அமெரிக்காவின் Southern California பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் சுமார் 10 மில்லியன் டாலர் மதிப்பிலான போலியான Nike மற்றும் Adidas ஆடைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.பிரபல பிராண்டுகளின் பெயர் மற்றும் லோகோக்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட போலி streetwear ஆடைகள், விற்பனைக்காக மிகப்பெரிய அளவில் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.இந்த சம்பவம் அமெரிக்காவில் போலி பிராண்டு பொருட்களின் மிகப்பெரிய சந்தை குறித்து மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நம் உடலில் கோடிக்கணக்கான நுண்ணுயிரிகள் வாழ்கின்றன. இவற்றில் சில நமது உடலுக்கு பல்வேறு வகைகளில் உதவுகின்றன.குறிப்பாக, தோலில் வாழும் சில பாக்டீரியாக்கள் சூரியனில் இருந்து வரும் புற ஊதாக் கதிர்வீச்சால் (UV) ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள உடலுக்கு உதவக்கூடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.சூரியனின் UVB கதிர்கள் தோலில் படும்போது, urocanic acid போன்ற மூலக்கூறுகளில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. இதனால் தோலின் நோய் எதிர்ப்பு செயல்பாட்டில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.தோலில் வாழும் Staphylococcus epidermidis போன்ற சில பாக்டீரியாக்கள், குறிப்பிட்ட நொதிகளை உருவாக்குவதன் மூலம் இந்தச் சேர்மங்களை மாற்றியமைக்கக்கூடும் என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.ஆய்வகப் பரிசோதனைகளிலும், விலங்குகள் மீதான ஆய்வுகளிலும் இந்த நுண்ணுயிரிகள் தோலின் பாதுகாப்பில் பங்கு வகிக்கக்கூடும் என்பதற்கான தகவல்கள் கிடைத்துள்ளன.இதன் மூலம், தோலில் வாழும் நுண்ணுயிரிகள் வெறும் ‘கிருமிகள்’ மட்டுமல்ல; அவற்றில் சில நமது உடலுடன் இணைந்து செயல்படும் முக்கியமான உயிரியல் கூட்டாளிகள் என்பது தெரியவருகிறது.எதிர்காலத்தில் தோல் நோய்களுக்கான புதிய சிகிச்சைகளை உருவாக்க இந்த ஆய்வுகள் உதவுமா? ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.
மனிதர்களை விட பல நூறு மடங்கு அதிக எடை கொண்ட ஒரு மிகப்பெரிய உயிரினம், வெறும் இரண்டு மாதங்களில் தனது உடல் எடையில் கணிசமான அளவை குறைத்துக் கொள்கிறது என்றால் நம்ப முடிகிறதா?அந்தச் சாதனையைச் செய்வது ஹம்ப்பேக் திமிங்கலம் (Humpback Whale).ஒவ்வொரு ஆண்டும் ஹம்ப்பேக் திமிங்கலங்கள் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவுக்கு இடம்பெயர்கின்றன. மேற்கு அட்லாண்டிக் பகுதிகளில் இருந்து தென் அமெரிக்காவின் கொலம்பியா கடற்கரைப் பகுதிகளுக்கு இனப்பெருக்கத்திற்காக அவை பயணம் செய்கின்றன.இந்த நீண்ட பயணத்தின்போது தொடர்ந்து உணவு கிடைப்பது சாத்தியமில்லை. எனவே, பயணத்துக்கு முன்பே உடலில் அதிக அளவு கொழுப்பைச் சேமித்து வைத்துக் கொள்கின்றன.ஆஸ்திரேலியாவின் கிரிஃபித் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ட்ரோன்கள் மூலம் ஹம்ப்பேக் திமிங்கலங்களை கண்காணித்து அவற்றின் உடல் அளவு மற்றும் எடை மாற்றங்களை ஆய்வு செய்துள்ளனர்.நீண்ட தூரப் பயணத்தின்போது உடலில் சேமித்து வைத்திருக்கும் கொழுப்பை ஆற்றலாக மாற்றிக் கொள்வதால், அவற்றின் உடல் எடை கணிசமாகக் குறைகிறது.சில ஆய்வுகளின்படி, இடம்பெயர்வு காலத்தில் திமிங்கலங்கள் தங்கள் உடல் எடையில் சுமார் மூன்றில் ஒரு பகுதியை இழக்கக்கூடும்.மனிதர்களுக்கு கடினமான எடை மாற்றம்... திமிங்கலங்களுக்கு இயற்கையான வாழ்க்கைச் சுழற்சியின் ஒரு பகுதியாகவே இருக்கிறது!
