25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


முதுமை

Oct 08, 2025

தைராக்ஸின் அதிகம் சுரத்தல்

இந்நோய்க்கு தைரோடாக்சிகோஸிஸ் என்று பெயர். தைராக்சின் எதனால் மிகுதியாகச் சுரக்கிறது என்பதற்குச் சரியான காரணம் தெரியவில்லை. இந்நோய் உள்ளவர்களுக்குதைராய்டு சுரப்பி (கழுத்தின் முன்பகுதி) சற்று வீங்கி இருக்கும் அல்லது அச்சுரப்பியில் பல கட்டிகள் இருக்கலாம். சிகிச்சைக்கு முன்பு இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் மிகவும் மெலிந்து இருக்கும். பசி அதிகமாக இருக்கும். ஆனால் உடல் மட்டும் இளைத்துக்கொண்டே போகும். அடிக்கடி வயிற்றுப் போக்கும் ஏற்படும். எப்பொழுதும் ஒருவிதப் பதற்றத்துடனே இருப்பார்கள். அதிகமாகப் பேசுவார்கள். கண்கள் இரண்டும் வெளியே தள்ளியதுபோல் பெரிதாகக் காணப்படும். ஒரு சிலருக்கு வீங்கி இருக்கும்.கைகளில் நடுக்கம் அதிகம் இருக்கும். உடலில் வெப்பம் சற்று மிகுதியாக இருக்கும். இவர்களால் கோடைகால வெப்பத்தைத் தாங்க முடியாது. உடல் அடிக்கடி வியர்த்துக் கொட்டும்.முதியோர்களுக்கு நாடித்துடிப்பு அதிகரித்தல் அல்லது ஒரே சீராக இல்லாத நிலை (irregular heart beat), இதயம் வலிமை இழத்தல் மற்றும் காரணமில்லாமல் எடை குறைதல் போன்றதொல்லைகள் இருந்தால் அவருக்கு தைராய்டு அதிகமாகச் சுரக்கும் நோயிருப்பதாகக் கருதி, அதை உறுதிசெய்யப் பரிசோதனைகளைச் செய்ய வேண்டும்.இந்நோயை ரத்தப் பரிசோதனை மூலமும், ஸ்கேன் டெஸ்ட் மூலமும் எளிதல் கண்டறிய முடியும்.

Oct 01, 2025

முதுமையிலும் இளமையின்  பலம் பெற எளிய முறைகள்...

