விருதுநகர் மாவட்டத்தில் (04.02.2026) தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக் குழுத்தலைவர் திரு.எஸ்.காந்திராஜன் அவர்கள் தலைமையில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை முதன்மைச் செயலாளர் முனைவர் கி.சீனிவாசன் அவர்கள் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி அவர்கள் ஆகியோர் முன்னிலையில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக்குழு உறுப்பினர்கள் டாக்டர் தி.சதன் திருமலைக்குமார்(வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர்), திரு.இராம கருமாணிக்கம்(திருவாடானை சட்டமன்ற உறுப்பினர்) மற்றும் திரு.எஸ்.எஸ்.பாலாஜி(திருப்போரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர்) ஆகியோர் பல்வேறு துறைகள் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டார்கள்.அதன்படி, அருப்புக்கோட்டை நகராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 7.57 கோடி மதிப்பில் தினசரி சந்தை மார்க்கெட் கட்டப்பட்டு வரும் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு, பணிகளின் தற்போதைய நிலை மற்றும் தரம் குறித்து ஆய்வு செய்து, உரிய காலத்தில் பணிகளை முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அறிவுறுத்தினார்கள்.பின்னர், அருப்புக்கோட்டை நகராட்சியில் கூட்டுறவுத்துறை சார்பில் அரசு மானியம் பெற்று செயல்பட்டு வரும் முதல்வர் மருந்தகத்தினை நேரில் சென்று பார்வையிட்டு, மருந்தகத்தின் செயல்பாடுகள், மருந்துகளின் வகைகள், கொள்முதல் செய்யும் முறை, நுகர்வோரை அணுகும் முறை, பொதுமக்கள் பெறும் பயன்கள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார்கள்.தொடர்ந்து, அருப்புக்கோட்டை வட்டம், பந்தல்குடியில் ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனம் மூலம் செயல்படாத சுரங்கப் பகுதிகளை சீரமைத்து அமைக்கப்பட்டுள்ள ராம்கோ சுற்றுச்சூழல் சீரமைப்புப் பூங்காவினை, நேரில் சென்று பார்வையிட்டு, பூங்காவின் அமைப்பு, வளர்க்கப்படும் மரங்கள், தேவையற்ற கற்கள் மற்றும் உள்ளூர் செடிகளால் உருவாக்கப்பட்டுள்ள கல்பூங்கா, நடைபாதை, அடர்வனம்(மியாவாக்கி) உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தனர். அதனைத்தொடர்ந்து, விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் கன்னிச்சேரியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.7 கோடி மதிப்பில் கே.புதூர் - சிவகாசி ஒன்றிய சாலையில் அர்ஜுனா ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்கப்பட்டு வரும் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு, பணிகளின் தற்போதைய நிலை மற்றும் தரம் குறித்து ஆய்வு செய்து, உரிய காலத்திற்குள் பணிகளை முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அறிவுறுத்தினார்கள்.பின்னர், விருதுநகர் நகராட்சிக்குட்பட்ட, கோட்டைப்பட்டியில் நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.4 கோடி மதிப்பீட்டில், அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பூங்கா அமைக்கப்பட்டு வரும் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு, பணிகளின் தற்போதைய நிலை மற்றும் தரம் குறித்து ஆய்வு செய்து, உரிய காலத்திற்குள் பணிகளை முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அறிவுறுத்தினார்கள். தொடர்ந்து, விருதுநகர் புதிய பேருந்து நிலையம் அருகில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், கிருஸ்துவ மகளிர் உதவும் சங்கம் மூலம் கடனுதவி பெற்று, சிறுதானிய உணவுப் பொருட்கள் தயாரித்து விற்பனை செய்து வரும் பயனாளியை நேரில் சந்தித்து, தயாரித்து வரும் பொருட்கள், விற்பனை குறித்து கேட்டறிந்து, தொழிலை மேலும் விரிவுபடுத்த அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்கள். மேலும், விருதுநகர் நகராட்சியில் நீர்வளத்துறை வைப்பாறு வடிநிலை கோட்டம், விருதுநகர் மூலம் கௌசிகா நதியை ரூ.20.44 கோடி மதிப்பில் புனரமைத்து, நவீனமயமாக்கல் பணி மற்றும் வரத்து கால்வாய்களை தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதை நேரில் சென்று பார்வையிட்டு, திட்டப்பணிகள் குறித்து கேட்டறிந்து, பணிகளின் தற்போதைய நிலை மற்றும் தரம் குறித்து ஆய்வு செய்து, உரிய காலத்திற்குள் பணிகளை முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அறிவுறுத்தினார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் விழுப்புரம் மாவட்டத்தில் (04.02.2026) நடைபெற்ற அரசு விழாவில், உங்களுடன் ஸ்டாலின் திட்டம் 10,000 முகாம்கள் நலத்திட்டப் பயன்கள் மற்றும் 1.80 இலட்சம் புதிய பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்ட பயன்கள் வழங்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.அதனைத்தொடர்ந்து, விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் மற்றும் சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் முன்னிலையில், மாண்புமிகு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் 1533 பயனாளிகளுக்கு ரூ.7 கோடியே 90 இலட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.அதன்படி, வருவாய்த்துறை சார்பில் 500 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 75 இலட்சம் மதிப்பிலும், சமூக பாதுகாப்புத் திட்டம் சார்பில் 600 பயனாளிகளுக்கு ரூ.7 இலட்சத்து 29 ஆயிரம் மதிப்பிலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 169 பயனாளிகளுக்கு ரூ.30 இலட்சத்து 34 ஆயிரம் மதிப்பிலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 131 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 54 இலட்சத்து 58 ஆயிரம் மதிப்பில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனங்களையும், தாட்கோ மூலம் 46 பயனாளிகளுக்கு ரூ.24 இலட்சத்து 36 ஆயிரம் மதிப்பிலும்,மாவட்ட தொழில்மையம் சார்பில் 04 பயனாளிகளுக்கு ரூ.43 இலட்சத்து 96 ஆயிரம் மதிப்பிலும், மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் 04 பயனாளிகளுக்கு ரூ.37 இலட்சம் மதிப்பிலும், மாவட்ட தொழிலாளர் நலவாரியம் (சமூக பாதுகாப்புத் திட்டம்) சார்பில் 08 பயனாளிகளுக்கு ரூ.9,600/- மதிப்பிலும்,தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், 11 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 42 இலட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலும், ஊரக வளர்ச்சித் துறை சார்பில் 22 பயனாளிகளுக்கு ரூ.74 இலட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலும், 8 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு அட்டைகளையும், மின்சாரத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு பெயர் மாற்றத்திற்கான ஆணைகளையும், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் 20 பயனாளிகளுக்கு மின்னனு குடும்ப அட்டைகளையும்என ஆக மொத்தம் 1533 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.7 கோடியே 90 இலட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திரு.வீ.கேசவதாசன், சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்ஃபான்,I A S அவர்கள், சீர்மரபினர் நலவாரியத் துணைத்தலைவர் திரு.இராசா அருண்மொழி அவர்கள், விருதுநகர் நகர்மன்றத்தலைவர் திரு.ஆர்.மாதவன் அரசு அலுவலர்கள் மற்றும் பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக TNPSC, TNUSRB, SSC, RRB மற்றும் TRB போன்ற தேர்வு முகமைகளால் நடத்தப்படும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றது.மத்திய /மாநில / பொதுத்துறை நிறுவனங்கள்(SSC/RRB/LIC AAO/IB/ ASST Commandant....) மற்றும் முப்படைகளின் போட்டித் தேர்வுகளுக்கான ஆட்சேர்ப்பு முகமைகளால் வெளியிடப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் பொதுவாக உள்ள பாடங்களான பொது அறிவு, நுண்ணறிவு, திறனறிவு, காரணவியல், மொழி அறிவு (தமிழ்/ ஆங்கிலம்) போன்ற பாடங்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், விருதுநகரில் 09.02.2026 அன்று முதல் நடைபெற உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் இலவச பாடவாரியானத் தேர்வுகள் மற்றும் முழு மாதிரித் தேர்வுகள் நடைபெறும். இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உடையவர்கள் studycirclevnr@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் அல்லது விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடியாக தெரிவிக்கலாம்.எனவே, அனைத்து போட்டி தேர்வுகளுக்கும் பொதுவான பாடங்களுக்கு தயாராகும் தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்துக்கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S ., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (03.02.2026) “என் ஊர், என் கனவு” (Vision-2030) திட்டம் மூலம் மாவட்டத்தின் வளர்ச்சியில் பங்களிப்பினை அளிக்கும் வகையில், இலக்கு 2030 உத்திகள் மற்றும் செயல் திட்டம் தயாரிப்பதற்கான மாவட்ட அளவிலான கலந்தாய்வுக் கூட்டத்தினை சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ராஅவர்கள், I A S ., துவக்கி வைத்தார்.தமிழ்நாடு அரசின் மூலம் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு அரசு துறைகள் மூலமாக உட்கட்டமைப்பு வசதிகள், கல்வி, பெண்கள் முன்னேற்றம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதனுடைய அடுத்த முன்னெடுப்பாக “என் ஊர் என் கனவு” திட்டமானது 2030 க்கான கனவு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது."என் ஊர் என் கனவு" (My Town My Dream) என்ற திட்டமானது, 2030-க்குள் தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஊரையும், மாவட்டத்தையும் இலக்கு வைத்து, வளர்ச்சிக்கான தொலைநோக்கு அறிக்கை (Vision Document) தயாரிக்கும் தமிழக அரசின் ஒரு முக்கிய முன்முயற்சியாகும்.ஏற்கனவே பல்வேறு திட்டங்கள் மூலமாக பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அதற்கான தீர்வு காணப்பட்டுள்ளது.கூடுதலாக மாவட்ட வளர்ச்சிற்காக திட்டமிடுவதற்காக “என் ஊர் என் கனவு” திட்டம் மூலம் 2030 எதிர்கால தொலைநோக்கு பார்வையோடு, விருதுநகர் மாவட்டத்தின் வளர்ச்சியில் பங்களிப்பினை அளிக்கும் மாவட்ட அளவில் உள்ள பல்வேறு துறைகளில் சிறந்த சாதனையாளர்கள், தேர்தெடுக்கப்பட்ட பிரதிநிகள், அலுவலர்கள், துறை வல்லுநர்கள், அரசு சாரா நிறுவனங்கள் (NGO’s) சேவை மனப்பான்மை கொண்ட தனிநபர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பிற பங்குதார்களை கொண்டு கருத்துகள் கேட்பதற்காக கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்படுகின்றது.இதன் மூலம் கருத்துகள், விருப்பங்கள் மற்றும் ஆலோசனைகளைப் பெற்று விவாதித்து 2030 ஆண்டுக்கான தொலைநோக்கு பார்வை மற்றும் திட்ட ஆவணத்தை (preparation of vision 2030 Strategy and plan Document) தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.இதற்காக தொழிலாளர் நலத்துறை, கல்வி வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை, உள்கட்டமைப்புத் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, மருத்துவம் ஊரகநலப்பணிகள் மற்றும் குடும்ப நலத்துறை ஆகிய 5 முதன்மைத் துறைகள் தேர்வு செய்து, அதன்கீழ் பல துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு அத்துறைச்சார்ந்த வல்லுநர்களால் அடுத்த 5 ஆண்டுகளில் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு உதவும் சிறந்த திட்டங்களை Template ஆக உருவாக்கப்படவுள்ளது.அதனடிப்படையில், இன்று விருதுநகர் மாவட்டத்தில் இந்த திட்ட கருத்துகள், விருப்பங்கள் மற்றும் ஆலோசனைகளைப் பெற மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் 5 இடங்களில் தனித்தனியாக ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறுகிறது.இக்கூட்டத்தில் மாவட்டத்தின் அடுத்த 5 ஆண்டுகளுக்கான வளர்ச்சிக்கு அனைத்து துறைச்சார்ந்த வல்லுநர்களால் அளிக்கப்பட்ட திட்டங்கள் தொகுக்கப்பட்டு மாநில அளவில் நடைபெறும் ஒருநாள் நிகழ்ச்சிக்காக சென்னைக்கு அனுப்பப்பப்படும்.இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்டத்தை அடுத்த 5 ஆண்டுகளில் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல முன்னெடுப்புக்கு தேவையான கருத்துகள், விருப்பங்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்கிடுமாறு கேட்டுக் கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.முன்னதாக, இக்கூட்டத்தில் சின்னதாதம்பட்டியைச் சேர்ந்த சிறுதானிய உணவுப்பொருட்களில் ஊட்டச்சத்து மாறாமல் மதிப்புக்கூட்டி 16 வகையான பொருட்களை தயார் செய்து வெற்றிகரமாக லாபம் ஈட்டி ஆசியா புக் ஆப் ரிக்கார்டடு விருது, புதிய கண்டுபிடிப்பிற்காக மத்திய அரசின் தேசிய விருது, தமிழ்நாடு வர்த்தக சங்கத்தால் மில்லட் மேன் தமிழ்நாடு விருது உள்ளிட்ட விருதுகளை பெற்ற திரு.எஸ்.சிவகுமார் அவர்கள்,கலைத்திருவிழா போட்டியில் மாநில அளவில் வீணை இசையில் முதலிடம் பிடித்த விருதுநகர் தங்கம்மாள் பெரியசாமி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவி ம.மோகன அரசி அவர்கள்,சதுரங்க போட்டியில் 3 முறை இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பால் (SGFI) 2 முறை தங்கப்பதக்கமும், 1 முறை வெள்ளிப்பதக்கமும் பெற்ற செல்வன் ஷதுர்ஷான் அவர்கள் ஆகியோர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்இக்கூட்டத்தில், விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் மரு.ஜெய்சிங், திட்ட இயக்குநர்(தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) திரு.இலக்குவன், தனித்துணை ஆட்சியர்(ச.பா.தி) திருமதி கு.மோகனா, மேற்பார்வை பொறியாளர் (விருதுநகர் மின் பகிர்மான வட்டம்) திருமதி லதா, அரசு துறை சார்ந்த உயர் அலுவலர்கள், துறை வல்லுநர்கள், அரசு சாரா நிறுவனங்கள் (NGO’s) சேவை மனப்பான்மை கொண்ட தனிநபர்கள், தொழிலதிபர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக் குழுத் தலைவர் / வேடசந்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.காந்திராஜன் அவர்கள் தலைமையில் மதிப்பீட்டுக் குழு(2024-2026) நாளை(22.10.2024) விருதுநகர் மாவட்டத்திற்கு வருகை புரிந்து, வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை, கால்நடை பராமரிப்பு (கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை), பிற்படுத்தப்பட்டோர். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, கூட்டுறவு (கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை), நெடுஞ்சாலைகள் (நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை), சிறைச்சாலைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் (உள்.மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை), நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, அறநிலையங்கள் துறை (சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை), வனம் (சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை), இயற்கை வளங்கள் துறை ஆகிய துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து கள ஆய்வு செய்ய உள்ளது. பின்னர், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக் குழுவானது நாளை 04.02.2026 அன்று பிற்பகல் 03.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ள ஆய்வுக் கூட்டத்தில் மானிய கோரிக்கைகள் மற்றும் மேற்படி நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து தொடர்புடைய துறை அலுவலர்களுடன் விவாதிக்கப்பட உள்ளது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில் (02.02.2026) நடைபெற்றது.இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலை வாய்ப்பு, விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நல உதவித்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்தகுடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இம்மனுக்கள் மீது தொடர்புடைய அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்குமாறும், முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்கள். பின்னர், பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறையின் கீழ் இயங்கி வரும் விருதுநகர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கமானது, 2024-2025 ஆம் நிதியாண்டில் சங்கத்திற்கு அதிக பால் வழங்கிய 116 உறுப்பினர்களுக்கு புரவு தள்ளுபடித்தொகை ரூ.18.85 இலட்சம் வழங்கிட அனுமதித்து முதற்கட்டமாக ரூ.12.57 இலட்சம் வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக சங்கத்திற்கு அதிக பால் வழங்கிய நபர்களுக்குமொத்தம் ரூ.6.28 இலட்சம் புரவு தள்ளுபடித்தொகை வழங்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் காசோலைகள் வழங்கி தொடங்கி வைத்தார். இக்கூட்டத்தில், தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்பு திட்டம்) திரு.கு.மோகனா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திருமதி பிர்தௌஸ் பாத்திமா, துணைப்பதிவாளர்(பால்வளம்) திரு.கி.சம்பத், முதன்மைக்கல்வி அலுவலர் திரு.அரவிந்தன், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டம், ஆனைக்குளம் கிராமத்தில்( 30.01.2026) நீர்வளத்துறை குண்டாறு வடிநிலக் கோட்டம், மதுரை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காரியாபட்டி மற்றும் திருச்சுழி வட்டங்களில் உள்ள வக்கணாங்குண்டு, முஷ்டக்குறிச்சி, மானூர், மறையூர், வீரக்குடி, மேலப்பருத்தியூர், நாலூர் கண்மாய்கள் மற்றும் ஆனைக்குளம் கண்மாய் வரத்துக்கால்வாய் ஆகியவை ரூ.9.50 கோடி மதிப்பில் புனரமைக்கும் பணிகளை நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு நீர் வளத்தைப் பெருக்குவதற்காக பல்வேறுத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. வானம்பார்த்த பூமியான நமது பகுதியில் அடிப்படையான பணியாக விவசாயம் இருக்கிறது. மண்ணையும், மழையையும், நம்பி இருக்கக்கூடிய இந்தபகுதியில் பாசனத்திட்டங்களை பெருக்கக்கூடிய நலத்திட்டங்கள் தேவை என்பதை உணர்ந்து தான் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி மற்றும் திருச்சுழி வட்டங்களில் உள்ள வக்கணாங்குண்டு, முஷ்டக்குறிச்சி, மானூர், மறையூர், வீரக்குடி, மேலப்பருத்தியூர், நாலூர் கண்மாய்கள் மற்றும் ஆனைக்குளம் கண்மாய் வரத்துக்கால்வாய் நீண்ட நாட்களாக புனரமைக்கப்படாததால் கண்மாய்களில் உள்ள மடைகள், கலுங்குகள் மற்றும் கரைகள் சேதமடைந்த காரணத்தினால் மேற்கண்ட கண்மாய்களை புனரமைக்க விவசாய பெருங்குடி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று, புனரமைக்கும் பணிக்கான அரசாணை மற்றும் நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டு, இன்று பணிகள் துவக்கப்பட்டுள்ளது. வக்கணாங்குண்டு, முஷ்டக்குறிச்சி, மானூர், மறையூர், வீரக்குடி, மேலப்பருத்தியூர், நாலூர் மற்றும் ஆனைக்குளம் கண்மாய்கள் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதன் மூலமாக 1620 ஹெக்டேர் (4000 ஏக்கர்) பாசன விளை நிலங்கள் பயன்பெறும்.மேலும், கண்மாய்களில் முழுகொள்ளளவிற்கு தண்ணீர் சேமிக்கப்பட்டு, கண்மாய்களை சுற்றியுள்ள கிராமங்களின் நிலத்தடி நீர் மட்டம் உயரவும். கோடைகாலங்களில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாடு பிரச்சனை தீர்வதுடன், இப்பகுதி கிராம மக்களின் வாழ்வாதாரம் உயர்வதுடன் கால்நடைகளின் தண்ணீர் தேவைகளும் பூர்த்தியடையும் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திரு.வீ.கேசவதாசன், நீர்வளத்துறை பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர், உதவிப்பொறியாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பாசன விவசாயிகள், கிராம பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் தேசபந்து மைதானத்தில் தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் தேசிய தொழுநோய் ஒழிப்பு தினம்-2026 முன்னிட்டு நடைபெற்ற தொழுநோய் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வுப் பேரணியினை மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி அவர்கள் (30.01.2026) கொடியசைத்து துவக்கி வைத்தார்.இப்பேரணியில் விருதுநகர் அரசு செவிலியர் கல்லூரி மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் சுமார் 200 பேர் கலந்துகொண்டு தேசபந்து மைதானத்தில் தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக நகராட்சி அலுவலகம் வரை தொழுநோய் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பதாதைகளுடன் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.முன்னதாக, அண்ணல் காந்தியடிகள் நினைவு தினத்தை முன்னிட்டு, அன்னாரது படத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.மேலும், ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு உறுதி மொழியை மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.முன்னதாக, தொழுநோயால் பாதிக்கப்பட்டு முற்றிலும் நோயிலிருந்து குணமடைந்தவர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவப்படுத்தினார்.இந்நிகழ்ச்சியில் மருத்துவத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (30.01.2026) மாவட்ட அளவிலான ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்; மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I AS., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிலையங்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஓய்வூதியர்கள்ஃ குடும்ப ஓய்வூதியர்கள் ஆகியோரது கோரிக்கைகள் தொடர்பாக பெறப்பட்ட 18 முன்னோடி மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் விவாதிக்கப்பட்டு உரிய தீர்வு காணப்பட்டது.மேலும் இக்கூட்டத்தில் 7 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ரா.ஆனந்தி, மாவட்டக் கருவூல அலுவலர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(கணக்கு) மற்றும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில் (30.01.2026) தீண்டாமை ஒழிப்பு தினத்தையொட்டி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தெ.கண்ணன்,த.கா.ப., அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியினை அரசு அலுவலர்கள், மாணவர்கள் ஏற்றுக் கொண்டனர்.அதன்படி, தீண்டாமை ஒழிப்பு தினத்தையொட்டி, இந்திய அரசியலமைப்பின்பால் இடைவிடாத, உளமார்ந்த பற்றுள்ள இந்தியக் குடிமகன் குடிமகள் ஆகிய நான், நமது அரசியலமைப்பின்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்பதை அறிவேன். தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டு, எவர்மீதும் தெரிந்தோ, தெரியாமலோ சமூக வேற்றுமையை மனம், வாக்கு, செயல் என்ற எந்த வகையிலும் கடைப்பிடிக்கமாட்டேன் என்று இதனால் உளமார உறுதியளிக்கிறேன். அரசியலமைப்பின் அடிப்படைக் கருத்திற்கிணங்க, சமய சுதந்திர வேறுபாடற்ற சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையுடனும், உண்மையுடனும் பணியாற்றுவது எனது கடமையாகும் என்பதையும் உணர்வேன். இந்திய அரசியலமைப்பின்பால் எனக்குள்ள முழுப்பற்றிற்கு இது என்றென்றும் எடுத்துக்காட்டாக விளங்குமென்றும் இதனால் உளமார உறுதியளிக்கிறேன் என்ற தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.இந்நிகழ்வில், முதன்மை கல்வி அலுவலர் திரு,அரவிந்தன், மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு.குமாரமணிமாறன், உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.