அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சட்டத்திற்கு புறம்பான நிகழ்வுகளை தடுத்தல் மற்றும் ஒழித்தல் தொடர்பான கிராம ஒருங்கிணைப்புக்குழு பணிகளை முறையாக செயல்படுத்துவது குறித்த பயிற்சிக்கூட்டம்
விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில் (01.08.2024) மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சட்டத்திற்கு புறம்பான நிகழ்வுகளை தடுத்தல் மற்றும் ஒழித்தல் தொடர்பான கிராம ஒருங்கிணைப்புக்குழு பணிகளை முறையாக செயல்படுத்துவது குறித்த பயிற்சிக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 450 கிராம ஊராட்சிகளில் பல்வேறு துறைகளின் கீழ் ஊராட்சி அளவில் கல்விக்குழு, பணிகள் குழு, வேளாண்மை மற்றும் நீர்பிரிமுகடு, வளர்ச்சிக்குழு, பள்ளி மேலாண்மைக்குழு, பல்லுயிர் மேலாண்மைக்குழு, குழந்தைகள் பாதுகாப்புக்குழு மற்றும் கிராம அளவிலான போதைப்பொருள் ஒழிப்பு குழு ஆகிய 8 குழுக்கள் செயல்படுத்தப்பட்டு, கிராம அளவில் செயல்பாட்டில் உள்ளன.இக்குழுக்கள் அனைத்தும் கிராம அளவில் வெவ்வேறு தினங்களில் கூட்டம் நடத்துவதால் கிராம அளவில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்கும் பொருட்டு, மாதத்தில் ஓர் நாள் (இறுதி வெள்ளிக்கிழமை அன்று) நடத்திட வேண்டும் என ஆணையிடப்பட்டுள்ளது.போதைப் பொருட்கள், குழந்தை திருமணம், பாலியல் குற்றங்கள், குழந்தை தொழிலாளர், பள்ளிகளில் சாதியம், மதம் மற்றும் சாதி வாரிய வன்கொடுமைகள், சட்டத்திற்கு புறம்பான பட்டாசு தயாரித்தல் உள்ளிட்டவைகளை தடுத்தல் மற்றும் ஒழித்தல் மற்றும் சம்மந்தப்பட்ட துறையினருக்கு தகவல் அளித்தல் இந்த கிராம ஒருங்கிணைப்புக்குழுவின் முக்கிய நோக்கங்களாகும்.
இக்குழுவின் உறுப்பினர்-செயலர் என்ற அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலர் மாதந்தோறும் இறுதி வெள்ளிக்கிழமைகளில் கூட்டங்கள் நடத்தி விவாதிக்கப்பட்ட இனங்கள் குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை அளிக்க வேண்டும்.ஒவ்வொரு அரசுத் துறைகளுக்கும் ஒழுங்காற்று பணிகள் மற்றும் வளர்ச்சி பணிகள் என இரண்டு பணிகள் உள்ளன.மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும் சட்டத்திற்கு புறம்பான நிகழ்வுகளை கண்டறிந்து அதனை தடுத்தல் மற்றும் ஒழித்தல் ஒழுங்காற்று பணிகளாகும்.
கடந்த ஓராண்டில் தமிழ்நாட்டிலேயே மகப்பேறுவின் போது எந்த தாயும் இறக்காத ஒரே மாவட்டமாக விருதுநகர் மாவட்டம் உள்ளது. இதற்கு மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களின் சிறப்பான பணிகள், தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் செயல்பாடுகள் உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன. மேலும் இதனுடைய தரத்தை மேம்படுத்த வேண்டும் என்றால் குழந்தை திருமணத்தை முக்கியமாக தவிர்க்க வேண்டும்.நமது மாவட்டத்தில் கடந்த ஆண்டு குழந்தை திருமணம் தொடர்பாக 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நமது கவனத்திற்கு வராமல் நடக்கும் குழந்தை திருமணங்களை முறையாக கண்காணித்து தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒவ்வொரு கிராமத்திலும் அந்த கிராம அளவிலான ஒருங்கிணைப்பு குழு முழுமையாக முயற்சி செய்தால் மட்டுமே பிரச்சினைகளை சரி செய்ய முடியும்.கிராம அளவில் பணிபுரியக் கூடிய நீங்கள் உங்கள் பணி காலத்தில் அந்த கிராமத்தில் எந்த தவறும் நடக்கவில்லை, சட்ட ஒழுங்கு பிரச்சினை இல்லை, அப்படி பிரச்சினை வந்தாலும் அதனை பெரிய அளவில் நடைபெறாமல் சரி செய்வதற்கு முயற்சி செய்தேன், அந்த கிராமத்தில் இருக்கக்கூடிய பல ஏழை எளிய மனிதர்களுக்கு நேரடியாக சேவை செய்வதற்கு என்னுடைய அறிவையும், ஆற்றலையும் பயன்படுத்தினேன் என்று பொதுமக்கள் பாராட்டக்கூடிய அளவிற்கு உங்கள் பணிகள் இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) மரு.பிர்தௌஸ் பாத்திமா, உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) திருமதி விசாலாட்சி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) திருமதி நாச்சியார் அம்மாள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) திரு.பாலச்சந்திரன், உதவி இயக்குநர்(தணிக்கை)திரு.பிரபாகரன், விருதுநகர் துணைக் காவல் கண்காணிப்பாளர் திருமதி பவித்ரா, கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம ஊராட்சி செயலர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply