உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல்: இந்திய வீரர் உதய்வீர் சித்து தங்கம் வென்று அசத்தல்.
எகிப்து தலைநகர் கெய்ரோவில் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் உதய்வீர் சித்து தங்கப் பதக்கம் வென்றார்.
இந்தியாவின் சார்பில் அஜேந்திரா சிங் சவுகான், சரப்ஜோத் சிங், உதய்வீர் சித்து உள்ளிட்ட வீரர்கள் தகுதிச் சுற்றில் பங்கேற்றனர். இதில் உதய்வீர் 585.19 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
அஜேந்திரா சிங் சவுகான் 580.23 புள்ளிகளுடன் 14-வது இடத்தையும், சரப்ஜோத் சிங் 574.15 புள்ளிகளுடன் 31-வது இடத்தையும் பிடித்தனர். மற்ற இந்திய வீரர்களான ஜோனாதன் கவின் அந்தோணி, யோகேஷ் குமார் ஆகியோர் தரவரிசைப் புள்ளிகளுக்காகப் பங்கேற்றனர்.
இறுதிப்போட்டியில் சிறப்பாகச் செயல்பட்ட உதய்வீர், 240.6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார். இதன் மூலம் இத்தொடரில் இந்தியாவுக்கான முதல் பதக்கத்தைப் பெற்றுத் தந்தார்.
மேலும், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தனது முதல் சர்வதேசப் பதக்கத்தையும், சீனியர் உலகக் கோப்பைப் போட்டியில் தனது முதல் பதக்கத்தையும் வென்று சாதனை படைத்தார்.
0
Leave a Reply