தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (27.06.2024) உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.தமிழக அரசு நுகர்வோருக்கு தரமான முறையில் பொருட்கள் கிடைக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நுகர்வோர் என்பவர் பொருட்கள் சேவைகளை விலை கொடுத்து அல்லது வாக்குறுதி கொடுத்து வாங்குபவர் ஆவர். நுகர்வோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் உலக நுகர்வோர் தினம் மார்ச் 15 அன்றும் தேசிய நுகர்வோர் தினம் டிசம்பர் 24 அன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நவீன யுகத்தில் நாம் அனைவரும் பல்வேறு பொருட்களை சார்ந்து வாழ வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்த தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின விழாவின் நோக்கமானது, நுகர்வோர்களுக்கு பாதுகாப்பு உரிமை, தகவல் பெறும் உரிமை, தேர்ந்தெடுக்கும் உரிமை, முறையிடும் உரிமை, குறைதீர்க்கும் உரிமை, நுகர்வோர் கல்விக்கான உரிமை, தூய்மையான நலம் பயக்கும் சுற்றுச்சூழலுக்கான உரிமை, அடிப்படை தேவைகளுக்கான உரிமை ஆகிய உரிமைகளை தெரிந்து கொள்வதே. இதன் மூலம் உடலுக்கும் உயிருக்கும் ஆபத்து விளைவிக்கக் கூடிய பொருட்கள் உற்பத்தி செய்யும் முறைகள் மற்றும் சேவைகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவும், தனக்குத் தேவையான பொருட்களை சுதந்திரமாக தேர்ந்தெடுத்துக் கொள்ளவும், தரமற்ற பொருட்கள் சேவைகள் காரணமாக ஏற்படும் இழப்புகளுக்கு உரிய நஷ்ட ஈடு பெறவும் வழிவகை செய்கிறது.
அதன்படி, 2023-2024 - ஆம் ஆண்டிற்கான தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழாவை முன்னிட்டு, ஓவியம், கவிதை, கட்டுரை உள்ளிட்ட பள்ளிகள் அளவில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.மேலும், மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் சிறப்பாக செயல்பட்ட மூன்று குடிமக்கள் நுகர்வோர் மன்றங்களுக்கும், தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளில் சிறப்பாக செயலாற்றிய நுகர்வோர் அமைப்புகளுக்கும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
0
Leave a Reply