முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களுக்கான வேலை வாய்ப்பினை ஊக்குவித்திடும் பொருட்டு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் வாயிலாக பல்வேறு விதமான தொழிற்பயிற்சிகள் வழங்கிட உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேலும் பயிற்சியில் கலந்து கொள்ள குறைந்த பட்சம் 35 நபர்கள் விருப்பம் தெரிவிக்கும் பட்சத்தில் அப்பயிற்சியானது அந்த மாவட்டத்திலேயே நடத்தப்படும். இப்பயிற்சியில் சேர்ந்து பயனடைய விரும்பும் முன்னாள் படைவீரர்கள் திருவில்லிபுத்தூரிலுள்ள முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தினை நேரில் அணுகி பயன் பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (06.09.2024) ராஜபாளையம் சின்மயா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் 12-ஆம் வகுப்பிலிருந்து சிறந்து விளங்கக்கூடிய 40 பள்ளி மாணவர்களுடனான "Coffee With Collector” என்ற 103- வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடி, கல்லூரிகள் தேர்வு, உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த உரிய வழிகாட்டுதல் வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, இன்று 103-வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தேகங்களை அகற்றி, அவர்கள் வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்பதெல்லாம், வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால் நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகளிடம், அவர்களுடைய இலட்சியம், அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம், அவர்கள் உயர்கல்வி பயில விரும்பும் கல்லூரி மற்றும் இடம் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.பள்ளி கல்லூரி படிப்பு என்பது ஒருவரின் வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும். எனவே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின் மூலம் வாழ்க்கைக்கான பல அனுபவங்களை கற்றுக் கொள்ளலாம். அனுபவங்களில் இருந்து கிடைக்கும் கல்விதான் சிறந்த கல்வியாகும்.பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி படிப்பை முடித்தவுடன் கல்லூரி படிப்பில் சேருவதற்காக அனைத்து கல்லூரிகளிலும் தவறாமல் விண்ணப்பம் செய்ய வேண்டும். கடந்தாண்டு எந்த கல்லூரியில் எவ்வளவு கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது போன்ற தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தங்களது தனித் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.பன்னிரெண்டாம் வகுப்பில் எடுக்க கூடிய மதிப்பெண்களை பயன்படுத்தி நமக்கான நல்ல வாயப்புகளை உருவாக்கி கொள்ள வேண்டும். உயர்கல்வி எங்கு பயின்றாலும், இந்தியாவில் சிறந்த கல்லூரியை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். வெற்றிக்கு தேவையான விஷயங்களை தொடர்ந்து ஆர்வத்துடன், கவனசிதறல் இல்லாமல், தொடர்ந்து விடா முயற்சியுடனும், கடினமாக உழைத்தால் எளிதாக வெற்றி பெறலாம்.மேலும், ஒவ்வொருவருக்கும் என்று தனித்திறமைகள் உள்ளன. அத்திறமைகளை அனைவரும் வளர்த்து கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்த சந்திப்பில் மாணவ, மாணவியர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு, இந்த நிகழ்ச்சி மூலம் எங்களுக்கு ஒரு புத்துணர்வு, ஊக்கம் அளிப்பதாகவும், மாவட்ட ஆட்சியர் போன்று தாங்களும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகி உள்ளதாகவும், எங்களுடைய கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் தெளிவான விடை கொடுத்ததாகவும், நாங்களும் மாவட்ட ஆட்சியர் போன்று சாதித்து காட்டுவோம் என்றும், இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு மாணவர்கள் தங்களது நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.
விருதுநகர் மாவட்டத்தில் மூன்றாவது புத்தகத் திருவிழா செப்டம்பர் 27.09.2024 முதல் அக்டோபர் 07.10.2024 வரை கே.வி.எஸ். ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது.இப்புத்தகத் திருவிழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள்,பிரபல எழுத்தாளர்களின் கருத்தரங்கு, , பள்ளி மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள், தொல்லியல் துறை அரங்குகள், உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் அனைத்து தரப்பு மக்களும் மாணவ ,மாணவியர்களும், கலந்து கொண்டு பயன் பெறுவதற்கு திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இப்புத்தகத் திருவிழாவின் மையக்கருத்து ” மரமும், மரபும் ”என்பதாகும். இப்புத்தகத் திருவிழா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு குறு மராத்தான் (10கி.மீ ) 15.09.2024 அன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தொடங்கப்பட உள்ளது . புத்தகத் திருவிழா விழிப்புணர்வு மராத்தானில் பொதுமக்களும் கலந்து கொள்ளலாம். ஆண்கள், பெண்கள் என இரண்டு பிரிவாக நடத்தப்படும். மேலும் பரிசுத் தொகையாக முதல் பரிசு ரூ.10,000 இரண்டாம் பரிசு ரூ.7000, மூன்றாம் பரிசு ரூ.5000 வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ..பஜெயசீலன்.,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
கரிசல் இலக்கியக் கழகம் சார்பாக வ.உ.சி. பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 07.09.2024 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு விருதுநகர் ஸ்ரீ அம்பாள் கிராண்ட் அரங்கத்தில் ‘வ.உ.சி.யும் இலக்கியமும்”என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.கரிசல் இலக்கியக் கழகத்தின் தலைவர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கருத்தரங்கில் தலைமையுரை வழங்குகிறார். பேராசிரியர் க. ஆறுமுகத்தமிழன் அவர்கள் சிறப்புரை ஆற்றுகிறார். பள்ளிக் கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.இந்த நிகழ்வில் கலை இலக்கிய ஆர்வலர்கள், கல்லூரி மாணவர்கள், எழுத்தாளர்கள் மற்றும் படைப்பாளர்கள் பங்கேற்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S.,அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை வட்டம் மேலாண்மறைநாடு கிராமத்தைச்சேர்ந்த இந்திய இராணுவத்தில் ஹவில்தாரராக பணிபுரிந்த சி.பொன்பாண்டியன் அவர்கள் தெலுங்கானா மாநிலம் செகந்தராபாத்தில் போர் ஒத்திகை பயிற்சியின் போது விபத்து ஏற்பட்டு மரணமடைந்தார். அன்னாரது பூத உடலுக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S,அவர்கள் ( 06.09.2024) மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினார்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (தாட்கோ) முன்னெடுப்பாக டாக்டர்.அம்பேத்கார் அகாடமி மற்றும் சென்னையில் உள்ள முன்னனி பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து 100 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணக்கர்களுக்கு ஒரு வருட காலம் UPSC தேர்வுக்கான (பொது அறிவு மற்றும் விருப்ப பாடங்கள்) முதல் நிலை - முதன்மை நிலை பயிற்சியினை வழங்கவுள்ளது.மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் (UPSC) தேர்வுக்கு தேர்வு எழுத தகுதியான மாணக்கர்கள் Screening test மூலம் தேர்வு செய்யப்பட்டு தேர்ச்சி பெற்ற மாணாக்கர்களை நேர்மூகத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு முதற்கட்டமாக தகுதியுள்ள 100 மாணக்கர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.இப்பயிற்சியினை பெற பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களும் 21 முதல் 36 வயது நிரம்பிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களாக இருக்க வேண்டும், இப்பயிற்சிக்கான கால அளவு ஒரு வருடம் விடுதியில் தங்கி படிக்க வசதியும், பயிற்சிக்கான செலவீன தொகை தாட்கோவால் மேற்கொள்ளப்படும்.இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம்.எனவே உரிய பயனாளிகள் விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில், அரசாணை எண்.14, இயற்கை வளங்கள் (எம்;.எம்.சி.1) துறை, நாள்:12.06.2024-ன்படி, நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பஞ்சாயத்துராஜ் கட்டுப்பாட்டில் உள்ள 284 கண்மாய்களில் விவசாயிகள் விவசாய பயன்பாட்டிற்கும் மற்றும் மண்பாண்டத் தொழில்களுக்கும் இலவசமாக களிமண் (Clay) மற்றும் வண்;டல் மண் (Silt) எடுக்க சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் மூலம் இணைய வழியாக அனுமதி வழங்கப்பட்டுவருகிறது.இத்திட்டத்தில் நாளது தேதிவரை 1312 விவசாயிகள் மற்றும் மண்பாண்டத் தொழிலாளர்கள் பயனடைந்துள்ளனர். கண்மாய்களில் களிமண் மற்றும் வண்டல் மண் எடுப்பதைக் கண்காணிக்கும் பொருட்டு மாவட்ட அளவில் துணை ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் நிலையில் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.மேலும், மேற்படி திட்டத்தினை முறைகேடாக பயன்படுத்தியதாக இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் வத்திராயிருப்பு வட்டங்களில் தலா ஒரு வழக்கு வீதம் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ஆறு (06) வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.எனவே, மேற்படி திட்டமானது விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர் பயன்பெறும் வகையில் சீறிய நோக்கத்தோடு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கப்பட்ட திட்டமாகும். இதில் முறைகேடு மற்றும் விதிமீறல்கள் இன்றி விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு மகத்தானது. விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின் தியாகத்தையும், பங்களிப்பையும் போற்றும் வகையில் சுதந்திர தின அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 75-வது சுதந்திர தின விழா உரையின் போது அறிவித்துள்ளார்கள்.சென்னை மெரினா கடற்கரையின் எதிரில், பாரம்பரியக் கட்டடமான ஹ{மாயுன் மஹால் கட்டடத்தில் சுமார் 80,000 சதுர அடி பரப்பளவில் அரசு அருங்காட்சியகங்கள் துறையின் மூலம் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்படவுள்ளது. இந்த அருங்காட்சியகம் சிறப்பாக அமைந்திட தமிழ்நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களின் பங்களிப்பும் தேவைப்படுகிறது. ஆகையால், விருதுநகர் மாவட்டத்திலுள்ள பொதுமக்கள் தங்களிடமுள்ள சுதந்திரப் போராட்டம் குறித்த பழங்கால ஆவணங்கள், கையெழுத்துப் பிரதிகள், செய்தித்தாள்கள், ஜெயில் வில்லைகள், இராட்டைகள், பட்டயங்கள், ஐ.என்.ஏ. சீருடைகள் மற்றும் ஐ.என்.ஏ. அஞ்சல் தலைகள் போன்ற சுதந்திரப்போராட்டம் தொடர்பான அரும்பொருட்கள் இருப்பின் அன்பளிப்பாக கொடுத்திடக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.அவ்வாறு, தங்கள் கைவசமுள்ள அரிய பொருட்களை சென்னை அரசு அருங்காட்சியகம் (பாந்தியான் சாலை, எழும்பூர்-08)அல்லது விருதுநகரிலுள்ள அரசு அருங்காட்சியகத்தில் (40/1, லிங்க் ரோடு, வி.வி.ஆர். அரங்கம், விருதுநகர்-01, அலைப்பேசி-99944-59521) வழங்கலாம். இவ்வாறு வழங்கப்படும் பொருட்களுக்கு உரிய ஒப்புகைக் கடிதம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அருங்காட்சியக ஆணையர் அவர்களால் வழங்கப்படும்.இவ்வாறான அரிய பொருட்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் பொழுது அதை வழங்கியவர்களின் பெயர்களும் இடம்பெறும். ஆகவே விருதுநகர் மாவட்ட பொதுமக்கள் தங்களிடமுள்ள சுதந்திரப் போராட்டம் தொடர்பான அரும்பொருட்களை கொண்டு அமையவுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அருங்காட்சியகத்திற்கு நன்கொடையாக வழங்க வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களான விருதுநகர் / அருப்புக்கோட்டை / சாத்தூர் / திருச்சுழியில் 2024-ம் ஆண்டிற்கான ஓராண்டு / ஈராண்டு தொழிற்பிரிவுகளில் சேர பயிற்சியாளர்கள் நேரடிச்சேர்க்கை மூலம் 31.08.2024 முடிய சேர்ந்து கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டது. தற்போது ஒரு சில தொழிற்பிரிவுகளில் 100 சதவீத பயிற்சியாளர்கள் சேர்க்கை பூர்த்தியடையாத காரணத்தினால் மேலும் 30.09.2024 முடிய நேரடி சேர்க்கைக்கு காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.இப்பயிற்சிக்கு இருபாலரும் (ஆண்/பெண்) 30.09.2024-க்குள் உரிய தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடியாக விண்ணப்பித்து பயன் பெறலாம். இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கு மேல் பயின்ற அனைவரும் தகுதியானவர்கள்.வயது வரம்பு ஆண்களுக்கு குறைந்தபட்ச வயது 14 முதல் அதிகபட்ச வயது 40 வரை மற்றும் மாற்றுத்திறனாளி / முன்னாள் இராணுவத்தினருக்கு விதிகளின்படி 5 ஆண்டு வயது வரம்பில் தளர்வு உண்டு. பெண்களுக்கு குறைந்தபட்சம் 14 முதல் அதிகபட்ச வயது உச்ச வரம்பு ஏதும் இல்லை. விண்ணப்பக்கட்டணமாக ரூ.50/-யை செலுத்தி விருதுநகர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள (இயந்திர வேலையாள், தீயணைப்பு தொழில்நுட்பம் மற்றும் தொழிற்சாலை பாதுகாப்பு மேலாண்மை, உட்புற வடிவமைத்தல் மற்றும் அலங்கரித்தல் மற்றும் தொழிற்துறை எந்திரவியல் மற்றும் எண்ணியல் உற்பத்தி தொழில்நுட்பவியலாளர்) ஓராண்டு/ஈராண்டு தொழிற்பிரிவுகளில் சேரலாம். மேலும், சேர்க்கை கட்டணம் ஓராண்டு தொழிற்பிரிவிற்கு ரூ.185/- ஈராண்டு தொழிற்பிரிவிற்கு ரூ.195/- ஆகும். அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவ / மாணவிகளுக்கு தமிழக அரசால் பின்வருமாறு விலையில்லா உபகரணங்கள் வழங்கப்படுகிறது. மிதிவண்டி / கட்டணமில்லா பேருந்து பயணச் சலுகை / மாதாந்திர கல்வி உதவித் தொகை ரூ.750/- (வருகைக்கு ஏற்ப) / சீருடை 2 செட் (தையல்கூலியுடன்) / மூடு காலணி 1 செட் / பாடப்புத்தகங்கள் / வரைபட கருவிகள் / பயிற்சியாளர் அடையாள அட்டை / அரசு பள்ளியில் 6 முதல் 10 ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பெறும் பெண்களுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 /- மற்றும் 2024-ம் ஆண்டு ஆகஸ்ட முதல்; பயிற்சியில் சேரும் ஆண் பயிற்சியாளர்களுக்கு தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 /- கூடுதலாக உதவித்தொகை வழங்கப்படும். விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் (10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் (2021-ம் ஆண்டு தேர்ச்சி பெற்ற 10-ம் வகுப்பு மாணவர்கள் 9-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்) / பள்ளி மாற்றுச்சான்றிதழ் / சாதிச்சான்றிதழ் / ஆதார் அட்டை / பாஸ்போர்ட் அளவு புகைப்படம்) மற்றும் மின்னஞ்சல் முகவரி கைபேசி எண் விவரம். மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய அரசு தொழிற்பயிற்சி நிலைய தொலைபேசி எண்களான விருதுநகர்: 04562-294382 / 252655, அருப்புக்கோட்டை: 04566-225800 சாத்தூர்: 04562-290953 / திருச்சுழி: 95788-55154/ 70100-40810 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S. அவர்கள் தெரிவித்துள்ளார்.
மாவட்ட நிர்வாகம், கல்வித்துறை மற்றும் வனத்துறை இணைந்து விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் அரசு/அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் பள்ளி மாணவர்களுக்கு “இளம் பசுமை ஆர்வலர்“ என்ற சிறப்பு பயிற்சி முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் முதற்கட்ட பயிற்சி முகாமானது நான்கு கல்லூரிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.1. ராம்கோ பொறியியல் கல்லூரி, இராஜபாளையம்2. செந்திகுமார நாடார் கலைக்கல்லூரி, விருதுநகர்3. இராமசாமி நாயுடு கலைக்கல்லூரி, சாத்தூர்4. சௌடாம்பிகா பொறியியல் கல்லூரி, அருப்புக்கோட்டைமேற்கண்ட பயிற்சியில் இயற்கை மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் ஆர்வமும் விருப்பமும் உள்ள கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் வரும் ஞாயிறு 08.09.2024 அன்று காலை 7.00 மணி முதல் 5.30 மணி வரை நடைபெறும் பயிற்சியில் கலந்து கொள்ளலாம்.ஒரு நாள் பயிற்சி கட்டணமாக ரூ.200/- செலுத்தப்பட வேண்டும். மாணவர்களுக்கு இலவசம். பயிற்சியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் காலை மற்றும் மதியஉணவு பயிற்சி நடைபெறும் கல்லூரியில் வழங்கப்படும் .இதன் தொடர்சியாக இரண்டாம் பயிற்சி 14.09.2024 சனிக்கிழமை அன்று நடைபெற உள்ளது. மேலும் பயிற்சி சார்ந்த முன்பதிவிற்கு 79042-67235 என்ற கைபேசியை தொடர்பு கொள்ளலாம். எனவே ஆர்வம் உள்ள பொதுமக்கள் கலந்துகொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.