விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S.,அவர்கள் தலைமையில் (16.09.2024) நடைபெற்றது.இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டாமாறுதல், குடும்பஅட்டை, வேலைவாய்ப்பு, விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது. மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்தகுடி மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள். மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடர்புடைய அலுவலர்களை அறிவுறுத்தினார்கள். முன்னதாக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறைச்சார்பில், பாவாலி கிராமத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தை மாற்றுத்திறனாளி நல அலுவலகத்திற்கு ஒதுக்கீடு செய்து, அதன் மூலம் சப்தகிரி மறுவாழ்வு அறக்கட்டளையின் சார்பில் நடத்தப்படும் 14 வயதிற்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றிய பெண்களுக்கான தொழிற்பயிற்சி இல்லம் செயல்படுவதற்காக ஒப்படைத்தார். மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில், அருப்புக்கோட்டை வட்டம், வெள்ளையாபுரம் கிராமத்தில் உள்ள 6 பயனாளிகளுக்கு தலா ரூ. 3.60 இலட்சம் மதிப்பில், இலவச வீட்டுமனை பட்டாக்களையும்,மேலும், பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து உயர்கல்வி சேருவதற்கு பொருளாதார உதவி வேண்டி, விண்ணப்பம் அளித்த இரண்டு மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து தலா ரூ.2500/- என மொத்தம் ரூ.5000/- மதிப்பிலான காசோலைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.பின்னர், திருப்பூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் நேற்று நடைபெற்ற, திருக்குறள் முற்றோதல் விழாவில் கலந்து கொண்ட மற்றும் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்கள் அனைவரையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து, பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) திரு.அமர்நாத், மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி அனிதா, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் திரு.ரமேஷ், உதவி ஆணையர் (கலால்) திரு.கணேசன், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (16.09.2024) ‘சமூக நீதி நாள்” உறுதிமொழி மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S ., அவர்கள் தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர்.தமிழக சட்டபேரவையில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் பெரியார் பிறந்த தினமான செப்டம்பர் -17 ம் தேதி ஆண்டுதோறும் ‘சமூக நீதி நாளாக“ கொண்டாடப்படும் என அறிவித்தார்கள்.அதன்படி, சாதி ஏற்றதாழ்வுகள், தீண்டாமை கொடுமைகளை மத வேறுபாடுகளை உதறி தள்ளி பெண்களை சம நிலையில் மதித்திடும் கொள்கையை உருவாக்கிய தந்தை பெரியார் அவர்களின் பிறந்த தினமான செப்டம்பர் மாதம் 17-ம் நாள் ஆண்டுதோறும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் ‘சமூக நீதி நாள்” உறுதிமொழியை எடுத்து கொள்ள வேண்டுமென அரசின் ஆணையின்படி,‘பிறபொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியையும்-யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியையும்,எனதுவாழ்வியல் வழிமுறைகளாகக் கடைபிடிப்பேன்.சுயமரியாதை ஆளுமைத் திறனும் - பகுத்தறிவுப் பார்வையும் கொண்டவையாக என்னுடைய செயல்பாடுகள் அமையும்.சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை ஒப்படைத்துக் கொள்வேன்.மானுடத்தின் மீது பற்றையும் மனிதாபிமானத்தையும் என்றும் போற்றுவேன்.சமூக நீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைத்திட இந்த நாளில் உறுதியேற்கிறேன்”. என்ற உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியில் (16.09.2024) கரிசல் இலக்கிய கழகம் மற்றும் சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி இணைந்து ஏற்பாடு செய்த எழுத்தாளர் கி.ரா. அவர்களின் 103-வது பிறந்த நாளை முன்னிட்டு, எழுத்தார்வம் மிக்க மாணவர்களுக்கு ஒரு நாள் சிறுகதைப் பயிலரங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.பின்னர், கி.ரா.வின் கதைகளில் இருந்து பத்து கதைகளை தேர்ந்தெடுத்து “முத்துக்கதைகள் பத்து” என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்ட புத்தகங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கினார்.நமது மண்ணில் வாழ்ந்த ஒரு மகத்தான எழுத்தாளர். இந்த மண்ணில் பல நூற்றாண்டுகளாக இருந்த வறுமை, ஜாதி, ஏற்றத்தாழ்வு, பெண் அடிமை, விவசாயிகள் காலங்காலமாக சந்தித்து வரக்கூடிய நெருக்கடிகள், இந்தியா சுதந்திரம் பெற்றதற்கு பிறகு அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சியிலும், அவர்கள் வாழ்விலும் விரும்பத்தகுந்த மாற்றங்கள் ஏற்பட்டதா என்பன குறித்த வரலாற்று ஆவணமாக கி.ரா-வின் சிறுகதைகள் இருக்கும்.ஒரு சிறுகதை என்றால் என்ன? சிறுகதையை நீங்கள் எவ்வாறு படைக்க முடியும்? ஒரு சிறுகதை என்பது எப்படி இருக்க வேண்டும் என்பது எல்லாம் கி.ரா.வின் சிறுகதைகளில் இருந்தே நாம் கற்றுக்கொள்ளலாம்.ஒரு சாதாரண கதை என்பது இந்த சமூகத்தில் உள்ள மாற்றங்களை எவ்வாறு பதிவு செய்கிறது. சமூகத்தில் விளிம்பு நிலையில் இருக்கக்கூடியவர்களின் பிரச்சனைகளை எவ்வாறு பதிவு செய்கிறது. எளிய மனிதர்களின் மன உணர்வுகளை எவ்வாறு பதிவு செய்கிறது என்று சொல்லலாம்.எனவே நீங்களும் இதுபோன்ற எழுத்துக்களை வாசிப்பதன் மூலமாக சமூகத்தின் அனுபவங்களை பெற முடியும். அனைவரும் சிறுகதை வாசித்து விட்டு, சிறுகதை எழுத வேண்டும் என்று அவசியம் இல்லை. ஒரு சிறுகதை வாசிப்பது என்பது அந்த சிறுகதையில் இருக்கக்கூடிய கதை மாந்தர்களின் வழியாக அந்த சூழலில் நாம் வாழ்ந்து பார்க்கலாம்.அந்த கதை மாந்தர்கள் வழியாக மனிதர்களோடு பேசுவது, நாம் எதிர்கொள்ளாத அனுபவங்களை ஒருவேளை எதிர்க்கொண்டால், நாம் எவ்வாறு அதற்கு எதிர்வினை ஆற்றுவோம் என்பது குறித்து நமக்கு சொல்லித்தருவது சிறுகதை.நம் மண்ணைச் சேர்ந்த கரிசல் இலக்கியத்தின் பிதாமகன் என்று போற்றக்கூடிய தன்னுடைய வாழ்நாளில் ஏறக்குறைய 80 ஆண்டுகள் தொடர்ச்சியாக எழுதிக் கொண்டு சாதாரண மனிதர்கள் பற்றி, விவசாய பெருங்குடி மக்களை பற்றி, தொழிலாளர்களை பற்றி, பெண்களுடைய முன்னேற்றம் பற்றி, பெண் விடுதலைப் பற்றி, எளிய மனிதர்களைப் பற்றி தன்னுடைய கதைகள் முழுவதிலும் பதிவு செய்தவர் எழுத்தாளர் கி.ரா. அவர்கள்.எழுத்தாளர் கி.ரா.வின் அவர்களின் பிறந்த தினமான இன்று நம் அனைவரும் அவரின் சிறுகதைகள் வழியாக இந்த சமூகத்தில் புரிந்து கொள்வதற்கும், நாளை இந்த சமூகம் விரும்பத் தகுந்த மாற்றங்களை அடைவதற்கு நம்முடைய செயல்பாடுகள் வழியாக உறுதி ஏற்பதற்கும் இந்த நாள் இனிய நாளாக அமைந்திருக்கிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், எழுத்தாளர் திரு.கி.ரா.பிரபாகர் அவர்கள் முன்னிலை வகித்தார்கள். எழுத்தாளர்கள் திருமதி.விஜிலா தேரிராஜன், திரு.முத்துபாரதி, திரு.சரவணகாந்த், ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி முதல்வர் முனைவர் பெ.கி.பாலமுருகன், துணை முதல்வர் செல்வி இரா.முத்துலெட்சுமி, கரிசல் இலக்கிய கழக செயலாளர் மரு.த.அறம், கல்லூரி பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு அரசின் போதைப் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தீவிர ஒழிப்புத் திட்டத்தின்படி, உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல் துறையினரும் இணைந்த 6 குழுக்கள் அமைக்கப்பட்டு, பள்ளி, கல்லூரிகள் அருகாமையில் உள்ள கடைகளிலும் மற்றும் இதர பகுதிகளில் உள்ள கடைகளிலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த 01-01-2024 முதல் 07-09-2024 முடிய உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல் துறையினரும் குழுவாக இணைந்து 586 முறை தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் உள்ளதா என சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கண்டறியப்பட்ட 260 கடைகள் மற்றும் 29 வாகனங்களில் 1207 கிலோ 774 கிராம் எடையிலான புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக 260 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டன. மேலும், 260 கடைகள் மற்றும் 29 வாகனங்களுக்கும் ரூ.67,60,000/- ( ரூபாய் அறுபத்து ஏழு இலட்சத்து அறுபதாயிரம் ) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 08-09-2024 முதல் 14-09-2024 முடிய ஒரு வாரத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளும், காவல் துறையினரும் இணைந்து மேற்கொள்ளப்பட்ட 12 குழு ஆய்வுகளில் 7 கடைகள் மற்றும் 1 வாகனங்களில் 35 கிலோ 867 கிராம் எடையுள்ள புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக 7 கடைகள் சீல் வைக்கப்பட்டன. 7 கடைகள் மற்றும் 1 வாகனங்களுக்கு ரூ.2,25,000/- ( ரூபாய் இரண்டு இலட்சத்து இருபத்தி ஐந்தாயிரம் ) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முதன் முறையாக தடை செய்யப்பட்ட புகையிலை விற்பது கண்டுபிடிக்கப்பட்டால் ரூ.25 ஆயிரம் அபராதம், 15 நாட்களுக்கு கடை மூடி சீல் வைக்கப்படும். 2வது முறையாக தவறு செய்தால் ரூ.50 ஆயிரம் அபராதம் ஒரு மாதம் வரை கடை மூடி சீல் வைக்கப்படும். 3வது முறையும் தவறு செய்தால் ரூ.1லட்சம் அபராதம், மூன்று மாதங்களுக்கு கடை மூடி சீல் வைக்கப்படும். இம்மாவட்டம் முழுவதும் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வது மற்றும் இருப்பு வைப்பது கண்டறியப்பட்டால் கடும் குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வாயிலாக இந்த மாதத்தின் மூன்றாம் வெள்ளிக்கிழமையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. அதன்படி படித்த வேலை தேடும் இளைஞர்களுக்காக 20.09.2024 அன்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் 02.00 மணி வரை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.இத்தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 108 AMBULANCE , ADYAR ANANDHA BHAVAN, TVS BREAKLINE, AANAIMALAI TOYOTO, போன்ற 20க்கும் மேற்பட்ட பிரபல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 8-ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு, I.T.I. டிப்ளமோ மற்றும் பொறியியல் படிப்பு ஆகிய கல்வித் தகுதி உடைய பணியாளர்களை தெரிவு செய்யவுள்ளார்கள். இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்த விரும்பும் வேலைநாடுநர்கள் 20.09.2024 அன்று வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு முன்பாக www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது சுய விவரங்களை பதிவு செய்துவிட்டு அனைத்து கல்விச்சான்றிதழ், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது மேலும் இச்சேவையானது முற்றிலும் கட்டணமில்லா சேவையாகும். இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை நிறுவனங்கள் .விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வருகை புரிந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அவர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I AS., அவர்கள் தெரிவித்துள்ளார்.
பள்ளி மாணவ, மாணவியர்கள் அறிவியல், கணிதம் சார்ந்த ஒலிம்பிபாய்டு தேர்வுகளுக்கு பெருமளவில் தயாராகி பங்கு பெறுவதைப் போன்று தமிழ் மொழி இலக்கியத் திறனை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ளும் வகையில் தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 2024-2025-ஆம் கல்வியாண்டிற்கான தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு 19.10.2024 (சனிக்கிழமை) அன்று நடத்தப்படவுள்ளது. இத்தேர்வில் 1500 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை வழியாக மாதம் ரூ.1500/- வீதம் இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும். இத்தேர்வில் 50 விழுக்காடு அரசுப்பள்ளி மாணவர்களும், மீதமுள்ள 50 விழுக்காட்டிற்கு அரசுப் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பிற தனியார் பள்ளி மாணவர்களும் தெரிவு செய்யப்படுவார்கள்.தமிழ்நாடு அரசின் 10-ஆம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் உள்ள பாடத்திட்டங்களின் அடிப்படையில் கொள்குறி வகையில் தேர்வு நடத்தப்படும். அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத் தலைநகரங்களில் இத்தேர்வு நடத்தப்படும்.2024-2025-ம் கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் (மெட்ரிக்/CBSE / ICSE/ உட்பட ) மாணவர்கள். 19.10.2024 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ள இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது.மாணவர்கள் விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளம் 05.09.2024 முதல் 19.09.2024 வரை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகை ரூ.50/- சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியரிடம் ஃ முதல்வரிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 19.09.2024 ஆகும் என முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S,அவர்கள் (14.09.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்படி, சிவகாசி மாநகராட்சி பகுதியில், கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.61 இலட்சம் மதிப்பில் செல்லி அம்மன் கோவில் ஊரணி, தூர்வாரப்பட்டு கரைகள் பலப்படுத்தப்பட்டு வரும்; பணியினையும்,திருத்தங்கல் வடக்கு ரத வீதியில், ரூ.25 இலட்சம் மதிப்பில் கிளை நூலகக் கட்டடம் கட்டப்பட்டு வரும் பணியினையும், பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ், சிவகாசி மாநகராட்சி வார்டு 23-ல், ரூ.15 இலட்சம் மதிப்பில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு வருவதையும், ரூ.3.30 கோடி மதிப்பில், சிவகாசி பேருந்துநிலையத்தில் உள்ள வணிக வளாகங்கள், இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் கூடம், சுகாதார வளாகம் கட்டப்பட்டு வரும் பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும் நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென தொடர்புடைய அரசு அலுவலர்களை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின் போது, பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், வட்டாட்சியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் வட்டம், மம்சாபுரம் கிராமத்திற்குட்பட்ட செண்பகத்தோப்பு மலைவாழ் மக்கள் வசிக்கக்கூடிய பகுதியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ரூ.21 இலட்சம் மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்ட 7 புதிய பழங்குடியினருக்கான குடியிருப்புகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் I A S.அவர்கள் (13.09.2024) திறந்து வைத்தார்.அதன்படி திருவில்லிபுத்தூர் வட்டம், செண்;பகத்தோப்பு பகுதியில் வாழும் பழங்குடியினர் மக்களின் 7 பழுதடைந்த வீடுகளை தலா 3 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.21 இலட்சம் மதிப்பில் புதிதாக கட்ட 01.12.2023 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் துவக்கி வைக்கப்பட்டது. தற்போது வீடு கட்டும் பணிகள் முடிக்கப்பட்டு, இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திரு.ரமேஷ் வட்டாட்சியர், உட்பட அரசு அலுவலர்கள், பழங்குடியின மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், தாயில்பட்டியில் தேசிய தேனீ மற்றும் தேன் இயக்கத்தின் கீழ் தோட்டக்கலைத் துறை மூலம் நடைபெற்ற மாவட்ட அளவிலான தேனீ வளர்ப்பு மற்றும் அதன் பயன்கள் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கினை, சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,.I A S., அவர்கள் (13.09.2024) துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் தேசிய தோட்டக்கலை இயக்கம் சார்பில் 4 பயனாளிகளுக்கு தலா ரூ.2 இலட்சம் மானியத்தில் சிப்பம் கட்டும் அறை அமைப்பதற்கான பணி ஆணைகளையும், 1 பயனாளிக்கு ரூ.15,000/- மானியத்தில் நடமாடும் காய்கனி விற்பனை வண்டியினையும், பனை மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு தலா ரூ.50,000/- மானியத்தில் மதிப்புக் கூட்டப்பட்ட பனை பொருட்கள் தயாரிக்கும் கூடம் அமைப்பதற்கான பணி ஆணைகளையும், ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மூலம் 2 பயனாளிகளுக்கு தலா ரூ.7500/- மானியத்தில் வெண்டை விதைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.நமது மாவட்டத்தில் தீப்பெட்டி, பட்டாசு தொழிற்சாலைகள் இருந்தாலும், விவசாயம் அதிகம் செய்யக்கூடிய பகுதியாக உள்ளது.குறிப்பாக மானாவாரி பயிர்கள் அதிகமாக விளைவிக்கக் கூடியதும், மக்காச்சோளம் பருத்தி போன்ற பயிர்கள் அவ்வப்போது சூழலுக்கு ஏற்ப அதிகமாகவோ அல்லது சற்று குறைவாகவோ விளைவிப்பது காலம் காலமாக இருந்து வருகிறது. வேளாண்மை என்பது அது சார்ந்த உப தொழில்களையும் கொண்டது. அதில் கால்நடை வளர்ப்பு மிக முக்கியமானதாக இருக்கிறது.தமிழ்நாட்டில் கால்நடைகள் அதிகமாக இருக்கக்கூடிய மாவட்டங்களில் ஒரு மாவட்டம் விருதுநகர். அதற்காகத்தான் சமீபத்தில் தமிழ்நாடு அரசு கால்நடைகளுக்காக 9 புதிய நடமாடும் மருத்துவமனை ஊர்தியை வழங்கியுள்ளது.கால்நடை வளர்ப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் மூலமாக விவசாயி பெருங்குடி மக்களுடைய வாழ்வாதாரத்தை, அவர்களுடைய வருமானத்தை உயர்த்த முடியும். இந்த பகுதியில் சிப்பி காளான் வளர்ப்பினை நிறைய மகளிர் சுய உதவி குழு பெண்கள் செய்து வருகிறார்கள்.