25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Jul 16, 2026

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் (2026-27)-ம் ஆண்டிற்கான காரீப் பருவப் பயிர்கள் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களை விவசாயிகள் உடனடியாக காப்பீடு செய்ய வேண்டும்.

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் (PMFBY) 2016-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் இந்த ஆண்டு (2026-2027) முதல் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஜெனரல் இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி லிட். மூலம் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.வேளாண் பயிர்களுக்கு பயிர் காப்பீடு கட்டணமாக ஏக்கருக்கு மக்காச்சோளம் பயிருக்கு ரூ. 466/-, சோளம் பயிருக்கு  ரூ. 192/-, பாசிப்பயறு, உளுந்து பயிர்களுக்கு ரூ.370/-, பருத்தி பயிருக்கு ரூ.409/-, நிலக்கடலை பயிருக்கு ரூ.431/- மற்றும் தோட்டக்கலை பயிர்களான  வெங்காயம் பயிருக்கு ரூ.1591/- மற்றும் வாழை பயிருக்கு ரூ.3997/- என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.எனவே, 2026-27 ம் ஆண்டின் நடப்பு காரீப் பருவத்தில் பயிர் காப்பீடு பதிவு செய்ய நிலக்கடலை பயிருக்கு (31.08.2026), உளுந்து, பாசிப்பயறு, சோளம் மற்றும் பருத்தி வகைகளுக்கு (16.09.2026)  மற்றும் மக்காச்சோளம் பயிருக்கு (30.09.2026) வரையிலும்,   தோட்டக்கலை பயிர்களான வெங்காயம் பயிருக்கு (31.08.2026)  மற்றும் வாழை பயிர்களுக்கு (15.09.2026)  காப்பீடு செய்ய கடைசி நாளாகும்.ஆகையால், விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல்/விதைப்பு அறிக்கை, வங்கிக் கணக்கு புத்தகத்தின் (Bank pass book) முதல் பக்க நகல், ஆதார் அட்டை (Aadhar Card) நகல் ஆகியவற்றை இணைத்து, கட்டணத் தொகையை செலுத்திய பின் அதற்கான இரசீதையும் பொதுச் சேவை மையங்கள்/ தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளில் பெற்றுக் கொள்ளலாம்.இதன் மூலம், விவசாயிகள் எதிர்பாராமல் ஏற்படும் இயற்கை பேரிடர்களையும், பூச்சி நோய் தாக்குதலால் ஏற்படும் இழப்புகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொண்டு தங்களது பயிர்களுக்கான காப்பீடை (crop Insurance) அருகிலுள்ள பொதுச்சேவை மையங்களிலோ (CSC) தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலோ (PACCS) அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலோ உரிய காப்பீடு கட்டணம் (Premium) செலுத்தி தங்களது பயிர்களை காப்பீடு செய்து பயனடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர்  மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jul 15, 2026

தேசிய தகுதி தேர்வில் வெற்றி பெற்ற 3 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சால்வை அனுவித்து பாராட்டினார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்(14.07.2026) தேசிய தகுதி தேர்வில் வெற்றி பெற்ற 3 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் சால்வை அனுவித்து பாராட்டினார்.

Jul 15, 2026

இணைய வழி திருத்தம் செய்ய நடைபெற்ற சிறப்பு முகாம்களின் மூலம் 44 பட்டாக்கள் மற்றும் 22 நபர்களுக்கு பிறப்பு/இறப்பு சான்றிதழ்  நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

