அருப்புக்கோட்டை வட்டம், பாலவநத்தம் கிராமத்தில் கிராம சபைக் கூட்டம்
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம், பாலவநத்தம் கிராமத்தில் (15.08.2024) 78-வது சுந்திரதினத்தை முன்னிட்டு, கிராமசபைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S,அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், தூய்மைப் பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.
இந்த கிராம சபைக் கூட்டத்தில், 01.04.2024 முதல் 31.07.2024 வரையிலான கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்கப்பட்டது. கிராம ஊராட்சியின் தணிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது, இணையவழி வரி செலுத்தும் சேவை, இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல் குறித்தும் விவாதிக்கப்பட்டது. சுய சான்றின் அடிப்படையில் குடியிருப்பு கட்டடங்களுக்கு உடனடி பதிவின் மூலம் அனுமதி வழங்குதல், தமிழ்நாடு எளிமைப்படுத்தப்பட்ட ஊராட்சி கணக்கு (TN PASS) , தமிழ்நாடு உயிரிப் பல்வகைமை வாரியம்-உயிரிப் பல்வகைமை மேலாண்மை குழு குறித்தும், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்;, தூய்மைபாரத இயக்கம்(ஊரகம்) சுகாதாரம், ஜல் ஜீவன் இயக்கம் ஆகியன குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.இந்த கிராம சபைக் கூட்டத்தில், மேலும் பொதுசுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, கால்நடைதுறை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள் தங்கள் துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை பொதுமக்கள் அறிந்து தெரிந்து கொள்ளும் விதமாக விரிவாக எடுத்துரைத்தனர்.
அரசு என்பது எல்லா மக்களையும் சமமாக பார்த்து அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரும் ஒரு அமைப்பாகும். இந்த கிராம சபையின் மிக முக்கிய நோக்கம் என்னவென்றால், ஜனநாயக நாட்டில், கிராமத்தில்; ஊராட்சி தலைவர்கள், மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள், அரசுத் துறை அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர்கள் இருப்பார்கள். நாங்கள் எல்லாம் மக்களின் பணியாளர்கள். எங்களுக்கு கிடைக்கப்பெற்ற அதிகாரம் உங்களிடம் இருந்து பெறப்பட்டது. உண்மையான அதிகாரம் மக்களிடம் தான் உள்ளது. அதனடிப்படையில் இந்த கிராமசபை கூட்டத்தின் வாயிலாக இந்த கிராமத்தின் வளர்ச்சிக்கு தேவையான பணிகள் அரசு மூலம் என்னென்ன வளர்ச்சி பணிகள் முடிக்கப்பட்டுள்ளது, என்னென்ன பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் என்னென்ன தேவைகள் உள்ளது என்பது கிராம மக்கள் வாயிலாக அறிந்து அதை செயல்படுத்துவது தான் இதன் நோக்கம்.
தற்போது ஒவ்வொரு கிராமத்திலும் கலைஞர் கனவு இல்லம் என்ற திட்டத்தின் மூலமாக அனைவருக்கும் வீடு வழங்கக்கூடிய திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. கிராமசபை கூட்டத்தில் பட்டா இருந்தும் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டிக்கொடுக்கும் திட்டத்தின் மூலம் பயன்பெறும் வகையில் பயனாளிகள் தேர்வு செய்து முன்னுரிமை அடிப்படையில் வீடு கட்டி தரவும் நடவடிக்கை எடுக்கப்படும்.அதுமட்டுமல்லாமல், கிராமத்தில் திறந்தவெளியில் மலம் கழிப்பது தவிர்த்தல், குப்பைகளை தரம் பிரித்தல், சுற்றுச்சூழல் பாதுகாத்தல் மற்றும் நீர்நிலைகளை பாதுகாத்தல் போன்ற கடமைகளை செய்து நாம் உறுதுணையாக இருக்க வேண்டும்.எனவே, நாம் நம்முடைய உரிமைகளை நாம் கேட்கின்ற அதே நேரத்தில் நாம் ஒரு குடிமகனாக குடிமகளாக இவ்வளவு கடமைகள் இருக்கிறது என்பதை பற்றியும் புரிந்து கொள்வதற்கு தான் இந்த கிராமசபைக்கூட்டம் நடத்தப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
0
Leave a Reply