தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக மேன்மை பொருந்திய பணிகளுக்காக இந்திய அரசாங்கம் பத்ம விருதுகளை ( பத்ம விபுஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ ) வழங்க அறிவித்துள்ளதகலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், கல்வி, தொழில் நுட்பம், சமூக நலன், பொதுப்பணிகள், தொழில் மற்றும் இதர பிரிவுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் அசாதாரணமான பணிகள் ஆற்றியவர்களுக்கு வருகிற 2025 ஆம் ஆண்டு நடைபெற உள்ள குடியரசுதின விழா அன்று பத்ம விருதுகள் வழங்க அறிவிக்கப்பட்டுள்ளது.இவ்விருதுகள் தொழில், இனம், உத்தியோகம், பாலினம் ஆகியவற்றிற்கு வித்தியாசமின்றி வழங்கப்படுகிறது.மேலும், இவ்விருதுக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்க https://awards.gov.in மற்றும் https://padmaawards.gov.in என்ற இணையதளத்திலிருந்து ஆன்லைன் வழியாகவே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் பூர்த்தி செய்துவிட்டு அதன் 3 நகல்களுடன் 27.06.2024- ஆம் தேதிக்குள் விருதுநகர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அவர்களிடம் சமர்பிக்கவேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன். I A S., அவர்கள் (25.06.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம், தோணுகால் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.2.50 இலட்சம் மதிப்பில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வருவதையும், தோப்பூர் ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ், ரூ.10.16 இலட்சம் மதிப்பில் குளங்கள் தூர்வாரப்பட்டு வரும் பணிகளையும் மற்றும் தர்மபுரம் கிராமத்தில், 15-வது மானிய நிதிக்குழு திட்டத்தின் கீழ், ரூ.7.88 இலட்சம் மதிப்பில் 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட உயர்மட்ட நீர் தேக்கத்தொட்டி அமைக்கப்பட்டு வருவதையும்,பின்னர், அத்திக்குளம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.9.77 இலட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடை கட்டப்பட்டு வருவதையும், அத்திக்குளம் கிராமத்தில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ், ரூ.5.18 இலட்சம் மதிப்பில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதையும்,புதுப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ், ரூ.8.00 இலட்சம் மதிப்பில், சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளதையும் மற்றும் புதுப்பட்டி ஊராட்சியில்மகாத்மாகாந்திதேசியஊரகவேலைஉறுதித்திட்டத்தின் கீழ், ரூ.3.65 இலட்சம் மதிப்பில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வருவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும் நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு அறிவுத்தினார்.இந்த ஆய்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம், தோப்பூர் ஊராட்சி, அத்திக்குளம் கிராமத்தில், இண்டஸ் இண்ட் வங்கியின் சமூக பொறுப்பு நிதியின் கீழ் பிரதான் நிறுவனம் மூலம் ரூ.10.28 மதிப்பில் சீரமைக்கப்பட்ட குழந்தைகள் மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன். I A S., அவர்கள் (25.06.2024) திறந்து வைத்தார்.
தமிழ்நாடு சீர்மரபினர் நல வாரியம் சீரிய முறையில் செயல்பட்டு வருகிறது. இவ்வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினருக்கு கீழ்க்கண்ட நலத்திட்ட உதவிகள் கடந்த 2008 -ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.1. விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் உதவித்தொகை2. இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை3. ஈமச்சடங்கு செலவிற்கான உதவித்தொகை4. கல்வி உதவித்தொகை5. திருமண உதவித்தொகை6. மகப்பேறு உதவித்தொகை7. மூக்குக் கண்ணாடி செலவுத்தொகை ஈடு செய்தல்8. முதியோர் ஓய்வூதியம்மேற்படி நலத்திட்ட உதவிகள் பெற 1) சீர்மரபினர் இனத்தைச்சார்ந்தவர்கள் 2) 18 வயது முதல் 60 வயதுக்கு மிகாமல் உள்ளவர்கள் 3) அமைப்பு சாரா நிறுவனங்களில் பணிபுரியாத குடும்பத்தில் ஒருவர் (அமைப்பு சாரா தொழில், நிலமற்ற விவசாய கூலி, உடலுழைப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள) இவ்வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.மேலும், ஏற்கனவே உறுப்பினராக பதிவு செய்தோர்கள் தங்கள் உறுப்பினர் பதிவினை விரைவில் புதுப்பித்துக்கொள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
மாவட்ட நிர்வாகம், விருதுநகர் மற்றும் சுற்றுச்சூழல் தன்னார்வ அமைப்புகள் இணைந்து, சுற்றுச்சூழல் கல்வி காலநிலை மாற்றம் பற்றிய விழிப்புணர்வு, பல்லுயிரியம்/உயிரின பன்மயம் பற்றி புரிந்து கொள்ளுதல் போன்றவை தொடர்பாக பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு இரண்டு நாள் முகாம் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது ."இளம் பசுமை ஆர்வலர்" எனும் இச்சிறப்பு சுற்றுச்சூழல் முகாமில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க தகுதியும் சுற்றுச்சூழல் ஆர்வமும் உடைய ஆசிரிய பயிற்றுநர்கள் தேவை. சுற்றுச்சூழல் அறிவியல், வாழ்வியல் கல்வி, வனவியல் கல்வி, வனவிலங்கு தொடர்புடைய ஏதேனும் பட்டப்படிப்பு முடித்தவர்கள், தன்னார்வ பயிற்றுவிக்கும் ஆர்வம் உடையவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.அரசு / அரசு சாரா துறைகளில் பணிபுரிபவர்கள் ஆராய்ச்சி படிப்பு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். 2024-25 கல்வியாண்டில் ஏறக்குறைய 30 முகாம்கள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இம்முகாம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படும். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இருகட்டமாக முதலில் பயிற்சி வழங்கப்படும். இராஜபாளையம், விருதுநகர், அருப்புக்கோட்டை மற்றும் சிவகாசி பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு 88383-49353 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். மேலும் தகுதியானவர்கள் பதிவு செய்ய 80729 18467 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தலைமையில் (24.06.2024) நடைபெற்றது.இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டாமாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது. மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள். மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்கள். முன்னதாக, சிவகாசி வட்டம், திருத்தங்கலைச் சேர்ந்த செல்வன் சு.சூரிய பிரகாஷ் தனது தாய், தந்தை இருவரும் சிறுவயதிலேயே இறந்துவிட்டதாகவும், தனது பாட்டியின் கண்காணிப்பில் படித்ததாகவும், தனது பாட்டியும் (24.04.2024) அன்று காலமாகிவிட்டதாகவும், தற்போது யாருடைய ஆதரவும் இல்லாமல் தொண்டு நிறுவனம் மூலம் அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் முதலாம் ஆண்டு (பி.காம்) முடித்துள்ளேன் என்றும், தனது படிப்பிற்கு உதவி செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் நேரில் மனு கொடுத்ததன் பேரில், அந்த மாணவனுக்கு மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து ரூ.10,000/- க்கான காசோலையினையும்,சிவகாசி வட்டம், எரிச்சநத்தம் கிராமத்தைச் சேர்ந்த தந்தையை இழந்த செல்வி ர.தன்யாஸ்ரீ (3-ம் வகுப்பு), செல்வன் ர.ஜெயகணேசன் (5-ம் வகுப்பு) மாணவர்களுக்கு கல்வி மற்றும் பராமரிப்பு தொகை வழங்க கோரி அவர்களின் தாயார் திருமதி நாகம்மாள் என்பவர் மனு அளித்ததன் அடிப்படையில், அந்த மாணவர்களுக்கு கல்வி மற்றும் பராமரிப்பு செலவிற்கு மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து ரூ.5,000/- க்கான காசோலையினையும்,விருதுநகர் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம் 1 பயனாளிகளுக்கு தலா ரூ.13,200/- மதிப்பிலான ஸ்மார்ட் கைபேசியினையும், 1 பயனாளிக்கு ரூ.3,200/- மதிப்பிலான பிரைய்லி கைக்கடிகாரம், கருப்புக்கண்னாடி, மடக்கு ஊன்றுகோல் ஆகியவற்றையும்,இக்கூட்டத்தில், விண்ணப்பம் அளித்த சிவகாசி வட்டம், பள்ளப்பட்டியைச் சேர்ந்த திருமதி கிருஷ்ணவேனி என்பவருக்கு உடனடி தீர்வாகவும், சாத்தூர் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் மூலம் நடைபெற்ற மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வின் போது தையல் இயந்திரம் வேண்டி மனு அளித்த திருமதி காளீஸ்வரி என்பவருக்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 2 நபர்களுக்கு தலா ரூ.12,500/- வீதம் மொத்தம் ரூ.25,000ஃ- மதிப்பிலான தையல் இயந்திரங்களையும்,மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா காப்பீட்டு திட்டத்தின் கீழ் பதிவு செய்திருந்த சாத்தூர் வட்டம் நள்ளி கிராமத்தைச் சேர்ந்த லேட் திரு.கருப்பசாமி மற்றும் லேட் திரு.மாரிமுத்து ஆகியோரின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.2 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.4 இலட்சம் இழப்பீட்டு தொகைக்கான காசோலைகளையும்,என மொத்தம் 9 பயனாளிகளுக்கு ரூ.4.56 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் வழங்கினார்.பின்னர் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்கள் பிடித்த கல்லூரி மாணவர்களுக்கும், கட்டுரை, கவிதை மற்றும் ஓவியப்போட்டிகளில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்கள் பிடித்த பள்ளி மாணவர்களுக்கும், என வெற்றி பெற்ற 12 பள்ளி / கல்லூரி மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு மாநில ஊரக/நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மகளிர் சுயஉதவிக்குழுவின் சிறுதானிய உணவகத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S., அவர்கள் (24.06.2024) திறந்து வைத்தார்.விருதுநகர் மாவட்டத்தில், பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக வறுமை ஒழிப்பு, சிறந்த சுகாதாரம், கல்வி ஆகியவற்றிற்காக பெண்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்திடவும், வேளாண்மையில் முதன்மையாக விளங்கக்கூடிய சிறு தானிய விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதுடன் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கிலும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. தேசிய மாநில ஊரக வாழ்வாதார இயக்க செயல் திட்டத்தின்படி, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்;, மதி சிறுதானிய உணவகம் அமைக்க மாண்புமிகு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் சட்டமன்றத்தில் அறிவித்ததன் தொடர்ச்சியாக, மதி சிறுதானிய உணவகம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், அருப்புக்கோட்டை வட்டாரத்திற்கு உட்பட்ட சூலக்கரை சரஸ்வதி மகளிர் சுய உதவிக்குழுவால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மதி சிறுதானிய உணவகத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று திறந்து வைத்தார்.இந்த உணவகத்தில் ராகி, தினை, சோளம், வரகு, குதிரைவாலி, கம்பு உள்ளிட்ட சிறுதானியங்கள் மூலம் தயாரிக்கப்படும் பல்வேறு உணவு வகைகள் காலை, மதியம் மற்றும் மாலை என மூன்று வேளைகளிலும் விற்பனை செய்யப்பட உள்ளது.இந்நிகழ்வில், திட்ட இயக்குநர்(தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) திருமதி பேச்சியம்மாள், அனைத்து உதவி திட்ட அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி டான்பாமா(TANFAMA) அரங்கத்தில் (24.06.2024) சிவகாசி கல்வி மாவட்ட அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளைச் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு “கற்பித்தல் கலை மற்றும் கண்ணில் தெரியும் கடவுளர்கள்” என்ற தலைப்பில் புத்தாக்க பயிற்சி மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இப்பயிற்சி வகுப்பில் பேராசிரியர் சிவகாசி மு.ராமச்சந்திரன் அவர்கள் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார்.ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒரு முக்கிய பணியை செய்யக்கூடிய ஒருவரின் தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டே இருக்கிறது. அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணுறிவு தொழில்நுட்பத்தின் தாக்கம் உள்ளது.ஒவ்வொரு நிமிடமும் புதிதாக கற்றுக் கொள்வதற்கு உலகம் முழுவதும் இணையவழியில் கற்க, கற்பித்தல் செய்யக்கூடிய அமைப்புகள் மிக எளிதாக உருவாகி கொண்டிருக்கின்றன. இன்று இந்தியாவில் புதிதாக தொடங்கக்கூடிய மென்பொருள் உருவாக்கக்கூடிய நிறுவனங்கள் கல்வி சார்ந்துதான் இருக்கின்றன. பல பல்கலைக்கழகங்கள் இணையவழியில்; பாடங்களை நடத்தக்கூடிய சூழலில் இருக்கின்றன.உலகம் முழுவதும் ஒரு மிகப்பெரிய மாறுதல்கள் நடந்து கொண்டிருக்கிறது. இது போன்ற எந்த ஒரு தொழில்நுட்பம் வந்தாலும், அது அந்த துறைக்கான பணியை சிறப்பாக செய்வதற்கான உறுதுணையாக இருக்குமே தவிர, அது ஒரு மாற்றாக அமையாது. இது எந்த பணிக்கு பொருந்துகிறதோ இல்லையோ ஆசிரியர் பணிக்கு நிச்சயமாக பொருந்தும்.ஆசிரியர்கள் சிறந்த ஊக்குவிப்பாளர்களாக இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்த மாணவர்கள் கூட ஆசிரியர்களின் ஊக்கத்தினால் 12 ஆம் வகுப்பில் சிறந்த மதிப்பெண்கள் பெற வைக்க முடியும்.சமூகத்தின் அடித்தட்டு நிலை சூழ்நிலையில், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்து கல்வியின்; மூலமாக பல தலைமுறைகளின் இடைவெளியை கடந்த வெற்றியாளர்களின் வாழ்க்கையை எடுத்துப் பார்த்தால், அவர்களுக்கு பின்னால் ஒரு ஆசிரியர் இருக்கிறார். அவர் ஆர்வத்தையும் விருப்பத்தையும் தோற்றுவிக்க கூடிய ஒரு ஊக்குவிப்பாளராக இருந்திருக்கிறார். யார் சிறந்த ஆசிரியர் என்று பார்த்தால் கற்கும் விருப்பத்தை தோற்றுவிப்பவரை சிறந்த ஆசிரியர். அரசு பள்ளிகளில் படிக்கக்கூடிய மாணவர்களின் சமூக பொருளாதார சூழ்நிலைகளை பற்றி ஆசிரியர்களுக்கு தெரியும். கல்வியின் வழியாகத்தான் அவர்கள் மிகப்பெரிய வெற்றியை அடைய முடியும்.வெற்றி பெறுவதற்காக உள்ள அனைத்து வாய்ப்புகளிலும் மிக எளிய குறுக்கு வழி எது என்றால் அது கல்வி வழியாக வெற்றி பெறுவதும், கடின உழைப்பு மூலமாக உயர்நிலையை அடைவதும் மட்டும் தான்.நீங்கள் வழி நடத்தக்கூடிய அல்லது ஊக்குவிக்கக் கூடிய மாணவர்களில் யார் நாளை எந்தத் துறையில் சிறந்த தலைவர்கள் ஆவார்கள் என்று தெரியாது. ஆனால் நீங்கள் ஒவ்வொரு மாணவரையும், எதிர்காலத்தில் இவன்;, இவனது குடும்பம், இவன் வாழக்கூடிய நாடு எல்லாவற்றிற்கும் இந்த மாணவனால் ஒரு பயன் விளையும் என்ற நம்பிக்கையை முன் வைத்து ஒவ்வொரு நாளும் செயல்படுவீர்கள் என நம்புகிறேன் என தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டத்தை சார்ந்த வீரவிருது பெற்றோர், போரில் உயிர்தியாகம் செய்தோரை சார்ந்தோர், முன்னாள் படைவீரர்கள் மற்றும் படையில் பணிபுரிவோர்களை சார்ந்தோருக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் 27.06.2024 அன்று காலை 11.30 மணிக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அலுவலகத்தில் நடத்தப்படவுள்ளது.விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்த வீரவிருது பெற்றோர், போரில் உயிர்தியாகம் செய்தோரை சார்ந்தோர், முன்னாள் படைவீரர்கள், படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர் குறைகள் ஏதும் இருப்பின் தங்களது அடையாள அட்டை நகலுடன் தங்கள் குறைகள் குறித்த மனுவுடன் (இரட்டை பிரதிகளில்) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வருகை தந்து விண்ணப்பம் வழங்கி பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 21.06.2024 அன்று நடைபெற்ற திருநங்கைகளுக்கான சிறப்பு முகாமில் பட்டா மாறுதல் வேண்டி மனு அளித்த திருநங்கைக்கு பட்டா மாறுதலுக்கான உத்தரவு ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் (24.06.2024) வழங்கினார்.