தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விரிவாக்கம்
மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S, அவர்கள் தலைமையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தொடங்கி வைத்தார்.
பெருந்தலைவர் காமராசரின் காட்டிய நல்வழியில், முத்தமிழிஞர் கலைஞர் அவர்களும், தற்போதுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும், இந்த அரசாங்கத்தை நடத்தி கொண்டு, மிகச் சிறப்பாக, அனைவரும் பாராட்டக்கூடிய ஆட்சியை நடத்தி கொண்டிருக்கிறார்கள். பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாளான இன்று அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்திருக்கிறார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கிராம, நகர்புறபகுதிகளில் உள்ள குழந்தைகள் பள்ளிகள் தூரமாக இருப்பதாலும், சிலர் குடும்ப சூழ்நிலை காரணமாகவும் காலை உணவு சாப்பிடுவதில்லை என்பதை, கருத்தில் கொண்டும், அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்காகவும், இடைநிற்றலை தவிர்ப்பதற்காகவும், ஊட்டசத்து குறைபாட்டை போக்குவதற்காகவும் இந்திய நாட்டிலேயே முன்னோடி திட்டமான அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டமான “முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம்”-னை கடந்த 15.09.2022 அன்று முதற்கட்டமாக தொடங்கி வைத்தார்கள்.
இரண்டாம் கட்டமாக, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு துவக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளிலும் 25.08.2023 அன்று துவக்கப்பட்டுள்ளது.மேலும், மூன்றாம் கட்டமாக இன்று அரசு உதவிப்பெறும் தொடக்கப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்; அவர்கள் 15.07.2024 அன்று பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளில், திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்கள்.
இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 3,995 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 2 இலட்சத்து 23 ஆயிரத்து 536 குழந்தைகள் பயனடைவார்கள்.அதனடிப்படையில், இத்திட்டம் விருதுநகர் மாவட்டத்தில் காரியாபட்டி வட்டாரத்தில் 69 அரசு துவக்கப்பள்ளிகளில் பயிலும் முதல்கட்டமாக 3486 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையிலும், இரண்டாம் கட்டமாக மாவட்டத்தில் உள்ள 11 வட்டாரங்களில் உள்ள 659 அரசு துவக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் 35,000 மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையிலும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளதுஇன்று மூன்றாம் கட்டமாக, மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் 255 அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 14,677 மாணவ, மாணவியர்கள் காலை உணவு பெற்று பயனடைய உள்ளனர்.
இத்திட்டத்தின் மூலம், பள்ளிகளில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று அரிசி ரவா உப்புமா மற்றும் காய்கறி சாம்பார், செவ்வாய் கிழமை அன்று ரவா கிச்சடி மற்றும் காய்கறி சாம்பார், புதன்கிழமை அன்று வெண்பொங்கல் மற்றும் காய்கறி சாம்பார், வியாழக்கிழமை அன்று கோதுமை ரவா உப்புமா மற்றும் காய்கறி சாம்பார், வெள்ளிக்கிழமை அன்று சேமியா கிச்சடி மற்றும் காய்கறி சாம்பார் போன்ற உணவு வகைகள் 1 முதல் 5 வகுப்பு வரை பயிலும் 1022 பள்ளிகளில் 45583 மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் 1564 மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களால் சுவையாகவும், தரமாகவும் சமையல் செய்து வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிகழ்ச்சியில், ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply