தேசிய ஊட்டச்சத்து மாதம்-2024-ஐ முன்னிட்டு, கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு இரத்த சோகை மற்றும் ஊட்டச்சத்துக் கல்வி குறித்த ஒரு நாள் கருத்தரங்கம்
விருதுநகர் மாவட்டம், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் (23.09.2024) ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மூலம் தேசிய ஊட்டச்சத்து மாத விழா -2024 கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு இரத்த சோகை மற்றும் ஊட்டச்சத்துக் கல்வி குறித்த ஒரு நாள் கருத்தரங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S ., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.குழந்தை இறப்பு விகிதத்தை கட்டுப்படுத்துவதற்கும், ஆரோக்கியமான குழந்தைகள் உருவாக்குவதற்கும், மிக மிக முக்கியமானது ஊட்டச்சத்தும் தாய்ப்பாலும் ஆகும். முதல் ஆயிரம் நாட்கள் ஆனது மிகவும் பொன்னான நாட்கள் ஆகும்.
ஒரு கரு உருவானதில் இருந்து, அந்த குழந்தை பிறந்த ஆரம்ப காலம் முதல் இரண்டு ஆண்டு காலம் வரை உள்ள ஆயிரம் நாட்களும் குழந்தைக்கும், தாய்க்கும் மிக முக்கியமான நாட்கள். அந்த ஆயிரம் நாட்களில் அவர்களுக்கு முழுமையான ஊட்டச்சத்து மிக முக்கியமானதாகும். குறிப்பாக இரத்த சோகை அளவு மிக முக்கியமானது. இந்த ஊட்டச்சத்தை எல்லாம் குழந்தைகளும் பெற வேண்டும் என்பதற்காகவும், கர்ப்பிணி பெண்களும், குழந்தைகளும் நன்கு வளரவேண்டும் என்பதற்காகவும் தான் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மூலமாக தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்கும் இந்த இணை உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், கர்ப்பிணி பெண்கள் நோய் தொற்று வராமல் தன் சுத்தத்தையும், தன்னை சுற்றி நோய் தொற்று வராமல் தடுப்பது பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு பெண் கருவுற்றதில் இருந்து குழந்தை பிறக்கும் வரையிலும் அவர்களுக்கு தொடர்ச்சியாக எப்படி ஊட்டச்சத்து பெற வேண்டும் என்பது குறித்து, கர்ப்பிணி பெண்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து குறைவாக இருப்பதால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் எடை குறைவாகவும், ஊட்டச்சத்து குறைபாட்டுடனும் பிறக்கின்றனர். அதற்கு மிக முக்கிய காரணம் இளம் வயதில் பெண்களுக்கு திருமணம் செய்து கொள்வது தான். அதனால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக காணப்படுகிறது. இரும்பு சத்து அளவு குறைவாக இருக்கிறது. அதனால் இது குறித்து பெண்களுக்கு அறிவுரை மற்றும் விழிப்புணர்வு வழங்கப்பட வேண்டும்.
ஒரு ஆரோக்கியமான குழந்தை என்பது குழந்தையின் தாய்க்கு மட்டும் அல்லாமல், அந்த குடும்பத்திற்கும், அதை விட சமூகத்திற்கும் மிகவும் முக்கியம் ஆகும். ஊட்டச்சத்து குறைப்பாட்டால் உண்டாகும் இரத்த சோகை குறைப்பாட்டை போக்குவதற்கு அரசு மருத்துவமனைகளில் வழங்கும் மருந்துகளை உட்கொள்ள வேண்டும். அதோடு ஊட்டச்சத்து மிக்க உணவை நம் அன்றாட எடுத்துக்கொண்டோம் என்றால் நாம் மருந்துகளை சாப்பிட வேண்டிய அவசியம் இருக்காது. எனவே அனைத்து கர்ப்பிணி தாய்மார்களும் சரியான வகையில் ஊட்டச்சத்து உணவினை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தான் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இது போன்ற தொடர்ச்சியான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொழுது தான் நாம் எதிர்காலத்தில் ஒரு ஆரோக்கியமான மகப்பேறு உறுதி செய்ய முடியும். எனவே அதற்குரிய நடவடிக்கைகளை நாம் அனைவரும் இணைந்து எடுக்க வேண்டும் என்று இந்த தேசிய ஊட்டச்சத்து மாத நிகழ்ச்சியில் நாம் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.பின்னர், தேசிய ஊட்டச்சத்து மாதம் -2024 -ஐ முன்னிட்டு, “அனைவரும் ஆரோக்கியமான ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரம் பெறுவதை உறுதி செய்வோம்” என்ற கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
0
Leave a Reply