காலையில் வெறும் வயிற்றில் பழைய சோற்றுநீரை மோர் விட்டுக் குடிக்க, புரோபயாடிக் சத்து எளிதில் கிடைத்து.உடல் பலம் பெற முதல் அடித்தளம் இது.காலையில் காபி, டீக்கு பதில் புதினா. கொத்தமல்லி, கறிவேப்பிலை, சிறிது சீரகம் சேர்த்துக் கொதிக்கவிட்டுச் சூடாகக் குடிக்க, இந்தப் புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை இலைகளில் உள்ள இரும்புச்சத்து உடல் நலம் பெறவும் ரத்தச்சோகை நீங்கவும் உதவும். மேலும், இதில் சேரும் சீரகம் நாள் முழுவதும் ஜீரண சக்தியை அதிகபடுத்த உதவும். இதில் உள்ள மைக்ரோ நியூட்டிரியன்ஸ் உடல் பலம் மேம்பட உதவும்.காலையில் வேகவைத்த முளைக்கட்டிய சுண்டல் சாப்பிட, இதில் உள்ள புரோட்டீன் சத்து நாள் முழுவதும் உடல் சோர்வை நீக்கும்.காலை 11 மணிக்கு குறுமிளகுடன் சேர்ந்த கீரை சூப் அல்லது காய்கள் மற்றும் சீரகம் சேர்ந்த சூப் குடிக்க நோய் எதிர்ப்பு சக்தி பெருகும்.மதிய உணவில் பருப்பு சாம்பார், காய்,கீரை, கூட்டு, அதனுடன் துவையல் (இஞ்சி, புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை, தூதுவளை, பிரண்டைத் துவையல்), ரசம் (ஜீரண சக்தி அதிகரிக்கும்), நீர்மோர் ஒரு டம்ளர் குடிக்க, குடலுக்கும் உடலுக்கும் நன்மை தருவதுடன் உடலின் நீர்ச்சத்து இழப்பைச் சீர்செய்யும்.மாலையில் உலர் பழங்கள் (மா. ஆப்ரிகாட், பெர்ரி, திராட்சை, செர்ரி, அத்திப்பழம், உலர் ஆப்பிள் துண்டுகள்) சாப்பிடலாம். உலர் கொட்டைகள் சாப்பிடலாம்.நிலக்கடலை, பாதம், அக்ரூட், பிஸ்தா, முந்திரி, வறுத்த கடலை, வறுத்த பச்சைப் பயிறு, வறுத்த மூக்கடலை, உலர் கொட்டைகள், உலர் பழங்கள் ஆகியவை மினரல் சத்துகளை வாரி வழங்கும்.மாலையில் உளுந்தங்களி சாப்பிட நரம்புகள் பலம் பெற்று நரம்புத்தளர்ச்சி நீங்கும். சூடான பருத்திப்பால் அல்லது பாதம்பால் உடல் தளர்ச்சியை நீக்கி வலிமை தரும்.இரவில் சிறுதானியங்களில் (குதிரைவாலி, தினை, சாமை, வரகு) செய்யப்பட்ட உணவுகளை எடுக்க, உடலின் உட்சூடு குறைவதுடன் சிறுதானியங்களில் நார்ச்சத்து உள்ளதால் மறுநாள் காலை மலச்சிக்கல் ஏற்படாது.இவை தவிர தினமும் ஒரு ஸ்பூன் அமுக்கரா சூரணத்தைச் சூடான பாலில் கலந்து காலை, மாலை குடித்து வர 48 நாட்களில் உடல் பலம்பெறுவது நிச்சயம். மேலும், அஸ்வகந்தி லேகியம் இருவேளை உட்கொள்ள வேண்டும். இதிலுள்ள அஸ்வகந்தா. பால், தேன், நெய் போன்றவை உடலுக்கு இருமடங்கு வலிமையைத் தரும். அல்லது தேற்றாங் கொட்டை லேகியத்தை இருவேளை சாப்பிட உடல் இளைப்பு நீங்கி உடல் வளமையும் வலிமையும் பெறும். எனவே தான், தேற்றாங் கொட்டையிட்டு உடலைத் தேற்று என்பது கிராமத்து வழக்கு.வாரம் ஒருமுறை உடல் முழுவதும் நல்லெண்ணெய் தேய்த்துக் குளிக்க உடல் சூடு தணிவதுடன் எலும்பு, மூட்டுகள் வலிமை ரு பெறும். நல்லெண்ணெயைத் தோலில் தேய்க்கத் ச் தேய்க்க கொலோஜன் உற்பத்தி பெருகி உடல் சுருக்கம் மறையும்.வாரம் ஒருமுறை சீரகம், சுக்கு, பெருங்காயம், வேப்பிலை கொழுந்து, துளசி, நுணா கொழுந்து ஆகியவற்றை அரைத்துச் சிறு சுண்டையளவு சாப்பிட நன்கு பசி எடுப்பதுடன் குடல் உறிஞ்சும் தன்மையை மேம்படுத்துவதால் சத்துகள்எளிதில் குடலால் உறிஞ்சப்பட்டு உடல் வலிமை பெறும். முடிந்தவர்கள் (சர்க்கரை நோயாளிகள் தவிர்த்து) வாரம் ஒருவேளை பழங்கள் மட்டும் சாப்பிட்டு உடல் இயக்கத்தைச் சீர்படுத்திக்கொள்ளலாம்.உணவில் கற்ப மூலிகைகளான கரிசலாங்கண்ணிக் கீரை, வல்லாரைக் கீரை, தூதுவளை, பொண்ணாங்கண்ணி போன்ற கீரை வகைகளை 48 நாட்கள் (கடுகு, உப்பு, புளியைத் தவிர்த்து) சீரகம் சேர்த்துச் சமைத்துச் சாப்பிட நரை (முடி வெளுத்தல்), திரை (தோல் சுருக்கம்) நீங்கி உடல் பலம் பெறும்.

Sep 24, 2025

முதியோரின் தூக்கமின்மையைச் சரி செய்ய  உதவுங்கள்.

முதியோரின் தூக்கமின்மைக்கு காரணம் அறிய முயலவேண்டும். அதிக சத்தத்தைக் குறைத்துக் கதவை மூடி அமைதியான சூழ்நிலையை உண்டாக்க வேண்டும்.முதியோர் பகலில் தூங்காமல் இருக்க அறிவுரைகளைக் கூற வேண்டும். பகலில் ஏதாவது சிறு வேலைகளைச் செய்யச் சொல்ல வேண்டும்.இரவில் உணவு உண்டபின் தேநீர் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.படுக்கும் போது சரியான தலையணைகளை வைத்துச் சௌகரியமான நிலையில் படுத்து உறங்கச் சொல்ல வேண்டும்.தூக்க மாத்திரைகள் பகலில் கொடுக்காமல் இரவில் கொடுக்கப்பட வேண்டும்.நீர் பிரியக்கூடிய மாத்திரைகள் பகலில் கொடுக்கப்பட வேண்டும். இரவில் கொடுத்தால் தூக்கத்தைக் கெடுக்கும்.முதியோர் சிலருக்கு படுத்ததும் தூக்கம் வராது. அவர்களை தொலைக்காட்சி  பார்ப்பது, பத்தகங்கள் படிப்பது போன்றவத்தில் ஈடுபடச் சொல்லலாம்.இம் முறையில் அவர்களுக்கு அசதிஏற்பட்டால் உடனே  படுக்க சொல்ல வேண்டும்.படுப்பதற்கு முன்பு பாலில் சற்று தேன் கலந்து அருந்தினால் சில ருக்குச் சுகமான தூக்கம் வரலாம், பிரார்த்தனை, தியானம் போன்ற செயல்பாடுகள் மூலமாகவும் தூக்கம் வரலாம். தூங்கும் அறையில் அதிக வெளிச்சம் இல்லாமலும்,வெளிச்சத்தைத் தவிர்க்கத் திரை போட்டும் வைக்க வேண்டும். படுக்கை சுத்தமாக, ஈரமில்லாமல், சுருக்கம் இல்லாமல் இருக்க வேண்டும். தூங்கும்போது முதியோர் அணியும் ஆடை அவர்களுக்கு வசதி உள்ளதாக இருக்க வேண்டும்.படுப்பதற்கு முன் சிறுநீர் கழித்துவிட்டுப் படுக்கச் சொல்லவும். இதன் மூலம் தூக்கத்தின் இடையில் எழுந்திருப்பதைத் தவிர்க்கலாம். பிள்ளைகள் இரவில் அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பது, வானொலி சத்தமாக வைப்பது போன்றவை முதியோரின் தூக்கத்தைப் பாதிக்கக்கூடும். ஆகவே. முதியோருக்குத் தொந்தரவு இல்லாமல், அதிக சத்தமாக வானொலி மற்றும் தொலைக்காட்சி வைக்காமல் அவர்கள் அமைதியுடன் தூங்க உதவ வேண்டும். மூத்தகுடிமக்களுக்குத் தூக்கம்,ஓய்வு அவசியம் தேவை என்பதை உணர்ந்து அவர்கள் தூங்கும் பகுதியில் அதிக சத்தங்கள் ஏற்படாமலும் குடும்பத்தினர் பார்த்துக்கொள்ள வேண்டும்.கடைசி முயற்சியாகவே தூக்க மாத்திரையை, மருத்துவரின் ஆலோசனைப்படி பயன்படுத்த வேண்டும்.

Sep 10, 2025

அல்சைமர் . ( மறதி நோய் )

அல்ஸைமர் நோயின் முதல் அறிகுறியே மறதியில்தான் ஆரம்பமாகிறது. இவர்களுக்கு மறதி மற்றும் கவனக்குறைவால் எதையும் மனதில் பதிய வைக்க முடிவதில்லை. இவர்களின் மறதியில் ஒரு தனித்தன்மையும் உண்டு. முக்கியமாக, அண்மைக்கால நினைவு பாதிக்கப்பட்டு மறதி உண்டாகிறது. ஏதாவது ஒன்றைக் கூறினால் அதில் கவனம் செல்லாததால், அதை நினைவில் பதிய வைத்துக்கொள்ள முடிவதில்லை. அதனால் அண்மைக்கால நினைவுகள் அற்றுப்போய் விடுகின்றன.நடை, உடை, பாவனைகளில் மாற்றம் தெரியும். சுத்தமாகப் பளிச்சென உடை உடுத்துபவர், கசங்கிய சட்டையைஅணிவார். சட்டை பொத்தானை மாற்றிப் போட்டுக் கொள்வார். உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு மேற்கொண்ட மறதி சார்ந்த தொல்லைகள் இருந்தால் உடனே மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள். இதுவே மறதி நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய உதவும்.

