பள்ளி மேலாண்மைக்குழு புதிய உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்
விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில் (12.09.2024) மாவட்ட நிர்வாகம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் பள்ளி மேலாண்மைக்குழு புதிய உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் பெற்றோர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளை சார்ந்த மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய பள்ளி மேலாண்மைக்குழு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. பள்ளியில் மேம்படுத்தப்பட வேண்டிய அடிப்படை வசதி, கட்டமைப்பு வசதிகள், மாணவர்கள் சேர்க்கையில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள், நிதி மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு காரணிகளை மேம்படுத்துதல் மூலம், பள்ளியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதே இந்த பள்ளி மேலாண்மைக்குழுவின் நோக்கமாகும்.
ஒரு பள்ளி என்பது அங்கு வரக்கூடிய மாணவர்களுக்கு நல்ல கல்வியை, சிந்தனையை தருவது, நல்ல ஒழுக்கத்தை போதித்து, சிறப்பாக கற்பித்து அதன் மூலமாக நல்ல மதிப்பெண்களை வாங்கச் செய்து, ஒரு நல்ல வாழ்க்கையை அமைவதற்கான ஒரு சூழலை தருவது தான்.ஒரு பள்ளி என்று சொன்னவுடன் நம் நினைவுக்கு வரக்கூடிய பள்ளியின் கட்டிடம், அங்கு இருக்கக்கூடிய வசதிகள் உள்ளிட்டவைகள் எல்லாம் ஒட்டுமொத்த பள்ளியின் உடைய செயல்பாட்டிற்கு 20 விழுக்காடு தான் பங்களிப்பைச் செய்யும். மீதமுள்ள 80 விழுக்காடு முழுமையடைவதற்கு கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளில் இன்னும் சிறப்பாக ஒருங்கிணைந்த முயற்சி அவசியமாகிறது.
மென் போதை பொருட்களை தடுப்பதற்கு நிறைய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம். அதை விற்பவர்களின் மீது தகுந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் அவற்றையெல்லாம் தாண்டி ஒரு பள்ளியில் இது குறித்து விழிப்புணர்வும், கண்காணிப்பும், மாணவர்களை அறிவியல் பூர்வமாக அணுகுவதும் முக்கியமானது. மாவட்டத்தில் கடந்த ஆண்டு மட்டும் 18 வயதிற்கு குறைவான வயதில் திருமணம் முடிந்து 19 வயதுக்குள் கருத்தரித்த தாய்மார்கள் எண்ணிக்கை சுமார் 400 லிருந்து 500 ஆக உள்ளது. இதில் பெரும்பாலும் குழந்தை பிறந்து ஓராண்டுக்குள், இறந்து போகின்ற இறப்பு விகிதத்தை எடுத்து, ஒவ்வொரு இறப்பையும் ஆய்வு செய்து பார்த்தால், அதில் பெரும்பாலான குழந்தைகள் பிறப்பிலேயே எடை குறைவாக பிறந்ததால் அவர்கள் உயிரிழப்பை சந்திக்கிறார்கள்.
அதற்கு காரணம் அந்த குழந்தையினுடைய தாயாக இருக்கக்கூடிய எடை குறைவான 18 வயதுக்கு உட்பட்ட மாணவி அல்லது சிறுமி ஒரு குழந்தைக்கு தாயாகும் போது, அந்த குழந்தையும் எடை குறைவாக பிறக்கிறது. இதை தடுப்பதற்கு பள்ளி மேலாண்மைக்குழு முயற்சி செய்ய வேண்டும். ஒரு ஊரில் ஒரு பெண் என்று மட்டும் நாம் நினைக்கக் கூடாது. நமது ஊரில் நாளை அந்த பெண்ணிற்கு ஒரு குழந்தை பிறக்கின்ற போது, அந்த குழந்தை உடல் வளர்ச்சியோ, மனவளர்ச்சியோ இல்லாமல் பிறந்தால், அது வாழ்நாள் முழுவதும் எவ்வளவு பெரிய துன்பத்தை சந்திக்க வேண்டும்.
அப்படி உடல் நலம் குறைவாக இருக்கக்கூடிய ஒரு குழந்தை அந்த குடும்பத்திற்கு எவ்வளவு பாரமாக, ஒரு சுமையாக இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இது போன்ற குழந்தை திருமணங்கள் குறித்து விழிப்புணர்வும், அதனை தடுப்பதற்கும் பள்ளி மேலாண்மை குழுவின் செயல்பாடுகள் இருக்க வேண்டும்.அரசு திட்டங்கள் உயர் கல்விக்கு நிறைய இருக்கின்றது. புதுமைப் பெண் மற்றும் தமிப்புதல்வன் திட்டங்கள் மூலம் 12 ஆம் வகுப்பு முடித்து உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது. மேலும், பல்வேறு திட்டங்களின் மூலமாக மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையும் வழங்கப்படுகிறது.
முதலாம் ஆண்டு கல்லூரியில் மாணவர்கள் சேர்கின்ற போது புத்தகங்கள், சீருடைகள், கல்விக்கட்டணம் போன்ற உதவிகள் தேவைப்படும் மாணவர்களுக்கு விருதுநகர் மாவட்டத்தின் உடைய கல்வி அறக்கட்டளையிலிருந்து உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. இப்படி பல்வேறு பொருளாதார திட்டங்கள் இருக்கின்ற போது இன்னும் விழிப்புணர்வு இல்லாமல் நமது ஊரில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்து கல்லூரியில் சேராமல் இருப்பது என்பது ஒரு அவல நிலையே ஆகும். பள்ளி மேலாண்மை குழுத் தலைவராக, உறுப்பினராக அந்த பள்ளியை நன்றாக செயல்படுத்த வேண்டும். நன்றாக செயல்படுத்துவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. கடந்த காலங்களில் பல பள்ளி மேலாண்மைக்குழு மிகச் சிறப்பாக செயல்பட்டிருக்கிறது. நிறைய பள்ளி மேலாண்மை தலைவர்கள் மிக முக்கியமான பிரச்சினைகள் குறித்து கவனத்திற்கு கொண்டு வரலாம்.
பள்ளிக்கு தேவையான உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளோடு மாணவர்களின் கற்றல் அறிவு திறனை மேம்படுத்துவதிலும், பள்ளிகளில் ஆரோக்கியமான சூழலை உண்டாக்குவதற்கும் பள்ளி மேலாண்மை குழு செயல்பட வேண்டும். பள்ளிக்குத் தேவையான வசதிகளை முக்கியத்துவத்தின் அடிப்படையில் பட்டியலிட்டு ஒவ்வொன்றாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். நம்மிடம் இருக்கின்ற வசதிகள் கொண்டு சிறப்பான பணியை மேற்கொள்ள வேண்டும். பள்ளிக்கான தேவைகள் நிறைய இருக்கும் போது ஒரு சில முக்கியமான மாற்றங்களை செய்து எந்த செலவும் இல்லாமல் ஒரு பள்ளியின் உடைய கற்றல் கற்பித்தல் தரத்தை உயர்த்த முடியும்.
மேலும், மாணவர்களுக்கு முறையான கல்வி மற்றும் ஒழுக்கத்தை கற்று கொடுப்பதோடு மட்டுமல்லாமல் அறிவுரைகளை வழங்கி, போதை பழக்கத்திற்கு அடிமையாகாமல் நல்ல சமுதாயத்தில் சிறந்த மாணவர்களை உருவாக்குவதில் பள்ளி மேலாண்மைக்குழு சிறப்பாக செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 11 வட்டாரங்களை சார்ந்த 190 அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக்குழுத்தலைவர், உறுப்பினர்கள் மற்றும் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply