விருதுநகர் மாவட்ட வேளாண்மை விரிவாக்க மையங்களில் மின்னணு பரிவர்த்தனை மூலம் இடுபொருட்கள் பெற வசதி செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் பருவ காலம் தொடங்கியுள்ளதால் வட்டாரங்களில் ஆங்காங்கே மழை பொழிந்து வருகிறது.சம்பா பருவத்திற்கு தேவையான விதைகள், நுண்ணூட்ட கலவைகள், உயிர் உரங்கள், ஜிங்க் சல்பேட், ஜிப்சம் உள்ளிட்ட இடுபொருட்கள் அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது.விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் விவசாயிகள் தங்களுக்கு தேவையான வேளாண் இடுபொருட்களை ஏ.டி.எம் கார்டு, கூகுள் பே, போன்பே உள்ளிட்ட மின்னணு வசதிகள் கொண்ட பணமில்லா மின்னணு பரிவர்த்தனை மூலம் அரசு கணக்கில் செலுத்தி பெறுவதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களுக்கும் பணமில்லா மின்னணு பரிவர்த்தனை செய்யும் கருவி வழங்கப்பட்டுள்ளது. எனவே வேளாண்மை விரிவாக்க மையம் மூலம் இடுபொருட்களை வாங்க வரும் விவசாயிகள் இடுபொருட்களுக்கான முழுத்தொகை அல்லது பங்களிப்புத்தொகையை ஏ.டி.எம் கார்டு, கூகுள் பே, போன்பே மூலமாக செலுத்தி வேளாண் இடுபொருட்களை பெற்று பயனடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
மக்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக விளங்கும் உலகப்பொதுமறையாம் திருக்குறளின் சீரிய கருத்துகளை இளம் தலைமுறையினரின் மனதில் பதியச் செய்து அவர்களை நல்வழிப்படுத்தும் நோக்கில் 1330 குறட்பாக்களையும் மனனம் செய்து முழுமையாக ஒப்பிக்கும் திறன் கொண்ட பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித்துறையால் குறள் பரிசாக ரூ.15000/- (ரூபாய் பதினைந்தாயிரம் மட்டும்) வழங்கப்பட்டு வருகிறது.அவ்வகையில் 2024-25ஆம் ஆண்டிற்கான குறள்பரிசு வழங்கும் பொருட்டு தகுதியான மாணவ, மாணவியரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 1330 குறட்பாக்களையும் ஒப்பிக்கும் மாணவர்களுக்குப் பரிசுத்தொகையாக ரூ.15000/- (ரூபாய் பதினைந்தாயிரம் மட்டும்) வழங்கப்பெறும்.விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ/www.tamilvalarchithurai.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தோ பெற்றுக் கொள்ளலாம்.விண்ணப்பங்களை 25.10.2024 க்குள் “தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், விருதுநகர் மாவட்டம்” என்ற முகவரிக்கு நேரிலோ /அஞ்சல் மூலமாகவோ/ tamilvalar.vnr@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்புமாறு என மாவட்ட ஆட்;சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திட்டமில்லா பகுதியில் அமையும் 01.01.2011-க்கு முன்னர் கட்டப்பட்ட அனுமதியற்ற கல்வி நிறுவன வரன் முறை திட்டத்திற்கு விண்ணப்பிக்க 31.01.2025 வரை கால நீட்டிப்பு செய்துள்ளது. நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் எல்லைக்குள் அமையும் திட்டமில்லா பகுதிகளில் 01.01.2011-ற்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டடங்களுக்கு வரன் முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பாக 01.08.2024 முதல் 31.01.2025 வரை ஆறு மாத காலம் காலநீட்டிப்பு செய்து அரசாணை எண்.76, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி (ந.வ(3), துறை நாள்.14.06.2018-ல் மாற்றமின்றி அரசு கடிதம் (நிலை) எண்.122/நவ4(1)/2024 நாள்.25.06.2024-ல் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்தவர்கள் உரிய விவரங்களை சமர்ப்பித்து இசைவுபெற துணை இயக்குநர், மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம், விருதுநகர் அவர்களை அணுகுமாறும், இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் (www.tcp.org.in) என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்து, இறுதி வாய்ப்பினை தவறாது பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
18 வயது நிறைவடையாத பெண்கள் குழந்தைகளாகவே கருதப்படுவர். அவ்வாறு 18 வயது நிறைவடையாத பெண்ணுக்கும், 21 வயது நிறைவடையாத ஆணுக்கும் நடைபெறுவதை தடை செய்வதே இச்சட்டத்தின் நோக்கமாகும்.• குழந்தை திருமணம் தொடர்பாக புகார்கள் 1098 அல்லது 181 மூலம் பெறப்பட்ட உடன் நடவடிக்கையாக குழந்தையின் விபரம் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் கீழ் பணிபுரியும் சமூக நல களப்பணியாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டு, களப்பணியாளர்கள், சைல்டு லைன் பணியாளர்கள், ஒருங்கிணைந்த சேவை மையம் வழக்கு பணியாளர்கள், ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் ஆகியோர்களால் நேரடியாக குழந்தையின் இல்லத்திற்கு சென்று விசாரணை செய்யப்படும்.• குழந்தை திருமணம் நடைபெற்றதற்கான ஆதாரங்களோ, திருமணம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் ஏதேனும் செய்யப்பட்டிருப்பின் உடனடியாக குழந்தையினை மீட்டு குழந்தைகள் நல குழுமத்தில் ஒப்படைக்கப்படும்.• குழந்தை திருமணம் நடைபெற்றிருப்பின் குழந்தையினை திருமணம் செய்து கொண்ட மணமகன், மணமகனின் பெற்றோர், குழந்தையின் பெற்றோர் மற்றும் திருமணம் நடைபெறுவதற்கு உடந்தையாக இருந்த அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும்.• இளவயதில் கருவுற்ற குழந்தைகள் தொடர்பாக புகார் பெறப்படின் காரணமான நபர் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்யப்படும்வழங்கப்படும் தண்டனைகள்• 18 வயது நிரம்பாத பெண் குழந்தையைத் திருமணம் செய்யும் ஆணுக்கு அதிக பட்சமாக 2 வருட கடும் சிறைத்தண்டனை அல்லது ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.• குழந்தை திருமணத்தை நடத்தி வைப்போருக்கு 2 வருடம் கடும் சிறைத்தண்டனை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.• இக்குற்றம் பிணையில் விடுவிக்க இயலாத குற்றமாகும்.• 18 வயது நிரம்பாத பெண் குழந்தையை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி கருவுற்ற நிலையில் கண்டறியப்பட்டின் காரணமான நபருக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும் கடந்த 01.08.2024 முதல் 31.08.2024 வரை பதினைந்து குழந்தை திருமணங்கள் தொடர்பாக புகார் பெறப்பட்டதை தொடர்ந்து அவற்றின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் 18 வயது பூர்த்தியடையாமல் கருவுற்ற பெண் குழந்தைகள் தொடர்பாக பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மூன்று நபர்களின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
பொது விநியோகத்திட்ட பயனாளிகளின் நலன்கருதி, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பத்து வட்டங்களில் மின்னணு குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை / நகல் குடும்ப அட்டை முதலியவை தொடர்பான குறைதீர்வு முகாம் 14.09.2024 இரண்டாவது சனிக்கிழமை அன்று, அந்தந்த வட்டத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகங்களில் வைத்து நடத்தப்படவுள்ளது. எனவே இக்குறைதீர்வு முகாமில் பொதுமக்கள் தங்கள் மின்னணு குடும்ப அட்டையில் திருத்தம் மற்றும் புகைப்படம் பதிவு செய்தல் தொடர்பான விண்ணபங்களை உரிய ஆவணங்களுடன் அளித்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
“கிராமப்புறங்களில் வாழும் குழந்தைகள், வளரிளம் பருவத்தினர், கர்ப்பிணிப்பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் முதியோர்கள் ஆகியோர் போதிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு இல்லாமல் பலவித நோய்களுக்கு ஆளாக்கப்படுகின்றனர்.2024-25-ம் நிதி ஆண்டிற்கு “இரத்த சோகை இல்லாத கிராமம்” குறித்த சிறப்பு பிரச்சாரம் மற்றும் சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழாவாக விருதுநகர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களைக் கொண்டு செப்டம்பர் - 2024, 13 முதல் 17 வரை ஊராட்சி அளவிலும் மற்றும் செப்டம்பர் - 2024, 18 முதல் 23 வரை வட்டார அளவிலும், பாரம்பரிய உணவுத் திருவிழா நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவர்களைக் கொண்டு வட்டாரம்/மாவட்ட அளவில் சிறப்பு பிரச்சாரம் மற்றும் சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழா நடத்தப்படவுள்ளது. எனவே இப்போட்டிகளில் சுய உதவிக்குழுவினர் பங்கேற்கலாம். வட்டார அளவிலான போட்டியில் முதல் பரிசு பெறும் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட நிர்வாகம், கல்வித்துறை, வனத்துறை மற்றும் தன்னார்வ அமைப்புகளான ROAR மற்றும் ATREE இணைந்து மாவட்டத்தில் உள்ள அரசு/அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் பள்ளி மாணவர்களுக்கு “இளம் பசுமை ஆர்வலர்“ என்ற சிறப்பு பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.அதன்படி, சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்ற இராஜபாளையம் ராம்கோ பொறியியல் கல்லூரியில் 41 மாணவர்களும், விருதுநகர் செந்திகுமார நாடார் கலைக்கல்லூரியில் 23 மாணவர்களும், சாத்தூர் இராமசாமி நாயுடு கலைக்கல்லூரியில் 37 மாணவர்களும், அருப்புக்கோட்டை சௌடாம்பிகா பொறியியல் கல்லூரியில் 37 மாணவர்களும் கலந்து கொண்டனர்.இந்த சிறப்பு பயிற்சி முகாமில் இயற்கை சூழல் பாதுகாப்பு, மரம் வளர்த்தல், அரிய வகை பூச்சி இனங்களின் நன்மைகள், நீர்வளப் பாதுகாப்பு, வனவிலங்குகள் மற்றும் காடுகளின் பாதுகாப்பு ஆகியவற்றின் முக்கியத்துவம் பற்றியும், பாதுகாப்பு பற்றியும் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.இதன் தொடர்சியாக இரண்டாம் பயிற்சி 14.09.2024 சனிக்கிழமை அன்று நடைபெற உள்ளது. எனவே, ஆர்வம் உள்ளவர்கள் பயிற்சி சார்ந்த முன்பதிவிற்கு 79042-67235 என்ற கைபேசியை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில் (12.09.2024) மாவட்ட நிர்வாகம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் பள்ளி மேலாண்மைக்குழு புதிய உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் பெற்றோர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளை சார்ந்த மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய பள்ளி மேலாண்மைக்குழு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. பள்ளியில் மேம்படுத்தப்பட வேண்டிய அடிப்படை வசதி, கட்டமைப்பு வசதிகள், மாணவர்கள் சேர்க்கையில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள், நிதி மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு காரணிகளை மேம்படுத்துதல் மூலம், பள்ளியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதே இந்த பள்ளி மேலாண்மைக்குழுவின் நோக்கமாகும்.ஒரு பள்ளி என்பது அங்கு வரக்கூடிய மாணவர்களுக்கு நல்ல கல்வியை, சிந்தனையை தருவது, நல்ல ஒழுக்கத்தை போதித்து, சிறப்பாக கற்பித்து அதன் மூலமாக நல்ல மதிப்பெண்களை வாங்கச் செய்து, ஒரு நல்ல வாழ்க்கையை அமைவதற்கான ஒரு சூழலை தருவது தான்.ஒரு பள்ளி என்று சொன்னவுடன் நம் நினைவுக்கு வரக்கூடிய பள்ளியின் கட்டிடம், அங்கு இருக்கக்கூடிய வசதிகள் உள்ளிட்டவைகள் எல்லாம் ஒட்டுமொத்த பள்ளியின் உடைய செயல்பாட்டிற்கு 20 விழுக்காடு தான் பங்களிப்பைச் செய்யும். மீதமுள்ள 80 விழுக்காடு முழுமையடைவதற்கு கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளில் இன்னும் சிறப்பாக ஒருங்கிணைந்த முயற்சி அவசியமாகிறது.மென் போதை பொருட்களை தடுப்பதற்கு நிறைய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம். அதை விற்பவர்களின் மீது தகுந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் அவற்றையெல்லாம் தாண்டி ஒரு பள்ளியில் இது குறித்து விழிப்புணர்வும், கண்காணிப்பும், மாணவர்களை அறிவியல் பூர்வமாக அணுகுவதும் முக்கியமானது. மாவட்டத்தில் கடந்த ஆண்டு மட்டும் 18 வயதிற்கு குறைவான வயதில் திருமணம் முடிந்து 19 வயதுக்குள் கருத்தரித்த தாய்மார்கள் எண்ணிக்கை சுமார் 400 லிருந்து 500 ஆக உள்ளது. இதில் பெரும்பாலும் குழந்தை பிறந்து ஓராண்டுக்குள், இறந்து போகின்ற இறப்பு விகிதத்தை எடுத்து, ஒவ்வொரு இறப்பையும் ஆய்வு செய்து பார்த்தால், அதில் பெரும்பாலான குழந்தைகள் பிறப்பிலேயே எடை குறைவாக பிறந்ததால் அவர்கள் உயிரிழப்பை சந்திக்கிறார்கள். அதற்கு காரணம் அந்த குழந்தையினுடைய தாயாக இருக்கக்கூடிய எடை குறைவான 18 வயதுக்கு உட்பட்ட மாணவி அல்லது சிறுமி ஒரு குழந்தைக்கு தாயாகும் போது, அந்த குழந்தையும் எடை குறைவாக பிறக்கிறது. இதை தடுப்பதற்கு பள்ளி மேலாண்மைக்குழு முயற்சி செய்ய வேண்டும். ஒரு ஊரில் ஒரு பெண் என்று மட்டும் நாம் நினைக்கக் கூடாது. நமது ஊரில் நாளை அந்த பெண்ணிற்கு ஒரு குழந்தை பிறக்கின்ற போது, அந்த குழந்தை உடல் வளர்ச்சியோ, மனவளர்ச்சியோ இல்லாமல் பிறந்தால், அது வாழ்நாள் முழுவதும் எவ்வளவு பெரிய துன்பத்தை சந்திக்க வேண்டும். அப்படி உடல் நலம் குறைவாக இருக்கக்கூடிய ஒரு குழந்தை அந்த குடும்பத்திற்கு எவ்வளவு பாரமாக, ஒரு சுமையாக இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இது போன்ற குழந்தை திருமணங்கள் குறித்து விழிப்புணர்வும், அதனை தடுப்பதற்கும் பள்ளி மேலாண்மை குழுவின் செயல்பாடுகள் இருக்க வேண்டும்.அரசு திட்டங்கள் உயர் கல்விக்கு நிறைய இருக்கின்றது. புதுமைப் பெண் மற்றும் தமிப்புதல்வன் திட்டங்கள் மூலம் 12 ஆம் வகுப்பு முடித்து உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது. மேலும், பல்வேறு திட்டங்களின் மூலமாக மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையும் வழங்கப்படுகிறது. முதலாம் ஆண்டு கல்லூரியில் மாணவர்கள் சேர்கின்ற போது புத்தகங்கள், சீருடைகள், கல்விக்கட்டணம் போன்ற உதவிகள் தேவைப்படும் மாணவர்களுக்கு விருதுநகர் மாவட்டத்தின் உடைய கல்வி அறக்கட்டளையிலிருந்து உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. இப்படி பல்வேறு பொருளாதார திட்டங்கள் இருக்கின்ற போது இன்னும் விழிப்புணர்வு இல்லாமல் நமது ஊரில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்து கல்லூரியில் சேராமல் இருப்பது என்பது ஒரு அவல நிலையே ஆகும். பள்ளி மேலாண்மை குழுத் தலைவராக, உறுப்பினராக அந்த பள்ளியை நன்றாக செயல்படுத்த வேண்டும். நன்றாக செயல்படுத்துவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. கடந்த காலங்களில் பல பள்ளி மேலாண்மைக்குழு மிகச் சிறப்பாக செயல்பட்டிருக்கிறது. நிறைய பள்ளி மேலாண்மை தலைவர்கள் மிக முக்கியமான பிரச்சினைகள் குறித்து கவனத்திற்கு கொண்டு வரலாம். பள்ளிக்கு தேவையான உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளோடு மாணவர்களின் கற்றல் அறிவு திறனை மேம்படுத்துவதிலும், பள்ளிகளில் ஆரோக்கியமான சூழலை உண்டாக்குவதற்கும் பள்ளி மேலாண்மை குழு செயல்பட வேண்டும். பள்ளிக்குத் தேவையான வசதிகளை முக்கியத்துவத்தின் அடிப்படையில் பட்டியலிட்டு ஒவ்வொன்றாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். நம்மிடம் இருக்கின்ற வசதிகள் கொண்டு சிறப்பான பணியை மேற்கொள்ள வேண்டும். பள்ளிக்கான தேவைகள் நிறைய இருக்கும் போது ஒரு சில முக்கியமான மாற்றங்களை செய்து எந்த செலவும் இல்லாமல் ஒரு பள்ளியின் உடைய கற்றல் கற்பித்தல் தரத்தை உயர்த்த முடியும். மேலும், மாணவர்களுக்கு முறையான கல்வி மற்றும் ஒழுக்கத்தை கற்று கொடுப்பதோடு மட்டுமல்லாமல் அறிவுரைகளை வழங்கி, போதை பழக்கத்திற்கு அடிமையாகாமல் நல்ல சமுதாயத்தில் சிறந்த மாணவர்களை உருவாக்குவதில் பள்ளி மேலாண்மைக்குழு சிறப்பாக செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 11 வட்டாரங்களை சார்ந்த 190 அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக்குழுத்தலைவர், உறுப்பினர்கள் மற்றும் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரியில்(12.09.2024) சமூகநலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை மூலம், சத்துணவுப் பணியாளர்களுக்கான ஊட்டசத்து சுவை மற்றும் உணவின் தரத்தை மேம்படுத்துதல் தொடர்பான புத்தாக்க பயிற்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தொடங்கி வைத்தார்.சத்துணவுத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் உணவு என்பது, பள்ளிக் குழந்தைகளுக்கு பசியை போக்குவதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கு ஊட்டசத்து மிக்க உணவை சுவையாக வழங்குவதே நோக்கமாகும்.அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத்திட்டம், மதிய உணவுத்திட்டம் குறித்து பல்வேறு அரசு பள்ளிகளில் களஆய்வு மேற்கொண்டதில், பல பள்ளிகள் தரமான, சுவையான உணவுகளை மாணவர்களுக்கு வழங்கி வருகிறார்கள்.சமைக்கக்கூடிய உணவை பொறுமையாக பக்குவத்துடன், நம் வீட்டில் எவ்வாறு உணவு சமைக்கின்றோமோ, அவ்வாறு சமைத்தாலே போதுமானது. சத்துணவுத்திட்டத்தின் மூலம் பள்ளி குழந்தைகளுக்கு, ருசியான தரமான உணவை கொடுத்தால் ஊட்டச்சத்து குறைபாட்டால் வரும் இரத்தசோகை குறைபாட்டிற்கு தீர்வு காண முடியும். பள்ளிகளில் நல்ல தரமான உணவை சமைத்தால் குழந்தைகள் உண்ணும் அளவை, அதிகப்படுத்தி கொள்வார்கள். அதனால் அவர்கள் ஊட்டசத்து பெற்று, குழந்தைகளின் உடல் வளர்ச்சி மிக நன்றாக இருக்கும் எனவே, அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டால் குழந்தைகளின் உடல் வளர்ச்சி மிக நன்றாக இருக்கும் என்பதை நினைவூட்டுவதற்காக தான் இந்த பயிற்சி முகாமை நடத்த திட்டமிட்டுள்ளோம். குழந்தைகள் ஆரோக்கியத்திற்கு நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டு எனவும், குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நாம் சிறப்பாக செயல்பட வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(சத்துணவு) திரு.ஜெகதீசன், அரசு அலுவலர்கள், சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்(10.09.2024) தேசிய அளவில் சிறப்பு ஒலிம்பிக் பாரத் கமிட்டியால் நடத்தப்படும் அறிவுசார் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்காக குவாலியரில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டியில் BOCCE பந்தயத்தில் இரட்டையர் பிரிவில் தங்கமும், கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கமும் பெற்ற சிவகாசி சாட்சியாபுரத்தில் உள்ள சி.எஸ்.ஐ அறிவுசார் குறைவுடையோர்க்கான பள்ளியில் பயிலும் செல்வன். பொன்அரசன் என்பவரை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் I A S ,. அவர்கள் நேரில் அழைத்து வாழ்த்தினார்.