Sep 03, 2025

மொத்த மக்கள் தொகையுடன் ஒப்பிடும் போது,உலகி லேயே ஜப்பானில்தான் முதியோர் எண்ணிக்கை அதிகம்.

மொத்த மக்கள் தொகையுடன் ஒப்பிடும் போது,உலகி லேயே ஜப்பானில்தான் முதியோர் எண்ணிக்கை அதிகம். இந்த ஆண்டின் நிலவரப்படி அந்த நாட்டின் மக்கள் தொகை 12 கோடியே 31 லட்சம்,அங்கு 65 வயதுக்கு மேற்பட்டோர் மூத்த குடிமக்களாக கருதப்படுகிறார்கள். அதன்படி பார்த்தால் அந்த நாட்டில் தற்போது மொத்த மக்கள் தொகையில் 30 சதவீதம் பேர், அதாவது 3 கோடியே 70 லட்சம் பேர் முதியோர் ஆவார்கள். கிட்டத்தட்ட மூன்று பேரில் ஒருவர் 65 வயதை கடந்தவராக இருக்கிறார். முதியவர்களில் சுமார் 96 ஆயிரம் பேர் நூறு வயதை தாண்டியவர்கள். தலைநகர் டோக்கியோவில் மட் டும் 80 லட்சத்து 70 ஆயிரம் முதியோர்கள் வசிக்கிறார்கள்.ஜப்பானில் குழந்தைகள் பிறப்பு வெகுவாக குறைந்து வருவது முதியோர் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்றாகும்.ஜப்பானில் முதியோர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவது ,அந்த நாட்டு அரசை கவலைகொள்ளச் செய்திருக்கிறது. முதியோருக்கான ஓய்வூதியம், சுகாதாரம் போன்ற சமூக பாதுகாப்பு திட்டங்களுக்காக பெரும் தொகையை செலவிட வேண்டி இருப்பது அரசுக்கு பெரும் சவாலாக உள்ளது.

Aug 27, 2025

முதுமை வேறு, முதிர்ச்சி வேறு.

இன்பத்தையும் துன்பத்தையும் ஒரே மாதிரிப் பார்க்கும் பக்குவமான மனம் இருந்தால் அதைத்தான் 'முதிர்ச்சி என்கிறோம். சிலருக்கு அது 20 வயதில் கூட வந்துவிடும். சிலருக்கு 80 வயது வரை முதிர்ச்சி வராமலே போகலாம்.  தான் முதிர்ச்சி அடைந்திருப்பதை ஒருவர் எப்படி உணர முடியும்?யாரைப் பற்றியாவது யாரோ வம்பு பேசுவதைக் கேட்க அலுப்பாக இருக்கும். இதில் ஏன் நேரத்தை வீணடிக்க வேண்டும் என்று தோன்றும்.அம்மாவோ, மனைவியோ, நெருங்கிய உறவுகளோ போன் செய்யும்போது எரிச்சல் வராது. போனை எடுத்து அன்புடன் பேசமுடியும்.தான் பேசுவதைக் குறைத்து, அடுத்தவர்கள் பேசுவதைக் கேட்கத் தோன்றும்.எல்லாம் தெரிந்ததுபோலப் பேச மாட்டார்கள். "ஆமாம், இது எனக்குத் தெரியாது" எனத் தயங்காமல் ஒப்புக்கொள்வார்கள்.நண்பர்களை எதற்காகவும் விட்டுக் கொடுக்காமல் பேசுவார்கள். அவர்களைக் கொண்டாடவும் செய்வார்கள்.பிரச்னைகளைக் கண்டு ஒதுங்காமல்,ஏதேதோ காரணங்கள் சொல்லி தட்டிக் கழிக்காமல் நேரடியாக எதிர்கொள்வார்கள்.தங்கள் நேரத்தை வீணடிக்கும் மனிதர்களைச் சாமர்த்தியமாக ஒதுக்கக் கற்றிருப்பார்கள்.தன்னுடைய மகிழ்ச்சி மற்றவர்கள் கையில் இல்லை, அது தன் மனதில்தான் இருக்கிறது என்பதை உணர்ந்திருப்பார்கள்.அடுத்தவர்களை நேசிப்பதுபோலத் தங்களையும் நேசிப்பார்கள். ஒன்றுமில்லாத விஷயங்களுக்காகத் தங்களை வருத்திக்கொள்ள மாட்டார்கள்.தேவையற்ற வாக்குவாதங்களையும் சண்டைகளையும் புறக்கணித்துவிட்டு, மௌனமாக அந்தச் சூழலைக் கடந்து போய்விடுவார்கள்.யாரையும் வெறுமனே தோற்றத்தை வைத்தும் பேச்சை வைத்தும் எடைபோட மாட்டார்கள்.யார் மீதும் தங்கள் கருத்தை வலிந்து திணிக்க மாட்டார்கள். மாற்றுக்கருத்து வைத்திருக்க அடுத்தவர்களுக்கு உரிமை உள்ளது என்பதை ஏற்றுக்கொள்வார்கள்.அடுத்தவர்களின் தவறுகளை மறக்கவும், அதைவிட அதிகமாக மன்னிக்கவும் கற்றிருப்பார்கள்!

