25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Jun 14, 2024

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேரும் மற்றும் இதுவரை கல்லூரியில் சேர இயலாத மாணவர்களுக்காக சிறப்பு குறைதீர்க்கும் முகாம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேரும் மற்றும் இதுவரை கல்லூரியில் சேர இயலாத மாணவர்களுக்காக சிறப்பு குறைதீர்க்கும் முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் தலைமையில்  (13.06.2024) நடைபெற்றது.தமிழக அரசு, மாணவர்களின் உயர்கல்வி பயிலும் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்களை அதிகமாக உயர்கல்விக்கு சேர்க்கை பெறும் நோக்கில், பல்வேறு விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, உயர்கல்விக்கு விண்ணப்பிக்காத, குறிப்பிட்ட துறைக்கு விண்ணப்பித்து சேர்க்கை கிடைக்கப் பெறாத மாணவர்களுக்கு வழிக்காட்டு விதமாக சிறப்பு குறைதீர்க்கும்  கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாணவர்களிடமிருந்து, உயர்கல்வி பயில்வதற்கான பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான சுமார் 100 மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், ஒவ்வொரு மாணவரிடமும் தனித்தனியாக அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.பின்னர், உயர்கல்விக்கு விண்ணப்பித்த மாணவர்களிடம் சந்தேகங்கள் மற்றும் குறைகளையும்,உயர்கல்விக்கு விண்ணப்பிக்காத மாணவ, மாணவியர்கள் ஒவ்வொருவரிடமும் அதற்கான காரணங்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டறிந்தார்.குடும்ப சூழ்நிலை, பொருளாதாரம், சரியான வழிகாட்டியின்மை, பாடப்பிரிவு கிடைக்காத நிலை போன்ற காரணங்களால் உயர்கல்வி தொடர முடியாமல் இருப்பதாக தெரிவித்த மாணவ, மாணவியர்களிடம், அரசின் மூலம் வழங்கப்படும் திட்டங்கள், சலுகைகள், ஊக்கத்தொகைகள், எதிர்கால வேலைவாய்ப்புகள், மதிப்பெண்களுக்கு ஏற்றவாறு பாடப்பிரிவு துறைகளை தேர்ந்தெடுப்பது உள்ளிட்டவை குறித்தும், தீர்வுகளை எடுத்துக்கூறியும், உயர்கல்வி தொடர்வதற்கான உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி வளர்மதி, மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி அனிதா, உட்பட அரசு அலுவலர் பலர் கலந்து கொண்டனர்.  

Jun 14, 2024

எம். ரெட்டியாபட்டி ஊராட்சியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஊராட்சி ஒன்றியம், எம். ரெட்டியாபட்டி ஊராட்சியில்,  (13.06.2024)செய்திமக்கள்தொடர்புத்துறையின் சார்பாக வைக்கப்பட்டுள்ள தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டனர் 

Jun 14, 2024

விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 21.06.2024 அன்று நடைபெறவுள்ளது

விருதுநகர் மாவட்டத்தில் ஜீன் -2024 மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 21.06.2024 அன்று காலை 11.00 மணியளவில், விருதுநகர் மாவட்ட ஆட்சியரக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.மேற்படி, கூட்டத்தில் விவசாய பெருமக்கள் கலந்து கொள்வதுடன் விவசாயம் தொடர்பான கோரிக்கைகளை நேரடியாக மனு மூலம் தெரிவித்து பயன்பெறுமாறு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர்.வீ.ப.ஜெயசீலன்,  I A S., அவர்கள் கேட்டுக் கொள்கிறார்கள்

Jun 14, 2024

அம்ரூத் முழுமை திட்டம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில்  (13.06.2024) விருதுநகர் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம் சார்பாக ராஜபாளையம் நகராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கள் உள்ளடக்கிய பகுதியை - ராஜபாளையம் கூட்டு உள்ளூர் திட்டக் குழும பகுதிக்கான அம்ரூத் ( Atal Mission for Rejuvenation and Urban Transformation - AMRUT ) முழுமை திட்டத்தினை ( Master Plan ) செயல்படுத்துவது தொடர்பாக அரசுத்துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் துணை இயக்குனர் ( திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம்) திரு. ப. தேவராஜ்.  I. A. S, அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ. ப. ஜெயசீலன், I. A. S, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

Jun 14, 2024

ராஜபாளையத்தில் அரசு அலுவலர்களிடம் சாலை பணிகள் குறித்து கள ஆய்வு

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் ( 13.06.2024) புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தென்காசி சாலை வரை புதிய இணைப்பு சாலை  அமைப்பது தொடர்பாக ராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் திரு. எஸ். தங்கபாண்டியன் அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ. ப. ஜெயசீலன், I A S, அவர்கள் கள ஆய்வு மேற்கொண்டு சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களிடம் சாலை பணிகள் குறித்து கேட்டறிந்து, அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.

Jun 13, 2024

நமக்கு நாமே திட்டம்

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம், மல்லி ஊராட்சி, இராமகிருஷ்ணாபுரத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.39 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சமுதாயக்கூடத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S., அவர்கள் (12.06.2024) திறந்து வைத்தார்.தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித் துறையின் மூலமாக உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக கிராமப் பகுதிகளில் சாலைகளை அமைத்தல், குடிநீர் வசதிகளை மேம்படுத்துதல், சமுதாயக்கூடங்களை அமைத்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு வந்தாலும், அதற்கென்று ஒரு நிதி வரையறை இருக்கின்றது.இது போன்ற கட்டிடங்களை அரசின் திட்டம் மூலமாக மட்டுமே கட்டுவதற்கு வாய்ப்புகள் இல்லை. அதனால் தான் அதனை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காக நமக்கு நாமே திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நமக்கு நாமே திட்டத்தில் 50 விழுக்காடு நிதியினை பொதுமக்களோ, நன்கொடை மூலமாகவோ, தனியார் நிறுவனங்கள் மூலமாகவோ, அங்கு இருக்கக்கூடிய சமுதாய அமைப்புகள் மூலமாகவோ, செயல்படக்கூடிய கோவில்களினுடைய உபரி வருமானத்தின் மூலமாகவோ செயல்படுத்தினால் மீதிமுள்ள 50 சதவீத நிதியினை அரசு தருகிறது. இந்த திட்டத்தை அந்த ஊர் மக்களே செயல்படுத்தலாம்.மேலும், திட்ட பணிக்கான மொத்த செலவினத்தில் மூன்றில் ஒரு பகுதி பொதுமக்கள் அல்லது தனியார் அமைப்புகளில் இருந்து தரும்போது, மீதி இருக்கக்கூடிய இரண்டு பங்கு அரசு தருகிறது.மேலும், ஒரு கிராமத்திற்கு சமுதாயக்கூடம் என்பது முக்கியமான ஒன்றாகும். ஒவ்வொரு கிராமங்களிலும் இந்த மாதிரி ஒரு சமுதாயக்கூடம் ஏற்படுத்துவது என்பது அந்த கிராமத்திற்கும், அங்குள்ள பொதுமக்களுக்கும், அனைத்து தரப்பு மக்களுக்கும் நிறைய நன்மைகளை நேரடியாகவும், மறைமுகவாகவும் செய்யக்கூடிய ஒரு அமைப்பாக உள்ளது.எனவே, இப்படிப்பட்ட கட்டிடங்களை அரசு பல்வேறு திட்டங்களின் மூலமாக செயல்படுத்தி வருகிறது. முழுமையாக அரசு திட்டங்களுடன் சேர்ந்து பொதுமக்களும் பங்களித்து செயல்படுத்துவதற்கு தான் நமக்கு நாமே திட்டத்தினை அரசு வழங்கி இருக்கிறது. அதனை நன்கு பயன்படுத்தி சிறப்பாக செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

Jun 13, 2024

விருதுநகர் மற்றும் திருச்சுழி வட்டங்களைச் சேர்ந்தவர்கள் நத்தம் பட்டா மாறுதல் விண்ணப்பங்களை இ-சேவை மையம் அல்லது Citizen Portal (https://eservices.tn.gov.in/citizen) வழியாக விண்ணப்பித்து பயன்பெறலாம்

“நத்தம் ஆவணங்கள் இணையவழி பட்டா மாறுதல் திட்டம்” தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 04.03.2024 அன்று துவக்கி வைக்கப்பட்டது.விருதுநகர் மாவட்டத்தில், விருதுநகர் மற்றும் திருச்சுழி வட்டங்களில் நத்தம் ஆவணங்கள் இணையவழி பட்டா மாறுதல் திட்டத்தின் மூலம் நத்தம் பட்டா மாறுதல் விண்ணப்பங்களை பொதுமக்கள் இ-சேவை மையம் மற்றும் Citizen Portal (https://eservices.tn.gov.in/citizen) வழியாக விண்ணப்பிக்கலாம்.அதனடிப்படையில், நத்தம் பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் இணைய வழியில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, நத்தம் பட்டா வழங்கப்படும். மேலும் கிராம நத்தம்  பகுதிகளுக்கான நத்தம் மனை பட்டாக்களை https://eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.நத்தம் இணையவழி பட்டா மாறுதல் நடைமுறைப்படுத்தப்பட்ட வட்டங்களில் இ-சேவை மையம் மற்றும் Citizen Portal வாயிலாக பெறப்படும் நத்தம் பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும்.எனவே, பொதுமக்கள் மேற்குறிப்பிட்டுள்ள இணையதளம் மற்றும் “தமிழ்நிலம்” செயலி மூலம் நிலஅளவைத் தொடர்பான விவரங்களைப் பார்வையிட்டுப் பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,  I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jun 13, 2024

சர்வதேச குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்   (12.06.2024) ஜீன்-12 சர்வதேச குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, பள்ளிக்கல்வித்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம் மற்றும் வேல்டு விசன் இணைந்து நடத்திய பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்  மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.அதன்படி, சர்வதேச குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்.குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வு தகவல்கள் அடங்கிய விழிப்புணர்வுப் பிரச்சார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்பின்னர், பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு மனித சங்கிலியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்து, துண்டு பிரசுரங்களை வழங்கி மாணவர்களுடன் கலந்துரையாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.அதனைத்தொடர்ந்து, சர்வதேச குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றுதல் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் பள்ளி மாணவ, மாணவிகள் எடுத்துக்கொண்டனர்.பின்னர், குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றுதல் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்  தலைமையில் அனைத்து அரசுத்துறை அலுவலர்களும் எடுத்துக்கொண்டனர்.ஒவ்வொரு ஆண்டும் ஜீன் 12ம் நாள் சர்வதேச குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு  வருகிறது. குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலுமாக அகற்றி சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும்,  குழந்தைகளை பள்ளிக்கு செல்வதை ஊக்குவித்து குழந்தை தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு தான் சர்வதேச குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுவதின் முக்கிய நோக்கம் ஆகும்.அதன்படி, சர்வதேச குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. சிவகாசி, இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர் மற்றும் அருப்புக்கோட்டை ஆகிய இடங்களில், வட்ட சட்டப் பணிகள் ஆணையக்குழு சார்பு நீதிபதி தலைமையில் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி, விழிப்புணர்வு ஸ்டிக்கர் விநியோகித்தல் மற்றும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 வட்டாரங்களிலும், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தலைமையில், மகளிர் திட்டத்தின் கீழ் இயங்கும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் மனிதசங்கிலி நிகழ்ச்சி நடைபெற்றது.மேலும், விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களிடையே குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் தொழிலாளர் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறை இணைந்து நடத்தப்பட்டது.குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர்  (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம் 1986-ன் கீழ் District Task Force   அலுவலர்களுடன் இம்மாதம் முழுவதும்  கூட்டாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துல்) சட்டத்தின்படி, 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை எவ்வித பணியிலும்  ஈடுபடுத்துவதும், 15 வயது முதல் 18 வயதிற்கு உட்பட்ட வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது. இச்சட்டவிதிகளை மீறுவோருக்கு ரூ.20,000/- முதல் ரூ.50,000/- வரை அபராதம் அல்லது ஆறு மாதம் முதல் இரண்டு ஆண்டு வரை சிறை தண்டனை அல்லது இவை இரண்டும் சேர்த்து நீதிமன்றத்தால் விதிக்கப்படும்.பொதுமக்கள் கடைகள், நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள்  மற்றும் தொழிற்சாலைகளில் குழந்தைத் தொழிலாளர்கள் பணிபுரிவதை கண்டறிந்தால்  “155214” “1098” (கட்டணமில்லா தொலைபேசி எண்), தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) தொலைபேசி எண்: 04562-225130 அல்லது  Pencil.gov.in  என்ற குழந்தைத் தொழிலாளர் இணையதள முகவரியில் புகார் தெரிவிக்கலாம்.அனைத்து அரசு துறைகளிலும் ஒப்பந்த பணிகளுக்கு டெண்டர் விடும்போது, குழந்தை மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர்களை பணியமர்த்த மாட்டோம் என்ற சுய உறுதிமொழிச் சான்று கட்டாயம் பெறப்படவேண்டும் என தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. அனைத்து அரசு துறைகளும், அரசு துறை சார்ந்த நிறுவனங்களும் இந்த அரசாணையை தவறாது கடைபிடித்து நமது மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் இல்லாத நிலையினை உருவாக்க ஒத்துழைப்பு நல்க வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

Jun 13, 2024

1433-ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) இரண்டாம் நாளான இன்று வருவாய்த் தீர்வாய அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மனுக்களை பெற்றுக்கொண்டார்.

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் 1433-ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாயத்தின் (ஜமாபந்தி) இரண்டாம் நாளான (12.06.2024)  வருவாய்த் தீர்வாய அலுவலர் மற்றும்  மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள்  பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை பெற்றுக் கொண்டார்.மேலும், பெறப்பட்ட மனுக்களை பரிசீலனை செய்து, 4 பயனாளிகளுக்கு நத்தம் பட்டாக்களையும், 1 பயனாளிக்கு சாதி சான்றிதழையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில் இந்த பசலி ஆண்டிற்கான 1433-ஆம் பசலி வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) 11.06.2024 முதல் 21.06.2024 வரை என 10 வட்டங்களில் நடைபெற்று வருகிறது. இதில் வருவாய் தீர்வாயத்தில் பொதுமக்களின் நியாயமான கோரிக்கை மனுக்கள் உடனடியாக வருவாய்த் தீர்வாய அலுவலரால் நிறைவேற்றப்பட்டு வருகிறது.இந்த வருவாய் தீர்வாயத்தின் போது கிராம மக்கள் தங்களுக்கு சொந்தமான வேளாண் நிலத்தின் உடமைப் பட்டா, சிட்டா, அடங்கல் குறித்தான விவரங்கள் கேட்டு மனுக்கள் தரலாம். தங்கள் கிராமத்தில் உள்ள குறைகளை நீக்க முறையிடலாம். கல்வி, குடிநீர், நீர் பாசன வாய்க்கால், மயான வசதி, கழிவு நீர் சாக்கடை வசதி முதலிய தேவைகள் குறித்தும் வருவாய்த்துறை அலுவலர்களிடம் முறையிடலாம். சொந்த வீட்டு மனை இல்லாதவர்கள் இலவச மனை பட்டா வேண்டி விண்ணப்பிக்கலாம். வீட்டு மனை மட்டும் உடையவர்கள் வீடு கட்ட அரசு கடன் மற்றும் மானியம் கோரி விண்ணப்பிக்கலாம். கிராம மக்கள் குடும்ப அட்டை மற்றும் ஆதரவற்ற விதவைகள் மற்றும் முதியோர் ஒய்வூதியம், இலவச அரசு காப்புறுதி அட்டை, வறட்சி நிவாரண நிதி கோருதல், நிலப் பட்டா மாற்றம், நிலப்பட்டா சர்வே எண்கள் மாற்றங்கள் தொடர்பாக வருவாய் தீர்வாயத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த வருவாய் தீர்வாயத்தில் பொதுமக்களின் நியாயமான கோரிக்கை மனுக்கள் உடனடியாக வருவாய்த் தீர்வாய அலுவலரால் நிறைவேற்றப்படும்.அதன்படி, வெம்பக்கோட்டை வட்டத்தில் 11.06.2024 முதல் 14.06.2024 மற்றும் 18.06.2024 வரை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையிலும், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டத்தில் 11.06.2024 முதல் 13.06.2024 வரை மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தலைமையிலும், இராசபாளையம் வட்டத்தில் 11.06.2024 முதல் 14.06.2024 மற்றும் 18.06.2024 வரை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் விருதுநகர் அவர்கள் தலைமையிலும், சிவகாசி வட்டத்தில் 11.06.2024 முதல் 14.06.2024 மற்றும் 18.06.2024 வரை மாவட்ட வழங்கல் அலுவலர் விருதுநகர் அவர்கள் தலைமையிலும்,சாத்தூர் வட்டத்தில் 11.06.2024 முதல் 14.06.2024  மற்றும் 18.06.2024 வரை தனித் துணை ஆட்சியர் (முத்திரை) விருதுநகர் அவர்கள் தலைமையிலும், வத்திராயிருப்பு வட்டத்தில் 11.06.2024 முதல் 13.06.2024 வரை வருவாய் கோட்டாட்சியர் சிவகாசி அவர்கள் தலைமையிலும், விருதுநகர் வட்டத்தில்  11.06.2024 முதல் 14.06.2024  மற்றும் 18.06.2024 முதல் 20.06.2024 வரையிலும் வருவாய் கோட்டாட்சியர் சாத்தூர் அவர்கள் தலைமையிலும், அருப்புக்கோட்டை வட்டத்தில் 11.06.2024 முதல் 14.06.2024  மற்றும் 18.06.2024 முதல் 20.06.2024 வரை உதவி ஆணையர், (கலால்) விருதுநகர் அவர்கள் தலைமையிலும், காரியாபட்டி வட்டத்தில் 11.06.2024 முதல் 14.06.2024  மற்றும் 18.06.2024 முதல் 19.06.2024 வரை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபாண்மையினர் நல அலுவலர், விருதுநகர் அவர்கள் தலைமையிலும், திருச்சுழி வட்டத்தில்  11.06.2024 முதல் 14.06.2024 வரை மற்றும் 18.06.2024 முதல் 21.06.2024 வரை வருவாய் கோட்டாட்சியர், அருப்புக்கோட்டை அவர்கள் தலைமையிலும் நடைபெற்று வருகிறது.இந்த ஜமாபந்தியின் நோக்கமானது வருவாய் / கிராம கணக்குகள், நில ஆவணங்கள் கணக்கு, பயிர் கணக்கு போன்றவை கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், புள்ளியியல்துறை அலுவலர்கள் எவ்வாறு பராமரித்து வருகின்றனர் என்பது குறித்து ஆய்வு செய்யப்படும்.  மேலும் பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக்கள் பெறப்பட்டு இறுதி நாளன்று பெறப்பட்ட மனுக்களுக்கு பதில் மற்றும் ஆணைகள் வழங்கப்படும்.எனவே பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்களாக எழுதி, தங்களது கிராமத்திற்கான ஜமாபந்தி நடைபெறும் நாட்களில் சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று தங்களது மனுக்களை வழங்கி கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ளலாம் என வருவாய்த் தீர்வாய அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.இந்நிகழ்ச்சியில் வெம்பக்கோட்டை வட்டாட்சியர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Jun 13, 2024

“உங்களை தேடி உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டம்

மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் மக்களை தேடிச்சென்று குறைகளைக் கேட்டறியவும், பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும்  சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும், மக்களை நாடி, மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே சென்று ஆய்வு செய்திட “உங்களை தேடி உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டத்தில் “உங்களை தேடி உங்கள் ஊரில்”முகாமானது 19.06.2024 அன்று காலை 9 மணி முதல் மறுநாள் 20.06.2024 அன்று காலை 9 மணி வரை நடைபெறவுள்ளது. மேலும், 19.06.2024 அன்று காலை 9 மணி முதல் மாலை 04.30 மணி வரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான அனைத்து மாவட்ட நிலை அலுவலர்களும் கள ஆய்வில் ஈடுபட்டு, அந்த வட்டத்தில் உள்ள மக்களின் குறைகளைக் கேட்டறிந்து அவர்களுக்கு அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி சென்று அடைவதை ஆய்வு செய்ய உள்ளனர்.  அதன் ஒரு பகுதியாக (19.06.2024) மாலை 04.30 மணி முதல் 6 மணி வரை சாத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வைத்து மக்களை சந்தித்து குறைகள் கேட்பதும், மாலை 6 மணி முதல் முதல்நிலை அலுவலர்களுடன் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்து இரவில் தங்கி பணியாற்றவும் உள்ளனர்.எனவே, சாத்தூர் வட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களது பகுதிகளில் உள்ள குறைகளை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் நேரில் தெரிவித்து, அரசின் திட்டங்கள்  அனைத்தும் தங்கள் பகுதிக்கு முழுமையாக கிடைத்திட இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

1 2 ... 47 48 49 50 51 52 53 ... 69 70

AD's



More News