உலக சுற்றுச்சூழல் தினம் 2025- யை முன்னிட்டு, மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம், பந்தல்குடியில் உள்ள ராம்கோ சுற்றுச்சூழல் சீரமைப்புப் பூங்காவில் (05.06.2025)
உலக சுற்றுச்சூழல் தினம் 2025- யை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.அதனைத் தொடர்ந்து, நரிக்குடி ஊராட்சி ஒன்றியம் பனையூர் கிராமத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.மக்களுக்கு உயிரிப்பல்வகைமையின் முக்கியத்துவத்தையும் அவைகள் சந்தித்து வரும் பிரச்சினைகளையும், அதைக் குறைக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளையும் குறித்த விழிப்புணர்வு மற்றும் அறிவினை உருவாக்குவதை கருத்தில் கொண்டு ஒவ்வொரு வருடமும் ஜூன் 5 ம் நாள் உலக சுற்றுச்சூழல் தினம் அனுசரிக்கப்படுகிறது. இவ்வருடத்தின் கருப்பொருள் "நெகிழி மாசுபாட்டை முடிவுக்கு கொண்டு வருதல்" என்பதாகும்.
வளங்குன்றா வளர்ச்சி என்பது உயிரிபல்வகைமையை அடிப்படையாக கொண்டது. தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் வளர்ச்சி என்பது உயிரிபல்வகைமைக்கு பெரும் சவாலாக உள்ளது. கால நிலை மாற்றம், சுகாதாரப் பிரச்சினைகள், உணவு மற்றும் நீர் பாதுகாப்பு, மற்றும் நிலையான வாழ்வாதரங்கள் போன்றவற்றை இயற்கை அடிப்படையிலான தீர்வுகளிலிருந்து மீட்டெடுப்பதன் மூலமே உயிரிப்பல்வகைமையை நிலைத்திருக்கச் செய்யும்.விருதுநகர் மாவட்டத்தில் 16.8 சதவிதம் இருக்கும் பசுமை பரப்பினை 33 சதவிதம் ஆக அதிகரிக்க பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் 1 கோடி மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக மாவட்டத்தில் 05.06.2025 அன்று உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு, 11 வட்டாரங்களிலும் 360 இடங்களில் 1,12,350 மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சித் துறை, விவசாயத்துறை, தோட்டக்கலைத்துறை, துறைகள் உள்ளிட்ட துறைகளில் உள்ள அரசு அலுவலக கட்டிடங்கள், பஞ்சாயத்து நிலங்கள் நகராட்சி பூங்காக்கள், அரசு மருத்துவமனைகள், விவசாய நிலங்கள், முதலிய பல்வேறு இடங்களில் அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த மரக்கன்றுகள் நடும் சீரிய முயற்சியில் அனைவரும் தவறாது பங்கு கொண்டு ஒரு மக்கள் இயக்கமாக இணைந்து மரக்கன்றுகளை நடவு செய்து இந்த பூமியை அனைவருக்குமான ஒரு சிறந்த வாழ்விடமாக மாற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.முன்னதாக, பந்தல்குடி ராம்கோ சுற்றுச்சூழல் சீரமைப்பு பூங்காவில், உயிர் பன்முகத்தன்மை குறித்து பல்வேறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி மற்றும் பஞ்சாயத்துக்கள் வாரியாக உயிரிபல்வகைமை மேலாண்மை சட்டம் 2002-ன் படி உயிரிபல்வகைமை மேலாண்மை குழு அமைத்து கிராம மக்களின் பங்களிப்புடன் அரசு அதிகாரிகள் இணைந்து பல்லுயிர் வளங்களை பாதுக்காக்க தேவையான முன்னெடுப்புகளை மேற்கொள்வது பற்றி கலந்தாலோசிக்கப்பட்டது.மேலும், தேசிய உயிரி பல்வகைமை சட்டம், தேசிய உயிரி பல்வகைமை ஆணையம், உள்ளாட்சி நிறுவனங்களில் பல்லுயிர் மேலாண்மை குழு ஆகிய தேசிய, மாநில, உள்ளாட்சி என மூன்று அடுக்குகளில் அமைந்துள்ள இச்சட்டங்கள் மூலம் இந்தியாவில் பல்லுயிர் வளங்களை பாதுகாப்பது குறித்தும், சூழலியலை முன்னேற்றுவது குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
0
Leave a Reply