2020-ஆம் ஆண்டு ஊரடங்கு காலத்தில், வெறும் 15 வயதில் பொழுதுபோக்காக ஒரு சிறிய ட்ரோனை உருவாக்கிய நமன் புஷ்பாவின் தொழில்முனைவு பயணம், இன்று குறிப்பிடத்தக்க உயரத்தை எட்டியுள்ளது.ஒரு ஹேக்கத்தானில் வென்ற $500 பரிசுத் தொகையை பயன்படுத்தி தனது முதல் ட்ரோனை உருவாக்கிய அவர், தற்போது பெங்களூரைச் சேர்ந்த ‘Airbound’ விண்வெளித் தொழில்நுட்ப Startup-ஐ வழிநடத்தி வருகிறார்.சமீபத்தில், Greenoaks தலைமையிலான Series A நிதிச்சுற்றில் Airbound $37 மில்லியன் (சுமார் ₹350 கோடி) நிதியைத் திரட்டியுள்ளது. இதன் மூலம் நிறுவனத்தின் மொத்தமாக திரட்டப்பட்ட நிதி $50 மில்லியன் (சுமார் ₹472 கோடி) ஆக உயர்ந்துள்ளது.15 வயதில் தொடங்கிய ஒரு சிறிய ட்ரோன் முயற்சி, 21 வயதில் பல கோடி ரூபாய் மதிப்பிலான தொழில்முனைவு பயணமாக மாறியுள்ளது.
“சித்திரம் வரைவது போல எளிமையானது அல்ல கார்களை வடிவமைப்பது!” என்கிறார் இந்தியாவைச் சேர்ந்த வாகன வடிவமைப்பு நிபுணர் ராம்கிருபா அனந்தன்.காலத்துக்கு ஏற்ற வகையில், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் எளிமையான மற்றும் பாதுகாப்பான வாகனங்களை உருவாக்க வேண்டும் என்பதே தனது லட்சியம் என்கிறார் அவர்.மகிந்திரா நிறுவனத்தின் பொலேரோ மற்றும் ஸ்கார்பியோ உள்ளிட்ட கார்களின் வடிவமைப்பில் ராம்கிருபா அனந்தன் முக்கிய பங்காற்றியுள்ளார்.மேலும், பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய இருசக்கர வாகனங்களை உருவாக்க வேண்டும் என்பதும் தனது எதிர்கால இலக்கு என அவர் தெரிவித்துள்ளார்.
‘2025 PN7’ என்ற விண்கல், பூமியின் இரண்டாவது நிலவு போன்ற நிலையில் சூரியனைச் சுற்றி வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.பூமிக்கு இயற்கையாக ஒரே ஒரு நிலவு மட்டுமே உள்ளது. பூமிக்கும் நிலவுக்கும் இடையிலான சராசரி தொலைவு சுமார் 3.84 லட்சம் கிலோமீட்டர்.இந்நிலையில், ஹவாய் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் 2025 ஆகஸ்ட் 29-ம் தேதி ‘2025 PN7’ என்ற சிறிய விண்கல்லைக் கண்டறிந்தனர்.இந்த விண்கல் பூமியின் சுற்றுப்பாதைக்கு அருகிலேயே, சூரியனைச் சுற்றி வருகிறது. பூமியுடன் ஒத்த சுற்றுப்பாதையில் பயணிப்பதால், இது ‘குவாசி மூன்’ (Quasi-Moon) எனப்படும் பூமியின் தற்காலிகத் துணை நிலவு போன்ற வகையைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது.இந்த விண்கல் கடந்த 1960-ம் ஆண்டு முதல் இதுபோன்ற சுற்றுப்பாதையில் இருப்பதாகவும், சுமார் 2083-ம் ஆண்டு வரை இந்தப் பாதையில் தொடர்ந்து பயணிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு பூமியுடனான இந்தச் சுற்றுப்பாதை உறவு மாறும்.‘2025 PN7’ விண்கல்லின் அகலம் சுமார் 62 அடி, நீளம் சுமார் 98 அடி என மதிப்பிடப்பட்டுள்ளது.இது நிலவைவிட பூமிக்கு மிகவும் அருகில் இருப்பது போல் தோன்றினாலும், அதன் சிறிய அளவு காரணமாக வெறும் கண்களால் பார்க்க முடியாது. சக்திவாய்ந்த தொலைநோக்கிகள் மற்றும் வானியல் கருவிகளின் உதவியுடன் மட்டுமே இதைக் காண முடியும்.மேலும், இந்த விண்கல்லால் பூமிக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்பும் பூமியுடன் இதுபோன்ற சுற்றுப்பாதை உறவை கொண்டிருந்த பல ‘குவாசி மூன்’ பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.
சாலையில் ஆங்காங்கே கிடக்கும் சிகரெட் துண்டுகள் சுற்றுச்சூழலுக்கு பெரும் பிரச்சினையாக உள்ளன. ஆனால், எதிர்காலத்தில் இந்தக் கழிவுகளையே சாலை அமைக்கும் மூலப்பொருளாக பயன்படுத்த முடியும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.கிரனாடா மற்றும் போலோனா பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், செல்லுலோஸ் மற்றும் PLA (Polylactic Acid) போன்ற பொருட்களைக் கொண்ட சிகரெட் வடிகட்டிகளை மறுசுழற்சி செய்து, நிலக்கீட்டில் பயன்படுத்தக்கூடிய பொருளாக மாற்றுவது குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.மறுசுழற்சி செய்யப்பட்ட நிலக்கீல் மற்றும் பிட்டுமென் ஆகியவற்றுடன் சிகரெட் வடிகட்டிகளில் இருந்து பெறப்படும் பொருட்களைச் சேர்க்கும்போது, சாலையின் வலிமை மற்றும் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தக்கூடிய இழைகள் உருவாகின்றன.இதன் மூலம் குறைந்த வெப்பநிலையில் பதப்படுத்தக்கூடிய மேம்பட்ட நிலக்கீல் கலவையை உருவாக்கும் வாய்ப்பு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். சாலையில் ஊற்றப்பட்ட பிறகு இந்தக் கலவை படிப்படியாக உறுதியடைகிறது.இந்த ஆய்வு ‘Constructions and Building Materials’ என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.கழிவுக்கு ஒரு புதிய பயன்பாடுசிகரெட் வடிகட்டிகள் பெருமளவில் குப்பையாகச் சேர்வது சுற்றுச்சூழலுக்கு சவாலாக உள்ளது. அவற்றை தனியாக சேகரித்து மறுசுழற்சி செய்வதும் எளிதான பணியல்ல.எனவே, சிகரெட் பயன்பாட்டைக் குறைப்பதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஒருபுறம் தொடர்ந்து நடைபெறும் நிலையில், ஏற்கனவே உருவாகும் சிகரெட் கழிவுகளை பயனுள்ள பொருட்களாக மாற்றுவதற்கான ஆராய்ச்சிகளும் முக்கியத்துவம் பெறுகின்றன.எதிர்காலத்தில் இந்தத் தொழில்நுட்பம் நடைமுறைக்கு ஏற்றதாக நிரூபிக்கப்பட்டால், ஒரு பக்கம் கழிவுகளின் அளவைக் குறைக்கவும், மறுபக்கம் சாலை கட்டுமானத்துக்கான புதிய மறுசுழற்சி மூலப்பொருளை உருவாக்கவும் உதவக்கூடும்.கழிவாகத் தெரியும் ஒரு பொருளுக்கும், சரியான தொழில்நுட்பம் கிடைத்தால் புதிய பயன்பாடு கிடைக்கலாம்.
நிலவின் பின்புறம் வெள்ளி கிரகம் சென்று வந்த நிகழ்வை ஆர்வத்துடன் பார்த்து ரசித்த பொதுமக்கள்.நிலவின் பின்புறம் வெள்ளி கிரகம் சென்று வந்த இந்த நிகழ்வு 'Moon-Venus Occultation' என்று அழைக்கப்படுகிறது.
இன்று உயரமான கட்டடங்களில் சில நொடிகளில் பல தளங்களைக் கடந்து செல்ல லிப்ட் நமக்கு உதவுகிறது. ஆனால், இதன் வரலாறு பல நூற்றாண்டுகளைக் கடந்து வந்தது என்பது தெரியுமா?கி.மு. 3ஆம் நூற்றாண்டிலேயே கிரேக்க கணிதவியலாளர் ஆர்க்கிமிடிஸ், கயிறுகள் மற்றும் இயந்திர அமைப்புகளைப் பயன்படுத்தி பொருட்களை மேலே தூக்கும் சாதனத்தை உருவாக்கியதாக வரலாற்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.பின்னர் ஐரோப்பாவில் உள்ள அரண்மனைகளில், குறிப்பாக இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளில், மனிதர்களையும் பொருட்களையும் மேலே மற்றும் கீழே கொண்டு செல்லும் உயர்த்தி அமைப்புகள் பயன்படுத்தப்பட்டன.பிரான்சில் உள்ள வெர்செய்ல்ஸ் அரண்மனையில், 1743ஆம் ஆண்டு‘பறக்கும் நாற்காலி’ என அழைக்கப்பட்ட ஒரு வகை லிப்ட் அமைக்கப்பட்டது. அதன்பிறகு ரஷ்யாவைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளர் இவான் குலிபின், 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் புதிய தொழில்நுட்ப அடிப்படையிலான லிப்ட் வடிவமைப்பை உருவாக்கினார்.19ஆம் நூற்றாண்டில் நீராவிச் சக்தியில் இயங்கும் லிப்ட்கள் பயன்பாட்டுக்கு வந்தன. லண்டனில் 1823ஆம் ஆண்டு ‘Rising Room’ என அழைக்கப்பட்ட உயர்த்தி அமைப்பு சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்தது.ஆனால், லிப்ட் வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது அமெரிக்க கண்டுபிடிப்பாளர்எலிஷா ஓடிஸ் உருவாக்கிய பாதுகாப்பு அமைப்பு.1853ஆம் ஆண்டு நியூயார்க்கில் நடைபெற்ற கண்காட்சியில், கயிறு அறுந்தாலும் லிப்ட் கீழே விழாமல் தடுக்கும் பாதுகாப்பு அமைப்பை ஓடிஸ் அறிமுகப்படுத்தினார். இந்த கண்டுபிடிப்பே நவீன பயணிகள் லிப்ட் வளர்ச்சிக்கு முக்கிய அடித்தளமாக அமைந்தது. பின்னர் அவரது பெயரில் Otis நிறுவனம் உருவானது.20ஆம் நூற்றாண்டில் மின்சார லிப்ட்கள் வேகமாக வளர்ச்சி பெற்றன. தானியங்கி கதவுகள், அவசர நிறுத்து அமைப்புகள், தொலைபேசி தொடர்பு மற்றும் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் படிப்படியாக சேர்க்கப்பட்டன.இன்று அதிவேக மின்சார லிப்ட்கள், உயரமான கட்டடங்களின் அத்தியாவசிய தொழில்நுட்பமாக மாறிவிட்டன.கயிறு மற்றும் எளிய இயந்திரத்தில் தொடங்கிய லிப்ட்... இன்று வானளாவிய கட்டடங்களை சில நொடிகளில் இணைக்கும் அற்புதத் தொழில்நுட்பமாக வளர்ந்துள்ளது!
பசிபிக் பெருங்கடல் பகுதியில் நீருக்கடியில் எடுக்கப்பட்ட பிரம்மாண்டமான ஜெல்லி மீன் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.வீடியோகிராபர் ஜான் ரோனி பதிவு செய்ததாகக் கூறப்படும் இந்தக் காட்சிகளில், மிகப்பெரிய அளவில் காணப்படும் ஆரஞ்சு மற்றும் நீல நிற ஜெல்லி மீன் இடம்பெற்றுள்ளது.இதன் உண்மையான எடை மற்றும் நீளம் குறித்த தகவல்கள் உறுதியாகத் தெரியாத நிலையில், சில நிபுணர்கள் இது மிகப்பெரிய அளவைக் கொண்டிருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.உலகின் மிகப்பெரிய ஜெல்லி மீன்களில் ஒன்றாகக் கருதப்படும் Lion’s Mane Jellyfishசுமார் 120 அடி நீளம் வரை வளரக்கூடியதாகக் கூறப்படுகிறது.ஜெல்லி மீன்கள் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், சில வகைகள் மனிதர்களுக்கு வலியை ஏற்படுத்தும் அளவுக்கு விஷத்தன்மை கொண்ட கொடுக்குகளை உடையவை.கடலுக்குள் இன்னும் நமக்குத் தெரியாத எத்தனை பிரம்மாண்ட உயிரினங்கள் இருக்கின்றன?