Aug 20, 2025

மத்திய அரசு மாநிலங்களுடன் இணைந்து மூத்த குடிமக்களின் நலனுக்கான சட்டங்கள், சலுகைகள்.

மூத்தகுடிமக்களின் பாதுகாப்பான கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்வதற்காக மத்திய அரசு மாநிலங்களுடன் இணைந்து மூத்த குடிமக்களின் நலனுக்கான சட்டங்கள், கொள்கைகள் மற்றும் திட்டங்களை வகுத்து செயல்ப டுத்தி வருகிறது.மூத்த குடிமக்களுக்கு வரிச்சலுகை, சேமிப்புகளுக்கு கூடுதல் வட்டி போன்ற சலுகைகள் வழங்கப்படுவதோடு அவசரகால மீட்பு, மனநல ஆலோசனை, நலத்திட்டங்கள், முதியோர் இல்லம் பற் றிய விவரங்களை வழங்குவதற்காக 14567 என்ற சிறப்பு உதவி எண் அறிவிக் கப்பட்டு உள்ளது.அதில் தொடர்பு கொண்டால் நமது பெயர், முகவரியை கேட்டு அறிந்து கொண்டு, நமக்கு என்ன குறை? என்று கேட்பார்கள். பிள்ளைகள் சரியாக பராமரிப்பது இல்லையா? மருத்துவரீதியிலான பிரச்சினைகளா? ஓய்வூதியம் பெறுவதில் ஏதாவது தடை உள்ளதா? வங்கி தொடர்பான பிரச்சினைகளா? என்றெல் லாம் விசாரிப்பார்கள்.எனவே முதியோர் அந்த எண்ணில் தொடர்பு கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்தால், அவற்றை நிவர்த்தி செய்ய உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.முதியோருக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ள இந்த சேவையை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.மேலும் மூத்த குடிமக்களுக்கென்று மத்திய அரசு தனி யாக அடையாள அட்டை வழங்குகிறது. உரிய ஆவணங்க ளுடன் விண்ணப்பித்து அந்த அட்டையைபெற்றுக்கொண் டால், மருத்துவ வசதி மற்றும் அரசின் திட்டங்களில் பல் வேறு சலுகைகளை பெறலாம்.மூத்த குடிமக்களுக்கு, ரெயிலில் பயணம் செய்ய வழங்கப்பட்டு இருந்த கட்டண சலுகை ரத்து செய்யப்பட்டது. அவர்களுக்கு பெரும் சுமையாக அமைந்துள்ளது. எனவே அவர்களுக்கு மீண்டும் கட்டண சலுகை வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகிறார்கள்.

Aug 13, 2025

எலும்பு மற்றும் மூட்டினை உறுதி செய்ய....

அதிக எடையிருப்பின் அதைக் குறைக்க வேண்டும். தினமும் ஒரு மணி நேரமாவதுஉடற்பயிற்சி செய்ய வேண்டும். முடிந்த அளவுக்கு 30- 60 நிமிடங்கள் உடல் வெயிலில் படுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அதிகமான டீ, காபி,அருந்துவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும். மதுவை அறவே ஒழிக்க வேண்டும். ஸ்டீராய்டு மாத்திரையை முடிந்த அளவுக்குக் குறைக்க வேண்டும். சரியான காலணியை உபயோகப்படுத்த வேண்டும். வலிநிவாரணியை மருத்துவர் ஆலோசனையின்றி அதிக நாட்கள் உபயோகப்படுத்தக் கூடாது. தேவைப்படும் போது கைத்தடி, வாக்கர் போன்ற உபகரணங்களைத் தயங்காமல் உபயோகிக்க வேண்டும். கால்சியம் அதிகமுள்ளவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வைட்டமின் டி அதிகமுள்ள உணவுகளை உட் கொள்ள வேண்டும். வலிநிவாரணி எடுத்த பிறகும் வலி குறையாமல் இருந்தால் மருத்துவரை உடனே நாட வேண்டும். ஒரு சில யோகப் பயிற்சிகள் மூலமும் எலும்பை வலிமையடையச் செய்யலாம். வைட்டமின் டி உணவில் உள்ள சுண்ணாம்பு சத்தை எலும்பில் சேர உதவுகிறது. தினமும் சூரிய ஒளியில் சிறிது நேரம் இருப்பதன் மூலமும், மீன், முட்டைக் கரு, கல்லீரல்,பால் போன்றவை உட்கொள்வதன் மூலமும் வைட்டமின் டி கிடைக்கிறது.

Aug 06, 2025

முதியோரைப் பாதிக்கும் வைட்டமின் டி குறைபாடு

முதுமையில் மிகவும் அவசியமானது வைட்டமின் டி ஆகும். இது எலும்பை உறுதிசெய்ய மிகவும் உதவும். நமது உடல் சூரிய ஒளியில் படும்பொழுது தோலுக்கு அடியில் உள்ள ஒரு வகைக் கொழுப்பிலிருந்துவைட்டமின் டி உற்பத்தியாகிறது.சிறுகுடலிலிருந்து கால்சியம் தாதுப்பொருளை உறிஞ்சி ரத்தத்திற்கு அனுப்பி வைப்பதற்கு வைட்டமின் டி தேவைப்படுகிறது. இதனால் எலும்பு வலிமை பெறுகிறது.வைட்டமின் டி குறையக் காரணங்கள்சூரிய ஒளி அதிகம் படாமல் இருப்பது.வீட்டிலேயே முடங்கிக் கிடப்பது.முதியோர் இல்லங்களில் தொடர்ந்து வசிப்பது.நோய் காரணமாக நீண்ட நாட்களாகப் படுக்கையிலேயே படுத்திருப்பது.சத்துள்ள உணவுகளைக் குறைவாக உண்பது.செரிமானக் குறைபாடு கல்லீரல் மற்றும் சிறுநீரக நோய்ப் பாதிப்பு தொடர்ந்து வலிப்பு நோய்க்கு மாத்திரை எடுத்துக்கொள்வது.தொல்லைகள்சதைப் பிடிப்பு, உடல் வலி,உடல் பலவீனம்,அடிக்கடி கீழே விழுதல்,மூட்டு வலி,எலும்பு முறிவு,இதய நோய், மறதி நோய் மற்றும் புற்றுநோய் போன்றவை வர வாய்ப்பு அதிகம் உண்டு.கண்டறிதல்ரத்தப் பரிசோதனை மூலம் வைட்டமின் டி எந்த அளவு உள்ளது என்று தெரிந்துகொண்டு அதற்கு தக்கபடி சிகிச்சை பெறலாம். வைட்டமின் டி சரியான அளவு 30 ng/mL -க்கு மேல் இருக்க வேண்டும்.மருத்துவரின் ஆலோசனைப்படி வைட்டமின் டி 2000 யூனிட் மாத்திரையைத் தினமும் அல்லது 60,000 யூனிட் மாத்திரையை வாரம் ஒருமுறை 2-3 மாதங்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.வைட்டமின் டி குறைபாட்டைத் தவிர்க்க..தினமும் குறைந்தது 30 - 60 நிமிடமாவது வெயில் படுமாறு நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.. தினமும் ஒரு கப் பால் அவசியம்சைவ உணவுகளில் பால், தயிர், வெண்ணெய் மற்றும் பால் பொருட்களைச் சற்று அதிகம் எடுத்துக்கொள்ளவும். தானிய வகைகளை (ராகி,கம்பு,சோளம், வரகு,தினை ) உணவில் சற்று அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். மீன், மீன் எண்ணெய் (காட்லிவர் எண்ணெய்), முட்டையின் மஞ்சள் கரு, ஈரல், காளான் முதலியவற்றை முடிந்தளவிற்குச் சேர்த்துக்கொள்ளவும்.கால்சியம் அதிகமுள்ள உணவு தினமும் அவசியம் தேவை. மருத்துவரின் ஆலோசனைப்படி கால்சியம் மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம்.தினமும் சூரிய ஒளியில் நடப்போம். உடல் எலும்பை உறுதி பெறச் செய்வோம்.

Jul 30, 2025

நிலை தடுமாறிக் கீழே விழும் முதியோர்.

வயது ஆக ஆக உடலைச் சரிசமமான முறையில் வைத்துக்கொள்ள இயங்கும் உறுப்புகளின் திறன் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துகொண்டே வரும், உடலைச் சரியான நிலையில் வைத்துக்கொள்வதற்கு உள்காது. சிறுமூளை, கண், தசைகள் மற்றும் மூட்டுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இந்த இணைப்பில் ஏதேனும் குறைபாடு நிகழ்ந்தால் நிலை தடுமாறிக் கீழே விழும் வாய்ப்புண்டு. இந்த மாற்றம் முதுமையில் அதிகம் ஏற்படுவதால் முதியோர்கள் அடிக்கடி கீழே விழுகிறார்கள்.முதியோர் பராமரிப்பாளரின் பணிதங்கும் அறையின் தரை, குளியல் அறை மற்றும் கழிவறை வழுக்கும் இடமாக இருக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.முதியோர்நடமாடும் இடத்தில் தண்ணீர் கீழே சிந்தாமல், ஈரம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.உதவியாளர் ஒருவரை எப்பொழுதும் உடன் இருக்கச் சொல்ல வேண்டும்.மிதியடிகள் காலுக்குப் பொருந்துவது போல அணிய வேண்டும். குதிகால் உயரம் அதிகமுள்ள மிதியடிகளை அணிய வேண்டாமென்றும் அறிவுரை கூற வேண்டும். கட்டிலின் உயரம், முதியோர் உட்கார்ந்து எழுந்திருக்க வசதியாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.இருபுறமும் தடுப்புக் கம்பிகள் போட்ட கட்டிலை உபயோகிக்கச் சொல்ல வேண்டும்.பார்வை நன்றாகத் தெரிய தகுந்த கண்ணாடிகளை அணியச்சொல்ல வேண்டும்.அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களைக் கைக்கு எட்டும் தூரத்திலேயே வைக்கவேண்டும்.விழும் காரணத்தை அறிந்து அதற்குரிய மருத்துவச் சிகிச்சை பெறச் சொல்ல வேண்டும்.நடக்கும்போது கைத்தடி, வாக்கர் உதவியுடன் நடக்க பயிற்சி அளிக்க வேண்டும்.முதியோர் நடமாடும் இடங்களில் போதுமான வெளிச்சம் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.படிக்கட்டுகளின் கைப்பிடிகள் உறுதியானதாகவும், படிகள் ஒரே அளவு உயரமாகவும், அகலமானதாகவும், வழுக்காமலும் இருக்க வேண்டியது அவசியம்.முதியோர்கள் சாப்பிடும் மருந்துகளைப் பற்றியும் மருத்துவரிடம் கலந்தாலோசிக்க வேண்டும். மருந்துகளின் பக்க விளைவுகளால்கூடக் கீழே விழ வாய்ப்புண்டு.படுக்கையிலிருந்து வேகமாக எழுந்து, உடனே நடக்கக்கூடாது. தொடர்ந்து படுக்கையில் படுத்திருப்பவர். எழும்போது முதலில் மெதுவாக எழுந்து உட்கார வேண்டும். பிறகு, சற்றுநேரம் கழித்து மெதுவாக எழுந்து நிற்க வேண்டும். அதன் பின்னரே நடக்க வேண்டும்.

1 2 3 4 5 6 7 8

AD's



More News