நினைத்தாலே முக்தி தரும் தலம் திருவண்ணாமலை
மனித வாழ்க்கை என்பது சாதாரண விலங்குகளைப் போல உண்டு, உறங்கி, குடும்ப வாழ்வில் ஈடுபட்டு தங்களை தற்காத்து பின்னர் மடிந்து போவது அல்ல. மனித வாழ்வின் உண்மையான பக்குவத்திற்கு கோயில்கள் மிகவும் அவசியமானவை. இறை வழிபாடு இல்லாவிடில் நமது அன்றாடத் தேவைகளை நாம் வாழும் பூமி நமக்கு வழங்காது. ஆக அந்தளவுக்கு மனித வாழ்வு கோயில்களை சார்ந்திருக்கிறது.‘கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்ற ஒரு சொல் உண்டு. இதன் மூலமே கோயிலின் அவசியத்தை உணர முடியும். நமது பாரத தேசத்தில் பல கோயில்கள் உள்ளன. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் அமைந்துள்ள கோயில்களின் எண்ணிக்கையைச் சொல்லவே வேண்டாம். அப்படி அமையபெற்ற கோயில்களில் சுமார்1100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்ற பெருமையை பெற்றது தான் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்காசியில் இறந்தால் முக்தி, திருவாரூரில் பிறந்தால் முக்தி, சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி கிடைக்கும். ஆனால் நினைத்தாலே முக்தி தரும் தலம் திருவண்ணாமலை. பஞ்சபூதத் தலங்களில் அக்னித் தலமாகவும் குறிப்பிடப்படுகிறது. தேவாரப்பாடல் பெற்ற274 சிவாலயங்களில் இது233வது தேவாரத்தலமாகும். அம்மனின்51 சக்திப் பீடங்களில் இது அருணை சக்தி பீடம் ஆகும். முருகப்பெருமானுக்கு அறுபடை வீடு இருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இதே போல் விநாயகருக்கும் அறுபடை வீடு இருக்கிறது. இத்தலத்தில் கிளிக்கோபுரத்தின் கீழ் இடது பக்கம் உள்ள அல்லல் போக்கும் விநாயகர் சன்னதி விநாயகரின் முதல் படை வீடாகும். இத்தல இறைவன் அருணாச்சலேஸ்வரராகவும், அம்பிகை உண்ணாமுலையம்மையாகவும் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் சுமார்25 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. கோயிலில் ஒன்பது கோபுரங்கள் உள்ளன. ஆறு பிரகாரங்கள், 142 சன்னதிகள்,22 பிள்ளையார்கள்,306 மண்டபங்கள்,1000 தூண்கள் கொண்ட ஆயிரங்கால் மண்டபம், அதனடியில் பாதாள லிங்கம் (ரமணம் தவம் செய்த இடம்),43 செப்புச் சிலைகள், திருமண மண்டபம், அண்ணாமலையார் பாத மண்டபம் என அமைந்த கோயில் இது. சிவகங்கைத் தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என்ற இரு பெரிய குளங்கள் கோயிலின் உள்ளேயே அமைந்துள்ளது சிறப்பு. படைக்கும் கடவுளான பிரம்மாவுக்கும், காக்கும் கடவுளான விஷ்ணுவுக்கும் தங்களில் யார் உயர்ந்தவர் என்ற வாக்குவாதம் ஏற்பட்டது. இதை அறிந்த சிவபெருமான் அவர்கள் முன் ஜோதி வடிவில் தோன்றினார். இருவரும் சிவனிடம் முறையிட்டனர். அப்போது சிவன் யார் தனது அடிமுடியை கண்டு வருகிறீர்களோ அவரே உயர்ந்தவர் எனக் கூறினார். விஷ்ணு வராக (பன்றி) அவதாரமெடுத்து பூமிக்குள் சென்றார். அது போய்க் கொண்டே இருந்தது. திரும்பி வந்து சிவனிடம் தன்னால் கண்டறிய முடியவில்லை என்பதை ஒப்புக் கொண்டார். பிரம்மா அன்னப்பறவையாக உருவெடுத்து சிவபெருமானின் முடியை கண்டு வர கிளம்பினார். அவரால் காண முடியவில்லை என்றார். சிவபெருமானே முழு முதற் கடவுள் என்பதை உணர்ந்து கொண்டு அவரை வணங்கி நின்றனர். சிவபெருமானும் சோதி வடிவிலிருந்து ஒரு மலையாக மாறி காட்சி கொடுத்தார். அந்த மலை தான் கோயிலின் பின்புறம் அமைந்துள்ள அண்ணாமலை. பின்பு தன்னை வழிபாடு செய்வதற்கு ஏதுவாக லிங்கோத்பவராக காட்சி கொடுத்து அருளினார்.
இறைவன் இத்தலத்தில் சுயம்புலிங்கத் திருமேனியாக நாகக் கிரீடம் அணிந்து தூய வெண்ணிற ஆடையுடன் அருணாசலேஸ்வரர் என்ற திருநாமத்துடன் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அருள்புரிகிறார். கருவரை கோஷ்டத்தில் ஈசனின் பின்புறம் லிங்கோத்பவர் எழுந்தருளியிருக்கிறார். இறைவன் சந்நிதியை அடுத்து உண்ணாமுலை அம்மை தனிக் கோவிலில் கருவறையில் காட்சி தருகிறாள்.பிரம்மா தன்னால் அடிமுடியை காணவில்லை என்பதை மறைத்து சிவபெருமானின் தலையில் இருக்கும்.தாழம்பூவை பொய் சாட்சி சொல்ல வைத்து தான் கண்டுவிட்டதாக பொய்யுரைத்தார். இதையறிந்த சிவன் கோபமுற்று இனி உனக்கு பூமியில் கோயிலோ, பூஜையோ கிடையாது என சாபமிட்டார். அதே போல் தாழம்பூவையும் இனி தனது பூஜையில் உன்னை பயன்படுத்தமாட்டார்கள் என்று கூறிவிட்டார். அதன் காரணமாகத்தான் இன்றளவும் சிவாலயங்களில் தாழம்பூவை மட்டும் படைக்க மாட்டார்கள்.பிரம்மோற்சவம், ஆனி மாத பிரம்மோற்சவம், மாசி மகம் தீர்த்தவாரி, கார்த்திகை தீபம், பரணி தீபம், மகா தீபம், பங்குனி உத்திரம் திருக்கல்யாண உற்சவம், ஆகிய திருவிழாக்கள் ஆண்டு தோறும் நடைபெறுகிறது.வருடத்தின் எல்லா மாதங்களிலும் ஏதாவது ஒரு திருவிழா இத்தலத்தில் நடந்து கொண்டே இருப்பது சிறப்பு. ஒவ்வொரு மாதமும் பிரதோஷ விழா சிறப்பாக நடைபெறுகிறது. தினமும் 6 கால பூஜை நடைபெறுகிறது.
0
Leave a Reply