25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் >> இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள். >> (நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >> இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Jul 25, 2024

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 26.07.2024 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது

தனியார் துறை நிறுவனமான ரிலையன்ஸ்  ஜியோ இன்பர்மேசன் லிமிடேட் தங்களது  நிறுவனத்தில் காலியாக உள்ள ஹோம் சேல்ஸ் ஆபிஸர், ஜியோ பாயின்ட் அஸிஸ்டெண்ட மேனேஜர்,  டிஜிட்டல் ரிபைர் ஸ்பெஸலிஸ்ட், ப்ரி லான்சர் டெக்னீசியன் போன்ற 4000- த்திற்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களை பூரத்தி செய்யவுள்ளது. இதில்  விருதுநகர்  மாவட்டத்திற்கு மட்டும் 300-க்கும் மேற்பட்ட பணியிடங்கள்  பூர்த்தி செய்யப்படவுள்ளன.இதற்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் வரும் 26-07-2024 அன்று விருதுநகர் மாவட்டம் சூலக்கரையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு  மற்றும்  தொழில்நெறி வழிகாட்டும்  மையத்தில்  நடைபெறவுள்ளது.  விருப்பமுள்ள 10 ஆம் வகுப்பு முதல் ஐடிஐ, டிப்ளமோ, பட்டதாரி கல்வித்தகுதி வரை பயின்ற 18-45 வயதிற்குட்பட்ட வேலைநாடுநர்கள் இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம்.மேலும், இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் https://tnprivatejobs.tn.gov.in/   என்ற இணையதளத்தில்  தங்களது  சுய விவரங்களை பதிவு செய்து விட்டு அனைத்து கல்விச்சான்றிதழ், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் 26.07.2024 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 3.00 மணிவரை நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது. இது முற்றிலும் ஒரு இலவச சேவையாகும்.  இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்பட மாட்டாது என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர். வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jul 25, 2024

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி பெற விண்ணப்பிக்கலாம்

விருதுநகர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி வழங்கப்பட உள்ளது. இரண்டு கால் செயலிழந்த மாற்றுத்திறனாளி, மளவளர்ச்சி குன்றியவர்கள் மற்றும் மூளை முடக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களுடன் (மாற்றுத்திறனாளி அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், புகைப்படம்-2) விருதுநகர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.மேலும் விவரம் பெறுவதற்கு  மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள  மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், தொலைபேசி எண்: 04562-252068, விருதுநகரில் தொடர்புக்கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jul 24, 2024

ஒருங்கிணைந்த ஊரகச் சூழலின் மூலம் நிலையான பஞ்சாயத்து கிராமங்களை மேம்படுத்துதல் திட்ட துவக்க விழா

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ஊராட்சி ஒன்றியம், பரளச்சி கிராமத்தில் (23.07.2024) தானம் அறக்கட்டளை மற்றும் கரூர் வைசியா வங்கி இணைந்து நடத்திய ஒருங்கிணைந்த ஊரகச் சூழலின் மூலம் நிலையான பஞ்சாயத்து கிராமங்களை மேம்படுத்துதல் திட்ட துவக்க விழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.முன்னேற விளையும் மாவட்டமான நமது விருதுநகர் மாவட்டம் பல்வேறு குறியீடுகளில் இன்னும் நாம் அடைவதற்கும், செல்வதற்குரிய தூரமும் நிறைய இருக்கிறது.திருச்சுழி பகுதியில் பெரும்பாலான இடங்கள் வானம் பார்த்த பூமியாக இருக்கக்கூடிய பகுதிகள். இன்னும் பல இடங்களில் வரலாறு எடுத்து பார்த்தால், இந்த பகுதியில் 12 ஆம் நூற்றாண்டு பாண்டியர்கள் கால ஆட்சிக் காலத்தில் நிறைய குளங்களை வெட்டிய இடங்களை நாம் பார்க்க முடியும். அதற்குப் பின் வந்த நாயக்கர் காலத்தில் இந்த பகுதியில் நிறைய விவசாயங்களை செழிப்பு செய்ய வேண்டும் என்பதற்காக வடிகால்களை தோற்றுவித்து, நிறைய குளங்களை, ஏரிகளை வெட்டினார்கள்.இப்பகுதியில் இயல்பாகவே மழைப்பொழிவு குறைவு. தமிழ்நாட்டின் சராசரி மழைப்பொழிவை விட விருதுநகர் மாவட்டத்தில் மழைப்பொழிவு குறைவு. விருதுநகர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய சராசரி மழைப்பொழிவை விட இந்த பகுதியில் 600 முதல் 700 மில்லி மீட்டர் வரை தான் சராசரி மழைப்பொழிவு இருக்கிறது. எனவே பெரும்பாலும் விவசாயம் என்பது இங்கே வானம் பார்த்த பூமியாகத்தான் இருக்கிறது. எனவே விவசாயத்திலிருந்து வரக்கூடிய வருமானம் என்பது மிக சொற்பமாகவும், குறைவாகவும் இருக்கக்கூடிய சூழல் உள்ளது. கால்நடை வளர்ப்புக்கும் தொழிலுக்கும் தண்ணீர், மேச்சல் நிலங்கள் தேவைப்படுகிறது. எனவே இந்த பகுதியில் இயல்பாகவே பொருளாதார குறியீடுகள் என்பது சற்று குறைவு. இது போன்ற கிராம பகுதிகளில் அரசினுடைய திட்டங்களான வறுமை ஒழிப்பு திட்டங்கள் பல்வேறு காலகட்டங்களில் செயல்படுத்தி வந்தாலும், பொதுமக்கள் குழுவாக இணைந்து அதன் மூலமாக செயல்படும் போது அதற்கான விளைவுகள் இன்னும் அதிகமாக இருக்கிறது.  மகளிர் சுய உதவி குழுக்களினுடைய வருகைக்கு பிறகு 20 முதல் 30 ஆண்டுகளாக வறுமை ஒழிப்பு என்ற திட்டத்தில் அடைந்து இருக்கக்கூடிய முன்னேற்றங்கள் மிகப் பெரிது. ஒரு பொருளாதார தத்துவத்தில் வறுமையின் நச்சு சுழல் என்று குறிப்பிடுவார்கள். வறுமையை  ஒரு காலகட்டத்தில் அதற்கென்று தனியாக சிறப்பாக கவனம் செலுத்தி அதை அந்த சூழ்நிலையில் இருந்து வெளிவருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.வறுமையில் இருப்பவர் தொடர்ச்சியாக கடன்களை பெறும் போது, அவர் வாழ்நாள் முழுவதும் வட்டியை செலுத்தவும், கடனை அடைப்பதற்கும் செல்கிறது. மொத்த சம்பாத்தியத்தினுடைய பெரிய செலவு என்பது முதலில் சேமிப்பாக இருக்க வேண்டும் என்று குறிப்பிடுவார்கள். சேமிப்பவர்களால் தான் இந்த வறுமையினுடைய நச்சு சுழலில் இருந்து வெளியே வர முடியும்.வரக்கூடிய சம்பளத்தில் மாத மாதம் சேமிக்கும் போது, ஒரு ஐந்து வருடங்களுக்கு பிறகு அவர் மாதந்தோறும் எவ்வளவு சம்பாதிக்கிறார்களோ அதே மாதிரியான பணம் இந்த சேமிப்பின் மூலம் பெறப்படும். சேமிப்பு தான் இது மாதிரியான அடுத்தடுத்த வளர்ச்சியை கொடுக்குமே தவிர, அதற்கு எதிராக இருக்கக்கூடிய செலவு என்பது அந்த நச்சு சுழலில் கொண்டு போய் சேர்த்து விடும்.கடன் என்பது மிக முக்கியமான ஒன்று. ஆனால் அதற்கான வட்டியும், கடனையும் திருப்பி செலுத்தக்கூடியது நமது கட்டுப்பாட்டை விட்டு மீறுகின்ற போது அது ஒரு தனி மனிதரை அந்த நச்சு சுழலில் சென்று செலுத்தி விடுகிறது. எனவே இதை சரியாக செயல்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் இது போன்ற அறக்கட்டளை மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் அரசுனுடன் இணைந்து குறைந்த வட்டியில் நுண்கடன்கள் வழங்கி அதை முறையாக செலுத்தி அந்த வறுமையில் இருந்து வெளியில் வருவதற்கு உதவி செய்கின்றனர்.எனது இந்த கடனை வழங்குவதோடு மட்டுமல்லாமல் அவர்களுடைய வருமானத்தைப் பெருக்குவதும் மிக முக்கியம். குறிப்பாக மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நிறைய கடனுதவிகள் வழங்கப்படுகின்றன. அதுமட்டுமல்ல அவர்களுக்கான நிறைய தொழில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.சாதாரண கூலி வேலைக்கு சென்றவர்கள் கூட, குழுவாக இணைந்து மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் தையல் போன்ற தொழில் செய்வதன் மூலம் அவர்களுடைய வருமானம் கணிசமாக உயர்ந்து இருக்கின்றது. இது போன்று தொழில்கள் செய்வதற்கு, அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் அதற்கான பயிற்சிகள் வழங்குவதோடு கடனுதவிகளும் வழங்கப்படுகிறது.மேலும், நமது பகுதிகளில் அரசினுடைய திட்டங்கள் மற்றும் அறக்கட்டளைகள் மூலமாகவும் நீர்நிலைகளை மேம்படுத்துவதன் மூலமாக இப்பகுதியில் விவசாயம் செழிப்பாக செய்ய முடியும். விவசாயம் செய்வதோடு மட்டுமல்லாமல் அதற்கு இணையாக இருக்கக்கூடிய கால்நடை வளர்ப்பும் செய்ய முடியும்.இந்த பகுதிகளில் குளம் என்பது ஒரு வழிபாட்டிற்குரிய இடமாக இருந்தது. ஒரு குளத்தை பாதுகாப்பது என்பது அந்த கிராமத்தினுடைய கடமை. கிராமத்தினுடைய குளத்தை பாதுகாப்பதற்கு என்று அவர்களுக்குள்ளேயே முறை வைத்து காவல் காத்த காலமும் இருந்தது. இன்று நீர்நிலைகளை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறது.எனவே நாம் நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும். அதன் மூலமாக விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த கால்நடை போன்ற தொழில்களை செய்ய வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் சிறு சிறு வியாபாரங்களை செய்வதற்கு இது போன்ற நிறைய பயிற்சிகளை, வாய்ப்புகளை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.  இது போன்ற கடன் திட்டங்களை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இது போன்று ஊரகப்பகுதிகளில் இயங்கக்கூடிய நிறுவனங்கள், வங்கிகள் அமைப்புகள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என அனைவரும் இந்த வறுமையினுடைய நச்சு சுழலில் இருந்து பொதுமக்களை வெளியில் கொண்டுவர வேண்டும் என்பதற்காகத்தான் இது போன்ற நிகழ்ச்சிகள். எனவே இது போன்ற பல்வேறு திட்டங்களை எல்லாம் பயன்படுத்திக் கொண்டு கிராமத்தில் ஒரு சமுதாயமாக இணைந்து நாம் அனைவரும் பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் என தெரிவித்தார்.

Jul 24, 2024

வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள்  (23.07.2024) நேரில் சென்று  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம், குன்னூர் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், அரசு பள்ளிகளில் உட்கட்டமைப்பு மேம்படுத்துதல்திட்டத்தின்கீழ்,ரூ.13.05இலட்சம்மதிப்பில்புனரமைப்புமற்றும்பராமரிப்புபணிகள்மேற்கொள்ளப்பட்டுள்ளதையும்,வலையபட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.14.50 இலட்சம் மதிப்பில், வலையப்பட்டி ஊராட்சி மேற்கு பகுதியில் புதிய ஊரணி அமைக்கப்பட்டு வரும் பணிகளையும்,வலையப்பட்டி ஊராட்சியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.30.10 இலட்சம் மதிப்பீட்டில், புதிய ஊராட்சி மன்ற கட்டடம் கட்டப்பட்டு வரும் பணிகளையும் மற்றும் வலையப்பட்டி ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ.2.45 இலட்சம் மதிப்பீட்டில்,  500 மரக்கன்றுகள் நடப்பட்டு வருவதையும்,பின்னர், ரெங்கப்பநாயக்கன்பட்டி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.30.10 இலட்சம் மதிப்பில், புதிய ஊராட்சி மன்ற கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளதையும்  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு பணிகளின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.மேலும் நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு அறிவுத்தினார்.பின்னர், ரெங்கப்பநாயக்கன்பட்டி ஊராட்சியில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், திருமதி. காளியம்மாள்,தென்னாட்டான் என்பவருக்கு வீடு கட்டுவதற்கான பணி  ஆணையினை   மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்த ஆய்வின் போது, திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மரு.தண்டபாணி, வத்திராயிருப்பு வட்டாட்சியர்; திருமதி சரஸ்வதி, வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி மீனாட்சி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) திருமதி.லலிதா, பொறியாளர்கள் திருமதி வள்ளிமயில், திரு.ராஜகுமார், மேற்பார்வையாளர், அரசு அலுவலர்கள், பொதுமக்கள்; உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Jul 24, 2024

வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில் மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் நடைபெற்ற சிறப்பு முகாம்

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம், குன்னூர் பகுதியில் “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் நடைபெற்ற சிறப்பு முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள்  (23.07.2024) கலந்துகொண்டு,பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.இம்முகாமில், வேளாண்மைத்துறையின் மூலமாக  ஒரு பயனாளிக்கு ரூ.4000/- மதிப்பில் விரிவாக்க சீரமைப்பு திட்டத்தில் மாடி தோட்ட செயல் விளக்கத் திடலுக்கு இடுபொருட்களையும், ஒரு பயனாளிக்கு ரூ.4000/- மதிப்பில், காய்கறி பயிர்களில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை செயல் விளக்கத் திடலுக்கு இடுப்பொருட்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் மக்களை சென்றடையும் வகையிலும், நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்திடவும், “மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டத்தினை நகர்ப்புற பகுதிகளுக்கு  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 18.12.2023 அன்று தொடங்கி வைத்தார்.அதனைத் தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 11.07.2024 அன்று மக்களுடன் முதல்வர் திட்டத்தை ஊரகப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தி, 12,500 கிராம ஊராட்சிகளில், 2500 முகாம்களின் மூலம் 15 அரசுத்துறைகளின் வாயிலாக 44 சேவைகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.இந்த "மக்களுடன் முதல்வர்" என்ற இப்புதிய திட்டத்தின் கீழ், பொதுமக்கள் அதிகமாக அணுகும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நகராட்சி நிர்வாகத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கூட்டுறவுத்துறை, மகளிர் மேம்பாட்டுக் கழகம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, எரிசக்தி துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை ஆகிய 13 அரசுத் துறைகள் சார்ந்த கோரிக்கைகளைப் பெற்று தீர்வு காண்பதற்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் நேரடிக் கண்காணிப்பில், அனைத்து நகர்ப்புற மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு மற்றும் கிராம ஊராட்சி அளவில், அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.அனைத்து தரப்பு மக்களுக்கும் மேற்கண்ட 15 அரசுத் துறைகளின் சேவைகள் எளிதில் கிடைத்திடவும், தாமதங்களை தவிர்த்திட வேண்டும் என்பதும் தான் இந்த திட்டத்தின் நோக்கமாகும்.விருதுநகர் மாவட்டத்தில் முதற்கட்டமாக கடந்த டிசம்பர் மாதத்தில் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகர்புறங்களை ஒட்டியுள்ள கிராம ஊராட்சிகள் உள்ளடக்கிய  பகுதிகளில் 69 முகாம்கள் நடத்தப்பட்டன.இதன் தொடர்ச்சியாக, இரண்டாம் கட்டமாக ஊரகப்பகுதிகளில் ”மக்களுடன் முதல்வர்”  முகாம்கள் நடைபெற்று வருகிறது.  தற்போது 440 கிராம ஊராட்சிகளில் 65 முகாம்கள் 11.07.2024 முதல் 14.08.2024 வரை நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக,  15 அரசுத்துறைகள் சார்ந்த 44 சேவைகள் அடையாளம்  காணப்பட்டுள்ளன.“மக்களுடன் முதல்வர்” முகாம்களில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நகராட்சி நிர்வாகத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கூட்டுறவுத்துறை, மகளிர் மேம்பாட்டுக் கழகம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, எரிசக்தி துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை ஆகிய துறைகளின் வழியாக வழங்கப்படும் பல்வேறு சேவைகள் திட்டங்கள் மக்கள் எளிதில் உடனடியாக பெறும் வகையில் முகாமில் கோரிக்கைகளை மனுக்களாக பெற்று உடனடியாக தீர்வு காணப்படும்.எனவே தங்கள் பகுதியில் நடைபெறும் குறிப்பிட்ட முகாம் நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை பொதுமக்கள் அனைவரும் “மக்களுடன் முதல்வர்” முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தெரிவித்தார்.இந்த முகாமில், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மரு.தண்டபாணி, ஆதி திராவிட நலத்துறை அலுவலர் திரு. ரமேஷ், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி)  திரு.காளிமுத்து, வத்திராயிருப்பு வட்டாட்சியர் திருமதி சரஸ்வதி, வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி மீனாட்சி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) திருமதி.லலிதா, பொறியாளர்கள்  திருமதி வள்ளிமயில், திரு.ராஜகுமார், மேற்பார்வையாளர், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Jul 24, 2024

மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ், 25.07.2024 அன்று திருச்சுழி, விருதுநகர், வெம்பக்கோட்டை, திருவில்லிபுத்தூர் வட்டாரங்களில் முகாம்கள் நடைபெற உள்ளது

பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வரும்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், ”கள ஆய்வில் முதலமைச்சர் “ என்ற முன்னெடுப்பின் கீழ், பொதுமக்களிடம் பெறப்படும் கோரிக்கைகளை உடனுக்குடன் தீர்வு காண  அறிவுறுத்தி வருகிறார்கள்.  முதலமைச்சர் அவர்களின் மேற்படி முன்னெடுப்பின் நீட்சியாக அன்றாடம் அரசு துறைகளை அணுகும் பொதுமக்களுக்கு அரசு அலுவலர்கள் வழங்கும் சேவைகளை மேலும் செம்மைப்படுத்தி அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் சென்று சேரும் வண்ணம் நிருவாகத்தில் மற்றுமொரு மைல் கல்லாக ”மக்களுடன் முதல்வர்” திட்டம் முதல்வரின் முகவரித்துறையால் நடைமுறைப்படுத்தப்பட்டது.இதன் தொடர்ச்சியாக, இரண்டாம் கட்டமாக ஊரகப்பகுதிகளில் ”மக்களுடன் முதல்வர்”  முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இதற்காக, 15 அரசுத்துறைகள் சார்ந்த 44 சேவைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.    தற்போது 440 கிராம ஊராட்சிகளில் 65 முகாம்கள் 11.07.2024 முதல் 14.08.2024 வரை நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது, 25.07.2024 அன்று, திருச்சுழி, விருதுநகர், திருவில்லிபுத்துார் மற்றும் வெம்பக்கோட்டை வட்டாரங்களில் கீழ்க்கண்ட ஊராட்சிகளில் நடைபெற உள்ளது.திருச்சுழி வட்டாரத்தில், கல்லுாரணி / நாடார் திருமண மண்டபத்தில்,  கல்லுாரணி, ஆலடிப்பட்டி, கீழகண்டமங்கலம், குலசேகரநல்லுார், தமிழ்பாடி, திருச்சுழி,  குல்லம்பட்டி, சவ்வாசுப்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்கும்,விருதுநகர் வட்டாரத்தில்,  ரோசல்பட்டி / அய்யனார் வதனா திருமண மண்டபத்தில், பெரிய பேராலி, சிவஞானபுரம், பாவாலி, சத்திரெட்டியபட்டி ஆகிய ஊராட்சிகளுக்கும்,வெம்பக்கோட்டை வட்டாரத்தில், தாயில்பட்டி/கம்மவர் திருமண மண்டபத்தில் தாயில்பட்டி, பேர்நாயக்கன்பட்டி,வெற்றிலையூரணி, மேலஓட்டம்பட்டி, சுப்ரமணியபுரம் ஆகிய ஊராட்சிகளுக்கும்,திருவில்லிபுத்தூர் வட்டாரத்தில் டி.மானகசேரி, மல்லிபுதூர், முள்ளிக்குளம், மல்லி, இனாம் நாச்சியார் கோவில்  ஆகிய ஊராட்சிகளுக்கும் மக்களுடன் முதல்வர்  முகாம்  25.07.2024 அன்று  நடைபெற உள்ளது.மேலும், இணைய வழி விண்ணப்ப முறை (Department Online Portal) எனில் சம்பந்தப்பட்ட துறைகள் முகாமிலேயே விண்ணப்பத்தினை இணைய வழியில் பதிவேற்றம் செய்திட . அனைத்து முகாம்களிலும் இ சேவை மையங்கள் அமைக்கப்பட உள்ளது. மேலும். அங்கு மேற்கொள்ளப்படும் சேவைகளுக்கு 50 சதவீத கட்டணம் மட்டுமே பெறப்படும். இதுகுறித்த விபரம் பெறுவதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஐ பிரிவு, தொலைபேசி எண் 04562-252742, விருதுநகரில் தொடர்பு கொண்டு பயனடையுமாறும், விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர்  முனைவர் வீ.ப.ஜெயசீலன். I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jul 23, 2024

வருவாய்த்துறை அலுவலர்களுடனான பணித்திறன் ஆய்வுக்கூட்டம்

இக்கூட்டத்தில், சிறப்பாக பணியாற்றிய சிறந்த வருவாய் வட்டாட்சியர்களில், சாத்தூர் வருவாய் வட்டாட்சியர் திரு.கு.லோகநாதன் அவர்களுக்கு முதல் பரிசும், சிவகாசி வருவாய் வட்டாட்சியர் திரு.மு.வடிவேல் அவர்களுக்கு இரண்டாம் பரிசும், இராஜபாளையம் வருவாய் வட்டாட்சியர் திரு.இரா.ஜெயப்பாண்டி அவர்களுக்கு மூன்றாம் பரிசும்,சிறப்பாக பணியாற்றிய தனி வட்டாட்சியர் (ச.பா.தி)களில் திருச்சுழி முன்னாள் தனி வட்டாட்சியர் (ச.பா.தி) திரு.பொ. சிவக்குமார் அவர்களுக்கு முதல் பரிசும், சாத்தூர் முன்னாள் தனி வட்டாட்சியர் (ச.பா.தி) திருமதி நா.சீதாலெட்சுமி அவர்களுக்கு இரண்டாம் பரிசும், வெம்பக்கோட்டை தனி வட்டாட்சியர்(ச.பா.தி) திருமதி வீ.கிருஷ்ணவேணி அவர்களுக்கு மூன்றாம் பரிசும்,முழுப்புலம் பட்டா மாறுதல் மனுக்களை அதிகளவில் ஏற்பளிப்பு செய்த மண்டல துணை வட்டாட்சியர்களில் விருதுநகர் மண்டல துணை வட்டாட்சியர் திரு.டி.இராதாகிருஷ்ணன்  அவர்களுக்கு முதல்பரிசும், சாத்தூர் முன்னாள் மண்டல துணை வட்டாட்சியர் திரு.பூ.ராஜாமணி அவர்களுக்கு இரண்டாம் பரிசும், திருச்சுழி மண்டல துணை வட்டாட்சியர் திரு.க.ராஜாராம் பாண்டியன் அவர்களுக்கு மூன்றாம் பரிசும்,உட்பிரிவு பட்டா மாறுதல் மனுக்களை அதிகளவில் ஏற்பளிப்பு செய்த வட்ட துணை ஆய்வாளர்களில் சாத்தூர் வட்டத்துணை ஆய்வாளர் திரு.மாரிமுத்து அவர்களுக்கு முதல் பரிசும், வத்திராயிருப்பு வட்டத்துணை ஆய்வாளர் திருமதி செல்வி அவர்களுக்கு இரண்டாம் பரிசும், வெம்பக்கோட்டை வட்டத்துணை ஆய்வாளர் திரு.விஜயக்குமார் அவர்களுக்கு மூன்றாம் பரிசும்,அதிக எண்ணிக்கையில் கள ஆய்வு செய்து உட்பிரிவு மனுக்களை முடிவு செய்த சிறந்த வட்ட சார் ஆய்வாளர்களில் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம் நில அளவர் திரு.சோலைராஜ் அவர்களுக்கு முதல் பரிசும், சாத்தூர் வட்டம் நில அளவர்  திருமதி கற்பகம் அவர்களுக்கு இரண்டாம் பரிசும், திருச்சுழி வட்டம் சார் ஆய்வாளர் திரு.காசிராமன் அவர்களுக்கு மூன்றாம் பரிசினையும் மாவட்ட ஆட்சித்தலைவர்  முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் வழங்கினார்.

Jul 23, 2024

Coffee With Collector” என்ற 84-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  (22.07.2024) மாவட்டத்தில் உள்ள அரசு மாதிரி பள்ளிகளில் பயிலும் 50 பள்ளி மாணவர்களுடனான "‘Coffee With Collector”    என்ற 84-வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர்   முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடி, கல்லூரிகள் தேர்வு, உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த உரிய வழிகாட்டுதல் வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து  கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, இன்று 84-வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தேகங்களை அகற்றி, அவர்கள் வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்பதெல்லாம், வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால்  நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும். மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசும் பொழுது, இங்கு வந்திருக்கும் எல்லோருக்கும் ஒரு தனித்திறன் இருக்கும். அந்த திறமையை கண்டறிந்து தங்களை மெருகேற்றி கொள்ள வேண்டும். உங்கள் வாழ்க்கையில் உங்களால் முடியாது, சாதிக்க முடியாது என்று யார் என்ன சொன்னாலும், நீங்கள் அதை நம்பி விடாமல், உங்கள் இலக்கை நோக்கி சென்று கொண்டே இருக்க வேண்டும். மேலும், நீங்கள் உங்களுக்கென்று தனித்திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும். நிறைய திறமைகள் உதாரணமாக, எழுத்து, வாசிப்பு, பேச்சு திறமை, தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட உங்களுக்கு விருப்பமான மொழிகளை தேர்ந்தெடுத்து அதில் புலமை பெற வேண்டும். வாழ்க்கையில் தொடர்ந்து நீங்கள் உங்கள் திறமைகளை வளர்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்றும், இது உங்களை முழுமைபடுத்தும் என்றும், இந்த திறமைகளை கொண்டு பல நபர்களுக்கு உதவ முடியும் என்றும் கூறினார். உங்கள் படிப்பு சமுதாயத்திற்கு பயன்பட வேண்டும்.இதைவிட மிக முக்கியாமானது, நீங்கள் நன்றாக படித்து, ஒரு நல்ல நிலைக்கு வந்த பிறகு, எப்பொழுதும் உங்கள் நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும். நீங்களும் மகிழ்ச்சியாக இருந்து, உங்களை சுற்றி உள்ளவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும். இது உங்களுடைய வேலையில் நன்றாக பார்பதற்கும், முன்னேறுவதற்கும் உதவியாக இருக்கும். அடுத்து வாழ்க்கையில் உங்களால் முடிந்த அளவு மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்றும் தெரிவித்தார்.இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகளிடம், அவர்களுடைய இலட்சியம், அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம், அவர்கள் உயர்கல்வி பயில விரும்பும் கல்லூரி மற்றும் இடம் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.

Jul 23, 2024

அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி பயிற்சியாளர்கள் சேர்க்கை (Spot Admission) 16.07.2024 முதல் 31.07.2024 வரை விண்ணப்பிக்கலாம்

2024-ஆம் ஆண்டில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களான விருதுநகர் / அருப்புக்கோட்டை / சாத்தூர் / திருச்சுழி ஆகிய அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி பயிற்சியாளர்கள் சேர்க்கை (Spot Admission)  16.07.2024 முதல் 31.07.2024 வரை நடைபெறுகிறது.ஏற்கனவே விண்ணப்பித்து ஒதுக்கீடு கிடைக்கப்பெறாதாவர்கள் மற்றும் புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் மாணவ/ மாணவிகள், அரசு நிர்ணயித்துள்ள 8-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள தொழிற்பிரிவுகளான1. Fitter                 2. Industrial Robotics and Digital manufacturing Technician3. Turner                 4. Fire Technology and Industrial Safety Management5. Machinist    6. Refrigeration and Air Conditioning Technician7. Wireman      8. Interior Design and Decoration9. Welder    10. Motor Mechanic Vehicle11. Surveyor        12. Mechanic Electric Vehicle  13. Advanced CNC Mechanic Technician ஆகிய பயிற்சிகளுக்கு  தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்களை அணுகி நேரடி சேர்க்கை மூலம் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து கொள்ளலாம்.பயிற்சியில் சேரும் பயிற்சியாளர்களுக்கு விலையில்லா சைக்கிள், சீருடை, பாடநூல், வரைபடக்கருவிகள், காலணி, பஸ் பாஸ் வழங்கப்படும். மேலும் மாதந்திர உதவித்தொகை ரூ.750/- மேலும் அரசு பள்ளியில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு மூவலூர் இராமமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டம் மூலம் மாதந்தோறும் ரூ.1000/- உதவித்தொகை வழங்கப்படும்.  மேலும், பயிற்சி முடித்தபின், கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படும். தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jul 23, 2024

மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் 24.07.2024 அன்று காரியாபட்டி, இராஜபாளையம் மற்றும் சிவகாசி வட்டாரங்களில் முகாம்கள் நடைபெற உள்ளது

பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வரும்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், ”கள ஆய்வில் முதலமைச்சர் “ என்ற முன்னெடுப்பின் கீழ், பொதுமக்களிடம் பெறப்படும் கோரிக்கைகளை உடனுக்குடன் தீர்வு காண  அறிவுறுத்தி வருகிறார்கள். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் மேற்படி முன்னெடுப்பின் நீட்சியாக அன்றாடம் அரசு துறைகளை அணுகும் பொதுமக்களுக்கு அரசு அலுவலர்கள் வழங்கும் சேவைகளை மேலும் செம்மைப்படுத்தி அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் சென்று சேரும் வண்ணம் நிருவாகத்தில் மற்றுமொரு மைல் கல்லாக ”மக்களுடன் முதல்வர்” திட்டம் முதல்வரின் முகவரித்துறையால் நடைமுறைப்படுத்தப்பட்டது.இதன் தொடர்ச்சியாக, இரண்டாம் கட்டமாக ஊரகப்பகுதிகளில் ”மக்களுடன் முதல்வர்”  முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இதற்காக, 15 அரசுத்துறைகள் சார்ந்த 44 சேவைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.  தற்போது 440 கிராம ஊராட்சிகளில் 65 முகாம்கள் 11.07.2024 முதல் 14.08.2024 வரை நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது, 24.07.2024 அன்று காரியாபட்டி, இராஜபாளையம் மற்றும் சிவகாசி வட்டாரங்களில் கீழ்க்கண்ட ஊராட்சிகளில் நடைபெற உள்ளது.காரியாபட்டி வட்டாரத்தில் எஸ்.கல்லுப்பட்டியில், பாம்பாட்டி, எஸ்.கல்லுப்பட்டி, காரியாபட்டி, மாந்தோப்பு,வக்கனாங்குண்டு ஆகிய ஊராட்சிகளுக்கும்,இராஜபாளையம்  வட்டாரத்தில் சமுசிகாபுரத்தில் ,  சமுசிகாபுரம் ஊராட்சிக்கும், சிவகாசி வட்டாரத்தில்  வெள்ளூரில் , வெள்ளூர், காளையார்குறிச்சி, வடமலைபுரம் காரிசேரி, மேலமாத்தூர், ஆனைக்குட்டம்  ஆகிய ஊராட்சிகளுக்கும் மக்களுடன் முதல்வர் முகாம் 24.07.2024 அன்று நடைபெற உள்ளது. மேலும், இணைய வழி விண்ணப்ப முறை (Department Online Portal) எனில் சம்பந்தப்பட்ட துறைகள் முகாமிலேயே விண்ணப்பத்தினை இணைய வழியில் பதிவேற்றம் செய்திட . அனைத்து முகாம்களிலும் இ சேவை மையங்கள் அமைக்கப்பட உள்ளது. மேலும். அங்கு மேற்கொள்ளப்படும் சேவைகளுக்கு 50 சதவீத கட்டணம் மட்டுமே பெறப்படும்.                        மேலும், இதுகுறித்த விபரம் பெறுவதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஐ பிரிவு, தொலைபேசி எண் 04562-252742, விருதுநகரில் தொடர்பு கொண்டு பயனடையுமாறு  மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

1 2 ... 42 43 44 45 46 47 48 ... 74 75

AD's



More News