எனக் கூறுகிறார். சிறுவயதில் தான் கிரண் பேடி, இந்திரா நூயி மற்றும் இந்திரா காந்தி போன்றவர்களின் புத்தகங்களை படித்தபோது வாழ்க்கையில் மிகப்பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதாகவும் அதுவே தற்போது மிகப்பெரிய ஒரு தொழில் முனைவோராக தன்னை நிலை நிறுத்தி இருப்பதாகவும் கூறியுள்ளார்.
நேஹா கடந்த 2023ஆம் ஆண்டு அமெரிக்காவின் மதிப்புமிக்க 100 பெண் தொழில் முனைவோர்கள் பட்டியலில் 50ஆவது இடத்தை பிடித்தார். தற்போது அமெரிக்காவில் இருக்கக்கூடிய பணக்கார பெண்கள் பட்டியலிலும் இவர் பிரதான இடத்தில் இருக்கிறார். 37 வயதாகக் கூடிய நேஹா ஹாரன் இந்தியா வெளியிட்ட இந்தியாவின் புகழ்பெற்ற பெண் தொழில் முனைவோர்கள் பட்டியலில் இடம் பிடித்தார்.
0
Leave a Reply