பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த மாணவர்களின் பல்வேறு அறிவியல் படைப்புகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்
விருதுநகர் கே.வி.எஸ் ஆங்கில பள்ளியில் (15.11.2024) மாவட்ட நிர்வாகம் மற்றும் தனியார் பள்ளிகள் சார்பில் பள்ளி மாணவர்களுக்காக நடைபெற்ற அறிவியல் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் பார்வையிட்டு, கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த மாணவர்களின் பல்வேறு அறிவியல் படைப்புகள் குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தார்.
விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு, அறிவியலைப் பற்றிய அவர்களின் புரிதலை வெளிப்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பை வழங்கும் வகையிலும், தனித்துவமான கருத்துக்கள், யோசனைகள் மற்றும் கோட்பாடுகளைக் கொண்டு வரவும் அவர்களின் பாடப்புத்தகங்களுக்கு அப்பால் ஆராய்ச்சி மனப்பான்மையை ஏற்படுத்துவதற்கும், ஊக்கப்படுத்தும் வகையிலும், பரிசோதனை மற்றும் கற்றலில் முழுமையான அனுபவத்தை அவர்கள் பெற உதவிடும் வகையிலும், அறிவியல் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு, இராஜபாளையம், சிவகாசி, விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை ஆகிய ஊராட்சி ஒன்றியத்தில் 4 இடங்களில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் அந்தந்த பகுதிகளில் உள்ள பல்வேறு அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தினர்.
அதன்படி, இராஜபாளையம் சின்மய வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட 72 படைப்புகளை சுமார் 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களும், சிவகாசி லயன்ஸ் மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில், காட்சிப்படுத்தப்பட்ட 51 படைப்புகளை சுமார் 1200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களும்,அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் நோபல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட 91 படைப்புகளை சுமார் 1600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களும், விருதுநகர் கே.வி.எஸ்.ஆங்கிலப்பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட 58 படைப்புகளை சுமார் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களும் பார்வையிட்டனர்.
வளங்கள் மேலாண்மை, செயற்கை நுண்ணறிவு எதிர்காலம், ரோபோட்டிக்ஸ், திறன்மிகு வீட்டு உபயோகப் பொருள்கள், விண்வெளி அறிவியல், உடல்நலம் மற்றும் ஆரோக்கியம், குப்பைக்கு குட்பை, நீடித்த நிலையான பயிர் வளர்ச்சி, மாசுக்கட்டுப்பாடு, பேரிடர் மேலாண்மை, அன்றாட வாழ்வில் வடிவியல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் நடத்தப்பட்ட கண்காட்சியில் மாணவர்கள் தங்களது படைப்புகளை காட்சிப் படுத்தினர்.விருதுநகர் கே.வி.எஸ் ஆங்கில பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு, கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த மாணவர்களின் பல்வேறு அறிவியல் படைப்புகள் குறித்து கேட்டறிந்தார்.இந்த கண்காட்சியினை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் பார்வையிட்டு பயனடைந்தனர்.
இந்த அறிவியில் கண்காட்சியில் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்திய மாணவர்கள் தெரிவிக்கையில், மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்த இந்த அறிவியில் கண்காட்சி எங்களது படைப்பாற்றலையும், சிந்தனையும் வெளிபடுத்துவதற்கு மிகப்பெரிய ஒரு வாய்ப்பாக இருந்தது எனவும்;,இந்த கண்காட்சியினை பார்வையிடும் போது பல்வேறு புதிய தகவல் மற்றும் சிந்தனைகள் மேம்படுவதோடு, எங்களுக்கு ஊக்கத்தை அளிப்பதாகவும், இது போன்ற வாய்ப்புகளை ஏற்படுத்தி தந்த மாவட்ட நிர்வாகத்திற்கு, இந்த கண்காட்சியில் படைப்புகளை காட்சிப்படுத்திய மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் நன்றிகளை தெரிவித்தனர்.
0
Leave a Reply