முதுமையில் பலர் நல்ல தூக்கமின்றிச் சிரமப்படுவது ஏன்?
பல முதியோர்கள் பகலில் நீண்டநேரம் தூங்கி விடுகிறார்கள். அதனால் இரவில் தூக்கம் வருவதில்லை
மனம் சார்ந்த கவலைகளினாலும் தூக்கம் குறையும். (உ.ம்) உறவினர்களின் இழப்பு, கடன் தொல்லை, நிதி வசதிக் குறைவு, கட்டாய ஓய்வு, தனிமை
மன நோய்கள் (உ.ம்) மன அழுத்தம் (Depression), அறிவுத்திறன் வீழ்ச்சி (Dementia) மற்றும் மனப்பதற்றம் (Anxiety)
முதியோர்கள் உண்ணும் பல மருந்துகளினாலும் தூக்கம் தடைபடலாம். (உ.ம்) மனநோய்க்குத் தரும் மருந்து, நீர் மாத்திரை
அடிக்கடி காபி குடிப்பது அல்லது இரவில் மது அருந்துவது தூக்கத்தைக் கெடுக்கும்.
பலநோய்களினாலும் தூக்கக் கோளாறுகள் ஏற்படலாம். (உ.ம்) உடல் வலி, மூட்டு வலி, மூச்சுத்திணறல், வயிற்றில் புண், இதய பலவீனம், புராஸ்டேட் சுரப்பி வீக்கம்
நல்ல தூக்கம் வர ஆலோசனைகள்
தினமும் குறிப்பிட்ட நேரத்தில் இரவில் படுக்கைக்குச் செல்ல வேண்டும்
அதேபோல், காலையில் குறிப்பிட்ட நேரத்தில் எழும் பழக்கமும் மிகவும் அவசியம்
படுக்கை அறை அமைதியான சூழ்நிலையில் சற்று மங்கிய வெளிச்சத்தில் இருக்க வேண்டும்.
தூக்கத்தைக் கெடுக்கும் மாத்திரை மற்றும் பானங்களை இரவில் தவிர்க்க வேண்டும். (உம்) நீர் மாத்திரை, காபி, டீ, மது, புகைப்பிடித்தல்
மாலையில் செய்யும் உடற்பயிற்சி இரவில் நல்ல உறக்கத்தை ஏற்படுத்தும்
பகலில் தூக்கம் 30 - 40 நிமிடங்கள் போதுமானதே
படுக்கும் இடத்தைத் தூக்கத்துக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். இரவில் படுத்துக்கொண்டே படிப்பது அல்லது தொலைக்காட்சி பார்ப்பது போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது
படுத்தவுடன் 30 -45 நிமிடங்களில் தூக்கம் வரவில்லையென்றால், படுக்கையைவிட்டு எழுந்து சற்று நடந்துவிட்டு வரலாம் அல்லது அடுத்த அறைக்குச் சென்று படிப்பது, வானொலி கேட்பது போன்ற காரியங்களில் ஈடுபடுவது நல்லது. தூக்கம் வர ஆரம்பித்த உடனேயே படுக்கைக்குச் சென்றுவிட வேண்டும்
படுப்பதற்கு முன்பு சிறிதளவு வெதுவெதுப்பான பால் அருந்துவது தூக்கத்துக்கு நல்லது
மன உளைச்சல்களும், கவலைகளும் தூக்கத்தின் முக்கிய எதிரிகள். அதைத் தவிர்ப்பது மிக அவசியம். இதற்குத் தியானம் மிகச் சிறந்த மருந்தாகும்.
தூக்க மாத்திரை எச்சரிக்கை
நல்ல தூக்கத்துக்குத் தூக்க மாத்திரை ஒரு நிரந்தரத் தீர்வு அல்ல. தூக்க மாத்திரையைத் தினமும் சாப்பிடுவது உடலுக்குக் கெடுதல் விளைவிக்கும்.
மாத்திரையின் வீரியம் குறையக் குறைய, அதன் அளவை அதிகரிக்க வேண்டியிருக்கும். மாத்திரையைத் திடீரென்று நிறுத்தினால் தூக்கம் பாதிக்கப்படும். தூக்க மாத்திரையினால் ஞாபகசக்தி குறையும், உடல் தடுமாறும்,கீழே விழ வாய்ப்புகள் அதிகமாகும். பகலில் மயக்க நிலையை ஏற்படுத்தும். ஆகையால், முடிந்த அளவுக்குத் தூக்க மாத்திரையைத் தவிர்ப்பது நல்லது. ஆகையால் மருத்துவரின் ஆலோசனை பெற்றுத் தூக்க மாத்திரையை உட்கொள்வதே பாதுகாப்பானது.
0
Leave a Reply