25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Jun 21, 2024

சாத்தூர் நகராட்சியில் நுண் உயிர் உரம் தயாரிக்கும் மையத்தினை ஆய்வு

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் மூலம் நடைபெற்று வரும் வரும் ஆய்வுப்பணிகளில்  (20.06.2024) சாத்தூர் நகராட்சியில் நுண் உயிர் உரம் தயாரிக்கும் மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,  I A S., அவர்கள் பார்வையிட்டு, நகராட்சிப் பகுதி ஒவ்வொரு வார்டுகளில்  இருந்து பெறப்படும் திடக்கழிவுகள் பிரிக்கப் பட்டு உரம் தயாரிக்கும் பணிகளை ஆய்வு செய்தார்

Jun 21, 2024

கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு மற்றும் மருத்துவத் துறைகளில் அளப்பரிய சாதனை புரிந்தவர்களுக்கு “பத்ம விருது” வழங்கப்படவுள்ளது

பன்முக திறமைக்கான விருதான ‘பத்ம விருது” குடியரசு தின விழா 2025 ஆம் ஆண்டிற்கு விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான நபர்கள் (ஆண்/பெண்) உடன் விண்ணப்பிக்கலாம்.2025 ஆம் ஆண்டிற்கு கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு மற்றும் மருத்துவத் துறைகளில் அளப்பரிய சாதனை புரிந்தவர்களுக்கு 26.01.2025 அன்று குடியரசு தின விழாவில் மாநில அளவில் விருது வழங்கப்படவுள்ளது. மேற்படி விருதிற்கு பன்முக திறமை புரிந்த நபர்களிடமிருந்து கருத்துரு 15.09.2024-க்குள் இணையதளம் (www.padmaawards.gov.in) மூலம் வரவேற்கப்படுகிறது.15.09.2024-க்குள் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான நபர்கள் இணையதளத்தில் விண்ணப்பித்த  விபரத்தினை மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், விருதுநகர் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறும், மேலும் இது தொடர்பான விபரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகத்தினை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jun 21, 2024

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பதிவு செய்து, 18 வயது நிரம்பிய முதிர்வுத் தொகை கிடைக்கப்பெறாமல் உள்ள பயனாளிகளின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தின், விருதுநகர் மாவட்டத்தில் பதிவுசெய்து, 18 வயது நிரம்பிய முதிர்வுத்தொகை கிடைக்கப்பெறாமல் உள்ள பயனாளிகளுக்கு முதிர்வுத்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ், - முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பதிவு செய்து, 18 வயது நிரம்பிய முதிர்வுத்தொகை கிடைக்கப்பெறாமல் உள்ள பயனாளிகள் கீழ்க்காணும் ஆவணங்களோடு சம்பந்தப்பட்ட வட்டாரவளர்ச்சி அலுவலகங்களில் உள்ள சமூகநல விரிவாக்க அலுவலர்களிடம் முதிர்வுத் தொகைக்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.சமர்ப்பிக்க வேண்டிய சான்றுகள்:  1. வைப்பு நிதிப்பத்திரம்.  2. பத்தாம் வகுப்புமதிப்பெண் சான்றிதழ் - நகல்.  3. பயனாளியின் வங்கிக்கணக்குப் புத்தகம் - நகல்.  4. பயனாளியின் வண்ணப் புகைப்படம்.  

Jun 21, 2024

பட்டாசு தயாரிப்பில் பட்டாசு தொழிற்சாலைகள் ஈடுபடுவதாக தெரியவந்தாலோ அல்லது உரிமமின்றி சட்ட விரோதமான முறையில் பட்டாசுகள் தயாரிப்பது தெரியவந்தாலோ, அது தொடர்பான விபரங்களை மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கலாம்

விருதுநகர் மாவட்டத்தில், சுமார் 1098 பட்டாசு தொழிற்சாலைகள் மற்றும் சுமார் 3000 பட்டாசு கடைகள் என மொத்தம் 4000-க்கும் மேற்பட்ட பட்டாசு தொழில் தொடர்பான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.  இப்பட்டாசு உற்பத்தி தொழிற்சாலைகளில் விபத்துக்களை தவிர்த்திடும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் வெடி மருந்துகள் கையாளுதல் தொடர்பாக, பட்டாசு தொழிற்சாலையில் பணிபுரியும் போர்மேன்கள், தொழிலாளர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு சிவகாசியில் உள்ள தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கத்தின் பயிற்சி மையத்தில், பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.இந்த பயிற்சியில் கலந்து கொள்ள முதல் முறை கட்டணமின்றியும், முதல்முறை கலந்து கொள்ளாத பட்டாசு தொழிற்சாலைகளுக்கு இரண்டாம் முறை கலந்து கொள்ள ரூ.5,000/- அபராதமாக செலுத்தவும், மேலும் இரண்டாம் முறை கலந்து கொள்ளாமல் மூன்றாம் முறை பயிற்சியில் கலந்து கொள்ளும் பட்டாசு தொழிற்சாலைகளுக்கு ரூ.10,000/- அபராதம் செலுத்திட வேண்டும் என மாவட்ட அளவிலான பாதுகாப்புக் குழு கூட்டத்தில் முடிவு செய்யபட்டு, மேற்படி முதல் பயிற்சியில் கலந்து கொள்ளாத 57 பட்டாசு தொழிற்சாலைகளுக்கு ரூ.5000/-வீதம், இதுவரை சுமார் ரூ.2,85,000/-அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மூன்று முறையிலும் பயிற்சிகள் பெறாமல் தவிர்த்த பட்டாசு தொழிற்சாலைகளின் உரிமத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த பயிற்சி மையம் வாயிலாக ஜனவரி-2024 முதல் மே 2024 வரையிலான காலத்தில், பட்டாசு தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் மொத்தம் 1977 நபர்களுக்கும், போர்மேன்கள்/ சூப்பிரவைசர்கள் மொத்தம் 428 நபர்களுக்கும் மற்றும் பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர்கள் சுமார் 30 நபர்களுக்கும் என ஆகமொத்தம் 2435 நபர்களுக்கு இதுநாள் வரையிலும் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டத்தில், வெடிபொருள் சட்ட விதிகளை மீறி பட்டாசு உற்பத்தியில் ஈடுபடும் தொழிற்சாலைகளை கண்டறிந்து அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுவதற்கு ஏதுவாக விருதுநகர், மாவட்ட ஆட்சியர் அவர்களால் நான்கு சிறப்பு ஆய்வுக்குழுக்கள் அமைக்கப்பட்டு, தினந்தோறும் பட்டாசு தொழிற்சாலைகள் ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன.  மேற்படி சிறப்பு ஆய்வுக்குழுக்களால் இவ்வாண்டில் மட்டும் இதுநாள் வரையிலும் சுமார் 504 பட்டாசு தொழிற்சாலைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளபட்டு, அதில், 102 பட்டாசு தொழிற்சாலைகளின் விதிமீறல்கள் கண்டறியப்பட்டு, உரிமங்கள் தற்காலிக இடைநிறுத்தம் செய்யவும், நிரந்தரமாக இரத்து செய்யவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.மேலும், இந்த ஆண்டிற்கான தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், அனைத்து பட்டாசு தொழிற்சாலைகளின் உரிமையாளர்களும், வெடிபொருள் சட்ட விதிகளுக்கு உட்பட்டும், மாண்பமை உச்ச நீதிமன்ற உத்தரவு மற்றும் அரசு வழிகாட்டுதல்களை பின்பற்றி பட்டாசு உற்பத்தி பணிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விதிமுறைகளை மீறி பட்டாசு உற்பத்திகள் மேற்கொள்ளும் நபர்கள் மீது, நடவடிக்கை எடுத்திட பட்டாசு தொழிற்சாலைகள் சிறப்பு ஆய்வுக் குழுவினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலைகள், வெடிபொருள் சட்ட விதிகளுக்கு புறம்பாக  உள் குத்தகை, உள் வாடகை விடுதல் மற்றும் மனித உயிர்களுக்கு ஆபத்துக்கள் ஏற்படும் விதத்தில் பட்டாசு தயாரிப்பில்; பட்டாசு தொழிற்சாலைகள் ஈடுபடுவதாக தெரியவந்தாலோ அல்லது உரிமமின்றி சட்ட விரோதமான முறையில் பட்டாசுகள் தயாரிப்பது தெரியவந்தாலோ, அது தொடர்பான விபரங்களை பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர்கள், பட்டாசு தொழிலாளர்கள் மற்றும் பட்டாசு தொழில் நல அமைப்புகள், மாவட்ட நிர்வாகத்திற்கு  வாட்ஸ் அப் எண். 94439 67578 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும் என  மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,   I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jun 20, 2024

சாத்தூர் வட்டத்தில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற திட்டத்தின் கீழ், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் பொதுமக்களிடம் சென்றடைவது குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் கள ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்

மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் மக்களை தேடிச்சென்று குறைகளைக் கேட்டறியவும், பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும், மக்களை நாடி மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே சென்று ஆய்வு செய்திட "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற புதிய திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதன்படி, விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டத்தில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற புதிய திட்ட முகாமானது 19.06.2024 இன்று காலை 9 மணி முதல் மறுநாள் 20.06.2024 அன்று காலை 9 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த முகாமின் கீழ், பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் அரசின் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.அதனடிப்படையில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சாத்தூர் வட்டார வேளாண்மை விரிவாக்க அலுவலக வளாகத்தில், புதிய அலுவலகம் கட்டுவது தொடர்பான ஆய்வு மேற்கொண்டும், மேல காந்திபுரம் அரசு மேல்நிலைபள்ளியில் கற்பிக்கும் முறைகள், அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் உயர்கல்வியில் 7.5 சதவிகித இடஒதுக்கீடு குறித்து எடுத்துரைத்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.பின்னர், துணைமின் நிலையத்தை பார்வையிட்டு, நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து, மின் உபகரணங்களை முறையாக பராமரிப்பு செய்து, தடையில்லா மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய அலுவலர்களை அறிவுறுத்தினார்.சாத்தூர் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் அலுவலகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து, நிலையத்தின் செயல்பாடுகள், ஊர்தி மற்றும் உபகரணங்களின் பராமரிப்பு, தீயணைப்பு வீரர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகள், நிலையத்தில் உள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.மேலும், சாத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிசிடிவி கண்காணிப்பு பணிகள் தொடர்பாக பார்வையிட்டு ஆய்வு செய்தார். சாத்தூர் நியாயவிலைக்கடையில் உள்ள பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர், மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நியாயவிலைகடையில் மாற்று நபர் மூலம் பொருட்கள் வாங்குவதற்கு தடையின்மை சான்று பெறுவதற்கான தேவையான நடவடிக்கை எடுப்பதற்கு உத்தரவிட்டார்.அதனைத்தொடர்ந்து, இ-சேவை மையத்தினை ஆய்வு செய்து, அங்கு வரும் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் மற்றும் வழங்கப்படும் சேவைகளுக்காக பெறப்படும் கட்டண விவரங்கள் குறித்து கேட்டறிந்தார் மற்றும் இ-சேவை மையத்தில் ஆதார் அட்டையை புதுப்பிக்க வந்த பள்ளி மாணவனிடம் தங்களது பள்ளிகளிலேயே ஆதார் அட்டை புதுப்பிக்க தேவையான ஏற்பாடுகள் செய்துள்ளதாக தெரிவித்தார்.மேலும், வட்டாட்சியர் அலுவலகத்தை ஆய்வு செய்து, பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள தீர்வுகள் குறித்து கேட்டறிந்து, பெறப்படும் மனுக்களுக்கு தேக்கநிலை இல்லாமல் விரைந்து தீர்வு காண  அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தனது மாற்றுத்திறனாளி மகனுக்கு உதவித்தொகை வேண்டி வந்த மனுதாரருக்கு உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.பின்னர், சாத்தூர் கிராம நிர்வாக அலுவலகத்தை நேரில் சென்று பார்வையிட்டு, கிராம கணக்கு பதிவேடுகள் மற்றும் கோப்புகளை ஆய்வு செய்தார். சாத்தூர் நகராட்சியில்  நடைபெற்று வரும் ஒப்பந்தப்பணிகள், குடிநீர் மற்றும் சுகாதாரம் தொடர்பான கோப்புகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தும்,அயன்சத்திரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவுத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தையல் இயந்திரம் வேண்டிய விண்ணப்பித்த மனுதாரருக்கு உடனடியாக தையல் இயந்திரம் வழங்க்  அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். சாத்தூரில் உள்ள அங்கன்வாடி மையத்தினை ஆய்வு செய்து, பயன்பெறும் குழந்தைகளின் எண்ணிக்கை, வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவுகள், வயதிற்கேற்ற உயரம் மற்றும் எடை உள்ளிட்டவைகள் குறித்து கேட்டறிந்தார்.தமிழ்நாடு அரசின் கலைஞரின் மகளிர் உரிமை திட்டம் மூலம் மாதந்தோறும் ரூ.1000/- பெறும் குடும்பத்தலைவிகளிடம் இத்திட்டத்தின் பயன்கள் குறித்து கேட்டறிந்தார்.அதனை தொடர்ந்து, அனைத்து ஊராட்சிகளில் மேற்கொள்ள வேண்டிய குடிநீர், சுகாதாரம் மற்றும் சாலைப் பணிகள், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் உரிய பயனாளிகளை சென்றடைவதை உறுதி செய்வது குறித்து அனைத்து அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.மேலும், சாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை பெற்றுக் கொண்டார்.பின்னர், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.13,464/- மதிப்பிலான மானியத்துடன் கூடிய விதைகள் மற்றும் பண்ணைக்கருவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

Jun 19, 2024

செங்கமலபட்டி தனியார் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சிவகாசி வட்டம், செங்கமலபட்டி தனியார் பட்டாசு தொழிற்சாலையில் (09.05.2024) அன்று ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து மொத்தம் ரூ.30 இலட்சம் நிவாரணத் தொகைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் (18.06.2024)  வழங்கினார்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், சிவகாசி வட்டம், செங்மலப்பட்டியில் இயங்கி வந்த தனியாருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலையில் 09.05.2024 அன்று எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 இலட்சம் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டிருந்தார்.தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலில் இருந்த காரணத்தால், வழங்கப்படாமல் இருந்த நிவாரணத் தொகைகள் இன்று பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.அதன்படி, வெடிவிபத்தில் உயிரிழந்த சிவகாசி வட்டம் மத்தியசேனை கிராமத்தைச் சேர்ந்த திரு.ரமேஷ் என்பவரின் வாரிசுதாரரான (மனைவி) திருமதி முத்துச்செல்வி என்பவருக்கும், வி.சொங்கலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த திரு.காளிஸ்வரன் என்பவரின் வாரிசுதாரரான (மனைவி) திருமதி முருகேஷ்வரி என்பவருக்கும், ரிசர்வ் லயன் காந்தி நகரைச் சேர்ந்த திருமதி முத்து என்பவரின் வாரிசுதாரரான (கணவர்) திரு.மச்சக்காளை என்பவருக்கும்,ரிசர்வ் லயன் காந்தி நகரைச் சேர்ந்த திருமதி ஆவுடையம்மாள் என்பவரின் வாரிசுதாரரான (கணவர்) திரு.மாயாண்டி என்பவருக்கும், ரிசர்வ் லயனைச் சேர்ந்த திருமதி லட்சுமி என்பவரின் வாரிசுதாரரான (கணவர்) திரு.வேலுச்சாமி என்பவருக்கும், கோபுரம் காலனியைச் சேர்ந்த திருமதி வசந்தி என்பவரின் வாரிசுதாரரான (கணவர்) திரு.இந்திரசக்தி என்பவருக்கும், மத்தியச்சேனையைச் சேர்ந்த திருமதி வீரலட்சுமி என்பவரின் வாரிசுதாரரான (சகோதரர்) திரு.வெள்ளைச்சாமி என்பவருக்கும்,  இந்திரா நகரைச் சேர்ந்த திருமதி ஜெயலட்சுமி என்பவரின் வாரிசுதாரரான (கணவர்) திரு.கண்ணன் என்பவருக்கும், இந்திரா நகரைச் சேர்ந்த திரு.அழகர்சாமி என்பவரின் வாரிசுதாரரான (மனைவி) திருமதி பாப்பாத்தி என்பவருக்கும், சின்னையாபுரத்தைச் சேர்ந்த திரு.விஜயகுமார் என்பவரின் வாரிசுதாரரான (தாயார்) திருமதி ருக்மணி என்பவருக்கும் என உயிரிழந்த 10 நபர்களின் வாரிசுதார்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.30  இலட்சம் நிவாரணத் தொகைக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் வழங்கினார்.

Jun 19, 2024

1433-ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) இறுதி நாள்

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் 1433-ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாயத்தின் (ஜமாபந்தி) இறுதி  நாளான இன்று (18.06.2024)  வருவாய்த் தீர்வாய அலுவலர் மற்றும்  மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S , அவர்கள்  பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை பெற்றுக் கொண்டார்.வெம்பக்கோட்டை வட்டத்தில் 1433-ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி)11.06.2024 முதல் 18.06.2024 வரை (சனி, ஞாயிறு மற்றும் திங்கள் நீங்கலாக) நடைபெற்றது. வெம்பக்கோட்டை, கீழராஜகுலராமன்   ஆகிய நான்கு குறுவட்டங்களில் உள்ள 37 வருவாய் கிராமங்களுக்கான கணக்குகள் வருவாய் தீர்வாய அலுவலர் மற்றும் விருதுநகர்  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் தணிக்கை செய்யப்பட்டது.மேலும், பெறப்பட்ட மனுக்களை பரிசீலனை செய்து, வருவாய் தீர்வாயத்தின் முக்கிய நிகழ்வாக பொதுமக்களிடம் குறைகள் தீர்க்கும் பொருட்டு 327 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றில் 15 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு, 15  பயனாளிகளுக்கு உரிய உத்தரவுகள் வழங்கப்பட்டது. மீதமுள்ள மனுக்களை விரைந்து நிறைவு செய்ய மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.இந்த வருவாய் தீர்வாயத்தின் மூலம் 10 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் உத்தரவுகளையும், 4 பயனாளிகளுக்கு முதியோர் ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளையும், 1  பயனாளிக்கு குடும்ப அட்டையினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.  இந்நிகழ்ச்சியில் வெம்பக்கோட்டை வட்டாட்சியர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்

Jun 19, 2024

வெம்பக்கோட்டையில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள்

 தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், (18.06.2024) தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அகழாய்வு பணிகளை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்ததை தொடர்ந்து, விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டையில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகளை விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ப.மாணிக்கம் தாகூர் அவர்கள் மற்றும் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் நடைபெற்று வரும் அகழ்வாய்வு பணிகளை பார்வையிட்டார்.வைப்பார் ஆற்றின் நதிக்கரை ஒட்டிய  நாகரிகத்தில் இருந்து செலுத்தோங்கிய தமிழரின் பண்பாட்டை அறிவியல் பூர்வமாக எடுத்து ஆவண படுத்துவதற்காக ஏற்கனவே வெம்பக்கோட்டை இரண்டு கட்டங்களாக அகழாய்வு பணிகள் முடிக்கப்பட்டு, அதில் எடுக்கப்பட்ட தொல்லியல் பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளம் மேட்டுக்காட்டில் கடந்த 16.03.2022 அன்று முதற்கட்டமாகவும், 06.04.2023 அன்று இரண்டாம் கட்டமாகவும், அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டு பணிகள் நடைபெற்றன.தற்பொழுது மூன்றாவது கட்ட அகழாய்வு பணிகளை  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்திருக்கிறார்கள்.இந்த மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் சுமார் ரூ.30 இலட்சம் மதிப்பில் இன்று தொடங்கப்பட்டிருக்கின்றது.வெம்பக்கோட்டை என்பது தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை வட்டத்தில், வைப்பார் ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது சிவகாசி - கழுகுமலை சாலையில் சிவகாசியிலிருந்து 15 கிமீ தொலைவிலும், கழுகுமலைக்கு தெற்கே 23 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. அய்யனார் கோயிலுக்கு வடக்கே பெரிய தொல்லியல் வாழ்விட மேடு அமைந்துள்ளது. இத்தொல்லியல் மேடு உள்ளூர் மக்களால் மேட்டுக்காடு அல்லது உச்சிமேடு என்று அழைக்கப்படுகிறது. 25 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் பரந்து அமைந்திருக்கும் வாழ்விடமேடானது தரை மட்டத்திலிருந்து சுமார் 2 மீ உயரம் வரை உயர்ந்து, புவியியல் ரீதியாக 9º 20'3.3972" N மற்றும் 77º 46'2.568" E-  க்கு இடையில் அமைந்துள்ளது.தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் 2021-2022 ஆம் ஆண்டு வெம்பக்கோட்டையில் அகழாய்வு தொடங்கப்பட்டது. இங்கு மேற்கொள்ளப்பட்ட இரண்டு கட்ட அகழ்வாராய்ச்சியில் மொத்தம் 34 அகழாய்வு குழிகள் தோண்டப்பட்டுள்ளன, மேலும் 7800-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கிடைத்துள்ளன.வெம்பக்கோட்டை அகழாய்வில் நுண்கற்காலத்தைச் சேர்ந்த கருவிகள், கருவிகளை செய்ய பயன்படும் மூலப்பொருட்கள் அதிக அளவில் கிடைத்துள்ளன. அகழாய்வில் அதிக எண்ணிக்கையிலான சங்குகளால் செய்யப்பட்ட வளையல்கள், மணிகள், மோதிரங்கள் மற்றும் மூலப்பொருட்கள் கிடைத்துள்ளன. இவை வெம்பக்கோட்டை சங்க காலத்தில் சங்கு பொருட்கள் செய்யும் தொழிற்கூடமாக இருந்தமைக்கானச் சான்றுகளாக அமைகின்றன.இரண்டாம் கட்ட அகழாய்வில் கண்ணாடி மணிகள் உற்பத்தி செய்தமைக்கான தொழிற்கூடச் சான்றுகள் கிடைத்துள்ளன.வெம்பக்கோட்டை உள்நாட்டு மற்றும் வடநாட்டுடன் வணிகத் தொடர்பு இருந்தமைக்கானச் சான்றுகளாக சூதுபவள மணிகள், செவ்வந்திக்கல் மணிகள், மற்றும் அறிய வகை கற்களால் செய்யப்பட்ட மணிகள், தந்தத்திலான செய்யப்பட்ட மணிகள், ஆட்டக்காய்கள், பதக்கங்கள் மற்றும் சுடுமண்ணால் செய்யப்பட்ட முத்திரைகள் கிடைத்துள்ளன.மேலும் சுடுமண்ணால் செய்யப்பட்ட விளையாட்டுப் பொருட்களான ஆட்டக்காய்கள், பகடைக்காய், பந்துகள், வட்டச்சில்லுகள், சிறிய கலையங்கள் மற்றும் மனித, விலங்கு உருவங்கள் அதிக அளவில் கிடைத்துள்ளன. இரண்டு கட்ட அகழாய்வுகள் சேர்த்து மொத்தம் 13 செப்பு நாணயங்கள் கிடைத்துள்ளன. அதில் வேநாடு சேரர் நாணயங்கள், மதுரை நாயக்கர் கால நாணயங்கள், செஞ்சி நாயக்கர் கால நாணயங்கள் மற்றும் தஞ்சை நாயக்கர் கால நாணயங்கள் கிடைத்துள்ளன.சுடுமண் அணிகலன்களாக மணிகள், காதணிகள், பதக்கங்கள் ஆகியவை கிடைத்துள்ளன. சுடுமண்ணால் செய்யப்பட்ட 20- க்கும் மேற்பட்ட திமிலுள்ள காளைகள் கிடைத்துள்ளன. மேலும் 100-க்கும் மேற்பட்ட இரும்புப் பொருட்களும், 40க்கும் மேற்பட்ட செப்புப் பொருட்களும் கிடைத்துள்ளன. தங்கத்திலான செய்யப்பட்ட 4 அணிகலன்கள் அகழாய்வில் கிடைத்துள்ளன.அகழாய்வில் சிவப்பு வண்ணப் பானை ஓடுகள், கருப்பு-சிவப்பு வண்ணப் பானை ஓடுகள், மெருகூட்டப்பட்ட கருப்பு வண்ணப் பானை ஓடுகள் மற்றும் சிவப்பு வண்ணம் பூசப்பட்ட வண்ணப் பானை ஓடுகள் போன்றவை கிடைத்துள்ளன.வெம்பக்கோட்டை வாழ்விட மேட்டில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் மூலம் இம்மேடானது தொடக்க வரலாற்றுக் கால முதல் -இடைக்கால வரையிலான தொடர்ச்சியான எச்சங்களை வெளிப்படுத்துகிறது.இந்த அகழாய்வில் இதற்கு இருந்து எடுக்கக்கூடிய தொல் தமிழர்களின் தொல்பொருள்கள், சான்றுகள் எல்லாம் விருதுநகர் மாவட்டத்தில் தற்பொழுது சுமார் ரூ.6.8 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரக்கூடிய அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்துவதற்காகவும், இந்த அகழாய்வு பணிகள் மூலமாக வரக்கூடிய சான்றுகளை எல்லாம் ஆவணப்படுத்தி இந்த பகுதியின் உடைய வரலாறு குறித்து நூலாக எழுதுவதற்கு தொல்லியல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

Jun 19, 2024

வனமூர்த்திலிங்கபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மாணவர்களின் கல்வி தரம் குறித்து ஆய்வு

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் கணஞ்சாம்பட்டி ஊராட்சி வனமூர்த்திலிங்கபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,  I A S., அவர்கள்  (18.06.2024) நேரில் சென்று பார்வையிட்டு மாணவர்களின் கல்வி தரம் குறித்து ஆய்வு ஆய்வு

Jun 19, 2024

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் மாற்றுத்;திறனாளிகள் நலத்துறை சார்பாக மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக  மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் மாற்றுத்;திறனாளிகள் நலத்துறை இணைந்து விருதுநகர் மாவட்டம் சூலக்கரையில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில்  21.06.2024 அன்று சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் 30 க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ,டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடைய மாற்றுத்திறனாளி மற்றும் பொது வேலைநாடுநர்களை தேர்வு செய்ய உள்ளார்கள்.இவ்வேலை வாய்ப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகள் பயனடையும் வகையில் அவர்களுக்கான பிரத்யேக பயிற்சி அளித்து பணியில் அமர்த்தும் தனியார் துறை நிறுவனங்கள் பங்கு பெறவுள்ளனர். தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் நேர்காணலில் கலந்து கொள்ள வேலைவாய்ப்பு அடையாள அட்டை, அனைத்து கல்விச்சான்றுகளின் நகல் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் 21.06.2024 அன்று காலை 09.00 மணிமுதல் மாலை 3.00 மணிவரை கலந்து கொண்டு பயன்பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது.இது முற்றிலும் ஒரு இலவச சேவையாகும். இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் மற்றும் வேலையளிப்போர் ஆகியோர் https://tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிப்பு ஏற்படாது. எனவே, இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

1 2 ... 45 46 47 48 49 50 51 ... 69 70

AD's



More News