அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், மாநகராட்சி மற்றும் நகராட்சி ஆணையாளர்களுக்கு “காலநிலை மாற்றத்தில் திடக்கழிவு மேலாண்மையின் தாக்கம்” என்ற தலைப்பில மாவட்ட அளவிலான சிறப்பு பயிற்சி வகுப்பு
விருதுநகர் மதுரை சாலையில் உள்ள ஜெய் ஹோட்டலில்(02.12.2024) தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் சார்பில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், மாநகராட்சி மற்றும் நகராட்சி ஆணையாளர்களுக்கு “காலநிலை மாற்றத்தில் திடக்கழிவு மேலாண்மையின் தாக்கம்(Impact Of Solid Waste Management in Climate Change)” என்ற தலைப்பில் நடத்திய மாவட்ட அளவிலான சிறப்பு பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் ஓர் ஆண்டில் ஏறத்தாழ 15,000 முதல் 17,000 நபர்கள் சாலை விபத்துக்களினால் மரணமடைகிறார்கள். இதில் 80-90 சதவீதம் நபர்கள் பொருளாதாரத்தில் அவர்களுக்கும், அவர்கள் சார்ந்த குடும்பத்தினருக்கும் உறுதுணையாக இருக்கக்கூடிய 18 முதல் 65 வயது வரையிலான காலகட்டத்தில் இருக்கக்கூடியவர்களாக உள்ளனர். இதில் 60-70 விழுக்காடு இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தான் சாலை விபத்தில் மரணமடைகிறார்கள் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 500 லிருந்து 600 பேர் ஓராண்டில் சாலை விபத்தில் மரணம் அடைகிறார்கள்.
அடுத்து மிக முக்கியமான பிரச்சனையாக பார்ப்பது, இந்தியாவில் சுற்றுச்சூழல் பிரச்சனைகள் குறிப்பாக காற்று மாசுபாடு மற்றும் அது சார்ந்த நிலைகளில் உயிரிழக்கக் கூடியவர்களில் 65 வயதுக்கு கீழே மரணமடைக்கூடியவர்களின் எண்ணிக்கை 15 இலட்சத்தை தொடுகிறது.சாதாரண நிமோனியா காய்ச்சலாக இருந்து நுரையீரலை பாதித்து கடைசியில் இறப்பிற்கு கொண்டு போய் விடுவது அல்லது சில காற்று மாசுபாடுகளின் காரணமாக ஏற்படக்கூடிய நரம்பு மண்டலம் சார்ந்த நோய்கள், பக்கவாதம், இதய நோய் உள்ளிட்டவை காற்று மாசுபாடுவதால் ஏற்படும் பிரச்சினைகள்.
காற்று மாசடைவதால் ஏற்படக் கூடிய உயிரிழப்பை விட மனிதன் தான் வாழக்கூடிய நாளில் ஆரோக்கியமற்ற ஒரு வாழ்நாளை எதிர்கொள்ளக்கூடிய நாட்கள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக குடும்ப பொருளாதாரத்தையும், ஆரோக்கியத்தையும் நேரடியாக பாதிப்பது தொற்று நோய்களாக இருக்கக்கூடிய காலரா வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள். அதுவும் குறிப்பாக குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் இதனால் அதிகப்படியான பாதிப்புகள் வருகிறது.
தற்போது, ஒரு குழந்தை பிறந்து 7 வயது வரையில் வருடத்திற்கு சராசரியாக 15 நாட்கள் உடல் சரியில்லாமல் போகுமென்றால், சுற்றுச்சூழல் மாசின் காரணமாக அந்த எண்ணிக்கை 20 முதல் 25 ஆக உயரும். அந்த 25 நாட்களும் அந்த நடுத்தர அல்லது வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தில் பெற்றோர்கள்; வேலைக்கு செல்ல முடியாத சூழ்நிலை மற்றும் மருத்துவ செலவின் காரணமாக அந்த குடும்பத்தின் பொருளாதாரத்தை பாதிக்கும். இதுபோன்ற பாதிப்புகளின் பொருளாதார மதிப்பீட்டை எடுத்து பார்த்தால், அது மிக அதிக அளவில் இருக்கிறது.எனவே திடக்கழிவு மேலாண்மை என்பது இடத்தை பார்ப்பதற்கு சுத்தமாக வைப்பதற்கான அழகியல் மதிப்பீடு மட்டுமல்லாமல், இதற்கு பின்னால் இருக்கக்கூடிய மனிதர்களின் உடல்நலம் சார்ந்த பிரச்சினைகளில் ஒவ்வொருவரும் மிகப்பெரிய அளவில் தங்களுடைய நேரத்தையும் சிந்தனையும் செலுத்தக்கூடிய அளவிற்கான பிரச்சனையாக தற்போது உருமாறி இருக்கிறது.
மக்கள் தொகை அதிகமாக இருக்கக்கூடிய சூழலில், அதுவும் அடர்த்தியான மக்கள் தொகை இருக்கக்கூடிய சூழலில், அதுவும் நடுத்தர வர்க்கம் அதற்கு கீழான மக்கள் தொகை அதிகமாக இருக்கக்கூடிய நாடுகளில் இந்த சுற்றுச்சூழலால் ஏற்படக்கூடிய உடல்நலம் பாதிப்பும், அதை ஒட்டிய பொருளாதார பாதிப்புகழ் அதிகம். எனவே இவற்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.புகைப்பிடித்தல் கூடாது என்று காலங்காலமாக விழிப்புணர்வு இருக்கிறது. ஆனால் அதற்கு சற்றும் குறைவில்லாத குப்பைகள் இருப்பதன் மூலமாக நம்முடைய திடக்கழிவு மேலாண்மையை முறையாக செய்யாமல் இருப்பதன் மூலமாக ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் பாதிப்புகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அதுவும் குறிப்பாக திடக்கழிவு மேலாண்மையை செயல்படுத்தும் நிலையில் இருக்கக்கூடிய உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்கள் இதற்குப் பின்பு இருக்கக்கூடிய அறிவியலையும், சமூகப் பொருளாதாரத்தையும், எளிய மனிதர்களின் உடல் நலத்தையும் புரிந்திருக்கிறோமா என்பதை எடுத்துக் கூறும் நோக்கில் தான் இந்த பயிற்சி. இது மிக முக்கியமான சமூக பிரச்சனை. இந்தியாவின் தலைநகராக இருக்கக்கூடிய புது டெல்லியில் சமீபத்தில் காற்றின் தரக்குறியீடு அதன் அபாய அளவை விட நான்கு மடங்கு அதிகமாக இருந்தது.அடுத்து குடிநீர் தரத்தின் குறியீட்டை பார்த்தால், திடக்கழிவு மேலாண்மை சரியில்லாமல் உள்ள இடங்களில் நீர்நிலைகளும் மாசடைகிறது. அதுபோல நுரையீரல் புற்றுநோய் நோய், தோல் புற்றுநோய் ஆகியவை சுற்றுச்சூழல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய விளைவுகளால் செல்களில் ஏற்படக்கூடிய திடீர் மாற்றத்தினால் உருவாகக் கூடியது. எனவே, திடக்கழிவு மேலாண்மையை முறையாக புரிந்து கொண்டு, தொழில்நுட்பத்தை பயன்படுத்திய முறையாக கையாள வேண்டும்.
திடக்கழிவு மேலாண்மையில் தொடர்ச்சியான செயல்பாடு முக்கியம். கடைகள், வணிக வளாகங்கள், பெரிய நிறுவனங்கள் அவர்களுடைய திடக்கழிவு மேலாண்மையை முறையாக கையாள வேண்டும். குப்பைகளை மறுசுழற்சி செய்ய வேண்டும். குப்பைகள் கொட்டுவது, திறந்த வெளி மலம் கழித்தல், குப்பைகள் எரிப்பது குறித்த மக்களின் மனநிலையை மாற்றுவதற்கு தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் மாற்றத்தை உருவாக்க முடியும். எனவே, இதன் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டு செயலாற்ற வேண்டும் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட சுற்றுச்சுழல் பொறியாளர் திரு.ராமராஜ் உட்பட அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், மாநகராட்சி மற்றும் நகராட்சி ஆணையாளர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply