கண்களுக்குத் தெரியாமல் ஓடும் விசித்திர ‘கல் நதி’
நதி என்றால் நிறைய தண்ணீர் ஓடும். நடுவில் அழகான மணல் திட்டுகள் இருக்கும். ஆனால், தண்ணீரும் ஓடாத, மணல் திட்டும் காணாத ஒரு விசித்திர நதி ரஷ்யாவில் உள்ளது. தண்ணீர் ஓடுவதன் தடயமே இந்த நதியில் தெரிவதில்லை. அப்படியென்றால் அந்த ஆற்றில் தண்ணீர் இல்லை என்றுதானே அர்த்தம்.‘மழைக்காலங்களிலாவதுதெரியுமா என்றுதானே நினைக்கிறீர்கள்?’ அப்படியும் இல்லை. இந்த ஆற்றில் பாறைகள் மட்டுமே காணப்படுகின்றன. குறைந்தபட்சம் ஒரு கிளாஸ் தண்ணீரை கூட இந்த ஆற்றில் இருந்து எடுக்க முடியாது. கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை கற்கள், பெரிய பாறைகள்தான் உள்ளன. அதனால்தான் இது,‘ஸ்டோன் ரிவர்’ அல்லது ‘ஸ்டோன் ரன்’ என்று அழைக்கப்படுகிறது
இந்த ஆற்றில் சுமார் ஆறு கிலோ மீட்டர் தொலைவு வரை பெரிய பெரிய பாறைகள் மட்டுமே தெரிகின்றன. இதை யாரோ நேர்த்தியாக அடுக்கி வைத்தது போல் காணப்படுகிறது. அதேசமயம், இந்த ஆற்றில் உள்ள கற்கள் ஒவ்வொன்றும்10 டன் எடை கொண்டவையாக உள்ளன. இந்தப் பாறை நதியை சுற்றிலும் தேவதாரு மரங்கள் அடர்ந்த காடு உள்ளது. இந்தக் காட்டில் பல்வேறு வகையான உயிரினங்கள் வாழ்கின்றன.‘கல்நதி’ என்று அழைக்கப்படும் இது, ரஷ்யாவின் யூரல்ஸ் பகுதியில் உள்ள டாகானி மலைகளில் உருவாகி சில நூறு கிலோ மீட்டர் தொலைவு பயணிக்கிறது. பாறைகள் நிரம்பிய அந்த6 கிலோ மீட்டர் தொலைவில் ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேறு அகலங்களை பார்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது. சில இடங்களில்200 மீட்டர் அகலமும் சில இடங்களில்700 மீட்டர் அகலம் காணப்படுகிறது. அதனால் அந்த6 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஆற்றின் தண்ணீரே கண்களில் படுவதில்லை.‘தண்ணீர்இல்லை என்றால் அதை எப்படி நதி என்று சொல்வது?’ என்ற கேள்வி எழலாம். இங்கு அந்தப் பெரிய பாறைகளுக்கு அடியில் தண்ணீர் ஓடுகிறது என்பதுதான் விசேஷம். அருகில் சென்று உற்றுப் பார்த்தால்தான் தண்ணீர் ஓடுவது தெரியும்.
இந்த ஆற்றில் உள்ள மற்றொரு விசித்திரமான விஷயம் என்னவென்றால், இந்த நதியின் நீர் பாறைகளுக்கு மேல் எப்போதும் தென்பட்டதேயில்லை. அதாவது, அந்த ஆற்று நீர் பாறைகளை தாண்டி மேலே வருவதில்லை.இந்தப் பாறை நதி இயற்கையின் அதிசயங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்தக் கற்கள் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். விஞ்ஞானிகளின் கணிப்பின்படி அப்போது டாகானி மலைகள் முற்றிலும் பனியால் மூடப்பட்டிருந்தன. அந்த மலைகள்15 ஆயிரம் அடிக்கும் மேல் உயரமாக இருந்துள்ளது. பனியின் கனத்தால் கற்கள் துண்டு துண்டாக உடைந்து நாளடைவில் பனி உருகத் தொடங்கி, கற்கள் அனைத்தும் மலையை விட்டு வெளியேறின.தண்ணீர் ஓட்டத்தின் வேகத்தால் அவை அனைத்தும் சறுக்கி ஆற்றில் குவிந்துள்ளன. இந்த ஆற்றில் உள்ள பாறைகளில் சிலிக்கான் மற்றும் இரும்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதனால்தான் அவை பளபளப்பாக தெரிகின்றன. தொலைவில் இருந்து பார்த்தால் ஆற்றில் கற்கள் ஓடுவதைப் போல் உணரலாம். ஆனால், உண்மையில் கற்கள் அசையாமல் நிலையாக நிற்கின்றன. ஆனால் தண்ணீர் அதன் கீழே இருந்து பாய்வது விசேஷம்.
0
Leave a Reply