வேளாண்மை சார்ந்த உப தொழில்களை செய்வது என்பது தான் வேளாண்மையுடைய வளர்ச்சிக்கு ஒரு அடிப்படையாக அமைகிறது.விவசாயினுடைய வருமானத்தை பெருக்குவது என்பது பயிர்களில் இருந்து வரக்கூடிய சாகுபடி, தவிர மற்ற உபதொழில்களையும் சேர்த்து செய்கின்ற பொழுது தான் லாபகரமாக செயல்படுத்த முடியும். அதனால் தான் நிறைய வேளாண் சார்ந்த உப தொழில்களான கால்நடை, நாட்டுக்கோழி, தேனீ வளர்ப்பு ஆகியவற்றை அரசு ஊக்குவித்து வருகிறது.தேனின் மருத்துவத்தை சித்தா போன்ற அனைத்து மருத்துவமும் வெளிப்படுத்துகிறது. தேனுக்கான தேவை என்பது மிக அதிகமாக இருக்கிறது. தேனீ வளர்ப்பை முறையாகவும் தொடர்ச்சியாகவும் செய்யும் பட்சத்தில் விவசாயிகள் கூடுதல் வருமானத்தை பெற முடியும்.மாவட்டத்தில் பல்வேறு விவசாயிகள் தேனீ வளர்ப்பு முறையை சிறப்பாக செய்து வருகின்றனர். அதை சந்தைப்படுத்துவதற்கான முறைகளை அறிந்து கொண்டு, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சந்தை படுத்த வேண்டும்;. தரமான தேன்களுக்கு தேவைகள் அதிகமாக உள்ளது.இந்த தேனீ வளர்ப்பு என்பது ஒவ்வொரு விவசாயிக்கும் கூடுதல் வருமானத்தை தரக்கூடியது. எனவே, விவசாயிகள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் மற்றும் தேனீவளர்ப்பில் ஆர்வம் உள்ள தனிநபர்கள் தேனீ வளர்ப்புக்கு இருக்கக்கூடிய புதிய திட்டங்கள் மற்றும் மானியங்களை அறிந்து கொண்டு பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இக்கருத்தரங்கில் பயனாளிகள் பயன்பெறும் வகையில் கன்னியாகுமரி மாவட்ட தோட்டக்கலை துறையினரின் தேனீ மகத்துவ மையம் மற்றும் மதுரை மாவட்ட தேனீ வளர்ப்பின் முன்னோடி விவசாயி ஆன திருமதி.ஜோஸ்பின் அவர்களால் தேனீ மற்றும் தேன் சம்பந்தப்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டது.இக்கருத்தரங்கின் முதல் நாளில் தேனீக்களின் உயிரியியல் மற்றும் குணாதிசயங்களை பற்றி பூச்சியியல் துறை முனைவர் கே.சுரேஷ் அவர்கள் விளக்கினார். தோட்டக்கலை பயிர்களில் தேனீக்கள் மூலம் மகசூல் அதிகரிப்பதற்கான வழிமுறைகளை தோட்டக்கலைத்துறை முனைவர் திரு.பாலசுப்பிரமணியன் அவர்கள் மற்றும் கலசலிங்கம் தோட்டக்கலை கல்லூரி உதவி பேராசிரியர் திரு.பாண்டியராஜ் அவர்கள் ஆகியோர் விளக்கி கூறினார்கள்.தேன் சம்பந்தப்பட்ட உற்பத்திப்பொருட்களின் வர்த்தக முக்கியத்துவத்தை பற்றி VIBIS Honey நிறுவனர் மற்றும் தேனீ வளர்ப்பின் முன்னோடி விவசாயிமான திருமதி ஜோஸ்பின் அவர்கள் எடுத்துரைத்தார். வேளாண் அறிவியல் நிலைய முனைவர் திருமதி.ஜடா கவிதா அவர்கள் தேன் சம்பந்தப்பட்ட விலை உயர்ந்த பொருட்கள் தயாரிப்பை பற்றி விளக்கமளித்தார்.மேலும், தேனீ வளர்ப்பு குறித்த தொழில் நுட்ப கையேட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வெளியிட்டார்.இக்கூட்டத்தில், வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் செல்வி ரமேஷ், விருதுநகர் மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை துணை இயக்குநர் திருமதி சுபா வாசுகி, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர்(வெம்பக்கோட்டை வட்டாரம்) திருமதி குணசெல்வி மற்றும் தோட்டக்கலை துறை அலுவலர்கள் உட்பட அரசு அலுவலர்கள்;, விவசாயிகள், பெண்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் மம்சாபுரம் ஊராட்சியில் (13.09.2024) செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக வைக்கப்பட்டுள்ள தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டனர் .