வருவாய்த்துறையின் மூலம் பராமரிக்கப்பட்டு வரும் நில உடைமை பதிவு ஆவணமான கிராமக்கணக்குகளுக்கும், தமிழ்நிலம் இணையதளத்திற்கும் உள்ள வேறுபாடுகளை களைந்து பட்டா வழங்கக் கோரி பொதுமக்களிடமிருந்து அதிக அளவில் கோரிக்கை மனுக்கள் வரப்பெறுவதால், சிறப்பு முகாம்கள் நடத்தி விரைந்து தீர்வு காணுமாறு வருவாய்க் கோட்டாட்சியர்கள் / வட்டாட்சியர்களுக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவுறுத்தியதன்பேரில், (13.07.2026) சாத்தூர் வருவாய்க் கோட்ட அளவிலான சிறப்பு முகாம், சாத்தூர் வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இதில், விருதுநகர் வட்டத்தில் 28 நபர்களுக்கும், சாத்தூர் வட்டத்தில் 11 நபர்களுக்கும், வெம்பக்கோட்டை வட்டத்தில் 8 நபர்களுக்கும், மொத்தம் 44 பயனாளிகளுக்கு தமிழ்நிலம் இணையவழி திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உத்தரவு ஆணை மாவட்ட ஆட்சியர் அவர்களால், பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.மேலும், 22 நபர்களுக்கு பிறப்பு /இறப்பு தாமத பதிவு ஆணைகள் வழங்கப்பட்டது.மேலும், இது போன்று ஒவ்வொரு கோட்டத்திலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு தமிழ்நிலம் இணையவழி திருத்தங்கள்/விடுதல்கள் தொடர்பான கோரிக்கைகளை புதிய வடிவிலான படிவத்தில் தயார் செய்து உத்தரவுகள் பிறப்பிக்குமாறும், முன்பாக உரிய கள விசாரணை செய்து அறிக்கை செய்யப்பட வேண்டுமென சார்நிலை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்களால் அறிவுரைகள் வழங்கப்பட்டது.தமிழ்நிலம் இணையவழி திருத்தங்கள் தொடர்பான கோரிக்கைகளுக்கு விருதுநகர் மாவட்டத்தில் விரைந்து தீர்வு காண முன்னெடுப்பு செய்யப்பட்டுள்ளதால், பொது மக்கள் இந்த சிறப்பு முகாம்களில் விண்ணப்பம் செய்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர்அவர்கள் தெரிவித்தார்.

Jul 15, 2026

வெம்பக்கோட்டை பகுதிகளில் அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்ட பணிகள் மற்றும் சேவைகளின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு .

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்ட பணிகள் மற்றும் சேவைகளின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் (14.07.2026) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.தாயில்பட்டி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம்,  மடத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, செவல்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம், அங்கன்வாடி மையம், ஊராட்சி மன்ற அலுவலகம், செவல்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க நியாய விலைக்கடை, கனிமவள நிதியின் கீழ் ரூ.38.44 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சமுதாயக் கூடம், லட்சுமியாபுரம் ஊராட்சியில் பெருமளவு மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வரும் பணிகள், ராமுதேவன்பட்டியில் நபார்டு  நிதியின் கீழ் ரூ.92.84 இலட்சம் மதிப்பில் சாலை மற்றும் பாலம் அமைக்கும் பணிகள் உள்ளிட்டவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார்.வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில்  முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுகள் சுகாதாரமானதாகவும், சுவையாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தரமான சிகிச்சைகள் வழங்கியும், இரத்தசோகை உள்ள பெண்களை கண்டறிந்து அவர்களுக்கான ஊட்டச்சத்து மற்றும் மருந்துகள் வழங்குவதோடு அது குறித்த விழிப்புணர்வை  ஏற்படுத்த வேண்டும் எனவும், அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து உணவுகள் வழங்குவதோடு வயதுக்கேற்ற உயரம், எடை குறித்த பதிவேடுகளை முறையாக கையாள வேண்டும் எனவும்,அனைத்து பகுதிகளுக்கும் குடிநீரை தட்டுப்பாடின்றி வழங்கிட வேண்டும் எனவும், அரசு அலுவலகங்களில் நிலுவையில் உள்ள மனுக்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களை விரைந்து பரிசீலனை செய்து தீர்வு வழங்க வேண்டும் எனவும்,இ-சேவை மையங்கள் மூலம் பெறப்படும் விண்ணப்பங்களை உரிய காலக் கெடுவுக்குள் பரிசீலித்து, சான்றிதழ்கள் தாமதமின்றி வழங்கிட வேண்டும் எனவும், கணினி பட்டா திருத்தம் தொடர்பான கோரிக்கை மனுக்களை விரைந்து பரிசீலனை செய்ய வேண்டும் எனவும், மேலும், இப்பகுதிகளில் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகள் மற்றும் சேவைகள் பொதுமக்களுக்கு முறையாக சென்றடைவதை தொடர்புடைய அரசு அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் துறை அலுவலர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இவ்வாய்வின் போது சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.கனகராஜ், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி செயற்பொறியாளர் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.

Jul 15, 2026

சிறிய  அளவிலான  தனியார்துறை  வேலைவாய்ப்பு  முகாம் நடைபெறுகிறது  என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்  தகவல்.

விருதுநகர்,  மாவட்ட   வேலைவாய்ப்பு  மற்றும்  தொழில்நெறி  வழிகாட்டும்  மையத்தின்  ஒவ்வொரு  மாதமும்   சிறிய  அளவிலான  தனியார்துறை  வேலைவாய்ப்பு  முகாம் நடத்தப்பட்டுவருகிறது.அதன்படி , படித்த   வேலை  தேடும்  இளைஞர்களுக்காக  வரும் 17.07.2026 அன்று   வெள்ளிக்கிழமை   காலை 10.00 மணி முதல் 03.00 மணி வரை தனியார்துறை   வேலைவாய்ப்பு  முகாம்,  விருதுநகர்   சூலக்கரையில்  உள்ள, மாவட்ட வேலைவாய்ப்பு   மற்றும்   தொழில்நெறி   வழிகாட்டும்  மையத்தில்   நடைபெறவுள்ளது.                  இத்தனியார்   வேலைவாய்ப்பு  முகாமில்    20 -க்கும் மேற்பட்ட  பிரபல   முன்னணி  நிறுவனங்கள்  கலந்து கொண்டு 8ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு;  I.T.I. . டிப்ளமோ   மற்றும்  பொறியியல்  படிப்பு  ஆகிய  கல்வித்  தகுதி உடைய   பணியாளர்களை   தெரிவு  செய்யவுள்ளார்கள்.  இந்த  அரிய வாய்ப்பினை பயன்படுத்த   விரும்பும் வேலைநாடுநர்கள் 17.07.2026  அன்று  வேலைவாய்ப்பு  முகாமில் கலந்து  கொள்வதற்கு  முன்பாக www.tnprivatejobs.tn.gov.in   என்ற இணையதளத்தில்   தங்களது சுய  விவரங்களை  பதிவு  செய்துவிட்டு  சுய விவரச் சான்றிதழ்  (RESUME)> அனைத்து   கல்விச்சான்றிதழ்,   ஆதார் அட்டை நகல்  ஆகியவற்றுடன்  கலந்து  கொள்ளுமாறு   கேட்டுக்கொள்ளப்படுகிறது.  மேலும்  இச்சேவையானது   முற்றிலும்   கட்டணமில்லா சேவையாகும்.              இம்முகாமில்  கலந்து    கொள்ள  விரும்பும்  தனியார்  துறை  நிறுவனங்கள் விருதுநகர்  மாவட்ட  வேலைவாய்ப்பு  அலுவலகத்திற்கு  நேரில்  வருகை  புரிந்து மாவட்ட வேலைவாய்ப்பு   அலுவலர்  அவர்களை  நேரிலோ  அல்லது vnrjobfair@gmail.comஎன்ற மின்னஞ்சல்  வாயிலாக  தொடர்பு  கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். தனியார்துறை  வேலைவாய்ப்பு  முகாம்  மூலம்  பணிநியமனம்  பெறுபவர்களது வேலைவாய்ப்பு   அலுவலக  பதிவு  மூப்பு  எவ்விதத்திலும்  பாதிக்கப்படாது  என  மாவட்ட ஆட்சித்தலைவர்  மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S.. அவர்கள்  தெரிவித்துள்ளார்.

Jul 15, 2026

பெருந்தலைவர் காமராஜர் நூற்றாண்டு நினைவு மணிமண்டபத்தில் அன்னாரது 124-வது பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பெருந்தலைவர் காமராஜர்  124-வது பிறந்த நாளையொட்டி, விருதுநகர் - மதுரை சாலையில் அமைந்துள்ள  பெருந்தலைவர் காமராஜர் நூற்றாண்டு நினைவு மணிமண்டபத்தில் அமைந்துள்ள அன்னாரது  திருவுருவச் சிலைக்குமாண்புமிகு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை  அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில், தமிழ்நாடு அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.தமிழ்நாடு அரசு செய்தித்துறையின் சார்பில், தமிழ்ச் சான்றோர்கள், விடுதலைப் போராட்ட தியாகிகள் மற்றும் தலைவர்கள் ஆகியோரை பெருமைப்படுத்துகின்ற வகையில், அன்னார்களது பிறந்தநாளன்று அரசின் சார்பில் ஆண்டுதோறும்  மாலை அணிவித்து, மரியாதை  செலுத்தி, விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த தினமான ஜுலை 15-ஆம் நாள், ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.அதன்படி, பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில், பெருந்தலைவர் காமராஜர் நூற்றாண்டு நினைவு மணிமண்டபத்தில் அமைந்துள்ள அன்னாரது  திருவுருவச் சிலைக்கு இன்று(15.07.2026)  மாண்புமிகு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை  அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கௌதம் கோயல்,இ.கா.ப., அவர்கள் மற்றும் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.பி.செல்வம் அவர்கள் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த அன்னாரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.முன்னதாக, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் சிலைக்கும், நினைவு இல்லத்தில் உள்ள அன்னாரது சிலைக்கும்   மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா.,I A S., அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இந்நிகழ்ச்சியில்,  செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.அ.கொ.நாகராஜபூபதி, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் திருமதி சுஜிதா, தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரிய உதவி இயக்குனர்  திரு.பால மாணிக்கம், சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.கனகராஜ், விருதுநகர் வட்டாட்சியர், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Jul 15, 2026

விற்பனை மையங்கள் அமைத்து மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம் தேங்காய்களை வியாபாரிகளுக்கு விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் தென்னையிலிருந்து பெறப்படும் தேங்காய் மற்றும் கொப்பரை ஆகியவை வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டு வரும் நிலையில் விற்பனை மையங்கள் அமைத்து மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம் தேங்காய்களை வியாபாரிகளுக்கு விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் குறிப்பாக இராஜபாளையம், திருவில்லிபுத்தூர் மற்றும் வத்திராயிருப்பு பகுதிகளில் அதிக அளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது, தென்னையிலிருந்து பெறப்படும் தேங்காய் மற்றும் கொப்பரை ஆகியவை வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டு வரும் நிலையில் தென்னை விவசாயிகளிடமிருந்து மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம் நேரடியாக வியாபாரிகளுக்கு தேங்காய்களை கட்டுபடியாகும் அதிக விலைக்கு விற்பனை செய்யும் வகையில் சேத்தூர் பகுதியில் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளிலும், மம்சாபுரம் பகுதியில் புதன் கிழமையும் மற்றும் வத்திராயிருப்பு பகுதியில் திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளிலும் விற்பனை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, தேங்காய்கள் விற்பனை செய்யப்படவுள்ளது.தேங்காய்களை விற்பனை செய்ய விருப்பமுள்ள விவசாயிகள் தங்களின் ஆதார் அட்டை நகல் வங்கி கணக்கு எண் மற்றும் கைபேசி எண் ஆகியவற்றை விற்பனை மையத்திற்கு எடுத்து வந்தால் போதுமானது. அடங்கல் தேவையில்லை என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jul 14, 2026

தமிழக அரசின் சாதனைகள் விளக்க புகைப்பட கண்காட்சி.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஊராட்சி ஒன்றியம் புதுப்பட்டி கிராமத்தில் (13.07.2026) செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பாக வைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனைகள் விளக்க புகைப்பட கண்காட்சிகளை பொதுமக்கள் பார்வையிட்டனர்.

Jul 14, 2026

தூய்மைப் பணியாளர்கள் மறுவாழ்வு குறித்த மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் .

விருதுநகர்  மாவட்டத்தில்   தூய்மைப் பணியாளர்கள்    மறுவாழ்வு     குறித்த மாவட்ட  அளவிலான  விழிப்புணர்வு   மற்றும்   கண்காணிப்பு   குழுவானது  23.06.2023 அன்று  ஏற்படுத்தப்பட்டுள்ளது.   குழுவானது   மூன்று   வருடத்திற்குள்      கலைக்கப்பட வேண்டும்.  எனவே   நடைமுறையில்   உள்ள  தூய்மை    பணியாளர்கள்    மறுவாழ்வு  குறித்த  மாவட்ட அளவிலான  விழிப்புணர்வு  மற்றும் கண்காணிப்பு  குழுவானது தற்போது கலைக்கப்படுகிறது.   புதிய  குழு  அமைத்து   அக்குழுவிற்கு   மாவட்ட ஆட்சித்தலைவர்   அவர்கள்  தலைவராகவும்,   மாவட்ட   ஆதி திராவிடர்  மற்றும்   பழங்குடியினர்  நல  அலுவலர்  செயல் உறுப்பினராகவும்  செயல்படுவார்கள்.  இக்குழுவில்   நிரந்தர  உறுப்பினராக,  காவல் கண்காணிப்பாளர் , உதவி இயக்குநர்  பேரூராட்சிகள்,  அனைத்து   மாநகராட்சி   ஆணையர்   மற்றும்   நகராட்சி ஆணையர்கள்    மாவட்டத்தில்   இரயில்வே   துறையினைச்   சேர்ந்த  ஒரு  பொறுப்பாளர்  கெஜட்  அதிகாரி   மாவட்ட அளவிலான வங்கி குழுவின் ஒரு பொறுப்பாளர்  ஆகியோர்கள்  நிரந்தர உறுப்பினராக செயல்படுவார்கள்.மாநில    சட்டமன்ற  உறுப்பினராக  தேர்ந்தெடுக்கப்பட்டவர்  பட்டியலினத்தைச்  சேர்ந்தவராக  இருத்தல்  வேண்டும்  .அல்லது   மாநில  அரசால்  பரிந்துரை    செய்யப்படும்  விருதுநகர்   மாவட்டத்தினைச்  சேர்ந்த  இரண்டுக்கும் மிகாத நபர்கள்  உறுப்பினராக  இருத்தல் வேண்டும்.  மனித  கழிவுகளை  அகற்றும்  தொழில்  செய்வதை   தடுத்தல்    மற்றும்   மறு  வாழ்விற்காக  பணி  மேற்கொள்ள  எண்ணிக்கையில்  4  பேருக்கு   மேற்படாத  சமூக ஆர்வலர்கள்  (மாவட்ட ஆட்சியரால் முடிவு செய்யப்பட்டவர்கள்) அதிகாரப் பூர்வமற்ற உறுப்பினராக  4 சமுக ஆர்வலர்கள் விண்ணப்பிக்கலாம்.தகுதி வாய்ந்த நபர்கள் விருதுநகர் மாவட்ட தூய்மைப் பணியாளர்கள் மறுவாழ்வு குறித்த மாவட்ட அளவிலான  விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினராக வருகின்ற 30.07.2026 –க்குள் விண்ணப்பிக்குமாறு, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S.. அவர்கள்  தெரிவித்துள்ளார்.

Jul 14, 2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (13.07.2026) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.14.25 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் வழங்கினார்.இக்கூட்டத்தில், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிந்தோர் நல உதவித்திட்டங்கள், விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை மற்றும் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்தான மனுக்கள் பெறப்பட்டன.மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்கு நேரடியாகச் சென்று, அவர்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்று பரிசீலித்தார். பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட இம்மனுக்கள் அனைத்தையும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து, அவற்றின் மீது உரிய மற்றும் விரைவான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.இக்கூட்டத்தில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில், திறன் வார விழாவை முன்னிட்டு நடைபெற்ற பேச்சு மற்றும் கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும்,மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு திட்டமான உயிர் திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு தேநீர் கடை வைப்பதற்காக ரூ.1,00,654/- மதிப்பில் உதவித்தொகையையும், கோவிட் தொற்றால் தாய் தந்தையை இழந்த 4 நபர்களுக்கு போட்டித்தேர்வுக்கான பாடக் குறிப்பேடுகளையும்,ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தீண்டாமையை கடைப்பிடிக்காத மற்றும் நல்லிணக்கத்தோடு வாழும் கிராமமாக தேர்வு செய்யப்பட்ட சாத்தூர் வட்டம், நள்ளி ஊராட்சிக்கு கிராம வளர்ச்சிக்காக ரூ.10 இலட்சம் பரிசுத்தொகைக்கான காசோலையினையும், பணியின்பொழுது மரணமடைந்த பணியாளரின் வாரிசுதாரருக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையினையும்,மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1,08,000/- வீதம் மொத்தம் ரூ.3.24 இலட்சம் மதிப்பிலான மின்கல மூன்று சக்கர நாற்காலிகளையும் என ஆக மொத்தம் ரூ.14.25 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.தொடர்ந்து, பொதுமக்களிடமிருந்து 694 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்க ஒப்படைக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் பொதுமக்கள் எவ்வித சிரமமுமின்றி சேவைகளைப் பெறுவதை உறுதி செய்யுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) திருமதி கு.மோகனா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திருமதி பிர்தௌஸ் பாத்திமா, அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 141 142

AD's



More News