விருதுநகர் மாவட்டம், பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனி நபர்கள் மற்றும் குழுக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்காக சாத்தியக் கூறுள்ள சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய பொது காலக் கடன், பெண்களுக்கான புதிய பொற்காலக் கடன், பெண்களுக்கான நுண்கடன், ஆண்களுக்கான நுண்கடன் மற்றும் கறவை மாடுக் கடன் ஆகிய கடன் திட்டங்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடனுதவி வழங்கி வருகிறது.மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் மற்றும் அனைத்து மாவட்ட மத்திய மற்றும் நகர கூட்டுறவு வங்கி கிளைகளிலும் கடன் விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம்.விண்ணப்பதாரர்கள் கடன் விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து சாதி, வருமானம் மற்றும் பிறப்பிடச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை மற்றும் வங்கி கோரும் ஆவண நகல்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் ஒப்படைக்க வேண்டும்.எனவே, இம்மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனி நபர்கள் மற்றும் குழுக்கள் கடன் விண்ணப்பங்களைப் பெற்று உரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இக்கடன் திட்டங்கள் தொடர்பான விவரங்களையும் சந்தேகங்களையும் தெளிவுபடுத்திக் கொள்ளவும் கடன் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கவும் ஏதுவாக 2024-2025-ம் நிதியாண்டிற்கான கடன் வழங்கும் முகாம் (லோன் மேளா) வட்ட அளவில் வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது.அதன்படி 02.07.2024 அன்று விருதுநகர் வட்டாட்சியர் அலுவலத்திலும், 03.07.2024-அன்று காரியாபட்டி வட்டாட்சியர் அலுவலகத்திலும், 04.07.2024-அன்று அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்திலும், 05.07.2024-அன்று திருச்சுழி வட்டாட்சியர் அலுவலகத்திலும், 08.07.2024-அன்று சிவகாசி வட்டாட்சியர் அலுவலகத்திலும், 09.07.2024-அன்று இராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்திலும், 10.07.2024-அன்று ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர அலுவலகத்திலும், 11.07.2024-அன்று சாத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்திலும்;, 12.07.2024-அன்று வெம்பக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்திலும், 15.07.2024-அன்று வத்திராயிருப்பு வட்டாட்சியர் அலுவலகத்திலும் கடன் வழங்கும் முகாம்கள் நடைபெற உள்ளது.எனவே, இம்முகாமில் கடன் தேவைப்படுவோர் கடன் தொகை பெற ஆவணங்களுடன் நேரில் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் (22.06.2014) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்படி, அருப்புக்கோட்டை நகராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.7.92 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வரும் பணிகளையும்,பின்னர், அருப்புக்கோட்டை நகராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.7.57 கோடி மதிப்பில் புதிய சந்தை வளாகம் கட்டப்பட்டு வரும் பணிகளையும்,அதனை தொடர்ந்து, சுக்கிலநத்தத்தில் ரூ.1.80 கோடி மதிப்பில் நுண் உர மையம் அமைக்கப்பட்டு அருப்புக்கோட்டை நகராட்சியில் சேகரிக்கப்படும் திடக்கழிவுகள் பிரிக்கப்பட்டு உரம் தயாரிக்கும் பணிகளையும்,பின்னர், பாதாள சாக்கடைத் திட்டத்தின் கீழ்; ரூ.2.97 கோடி மதிப்பில் கழிவு நீரேற்றும் மையத்தில் நடைபெற்று வரும் பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், விருதுநகர் கல்வி மாவட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி சேராத பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான மூன்றாம் கட்ட சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (22.06.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.தமிழக அரசு, மாணவர்களின் உயர்கல்வி பயிலும் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்களை அதிகமாக உயர்கல்விக்கு சேர்க்கை பெறும் நோக்கில், பல்வேறு விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக உயர்கல்வி சேராத பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள், உயர்கல்விக்கு விண்ணப்பிக்காத, குறிப்பிட்ட துறைக்கு விண்ணப்பித்து சேர்க்கை கிடைக்கப் பெறாத மாணவர்களுக்கு வழிக்காட்டும் விதமாக மூன்றாம் கட்டமாக சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாணவர்களிடமிருந்து, உயர்கல்வி பயில்வதற்கான பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான 30 மனுக்களை பெற்றுக்கொண்டு, உயர்கல்விக்கு சேராத மாணவர்களிடம் சந்தேகங்கள் மற்றும் குறைகளையும் கேட்டறிந்து மாணவர்கள் உயர்கல்வி சேர்வதற்கான வழிமுறைகள் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.மேலும், பெற்றோர்கள் இல்லாத மாணவர்கள், ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்கள், கல்லூரி சேர்ந்து படிப்பதற்கு அதிக அளவில் செலவு மேற்கொள்ள வேண்டியுள்ளது. எனவே அருகில் இருக்க கூடிய அரசு கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரியில் சேர்ந்து படிப்பதால் செலவினங்கள் குறைய வாய்ப்புகள் உண்டு. அதற்கும் மேலாக முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களை தேர்வு செய்து பல்வேறு அறக்கட்டளைகளே படிப்பு செலவினங்களை ஏற்றுக்கொள்கிறது.எனவே மாணவர்கள் அதற்கான வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும். அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு புதுமைப்பெண், தமிழ்புதல்வன் திட்டங்கள் மூலம் மாதம்தோறும் உதவித்தொகை கிடைப்பதற்கானவாய்ப்புகள்உள்ளது.கல்லூரியில் சேர்ந்த பின்பு மாணவர்கள் கல்வி கற்பது மிகவும் கடினமாக இருக்கும் என்ற தவறான கண்ணோட்டத்தில் உள்ளனர். பள்ளி படிப்பைவிட கல்லூரி படிப்புதான் மிகவும் எளிதாக உள்ளது. கல்லூரி படிப்பின் போது பகுதி நேரம் வேலை செய்து கொண்டு கல்வி கற்கும் மாணவர்களும் உள்ளனர். எனவே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் கல்லூரியில் மாணவர்களுக்கு கல்வி கற்பதில் இருக்ககூடிய அறியாமையை போக்குவதுதான் ஆசிரியர்களின் மிக முக்கிய பணியாகும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இக்கூட்டத்தில் குடும்ப சூழ்நிலை, பொருளாதாரம், சரியான வழிகாட்டுதலின்மை, பாடப்பிரிவு கிடைக்காத நிலை போன்ற காரணங்களால் உயர்கல்வி தொடர முடியாமல் இருப்பதாக தெரிவித்த மாணவ, மாணவியர்களிடம், அரசின் மூலம் வழங்கப்படும் திட்டங்கள், சலுகைகள், ஊக்கத்தொகைகள், எதிர்கால வேலைவாய்ப்புகள், மதிப்பெண்களுக்கு ஏற்றவாறு பாடப்பிரிவு துறைகளை தேர்ந்தெடுப்பது உள்ளிட்டவை குறித்தும், தீர்வுகளை எடுத்துக்கூறியும், உயர்கல்வி தொடர்வதற்கான உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (20.06.2024) அன்று விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டு 108 இலவச அவசர சிகிச்சை ஊர்தியில் சிறப்பாக பணியாற்றிய ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் பரிசுகள் மற்றும் கேடயங்களை வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில், தற்போது மொத்தம் 25 அவரச ஊர்திகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 2 இலவச அவசர சிகிச்சை ஊர்திகள் பச்சிளம் குழந்தைகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த இலவச அவசர சிகிச்சை ஊர்தி சேவைகளில் சுமார் 125 நபர்கள் பணி புரிந்து வருகின்றனர். இந்த பணிகளில் முழுமையாக செயல்பட்டு விரைந்து சென்று, சரியான சிகிச்சை அளித்து அதிக உயிர்களை காப்பாற்றிய ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளர் ஆகியோரை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.அதனடிப்படையில், கடந்த வருடம் சிறப்பாக பணியாற்றிய ஊர்தி ஓட்டுநர் திரு.தங்கச்சாமி என்பவருக்கும், மருத்துவ உதவியாளர் திருமதி அருணா என்பவருக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பரிசுகள் மற்றும் கேடயங்களை வழங்கினார்.இந்நிகழ்வின் போது, இணை இயக்குநர் (மருத்துவ பணிகள்) மரு.பாபுஜி, மாவட்ட 108 இலவச அவசர சிகிச்சை ஊர்தி ஒருங்கிணைப்பாளர் திரு.கருப்பசாமி உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.
விருதுநகர் சூலக்கரை மேடு சாய் மஹாலில் (23.06.2024) நடைபெற்ற இரத்தான முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
விருதுநகர் மாவட்டத்தில், புதிய கட்டிடங்களில் துவக்கப்பட்டுள்ள திருவில்லிப்புத்தூர் மற்றும் திருச்சுழி அரசு கலைக் கல்லூரிகளுக்கு மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அரசால் வழங்கப்பட்ட அறிவுரைகளின்படி, கூடுதல் நகரப் பேருந்து வசதிகள் அளிக்கப்பட்டுள்ளன. மற்ற அரசு கலைக் கல்லூரிகளுக்கு இயக்கப்படுகின்ற நகரப் பேருந்துகளின் விபரங்கள் பின்வருமாறு:1. திருவில்லிப்புத்தூர் அரசு கலைக்கல்லூரி: திருவில்லிப்புத்தூரிலிருந்து - காலை: 08.20, 08.50, 09.15 அட்டைமில்லிலிருந்து - மாலை: 15.30, 15.40, 15.45 இராசபாளையத்திலிருந்து - காலை: 08.52 கல்லூரியிலிருந்து - மாலை: 16.00கான்சாபுரத்திலிருந்து காலை 07.20 மணிக்குப் புறப்பட்டு வத்திராயிருப்பு, கிருஷ்ணன்கோவில், திருவில்லிப்புத்தூர் வழியாக அரசு கலைக் கல்லூரிக்கு வழியாக நகரப் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.2. திருச்சுழி அரசு கலைக் கல்லூரி:அருப்புக்கோட்டையிலிருந்து - காலை: 09.15காரியாபட்டியிலிருந்து - காலை: 08.15,கல்லூரியிலிருந்து - மாலை: 15.35நரிக்குடியிலிருந்து கல்லூரி - காலை: 09.25, 09.35வழியாக மாலை: 15.00, 15.15 திருச்சுழியிலிருந்து கூடுதல் நடை - காலை: 09.20கல்லூரியிலிருந்து கூடுதல் நடை - மாலை: 15.35காரியாபட்டி மற்றும் திருச்சுழியில் இருந்து மேற்கண்ட நடைகள் 24.06.2024 முதல் இயக்கப்பட உள்ளன.3. சாத்தூர் மேட்டமலை அரசு கலைக்கல்லூரிக்கு கீழ்க்கண்டவாறு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. சிவகாசியிலிருந்து - காலை: காலை: 08.05, 08.25, 08.40, 08.50, 09.00,09.05, 09.10 மதியம்: 13.40, 13.50, 14.00, 14.15, 14.25,14.40, 14.55 சாத்தூரிலிருந்து - காலை: 08.05, 08.20, 08.30, 08.45, 09.00 மதியம்: 13.30, 13.50, 14.00, 14.20, 14.30, 14.354. சிவகாசி அரசு கலைக்கல்லூரிக்கு கீழ்க்கண்டவாறு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. சிவகாசியிலிருந்து - காலை:08.00, 08.10, 08.11, 08.20, 08.30, 08.40, 08.55 மதியம்:14.35, 14.55, 15.15, 15.30, 15.40, 15.50, 16.00 திருவில்லிப்புத்தூரிலிருந்து - காலை:07.45 ,07.55, 08.10, 08.25, 08.30,08.45, 08.55, 09.00, மதியம்:14.10, 14.25,14.35,14.45,14.50,14.55,15.10,15.25, 15.30,15.35,15.40, 15.45, 16.005. அருப்புக்கோட்டை செட்டிக்குறிச்சி அரசு கலைக்கல்லூரிக்கு கீழ்க்கண்டவாறு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.அருப்புக்கோட்டையிலிருந்து - காலை: 07.45, 08.35செட்டிக்குறிச்சியிலிருந்து - மதியம்: 13.45, 14.15, 14.35, 14.45மேற்கண்ட அரசு கலைக்கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகள் மேற்கண்ட அரசு நகரப் பேருந்து வசதியினை நல்ல முறையில் பயன்படுத்தி படிக்கட்டுக் பயணத்தினைத் தவிர்க்குமாறும், மேலும் மேற்குறிப்பிட்ட அரசுப் பேருந்துகளின் வழித்தடம், நேரம் மற்றும் பேருந்து நிறுத்தம் ஆகியவை குறித்த புகார்களை 94875 99132 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் ஆண்டுதோறும்”பிரதம மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார்” விருதுக்கு 5 முதல் 18 வயதிற்குட்பட்ட தன்னலமற்ற செயல்களைச் செய்தகுழந்தைகளுக்கும், வீர தீர செயல்களில் சிறந்த சாதனைகள் செய்த குழந்தைகளுக்கும், விளையாட்டு, சமூக சேவை, அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், புதுமைகள் செய்தல், கலை மற்றும் கலாச்சாரம் ஆகிய துறைகளில் சமூகத்தில் பரவலான மற்றும் வெளிப்படையான தாக்கத்தை ஏற்படுத்தியவர்களுக்கு வழங்கப்படுகிறது.இந்த விருது பெறுபவர்கள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26ஆம் தேதி ”வீர்பால் திவாஸ்” அன்று அறிவிக்கப்படுவார்கள்.இந்த விருதை பெறுபவர்கள் இந்திய குடிமகனாகவும், இந்தியாவில் வசிப்பவராகவும், 5 முதல் 18 வயதுக்குட்பட்டவராகவும், வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள இதர தகுதிகளும் இருத்தல் வேண்டும்.இவ்விருது பெறுவதற்கு தகுதியுடையவர்கள் https://awards.gov.in என்ற இணையதளத்தில் 31.07.2024- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S.,அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் (21.06.2024) விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலின்படி, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் விருதுநகர் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இணைந்து நடத்தப்பட்டது.இவ்வேலைவாய்ப்பு முகாமில் பல்வேறு பணிக்காலியிடங்களுக்கு 45 தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்குத் தேவையான பணியாளர்களை தேர்வு செய்தன. இதில் 357 வேலை நாடுநர்கள் கலந்து கொண்டனர். 42 மாற்றுத்திறனாளிகள் தனியார்த்துறை நிறுவனங்களில் பணிநியமனம் பெற்றனர். இரண்டாம் கட்டத் தேர்வுக்கு 17 மாற்றுத்திறனாளிகளும் தேர்வு செய்யப்பட்டனர். பொதுப் பயனாளிகள் 38 பேர் பணிநியமனம் பெற்றனர்.17 மாற்றுத்திறனாளிகள் திறன் பயிற்சி வேண்டி பதிவு செய்தனர். இம்முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஸ்மார்ட் போன்கள், கைக்கடிகாரம், வங்கிக்கடன் மானியம் மற்றும் காதொலி கருவி போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.இம்முகாமில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்(பொது) திருமதி.சு.ஞானபிரபா, அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் திரு.செல்லக்கனி, மாவட்ட தொழில் மைய துணை இயக்குநர் திரு.வெங்கடேசன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (தொழில்நெறிவழிகாட்டி) திருமதி.அ.பிரியதர்ஷினி மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.ஜெயபிரகாஷ் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (21.06.2024) சிவகாசி வட்டம், திருத்தங்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று திருச்சிராப்பள்ளி தேசிய தொழில்நுட்ப கல்லூரியில்(Instituto Nacional de Tecnología (NIT)) நுழைவு தேர்வு மூலம் இடம்பிடித்த செல்வன் S. குகன் என்பவரை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S., அவர்கள் நேரில் வரவழைத்து பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் (21.06.2024) திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S.,அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இம்முகாமில், திருநங்கைகள் நல வாரிய அட்டை, ஆதார் அட்டையில் திருத்தம் மேற்கொள்ளுதல், முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை, ஆயுஷ்மான் பாரத் அட்டை மற்றும் வாக்காளர் அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான சுமார்65மனுக்கள்பெறப்பட்டன.இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள். இம்முகாமில், 25 நபர்களுக்கு திருநங்கை அடையாள அட்டைகளையும், 14 நபர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைகளையும், 9 நபர்களுக்கு ஆயுஷ்மான் பாரத் அட்டைகளையும், 4 நபர்களுக்கு முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு அட்டைகளையும், 7 நபர்களுக்கு ஆதார் அட்டைகளையும் என மொத்தம் 59 திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர் திருமதி ஷீலாசுந்தரி, உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.