பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு, அணைகளிலிருந்து பாசனத்திற்காக அமைச்சர் அவர்கள் தண்ணீரினை திறந்து வைத்தார்.
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டத்திலுள்ள பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு, அணைகளிலிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் (18.11.2024) பாசனத்திற்காக தண்ணீரினை மலர் தூவி திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், விருதுநகர் மாவட்டத்திலுள்ள வேளாண் பெருங்குடி மக்களின் கோரிக்கைளை ஏற்று, பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு அணைகளிலிருந்து நீர் இருப்பு, நீர்வரத்து மற்றும் நீர்த்தேவை அடிப்படையில் தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டிருந்தார்கள். அதனடிப்படையில், இன்று வத்திராயிருப்பு வட்டத்திலுள்ள பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பெரியாறு மற்றும் கோவிலாறு ஆகிய அணைகள் முறையே 13.90 சதுர மைல், 9.57 சதுர மைல் நீர்ப்பிடிப்பு பகுதி கொண்டவை. 192.00 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட பெரியாறு அணையில் தற்போது 113.84 மில்லியன் கன அடி நீரும், 133 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட கோவிலாறு அணையில் தற்பொழுது 60.84 மில்லியன் கனஅடி நீரும் இருப்பில் உள்ளது. மேலும், பிளவக்கல் பெரியாறு அணைக்கு வினாடிக்கு 31.10 கனஅடி நீரும், கோவிலாறு அணைக்கு 58.76 கனஅடி நீரும் வந்து கொண்டிருக்கிறது. பிளவக்கல் பாசன திட்டத்தில் பயன்பெறும் பாசன பரப்பு 8531.71 ஏக்கர் ஆகும்.
தற்பொழுது பாசனத்திற்காக பிளவக்கல் பெரியாறு அணை மற்றும் கோவிலாறு அணைகளின் மூலம் 18.11.2024 முதல் 6 நாட்களுக்கு வினாடிக்கு 150 கன.அடி வீதமும், நேரடி கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 3.00 கனஅடி வீதம் 28.02.2025 வரையிலும் தண்ணீர் திறந்து விடப்படவுள்ளது.மேலும் 18.11.2024 அன்று பிளவுக்கல் பெரியாறு அணை மற்றும் கோவிலாறு அணைகளிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் திறப்பினால் மீதமுள்ள கண்மாய்களுக்கு அணையின் நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தைப் பொறுத்து பாசனத்திற்காகவும், பெரியாறு பிரதானக்கால்வாய் மூலம் நேரடி பாசனத்திற்காகவும் தண்ணீர் வழங்கப்படவுள்ளது.
இத்தண்ணீர் திறப்பினால் பிளவக்கல் திட்டத்தின் கீழ் உள்ள 40 கண்மாய்களின் 7219 ஏக்கர் விவசாய நிலங்களும், பெரியாறு பிரதான கால்வாய் நேரடி பாசனத்தின் மூலம் 960 ஏக்கர் விவசாய நிலங்களும் பயனடையவுள்ளன. இதன் மூலம் கொடிக்குளம், கான்சாபுரம், மகாராஜபுரம். வ.புதுப்பட்டி, வத்திராயிருப்பு, கூமாபட்டி, சுந்தரபாண்டியம், நத்தம்பட்டி, மூவரைவென்றான், மங்கலம், செம்மாண்டிகரிசல்குளம், பாட்டக்குளம் சல்லிபட்டி, விழுப்பனூர், தச்சகுடி, கிருஷ்ணபேரி, நெடுங்குளம், குன்னூர் ஆகிய 17 வருவாய் கிராமங்கள் பயன்பெறும்.இதேபோல் அணை நீர் இருப்பினை கருத்தில் கொண்டு பாசன பருவகாலம் வரை தேவைக்கேற்ப தண்ணீர் வழங்கப்படும். எனவே விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமென அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்வின்போது, சிவகாசி சார் ஆட்சியர் திருமதி ந.ப்ரியா ரவிச்சந்திரன்,I A S., நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் திருமதி தனலட்சுமி, உதவி இயக்குநர்(மீன்வளத்துறை) திரு.ராஜேந்திரன், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்; திரு.சிந்துமுருகன், திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் திரு.கு.ஆறுமுகம், சுந்தரபாண்டியம் பேரூராட்சி தலைவர் திருமதி ராஜம்மாள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply